graphic மர நிழல்

“அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?” நெஞ்சம் நெகிழ்த்திய நினைவுகள் 2020

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
மர நிழல்
மர நிழல்

ஆண்டுகள் என்ற பெயரில் காலம் எழுதிக் குவித்த புத்தகங்கள்தான் எத்தனை எத்தனை? ஒவ்வொரு நாளையும் ஒரு பக்கமாகக் கருதிக்கொண்டு, எழுதி எழுதி மேற்செல்கின்றன காலத்தின் கைகள். அவற்றைத் திருத்துவதற்கு அல்ல, திரும்பிப் படிக்கவே நமக்கு அதிகாரம் உண்டு என்ற புரிதலுடன் அது எழுதி நிறைவுபெற இருக்கிற 2020 புத்தகத்தைத் திருப்பினேன்.

மகிழ்ச்சியைத் தந்த வெற்றிகள், சில மரணங்களின் கொடையாய்  வேதனைகள், நம்பிக்கை ஊட்டிய சாதனைகள், நடுநடுவே பல சருக்கல்கள். இப்படி ஏணிக்கும் பாம்பிற்கும் இடையே ஏறி இறங்கிக்கொண்டிருந்த மனதிற்கு ஓர் இளைப்பாறல் தேவைப்பட்டது. தங்களின் அகன்ற மனத்தால் சிலர் அமைத்த அன்பெனும் நிழற்குடைகள் வா என வரவேற்க, நன்றி நவிலல் என்கிற ஒற்றை மந்திரத்தை உச்சாடணம் செய்தபடி அந்த கற்றை நிழலில் அமர்ந்துவிட்டேன். நெகிழ்ச்சியும் குளிர்ச்சியும் நினைவடுக்கில் படர, [சில எழுதப்படாத 2020ன் நெகிழ்ச்சிக்குரிய அந்த நிகழ்வுகள் பற்றி எழுத விளைகிறேன் இதுதான் சிறந்த இளைப்பாறலாய் இருக்கும் என்பதால்.

தோள் கொடுத்த துணைவன் தோழமைகள்:

புதுகை செல்வா
புதுகை செல்வா

அது கரோனாவுக்கு முன்னான பிப்பரவரி மாதத்தின் முதல் வாரம். கணவனால் கைவிடப்பட்டு, ஒதுங்க நிழலின்றி அலைந்து திரிந்த ஈரோட்டைச் சேர்ந்த பார்வையற்ற பெண் சாவித்ரி ஒருவழியாக புதுக்கோட்டை வந்து சேர்கிறார். புதிய பேருந்து நிலையத்தில் தட்டுத் தடுமாறிக்கொண்டிருந்த அவரை அருகே இருக்கிற பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளியில் கொண்டுவந்து சேர்க்கிறார் ஒரு தானி ஓட்டுநர். அந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் அவரைத் தீர விசாரித்ததில் அவர் ஏழுமாதக் கருவைச் சுமந்துகொண்டிருக்கிறார் எனத் தெரிய வருகிறது. தன் ஊரிலிருந்து விரக்தியும் வேதனையுமாய் நெடுந்தொலைவு வந்துவிட்ட அவரின் நிலையைச் சொல்லி, தனது நண்பரும் பள்ளியின் நல விரும்பியுமான திரு. புதுகை செல்வா அவர்களிடம் உதவி கேட்டார் பள்ளி ஆசிரியர் விசித்ரா.

உதவி கேட்ட மறுகணமே, தனது துணைவன் அமைப்புடன் களமிறங்கிவிட்டார் செல்வா. மருத்துவர்கள், காவலர்கள் எனத் தனக்குத் தெரிந்த சில மனிதப் பற்றாளர்களுடன் தோள்கொடுத்தார் தோழர்.

சாவித்ரியின் குழந்தைக்குப் பெயர் சூட்டும் நிகழ்வு
சாவித்ரியின் குழந்தைக்குப் பெயர்சூட்டும் நிகழ்வு

முதற்கட்ட ஊரடங்கின் நெருக்கடியான காலத்தில் சாவித்ரிக்கு அறுவை சிகிச்சையின் மூலம் ஓர் அழகான ஆண்குழந்தை பிறக்கிறது. சிறிதும் சுமை என்று கருதாமல், சிறப்பு அனுமதிகளைப் பெற்று, சேயையு்ம், தாயையும்சிற்றெறும்பும்  தீண்டாதபடி உற்றார் உறவினர்போல் கவனித்துக்கொண்டார்கள் செல்வா மற்றும் அவரின் தோழமைகள்.

இருவரையும் பராமரிக்க ஊதியம் கொடுத்து பணிப்பெண் ஒருவரை அமர்த்தியது தொடங்கி, புதுகை நகரின் போற்றுதலுக்குரிய மனிதர்கள் சகிதம் பெயர்சூட்டுவிழா என குழந்தையைக் கொண்டாடித் தீர்த்தார்கள். உடலளவில் பலவீனமடைந்திருந்த அம்மாவையும் மகனையும் தேற்றி, அவர்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் வரை, ஏறத்தாழ ஆறு மாதங்களுக்கு மேலாக உதவி உதவி என நீண்டன பல நூறு கரங்கள். அவை அத்தனையும்  பற்றிக்கொண்ட ஒற்றைப் புள்ளி  புதுகை செல்வாவும் அவரது துணைவன் அமைப்பும்.

ஒன்றிணைத்தஒன்றிணைவோம் வா:

குழந்தை மற்றும் மனைவியோடு சேர்ந்த ரகுபதி
குழந்தை மற்றும் மனைவியோடு சேர்ந்த ரகுபதி

கடலூர் மாவட்டம் கிளிமங்கலம் என்ற ஊரைச் சேர்ந்த பார்வையற்றவர் ரகுபதி. தற்காளிக ஆசிரியராகப் பணியாற்றும் இவர், ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஒரு பார்வையற்ற பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறான்.

பணி நிமித்தமாகக் கடலூர் மாவட்டத்தில் தங்கியிருந்தவர் கரோனா ஊரடங்கில் தனியாளாய் மாட்டிக்கொண்டார். எனவே, பக்கத்திலிருந்த அரியலூர் மாவட்டம் செந்துரை ஒன்றியம் புதுப்பாளையம் ஊரில் தனது தங்கை வீட்டில் தங்கியிருந்தார். ராணிப்பேட்டையில் வசிக்கும் தன் மனைவியைப் பிரிந்து அறுபது நாட்களுக்கு மேலாகிவிட்டது.

ரகுபதி செய்வதறியாது திகைக்க, பிரிவைப் பற்றி கணவனும் மனைவியும் ஃபோனில் பேசிப் புழுங்கிக்கொண்டார்கள். இதற்கிடையில், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தை அறிவித்தார் அந்தக் கட்சியின் தலைவர் திரு. ஸ்டாலின். அந்தத் திட்டத்தின்படி, ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்கள் உதவி தேவைப்பட்டால் அழைப்பதற்கு ஒரு எண்ணை அறிவித்தார். அந்த எண்ணைத் தொடர்புகொண்டு தனது நிலையைச் சொல்லி உதவுமாறு கேட்டிருக்கிறார் ரகுபதியின் மனைவி.

காரில் கிளம்பிய ரகுபதி
காரில் கிளம்பிய ரகுபதி

விஷயம் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு. காந்திக்குச் சொல்லப்பட, அவர் அரியலூர் மாவட்ட செயலாளரும் முன்னால் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் SS. சிவசங்கர் அவர்களைத் தொடர்புகொண்டார். இருவரும் இணைந்து, ரகுபதியை அவர் மனைவி மற்றும் மகனோடு ஒன்று சேர்த்தார்கள். நெஞ்சம் நெகிழ, பேச வார்த்தையின்றி கண்ணீரால் நன்றி சொன்னார்கள் இருவரும்.

அன்புடை நெஞ்சங்களை  இணைத்த அரசின் முயற்சி:

ஒரத்தியிலிருந்து கிளம்பும் பிரியா
ஒரத்தியிலிருந்து கிளம்பும் பிரியா

திருவள்ளூரைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி தம்பதிகள் மாரிமுத்து பிரியா. இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். மாரிமுத்து இரயிலில் வணிகம் செய்து வருகிறார்.

இந்நிலையில், தமிழக அரசால் முதல்கட்ட ஊரடங்கு கடந்த மார்ச் 24ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. உறவினரின் குடும்ப நிகழ்வில் பங்கேற்க தனது இரண்டு வயது மகனுடன் செங்கற்பட்டு வந்த பிரியாவால் திருவள்ளூர் திரும்ப இயலவில்லை. தனது உறவுக்கார பாட்டியோடு சேர்ந்து ஒரத்தி என்ற கிராமத்தில் இன்னொருவர் வீட்டில் தங்கவைக்கப்பட்டார் பிரியா.

 ஓரிரு வாரங்களில் எல்லாம் சரியாகிவிடும் என்று காத்திருந்த பிரியாவுக்கு நாட்கள் செல்லச் செல்ல நிலைமை மேலும் மோசமடைவது புரிந்தது. அதிகம் அறிந்திராத இன்னொருவரின் வீட்டில், ஒரு பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு எழும் இயல்பான தயக்கங்கள் மற்றும் கூச்சங்களால் உந்தப்பட்ட அகதி மனநிலைஒருபுறம் என்றால், அவ்வப்போது அப்பாவைக் கேட்டழும் இரண்டு வயதுக் குழந்தைக்கு் சமாதானம் சொல்லியும் சொல்லாமலும் ஏற்படுகிற கையறுநிலை இன்னோரு புறம். என்ன செய்வது? தனது கணவரைச் சேர தனக்குத் தெரிந்த வழிகளில் முயற்சிப்பது என்ற முடிவுக்கு வந்தார் பிரியா.

சில முயற்சிகளுக்குப் பின், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் தலைவர் சித்ரா அவர்களைத் தொடர்புகொண்டு தனது நிலைமையை விளக்கினார் பிரியா. திருவள்ளூர் மற்றும் செங்கற்பட்டு மாவட்டத்தில் அமல்ப்படுத்தப்பட்ட தீவிரமான ஊரடங்கின் காரணமாக, பிரியாவின் கோரிக்கை நிறைவேறுவது தாமதமாகிக்கொண்டே போனது. இந்நிலையில், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் துணைத்தலைவர் திரு. சுரேஷ் மற்றும் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திருமதி. சோஃபியா மாலதியும் இணைந்து மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் திரு. ஜானி டாம் வர்கிஸ் அவர்களுக்கு பிரியாவின் நிலைமை குறித்துக் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினர். அந்தச் செய்தியை் பார்த்த மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்கள் துரித கதியில் நடவடிக்கை மேற்கொண்டார். செங்கற்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை முடுக்கிவிட்டு, நடமாடும் மறுவாழ்வு வாகனத்திலேயே  (mobile van) ஒரே நாளில் பிரியாவும் அவரது இரண்டு வயது மகனும் திருவள்ளூரிலிருந்த மாரிமுத்துவிடம் சேர்க்கப்பட்டனர்.

கணவனோடு சேர்ந்த பிரியா
கணவனோடு சேர்ந்த பிரியா

இதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் துணைத்தலைவர் திரு. சுரேஷ் அவர்கள், “எப்படியாவது அந்தப் பெண்ணையும் குழந்தையையும் அவரின் கணவரிடம் சேர்த்துவிட வேண்டும் என்று நினைத்தோம். எங்களின் சிறிய குறுஞ்செய்தியில் பொதிந்திருந்த உணர்வுகளை உள்வாங்கிக்கொண்டு உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொண்ட எங்களின் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. “அண்ணா வந்துட்டேன்” என அந்தப் பெண் அடைந்த பூரிப்பை வார்த்தைகளில் விளக்க இயலாது. “செப்டம்பர் ஆயிடுமோனு பயந்தேன் சார்” என அந்தப் பெண்ணின் கணவர் நன்றி நவின்றபோது மனதுக்கு அவ்வளவு நிறைவாய் இருந்தது.

 அந்தக் குடும்பத்திற்கு எமது சங்கத்தின் சார்பில் ரூ. 2000 உதவி வழங்கினோம். பட்டதாரிகள் சங்கப் பொதுச்செயலர் மணிக்கண்ணன், ஆணையரக அலுவலர் மலர்க்கொடி அவர்கள், செங்கற்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் என அனைவரும் உள்ளார்ந்த மனதோடு உற்ற காலத்தில் துரிதமாய் செயல்பட்டார்கள்” என முடித்தார்.

 அம்மாவின் பிடியிலிருந்து விரைந்து தாவி, அப்பாவின் பின்னங்கழுத்தைக் கட்டிக்கொண்ட குழந்தைக்கும் தகப்பனுக்குமிடையேயான முத்தச்  சம்பாஷனை அரூபமாய்க் கேட்டது. அதில் வெளிப்பட்டதெல்லாம், அறுபது நாளாய்ச் சேகரித்துவைத்திருந்த ஏக்கமும் தவிப்பும் மட்டுமல்ல, இத்தனை நாட்கள் தன்னையும் தன் தாயையும் பாதுகாத்த அந்த அதிகம் அறிந்திராத உறவுக்கும், தன்னைத் தகப்பனிடம் கொண்டுசேர்த்த அனைவருக்க்உமான நன்றி நவிலலும்தான்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

***

ப. சரவணமணிகண்டன்

தொடர்புகொள்ள: vaazhgavalluvam@gmail.com

பகிர

1 thought on ““அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?” நெஞ்சம் நெகிழ்த்திய நினைவுகள் 2020

  1. தன்நலம் கருதாது தக்க சமயத்தில் இவர்கள் போன்றவர்கள் நல்ல உள்ளங்கள் செய்த இதுபோன்ற உதவிகளை அளவிட முடியாதது இன்று அவர்களுக்கு நன்றி கூறும் வகையில் அமைந்துள்ளது நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *