ஊனமுற்றோர் தொடர்பான பயிலரங்கில் உரை நிகழ்த்தப் போலந்து செல்கிறார் பூபதி!
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் பூபதி அவர்கள், ஒரு வார காலப் பயணமாகப் போலந்து செல்கிறார். அறிவுசார் களமாடலுக்காக அயல்நாடு செல்வது அவருக்கு இது மூன்றாவது முறை.
2018ஆம் ஆண்டு, அவர் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, உரை நிகழ்த்த மாஸ்கோ சென்றிருக்கிறார். உலகப் புகழ்பெற்ற தி நியூ லிட்ரரி பப்ளிஷிங் ஹவுஸ்
(The New Literary Publishing House)
மற்றும் புனித பீட்டர்ஸ்பெர்க்கில் அமைந்திருக்கிற ஐரோப்பா பல்கலைக்கழகமும்
(European University)
இணைந்து நடத்திய பயிலரங்கு அது. ‘நம் காலத்து நாயகர்கள் (Heroes of our Time)’ என்ற தலைப்பில் மறைந்த பாலஸ்தீன முன்னாள் அதிபர் யாசர் அராஃபத் குறித்து உரையாற்றித் திரும்பினார்.
மேக்ஸ் வெபர் ஃபவுண்டேஷன் (Max Weber Foundation) ஹிஸ்டாரிக்கல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜெர்மன்
(Historical Institute of German)
என்ற அமைப்பை உலகின் ஆறு முக்கிய நகரங்களில் ஏற்படுத்தி பல்வேறு ஆய்வுகளைச் செய்துவருகிறது. அந்த நிறுவனம் கடந்த 2022ஆம் ஆண்டு, ‘வாழ்க்கை என்கிற வட்டம் – பிறப்பு, இறப்பு, இடைப்பட்ட காலம் (The Circle of Life – Birth, Death and Liminality)’ என்ற தலைப்பில் உலகெங்கிலுமிருந்து ஆய்வுக் கட்டுரைகளைக் கோரியிருந்தது. மொத்தம் வந்து சேர்ந்த 200 கட்டுரைகளில் 8 மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டன. அந்த எட்டு கட்டுரைகளில் நமது பூபதி அவர்களின் கட்டுரையும் அடக்கம். அதாவது, போலந்தில் அந்த ஆண்டு நடைபெற்ற பயிலரங்குக்காகத் தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு ஆசியர், ஒரே ஒரு பார்வையற்றவர்.


இந்தமுறை போலந்தின் சீடல்ஸ் பல்கலைக்கழகத்தில், ‘ஊனமுற்ற மாணவர்களுக்கான ஆங்கிலம் எழுதுதல் மற்றும் பேசுதல் கற்பித்தல் நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் உள்ளடங்கிய வகுப்பறை’ போன்ற தலைப்புகளில் நாளுக்கு இரண்டு மணிநேரம் என நான்கு நாள் உரை நிகழ்த்துகிறார்.
கல்விப் புலத்தில் மிகவும் மதிப்பு மிக்கதாகக் கருதப்படும் எராஸ்மஸ்
நிதி நல்கையின் மூலம் முனைவர் பூபதி மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாக தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் போலந்தில் உள்ள சீடல்ஸ் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, இவ்விரு பல்கலைக்கழகங்களையும் சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குறிப்பிட்ட பொருண்மைகளில் கற்றல்-கற்பித்தல் தொடர்புடைய செயல்பாடுகளை மேற்கொள்ள குறிப்பிட்ட காலத்திற்குத் தங்களுக்குள் பயணம் மேற்கொள்ளலாம். அவ்வாறு பயணம் மேற்கொள்ள சீடல்ஸ் பல்கலைக்கழகத்தின் மூலம் இந்த முறை அழைக்கப்பட்டிருக்கிறார் நம் பூபதி!
ஏற்கனவே முனைவர் பூபதி, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் சார்பில் சீடல்ஸ் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் பேராசிரியர் டேரியஸ் மெக்கலோஸ்கி (Darius Mecholosky), ஆங்கிலப் பேராசிரியர் எவலீனா ஆகியோரை சென்ற ஆண்டு அழைத்திருந்தார். இவர்களுள் கணினி அறிவியல் பேராசிரியர் டேரியஸ் ஒரு முழுப் பார்வையற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வகுப்பெடுத்த விதத்தைப் பார்த்துக் கணினி அறிவியல் மாணவர்களும் பேராசிரியர்களும் உண்மையில் வியந்துபோயினர். தற்போது அதுபோன்ற தொடர் வகுப்புகள் எடுக்கவும் சொற்பொழிவுகள் வழங்கவும் போலந்து செல்கிறார் பூபதி.
ஜூன் 7, 2025 சனிக்கிழமை இரவு திருச்சியிலிருந்து விமானத்தில் சென்னை வழியாகக் கத்தார் சென்று, அங்கிருந்து போலந்து செல்லும் பூபதி, அதே வழியில் மீண்டும் அடுத்த வாரம் தமிழகம் திரும்புகிறார். இப்பயணம் மற்றும் போலந்தில் அவர் தங்குவதற்கான முழுச் செலவையும் எராஸ்மஸ் நிதி நல்கை ஈடுசெய்யும். தனது மூன்று அயலகப் பயணங்களையும் பூபதி கல்விப் புல நிதி நல்கை அமைப்புகளின் நிதி உதவியுடன், தனியாகவே மேற்கொண்டுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு, மற்றுமொரு பெருமை!
பொதுவாகக் கல்விப் புலச் செயல்பாடுகளைத் தனது சொந்த வளர்ச்சி மற்றும் பணி மேம்பாட்டிற்கான வாய்ப்பாக மட்டுமே பார்க்கும் இந்தியச் சூழலில், பூபதி தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் சிறப்புத் தேவை கொண்டோருக்கான உயர்கல்வி மையம் (Higher Education for Persons with Special Needs Cell) ஒன்றை தனது சொந்த முயற்சியில் தொடங்கினார். இந்த மையத்தின் மூலம் அங்கு படிக்கும் – பணியாற்றும் ஊனமுற்றோருக்குப் பல்வேறு அணுகல் வசதிகள், மாணவர்களுக்கு எழுதுனர் ஏற்பாடு செய்தல் போன்ற பணிகளை மிகச் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார். மேலும், இந்தியாவின் பல ஊனமுற்றோர் உரிமைச் செயல்பாட்டாளர்கள், தமிழ்நாட்டின் பார்வையற்ற எழுத்தாளர்கள் எனப் பலரையும் இந்த மையத்தின் மூலம் அழைத்து ஆழமான கருத்தரங்குகளை நடத்தியுள்ளார். ஊனமுற்றோர் குறித்தும் ஊனமுற்றோர் உரிமைகள் குறித்தும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக எல்லா மாணவர்களும் மிகப் பெரிய விழிப்புணர்வு பெற்றிருக்கின்றனர். இந்த முன்னேற்றம் பூபதி என்ற தனி ஒருவரின் பணியினால் ஏற்பட்ட விளைவே என்பதில் மாற்றுக் கருத்தில்லை. மேலும், புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து ஊனமுற்றோர் அனைவருக்கும் கல்வி மற்றும் விடுதிக் கட்டணம் வழங்கும் நடைமுறையை தான் பணியாற்றும் பல்கலைக்கழகத்திலும் தனது சீரிய முயற்சியின் மூலம் சாத்தியப்படுத்தியிருக்கிறார் பூபதி!
மிக மிகப் பின்தங்கிய கரூர் மாவட்டம் வெள்ளியணை என்ற சிற்றூரிலிருந்து, மிக எளிய குடும்பப் பின்னணியில் தானும் படித்து, தனது தம்பியையும் படிக்கவைத்து, இன்று இந்தியாவின் ஊனமுற்றோர் இயல் (Disability Studies) என்ற அறிவுப் புலத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வளர்ந்துள்ளார் பூபதி. அவரது கடும் உழைப்புக்கு இன்னும் பல உயரங்கள் காத்திருக்கின்றன!
போலந்து செல்லும் உங்களுக்கு வாழ்த்துக்கள் பூபதி!
***முனைவர் கு. முருகானந்தன்
கட்டுரையாளர் கள்ளக்குறிச்சியில் அமைந்துள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் நிறுவன உறுப்பினர்.
தொடர்புக்கு: send2kmn@gmail.com
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
