graphic வால்டர் வெற்றிவேல்

new version but not updated

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
குழந்தையை மடியில் வைத்துத் தாலாட்டும் சுகன்யா
வால்டர் வெற்றிவேல் திரைப்படக் காட்சி

அது 1993. நீதியின் பக்கம் பிடிவாதமாய் நிற்கும் காவல்த்துறை அதிகாரி வெற்றிவேலின் மனைவி சுமதிக்கு ஒரு விபத்தில் கண் பார்வை போய்விடுகிறது. “மன்னவா! மன்னவா! தாலாட்டு பாடிக்கொண்டே, வஞ்சகர்கள் விஷம் கலந்து வைத்திருந்த பாலை அறியாமல் தன் குழந்தைக்குப் புகட்டிவிடுகிறாள் சுமதி. குழந்தை இறந்ததுகூடத் தெரியாமல், “உன்னை ஒரு ஈயும் மொய்த்தால் உருகாதா தாயின் சித்தம்” என்று இறந்து ஈ மொய்த்துக்கொண்டிருக்கும் குழந்தையை மடியில் வைத்துப் பாடுவது கண்டு திரையரங்கில் கண்ணீர் வடிக்காதவர்கள் யார் இருந்திருக்க முடியும்? “சே P. வாசு என்னமா எடுத்திருக்காரு யா” எனப் பாராட்டாதவர்களே இல்லை. உண்மையில் அந்த சிந்தனைக்குச் சொந்தக்காரர் இயக்குநர் P. வாசுதானா? வரலாற்றுச் சக்கரத்தைச் சற்றுப் பின்னோக்கிச் சுற்றுவோம்.

1941 இல் வெளியான திரைப்படம் அஷோக்குமார். அறியாதவர்கள் அறிந்துகொள்ள, “அறிந்தும் அறியாமலும்” படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை நினைவுபடுத்துவோம். உங்கள் நினைவுகள் பற்றிக்கொள்ள, நீங்கள் குத்தாட்டம் போடும்படி வெளியான “தீப்பிடிக்கத் தீப்பிடிக்க” பாடலில் இடம்பெறும் ரீமிக்ஸ் பாடலான பூமியில் மானிட ஜென்மம் என்ற பாடல் இடம்பெற்ற திரைப்படம் அஷோக்குமார் என்ற பொதுத்தகவலைச் சொல்லி விஷயத்துக்குள் போவோம்.

அசோக மன்னரின் மகன் குணாளனாக கதாநாயக வேடம் ஏற்றவர் தியாகராஜ பாகவதர். மன்னரின் தளபதி மகேந்திரனாக மகோரா, அதான் எம்ஜிஆர். மன்னரின் அந்தப்புற ராணிகளில் வயதில் இளையவளான ஒருத்திக்கு, அழகும் வாலிபமும் நிறைந்த இளவரசன் குணாளன் மீது ஆசைவர அவனை அடையத் துடிக்கும் முயற்சியில் இறங்குகிறாள். அப்படியான ஒரு முயற்சியை மன்னன் பார்த்துவிட, இளவரசன் குணாளன், அதான் நம்ம கதாநாயகன் தியாகராஜ பாகவதர் மீதே பழியைப் போட்டுத் தப்பித்துக்கொள்கிறாள் ராணி.

ஆத்திரம் கொண்ட அசோக மன்னன், தளபதியிடம் தன் மகனின் கண்களைக் குருடாக்கி, காட்டிற்கு அனுப்பிவிடும்படி கட்டளையிடுகிறார். தளபதி எம்ஜிஆரோ அதைச் செய்யத் தயங்கிநிற்க, நாயகன் சூட்டுக்கோலால் தன் கண்களைத் தானே குருடாக்கிக்கொள்கிறார். பிறகு கர்ப்பவதியான தன் மனைவி காஞ்சனாவோடு அரண்மனையை விட்டு வெளியேறும் இளவரசன், காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து வறுமையில் வாடுகிறார். அப்போது காஞ்சனாவுக்குப் பெண் குழந்தையும் பிறக்கிறது.

தொட்டிலைப் பிடித்தபடி தாலாட்டு பாடும் தியாகராஜ பாகவதர்
அஷோக்குமார் திரைப்படக் காட்சி

ஒருநாள், ஒரு மரத்தின் கிளையில் தொட்டில் கட்டிக் குழந்தையைத் தூங்கவைத்துவிட்டு, உண்பதற்கு ஏதேனும் பிச்சையெடுத்து வருவதாகவும், குழந்தையைப் பார்த்துக்கொள்ளுமாறும் தன் பார்வையற்ற கணவனிடம் கூறிச் செல்கிறாள் காஞ்சனா. பாகவதரும், தங்கமே வைரமே எனத் தாலாட்டுப் பாடுகிறார்.  பசியால் வீறிட்டு கத்திக்கொண்டிருந்த குழந்தையின் அழுகை ஒருகட்டத்தில் நின்றுவிடுகிறது.

திரும்பி வந்த தன் மனைவியிடம் குழந்தை உறங்குவதாகச் சொல்கிறார் பாகவதர். உணவூட்டக் குழந்தையைத் தூக்கும் காஞ்சனா, குழந்தை இறந்துகிடப்பது கண்டு வெடித்து அழுகிறாள்.

தான் பத்து வயதில் பார்த்த அஷோக்குமார் திரைப்படத்தின் இந்தக் காட்சியை திரைக்கதை ஆசிரியரும் தயாரிப்பாளருமான திரு. கலைஞானம் அவர்கள் இயக்குநர் P. வாசுவிடம் சொல்ல, அதனையே தனது வால்டர் வெற்றிவேல் படத்தில் ஒரு காட்சியாக வைத்துவிட்டார் வாசு. உண்மையில் அந்த சிந்தனைக்குச் சொந்தக்காரர் அஷோக்குமார் திரைப்படத்தின் இயக்குநர் திரு. ராஜா சந்திரசேகர்தான். ஆயினும், காலத்திற்கேற்ற சிற்சில மாற்றங்களைச் செய்து, ஒரு புதிய சூழலில் சிந்தனையின் அடுத்த வெர்ஷனைத் தந்தார் வாசு. அதை அவர் இன்ஸ்பிரேஷன் என்றும் சொல்லக்கூடும்.

இரண்டாம் வெர்ஷனில் இசை புதிது. சூழலின் கதை புதிது. பாகவதர் பாத்திரத்தில் சுகன்யா. எல்லாம் சரிதான். ஆனால் பார்வையின்மை மற்றும் பார்வையற்றோர் பற்றிய இயக்குநரின் சிந்தனையில் மட்டும்! …

தலைப்பிற்குத் திரும்பிச் செல்க.

தகவல் மூலம்: நன்றி, திரு. கலைஞானம் அவர்களின்  ‘சினிமா சீக்ரட்ஸ் பாகம் 5’ புத்தகத்திலிருந்து.

ப. சரவணமணிகண்டன்

தொடர்புகொள்ள: vaazhgavalluvam@gmail.com

பகிர

1 thought on “new version but not updated

  1. மிக அருமையாக எழுதியுளீர்கள். கட்டுரையில் தெரிவித்ததற்கிணங்க, காலங்கள் மாறினாலும், பார்வையற்றோர் குறித்த வெகுஜன மக்களின் சிந்தனை மட்டும் மாற்றம் பெறுவதில்லை. ஏன்? குழந்தையை தொட்டு பார்த்தால் அசைவின்றி, பாதங்கள் மிக குளிர்ந்திருப்பது உள்ளிட்டவற்றை வைத்து ஒரு அளவிற்கு பார்வையற்றவர்களால் யூகிக்க இயலாதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *