“உன் கண்ணீரைத் துடைக்கும் விரல்களைத் தேடாதே; பிறர் கண்ணீரைத் துடைக்க உன் விரல்களைக் கொடு.”
யார் இவர்? ஏன் என் ரோல் மாடல் ஆனார் இவர்?
ஏழு வயதிலேயே தன் கண்களில் பிரச்சினை என்று அறிந்துகொண்டவர். வகுப்பறையில் பல நேரங்களில் படிக்க முடியாமல் கலங்கி நின்றவர். ஆனாலும், தன்னைப் பார்வையற்றவராய் அறியாதவர். அப்பாவின் ஆசையை நிறைவேற்ற இஷ்டப்பட்டுக் கஷ்டப்பட்டுப் படித்தவர். அரசு வேலை ஒன்றே அப்பாவின் கனவு என்று, பள்ளிப்படிப்பை முடித்ததும் அந்த வேலைக்காகக் காத்திருந்தவர். வேலையும் கிடைத்தது.
ஆனாலும், அந்த வேலையில் சேர்வதற்கான மருத்துவச் சான்றிதழ் கிடைக்காமல் வேலையும் கைவிட்டுப் போனது. பார்வையும் முற்றிலுமாய்க் குறையத் துவங்கியது. தன்னைப் பார்வையற்றவளாய் உணரத் துவங்கிய நேரம், “முடிந்துபோனது வாழ்க்கை” என்று விதியோ இயற்கையின் சதியோ முற்றுப்புள்ளி வைக்க, பதினோரு ஆண்டுகள் தன் வீட்டுக்குள் சிறைப்பட்டு, கலைந்துபோன கனவிற்காக, முடிந்துபோன வாழ்க்கைக்காகத் தவம் இருந்தவர்.
எத்தனை முறை இவரின் பெற்றோரின் கலங்கிய வார்த்தைகளும் கண்ணீர்த்துளிகளும், நேசிப்பவர்களின் பரிதாபப் பார்வைகளும் இவரை உருக்குலைத்துப் போட்டிருக்கும்! எத்தனை இரவுகள் இவரின் கண்ணீரில் தலையணை குளித்திருக்கும்! எத்தனை முறை அவமானங்களும் கேலி கிண்டல் வார்த்தைகளும் இவரைச் சுட்டிருக்கும்! எத்தனை முறை “இந்த வாழ்க்கை வேண்டாம்” என்ற எண்ணம் தோன்றி மறைந்திருக்கும்!
அத்தனையையும் இடையில் பார்வை இழந்தவர்களுக்கு நிச்சயம் புரியும். இடையில் பார்வை இழந்த எல்லோருக்கும் தோன்றும் முதல் எண்ணம், “இனி நமக்கு வாழ்க்கையே இல்லை” என்பது மட்டும்தான். அதிலும் பெண்ணாக இருக்கும்போது அதன் வலியும் அழுத்தமும் கூடுதலாய் இருக்கும். நீளும் நாட்களுக்கு மூன்று வேளை உணவே போதும் என்று எத்தனையோ பேர் முடங்கியே கிடக்கிறார்கள்; வாழ்க்கையைத் தன் வீட்டு மூலைக்குள் முடித்துக்கொள்கிறார்கள்.
ஆனால் இவரோ, “ஜன்னலின் வழியே கசியும் சிறு வெளிச்சம் போதும்; என் வானம் நோக்கிப் புதுச் சிறகை விரித்துப் பறப்பேன்” என்று தயாராய் இருந்தார். இவரின் நம்பிக்கையின் வேர்களில் வெளிச்சம் வந்தது. இவரின் சிறகுகள் விரிந்தன; கூண்டை விட்டுப் பறந்தார். மீண்டும் படிக்கத் துவங்கினார். எந்தப் பார்வைக் குறைபாட்டினால் இவருக்குக் கிடைத்த வேலை கிடைக்காமல் போனதோ, “இவருக்குப் பார்வை இல்லை, இனி இவருக்கு வாழ்க்கையும் இல்லை” என்று எத்தனை பேர் நினைத்தார்களோ சொன்னார்களோ, அத்தனை பேருக்கும் முன்னால் “நான் வீழ்ந்து போகவில்லை” என்று தலைநிமிர்ந்து நின்றார்.
பார்வையுள்ள மகளாய்த் தன் அப்பாவின் கனவை நிறைவேற்ற முடியாமல் போனவர், பார்வையற்ற மகளாய்த் தன் அப்பாவின் கனவையும் நிறைவேற்றி, தான் தோற்கப் பிறந்தவள் இல்லை என்று நிரூபித்துக் காட்டியவர். பார்வைக் குறைபாடு உடையோருக்கான சிறப்புப் பள்ளியின் ஆசிரியராய்ப் பணியில் சேர்ந்து சாதித்தவர்.
இதுவரை நான் சொன்னது இவரைப் பற்றிய முன்னுரை மட்டுமே. இவர் ஆச்சரியங்களின் தொகுப்பு! இவரைப் பற்றிப் பலரும் அறியாததைச் சொல்கிறேன். ஏன் இவர் என் ரோல் மாடல் ஆனார்?
அரசு வேலையும் கிடைத்துவிட்டது; தன் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் துவங்கிவிட்டது. இனி என்ன இவருக்கு கஷ்டம் இருக்கப்போகிறது என்றுதானே நீங்களும் நினைப்பீர்கள்? அவரும் அப்படியே நினைத்திருக்கக்கூடும். ஆனால் நடந்தது வேறு. ஒரு பாடல் வரியைச் சொல்கிறேன்: “நினைப்பதெல்லாம் கிடைக்கிற வாழ்க்கை யாருக்குக் கிடைக்கிறது? பல கனவுகள் இங்கே கண்ணீர்த் துளியாய்க் கண்ணில் வழிகிறது.” என்பதுபோல இவரின் வாழ்க்கை மாறியது.
வாழ்க்கையில் ஒருவர் ஏமாற்றம், தோல்வி, அவமானம், இழப்பு என்று எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ள முடியும்; தாண்டி வரவும் முடியும். அப்படி எல்லாவற்றையும் தாங்கியும் தாண்டியும் வந்தவர் இவர். ஆனால், துரோகம் முற்றிலுமாய் நம்மை வீழ்த்தும். அப்படி விழுந்து கிடப்பவர் மீது பரிதாபப் பார்வைகளும், அவமான வார்த்தைகளும், கேலி கிண்டல்களும் சூழும்; மனம் தீக்குளித்துக்கொண்டே இருக்கும். அப்படி ஒரு நிலைக்குக் காலமோ, விதியோ இவரைத் தள்ளியது. மீளாத் துயரத்தில் மீண்டும் விழுந்தார்; உயரப் பறந்த நிலையில் சிறகை இழந்தார்.
இவரின் நிலையில் நான் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்று யோசித்துப் பார்த்தேன். நிச்சயம் முதலில் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்திருப்பேன்; மனித இனத்தையே வெறுத்திருப்பேன்; “சுயநலமான உலகம்” என்று யாரையும் நம்ப மறுத்திருப்பேன்; சுயநலமாய் மட்டும் வாழ நினைத்திருப்பேன். கண் முன்னே எந்த உயிர் துடித்துக்கொண்டிருந்தாலும் கலங்கியிருக்க மாட்டேன்; உதவி என்று யார் கேட்டாலும், உதவிட முடிந்தாலும் உதவியிருக்க மாட்டேன். “பூவான என் வாழ்க்கையில் புயல் வந்து தாக்கிட நொறுங்கிவிட்டேன்” என்று காரணம் சொல்லியிருப்பேன். நீங்களாய் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்று யோசித்துக்கொள்ளுங்கள்.
இவருக்குக் கடவுள் நம்பிக்கை அதிகம் உண்டு. ஆனால், கடவுளுக்கே இவர் மீது அதிக நம்பிக்கை உண்டுபோலும். எத்தகைய சூழலிலும், மீள முடியாத சுழலிலும், இவர் சிக்கிக்கொண்டாலும் மீண்டு வருவார் என்று! ஆம், அவ்வாறே மீண்டு வந்தார். மீண்டும் உயரப் பறக்கத் தொடங்கினார். இவருக்கான மகிழ்ச்சியை இவர் தேடினார். தன் பெற்றோரோடும், உடன்பிறப்புகளோடும், உறவுகளோடும், தன்னை நேசிக்கும் நட்புகளோடும் வாழ்வதே போதும், அதுவே தனக்கு மகிழ்ச்சி எனத் தன் வாழ்க்கையைச் சுருக்கிவிடவில்லை. இவர் விளக்குகளைச் சுற்றிவரும் விட்டில்பூச்சியாய் இல்லை; வானத்தையே சுற்றிவரும் சிறகு கொண்டார்.
ஒரு சமூகத்தையே தன் குடும்பம் என ஏந்திக்கொண்டார். தனக்கான பாதையைத் தானே உருவாக்கி, பிறரின் கண்ணீரைத் துடைப்பதும், கவலைகளைப் போக்குவதும், கனவுகளை ஜெயிக்க வைப்பதும் தன் கடமையென எண்ணம்கொண்டார். இவர் காலம் தந்த அதிசயம்; இவர் எப்பொழுதும் ஓர் ஆச்சரியம். தன் நண்பர்களோடு சேர்ந்து ‘ஹெலன் கெல்லர் நலச்சங்கத்தை’ உருவாக்கியவர்.
உலகமே சிறைப்பட்ட கொரோனா காலகட்டத்தில், தன் நண்பர்களோடு சேர்ந்து ஐந்தரை லட்சம் நிதி திரட்டி, 550 பார்வையற்ற குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் என்ற விகிதத்தில் கொடுத்தவர். இவரின் அடுத்த முயற்சியாக
உருவாக்கினார்.
ஆன் சலிவன் பயிற்சி மையம் அப்படி என்ன செய்கிறது தெரியுமா?
“நீங்கள் அரசு ஊழியர் ஆக வேண்டுமா? அப்படியென்றால் எங்கள் பயிற்சி மையத்தில் சேர்ந்து படியுங்கள், மாதம் இத்தனை ஆயிரம் கொடுங்கள்” என்று சம்பாதித்துக்கொண்டிருக்கும் பொழுது, ஒவ்வொரு பார்வையற்றவரின் கனவும் அரசு வேலைதான்; அந்தக் கனவுகளோடு இருக்கும் ஒவ்வொரு பார்வையற்றவர்களையும் ஒன்று சேர்த்து, அந்தக் கனவை நிறைவேற்றப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறப் பயிற்சி அளிக்கிறார், இலவசமாய்! “எங்களைத் தேடி வாருங்கள்” என்று சொல்லாமல், ஆன் சலிவன் பயிற்சி மையம் அவர்களைத் தேடி இணைய வழியில் செல்கிறது. இவர் சத்தமின்றிச் செய்யும் புரட்சி அது. அந்தப் பயிற்சி மையத்தின் மாணவனாய் சிலவற்றைச் சொல்கிறேன்.
ஆன் சலிவன் (Anne Sullivan) பயிற்சி மையத்தின் கட்டமைப்பு மிக அழகானது. “மற்றவர்கள் ஜெயிக்க, ஜெயித்தவர்கள் தன் உழைப்பையும் நேரத்தையும் கொடுக்கும்” அதிசயத்தை அங்கு பார்க்கலாம். முதல் முறையாக ஆன்லைன் மூலம் நடக்கும் தேர்விற்கு, Scribe வசதியை ஏற்படுத்தித் தந்த முதல் பயிற்சி மையமாகவும், ஒரே பயிற்சி மையமாகவும் ஆன் சலிவன் பயிற்சி மையமே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த மையத்தில் வகுப்பெடுப்பவர்களோ, நிர்வாகிகளாய் இருப்பவர்களோ ஒருநாளும் ஒருவரிடமும் முகம் சுழித்தது கிடையாது. “உங்களுக்கு பாடத்தில் எந்த சந்தேகம் என்றாலும் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்” என்று அன்போடு சொல்வார்கள். “இலவசமாய்த் தானே நாம் சொல்லிக் கொடுக்கிறோம்” என்ற எண்ணம் யாரிடமும் இருக்காது; எல்லோருக்கும் அளிக்கப்படும் மரியாதை ஒருபோதும் குறையாது. இப்படி ஒரு அழகான கட்டமைப்பை உருவாக்கி, அதைச் செவ்வனே செய்ய முடியும் என்றால் அது இவரால் மட்டுமே முடியும்.
ஒரு பயிற்சி மையத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றால், அதற்குப் பின்னால் எத்தனை பிரச்சினைகளும் இடையூறுகளும் வந்து கொண்டே இருக்கும் என்பது விவரம் தெரிந்தவர்களுக்குப் புரியும். ஆனாலும், அதையெல்லாம் இவர் யாரிடமும் சொல்வதில்லை; அதற்காக இவர் ஓய்வெடுத்ததும் இல்லை. இவர் எப்பொழுதும் ஒன்றைச் சொல்லிக் கொண்டே இருப்பார்: “ஆன் சலிவன் பயிற்சி மையம் வெற்றிகரமாய் நடப்பதற்கு காரணம் ‘நான்’ அல்ல, ‘நாம்’!” எல்லோருடைய உழைப்பும் அர்ப்பணிப்பும் சேர்ந்ததுதான் இந்த பயிற்சி மையம் என்பதை இவர் சொல்லத் தவறியதே இல்லை.
இவரின் உயர்ந்த லட்சியமெல்லாம் “யாரும் யாரிடமும் கையேந்தி நிற்கக்கூடாது” என்பதுதான். ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் போட்டித் தேர்வுகளில், தன் பயிற்சி மையத்திலிருந்து பல மாணவ, மாணவிகள் வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற கனவோடு உழைப்பவர்; அப்படி வேலைக்குச் சென்றவர்களைக் கண்டு என்றும் உள்ளம் மகிழ்பவர்.
இதை மட்டும்தான் இவர் செய்கிறாரா? நான் ஒருமுறை ஒரு தம்பியிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னதை இங்கே பகிர்கிறேன்: “எனக்குக் கல்லூரி கட்டணம் செலுத்தப் பணம் இல்லை. உடனே மேடத்தைத் தொடர்பு கொண்டேன், அவர்தான் எனக்குக் காலேஜ் பீஸ் ( கட்டினார்,” என்றார். அதற்குப் பிறகுதான் தெரிந்தது, இவர் நிறைய மாணவ, மாணவிகளுக்குக் கல்லூரி கட்டணத்தையும் விடுதி கட்டணத்தையும் செலுத்தி வருகிறார் என்று.
இவரிடம் இருந்தால் பணம் கொடுப்பார்; எல்லோருக்கும் கொடுக்க இவரிடம் போதிய பணம் இருக்காது. ஆனால், இவரின் வழியாகப் பல நன்கொடையாளர்கள் பல மாணவ, மாணவிகளுக்குக் கல்வி மற்றும் விடுதி கட்டணங்களைச் செலுத்துகிறார்கள். பலருக்கு மருத்துவ சிகிச்சைக்கான உதவியும் இவர் வழியாகக் கிடைக்கிறது. அதில் ஒரு அழகான விஷயம் என்னவென்றால், யார் பெயரையும் சொல்லி இவர் யாரிடமும் பணம் பெறுவதில்லை. உதவி செய்ய நினைப்பவர்களை, உதவி தேவைப்படுபவர்களுக்கு நேரடியாகவே பணத்தைச் செலுத்தச் சொல்லிவிடுவார்.
இவர் சொன்னால் உதவிடப் பலர் இருக்கிறார்கள். காரணம் இவரை அறிந்தவர்களுக்குத் தெரியும்—இவர் வார்த்தையில் உண்மையும், செயல்களில் நேர்மையும், பிசிறில்லாத சுயநலமின்மையும் கொண்டவர் என்று. இவருக்கு இன்னொரு ஆசையும் உண்டு; பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்குக் கணினி பயிற்சி கொடுக்க வேண்டும் என்பது. “அட, அதைத்தான் எல்லோரும் செய்கிறார்களே” என்று நினைக்கிறீர்களா? இவருக்கு வெறும் பயிற்சியை மட்டும் கொடுப்பதில் விருப்பமில்லை. கணினி பயிற்சி மேற்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் மடிக்கணினியை (Laptop) வாங்கிக் கொடுத்துப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்பதுதான் இவரின் ஆசை. அந்த ஆசையையும் இவர் விரைவில் நிறைவேற்றுவார்.
இவரின் பெயரை நான் இன்னும் குறிப்பிடவில்லை தானே? இன்னொன்றையும் சொல்லிவிட்டுச் சொல்கிறேன்…
இளம் வயதிலேயே இதயத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஒரு தங்கையைப் பற்றி நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு கூறினேன். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்றார். நான், “எனக்குத் தெரியவில்லை” என்றேன். அந்தத் தங்கையின் பெயர் ஸ்ரீமதி. ஸ்ரீமதியிடம், “உன்னிடம் மேடம் பேசுவார்கள்” என்று சொன்னேன். ஸ்ரீமதி ஆச்சரியமாய் என்னிடம், “மேடம் பேசுவார்களா?” என்று கேட்டார். அடுத்த நாளே என்னிடம் ஸ்ரீமதி, “அண்ணா! மேடமும் சாரும் என்னிடம் பேசினார்கள்” என்று மகிழ்ச்சியோடு சொன்னார்.
சில வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீமதி என்னிடம் சொன்னதைச் சொல்கிறேன்: “அண்ணா, நான் அம்மாவைப் பார்க்க அவர் வீட்டுக்குப்போனேன்.
தன் சொந்த அம்மாவை இல்லை. அது சித்ரா மேடம்.

சித்ரா அம்மா மடியில் தலைவைத்துப்படுத்திருந்தேன். சித்ரா அம்மா என் தலையைக்கோதி விட்டார்கள் தெரியுமா? எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்தது தெரியுமா!” என்றபோது எனக்குப் புரிந்தது, தன்னைப் பெற்ற அம்மாவிடம் கிடைக்க வேண்டிய பாசம் சித்ரா அம்மாவிடம் கிடைத்தது என்று.
சித்ரா டீச்சராக அவர் பள்ளி மாணவர்களுக்குத் தெரியும்; சித்ரா மேடமாகப் பார்வையற்ற சமூகத்தில் பலருக்குத் தெரியும்; ஆனால், சித்ரா அம்மாவாக அவரை எத்தனை பேருக்குத் தெரியும்? உண்மையில் அவரின் தாய்மையின் அரவணைப்பில் ஸ்ரீமதி போன்ற எத்தனையோ மகள்களும் மகன்களும் மலர்ந்துகொண்டே இருக்கிறார்கள். சித்ரா மேடம் மனிதத்தின் மகத்துவம்.
சித்ரா மேடத்தின் வாழ்க்கையை, அவர் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தால்… பல சோதனைகளும், வேதனைகளும், தோல்விகளும், அவமானங்களும், துரோகங்களும், ஒரு பெண்ணாகச் சொல்ல முடியாத பல இன்னல்களும் என்று அத்தனையையும் கடந்து ஜெயித்தவர். தான் விழுந்த இடத்திலெல்லாம் எழுந்து நின்றவர்; வீழ்ந்துவிட்டதாக நினைத்த கணங்களிலெல்லாம் அவர் விஸ்வரூபம் எடுத்தவர். தனக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளிகளையெல்லாம் ஆச்சரியக்குறியாக மாற்றியவர்.
சித்ரா மேடம் ஒருமுறை என்னிடம் சொன்ன வார்த்தைகளைச் சொல்கிறேன்:
“யார் வாழ்க்கையையும் யாரும் கெடுக்க முடியாது; யார் வாழ்க்கையையும் யாரும் அழிக்க முடியாது. என்னை ஒருவர் ஏமாற்றிவிட்டார் என்று சொல்வது முட்டாள்தனம். நான் நம்பினேன், நானே ஏமாந்தேன். அதுதானே உண்மை? அதை ஒத்துக்கொள்வதில் என்ன தயக்கம்?” என்றார்.
“அதையே நினைத்துக்கொண்டிருப்பதால், அழுதுகொண்டிருப்பதால் எதுவும் மாறப்போவதில்லை. நம் வாழ்க்கையை நாம்தான் மாற்றிக்கொள்ள வேண்டும் நமக்குப்பிடித்த மாதிரி” என்றார். இந்த வார்த்தைகளில் இருக்கும் ஆழத்தையும் அதன் அர்த்தத்தையும் ஒவ்வொரு பெண்ணும் புரிந்துகொண்டால், பெண்ணின் வலிமையை ஆணினம் வணங்கும்.
சித்ரா மேடம் தன் ‘ரோல் மாடல்’ என்று யாரைச் சொன்னார் தெரியுமா? அவரின் அப்பா.

நான் எழுதிய இரண்டு கவிதைகளை இங்கு குறிப்பிடுகிறேன். ஒன்று, கண்தெரிந்தவனாக நான் வாழ்ந்தபோது எழுதிய கவிதை:
“உன் கண்ணீரைத் துடைக்கும் விரல்களைத் தேடாதே;
பிறர் கண்ணீரைத் துடைக்க உன் விரல்களைக் கொடு.”
பார்வையற்றவனாக நான் எழுதிய ஒரு கவிதை:
“அன்பையும்,
ஆறுதலையும்,
ஆதரவையும்
நான் எதிர்பார்ப்பதே இல்லை;
மாறாக
எல்லோருக்கும் கொடுத்துக்கொண்டே இருக்கிறேன்.
என் உலகம் அழகாக இருக்கிறது.”
இந்த இரண்டு கவிதைகளும் நான் சித்ரா மேடத்தை அறிந்திடாதபோது எழுதியவை. உண்மையில் இந்த வரிகளுக்கு ஏற்ப நம் முன்னே வாழ்ந்துகொண்டிருப்பவர்தான் சித்ரா மேடம். ஒவ்வொரு பார்வையற்ற பெண்ணும் பின்தொடர வேண்டிய மிகச்சிறந்த ஆளுமை சித்ரா மேடம். பார்வையற்ற சமூகம் கொண்டாட வேண்டிய ஒருவர் இவர். பிறரின் கண்ணீரைத் துடைக்க இவரின் விரல்கள் நீண்டு கொண்டே இருக்கும். இந்தச் சமூகத்தைப் பற்றிய கனவுகளைச் சுமந்துகொண்டு, அதை நிஜமாக்கும் பாதையில் இவரின் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கும்… வாழ்க சித்ரா மேடம்!
இக்கட்டுரை ஒரு தனிநபர் துதிபாடும் கட்டுரை என யாரேனும் எண்ணக்கூடும். ஆம், இது ஒரு பார்வையற்ற சமூகத்தில் தோன்றிய வெளிச்சத்திற்கு நான் பாடும் துதி என்று பெருமையாகச் சொல்வேன். சித்ரா மேடம் போல நான் வாழ நினைக்கவில்லை; அவர் போல அவர் மட்டுமே! அவர் பாதம் பற்றி அவரைப் பின்தொடரவே முயல்கிறேன். என்றும் நான் வணங்கும் என் ரோல் மாடல் சித்ரா மேடத்திற்கு, மகளிர் தினத்தில் இந்தக் கட்டுரையைச் சமர்ப்பிக்கிறேன்.
***S. அசோக் பாலா
தொடர்புக்கு: ashokbala1387@gmail.com
பேச: 9626261773
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
