திருவாரூரில் அமைந்திருக்கிற
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில்
மாற்றுத்திறனாளிகள் குறித்த ஆக்கபூர்வமான உரையாடல்கள் தொடர்ந்து செயல்வழி முறையில் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
2022 ஆம் ஆண்டு இங்கு
தொடங்கப்பட்டிருக்கிறது. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டின் தொடக்க மாதங்களில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுவதும், அதையொட்டி, பல்வேறு பொருண்மைகளில் கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்படுவதும், அந்தக் கருத்தரங்கில் மாற்றுத்திறனாளர் தொடர்பான பல்வேறு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் செயல்பாட்டாளர்களை அழைத்து உரை நிகழ்த்தச் செய்தலும் சிறப்பானதொரு முன்னெடுப்பு.

அந்த வகையில், Enabling Unit மற்றும் ஆங்கிலத்துறை இணைந்து, ‘குடும்பம் தொடங்கி, பாதுகாவலர் மற்றும் சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடம் ஒரு குறுக்கு வெட்டுப் பார்வை’ என்ற பொருண்மையில்
மார்ச் 19, 2026 வியாழனன்று ஒருங்கிணைத்திருந்தார்கள்.
இந்த நிகழ்வில் கருத்தாளர்களாக
அமைப்பின் இயக்குநர் ப்ரிதா கிருஷ்ணதாஸ், மாநிலக்கல்லூரியின் பேராசிரியர் சிவராமன், தியாகராயர் கல்லூரியின் பேராசிரியர்
ஆகியோர் உரை நிகழ்த்திச் சிறப்பித்தனர்.

‘தமிழ்ச்சூழலில் மாற்றுத்திறனாளியத்துக்கான அறிவுத்தளம்’ என்ற தலைப்பீன்கீழ், enabling Unit மற்றும் தமிழ்த்துறை இணைந்து ஒருங்கிணைத்த இரண்டாம் நாள் கருத்தரங்கில், ஓய்வுபெற்ற பேராசிரியர் திருமதி. ராதாபாய் அவர்கள், மூத்த எழுத்தாளர் ஐயா தேநீ சீருடையான் அவர்களோடு நானும் பங்கேற்றேன். இரண்டு நாட்களும் மாற்றுத்திறனாளிகள் குறித்த பொருண்மைகளில் உரையாடல்கள் நடைபெற்றன. ஏனோதானோவென்று மாணவர்களின் பங்கேற்பு அமையவில்லை என்பதை கேள்வி நேரத்தில் அவர்கள் எழுப்பிய வினாக்கள் சொல்லின.
பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர், கல்விப் புல முதன்மையர், பல்வேறு துறைகளைச் சார்ந்த மூத்த பேராசிரியர்கள் என நிகழ்வைத் தொடங்கிவைக்கிற சம்பிரதாயத்தில் பங்கேற்ற எல்லோருடைய உரையும் துளிகூடச் சம்பிரதாயமாய் அமையவில்லை என்ற விடயம்தான், இந்த நான்கு ஆண்டுகளில் enabling Unit எதைச் சாதித்திருக்கிறது என்பதற்கான முதன்மைக் கட்டியம்.
நிகழ்வு ஏற்பாடுகள் தொடங்கி, வந்திருக்கிற எங்களைப் பக்குவமாய்க் கைபிடித்து, பக்கவாட்டு சூழல் விளக்கி, கழிவறை, உணவறை அழைத்துச் செல்லல், தேநீர் தருதல், குடித்த கோப்பையை எங்கு வைக்கலாம் என்ற எண்ணம் எழுவதற்குள் எதிரே கைநீட்டல் என எல்லா நிமிடங்களிலும் எங்களோடே உடனிருந்தார்கள் பல்கலைக்கழக இருபால் மாணவர்கள்.

நான்கே ஆண்டுகளில் மூன்று பார்வையற்றவர்கள் தங்கள் வாழ்வில் உச்சம் தொட உதவியாய் நின்றிருக்கிறது பல்கலைக்கழகத்தின் enable Unit என்கிற மாற்றுத்திறனாளிகள் பிரிவால் தொடங்கப்பட்டிருக்கிற Assistive Technology Centre.
தமிழக அரசின் தொகுதி 2 தேர்வில் வெற்றிபெற்று, இன்று துணை வணிகவரி அலுவலராகப் பணியாற்றும் வர்ஷா, பட்டுக்கோட்டை, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியராகப் பணிவாய்ப்பு பெற்றிருக்கிற தினேஷ், தன்னுடைய முனைவர் பட்டத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிற ராஜலட்சுமி ஆகியோர் இந்தச் சாதனைகளுக்கான கண்முன் சாட்சிகள்.
இந்த அத்தனை செயல்பாடுகளுக்கும் மையப்புள்ளியாய் இருந்து, பெருவிசையோடு செயல்பட்டுக்கொண்டிருப்பவர் நண்பரும் பேராசிரியருமான
அவர்கள்.
கல்வித்தள வளாகங்களில் தனக்கு வாய்க்காது போன, ஏக்கத்தை ஏற்படுத்திய வசதிகள் ஒவ்வொன்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கைக்கெட்டும் தூரத்தில் இருக்க வேண்டும் என்கிற கனவும் முனைப்பும் அவரை இயக்கிக்கொண்டிருக்கிறது.
தன் கனவைச் சாத்தியப்படுத்திக்கொள்ள அவர் தனது சக அலுவலர்களோடு நிகழ்த்திக் கொண்டிருக்கிற நிதானமும் ஆழமும் கொண்ட செயல்வழி உரையாடல்களால் வளாகத்தில் ஏற்பட்டிருக்கிற தாக்கம் எத்தகையது என்பதை நம்மைச் சந்திக்கிற ஒவ்வொருவரின் கைகுலுக்கல்களும், புன்சிரிப்பு உரையாடல்களும் நமக்கு விளக்கிவிடுகின்றன. தன்னுடைய உறுதியான செயல்திறனால், தற்போது மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மாற்றுத்திறனாளிகள் விவகாரங்களுக்கான முதன்மை நிபுணராக அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

குளிரூட்டப்பட்ட உதவி தொழில்நுட்ப மையத்தில் (Assistive Technology Centre) ஏற்படுத்தப்பட்டிருக்கிற கணினி வசதிகள், விலை உயர்ந்த ஹெட்போன்கள், நிமிடத்துக்கு நூறு பக்கங்களை ஸ்கேன் செய்து அதை அணுகத் தக்க கோப்பாக மாற்றித்தரும் அதிநவீன வருடிகள், கிபோ ஸ்கேனர், அறையின் சுற்றுச் சுவர் முழுக்க பதிக்கப்பட்டிருக்கிற பிலக் பாயிண்டுகள், மெத்தென்ற இருக்கைகள் என ஒவ்வொன்றும் பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களைச் சிந்தித்துச் சிந்தித்து வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
கணினி மட்டுமல்ல, பிரெயில்தான் பார்வையற்ற மாணவர்களின் கல்விநலனுக்கு அடிப்படையானது என்பதைப் பறைசாற்றும் வகையில், அதிநவீன பிரெயில் பிரிண்டர் ஒன்றும் மையத்தில் இருக்கிறது. இந்த வசதி வேறெந்தக் கல்வி வளாகங்களிலும் இல்லாத ஒன்று என வியப்போடு சொன்னார் ஐயா சிவராமன் அவர்கள். திரும்பி வர மனமில்லாமல் கனிவும், அன்பும் கொண்ட உதவி நூலகர் ஐயா வேலுமணி அவர்களுக்கு உதவியாளராக இங்கேயே இருந்துவிட்டால் என்ன என நினைக்கச் செய்துவிடுகிறது அந்த நூலக அறை.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகள், பதிலி எழுத்தர் வசதி, கல்விக் கட்டண (Tution Fee) விலக்கு என Enabling Unit தனது ஒவ்வொரு அடியையும் ஆழமாகப் பதித்துக்கொண்டிருக்கிறது. அதுவும் எங்கே என்று பார்த்தால், அதிக விழிப்புணர்வு கொண்ட சென்னை போன்ற பெருநகர் சார்ந்து அமைந்திருக்கிற பல்கலைக்கழக வளாகங்களில் அல்ல என்பதுதான் அதன் கூடுதல் தனித்துவம்.
எனவே, எனது அன்புக்குரிய பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களே! உங்கள் பட்ட மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கு நீங்கள் திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தை உங்களின் முதல் தெரிவாகக் கொள்ளலாமே! கோழியும் குஞ்சுகளுமாய், பாரம்பரியமாக ஒரே கல்லூரிக்குள் உட்புகுந்து நீங்கள் காலத்தை அடைகாத்தது போதும்.
ஒற்றை ஆள் ஆனாலும் சரி, புதிய இடங்கள், புதிய தளங்கள் எனப் பயணப்படுங்கள். அத்தகைய செயல்கள்தான் உங்கள் வாழ்வுக்கான புத்துயிர்ப்பு, நீங்கள் இழந்துவிட்ட ஒளிமயத்தை நீங்களே உருவாக்கிக் கொள்வதற்கான பயிற்சி.
உறுதியாகச் சொல்கிறேன்,
Enabling Unit
will disable your plummet.
***ப. சரவணமணிகண்டன்
தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com
திரு. பூபதி அவர்களைத் தொடர்புகொள்ள:
+91-9843693951
pboopathi@cutn.ac.in
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.




