
கடந்த பிப்பரவரி 17, 2026 அன்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் 2026-27 ஆம் நிதியாண்டுக்கான இடைநிலை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளுக்கிடையே மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கான நிதி ஒதுக்கீடும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலன்:
“Democracy is not merely a form of Government. It is primarily a mode of associated living, of conjoint communicated experience. It is essentially an attitude of respect and reverence towards fellow men.”
Dr. B.R.Ambedkar
34. மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் இந்த அரசு, அவர்களுக்கு உரிய அதிகாரம் கிடைத்திடுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. நாட்டிலேயே முதல்முறையாக, உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை உறுப்பினர்களாக நியமிக்கும் வகையில், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 மற்றும் தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998 ஆகியவற்றில் உரிய திருத்தங்களை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது.
இதன் மூலம், உள்ளாட்சி அமைப்புகளில் இதுவரை 3,632 மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர்.
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் குரல் உரக்க ஒலித்திடச் செய்யும் இந்நடவடிக்கை நாடெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
35. அரசு வேலைவாய்ப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு நேரடி நியமன முறையில் வழங்கப்பட்டுவரும் நிலையில், தற்போது பணி உயர்வு முறையிலும் இட ஒதுக்கீடு வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது. தங்களைத் தாங்களே பராமரித்திட இயலாத மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் பராமரிப்புத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையினை 1,000 ரூபாயிலிருந்து 1,500 மாதாந்திர அதிகரித்ததன் மூலம் 8,52,680 மாற்றுத்திறனாளிகள் பயனடைந்து வருகின்றனர்.
36. 2022 ஆம் ஆண்டில், 1,774 கோடி ரூபாய் உலக வங்கியின் உதவியுடன், ஆறு ஆண்டுகளில் செயல்படுத்தக்கூடிய “தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தினை’ (TN-RIGHTS) அறிமுகப்படுத்தி, அனைத்து துறைகளின் சேவைகளை, மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரே இடத்தில் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புற உலகச் சிந்தனை இல்லாதோருக்கு’ ஒருங்கிணைந்த மறுவாழ்வுச் சேவைகளை வழங்கிடும் வகையில், உயர்திறன் மையம் ஒன்று சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது.
37. எல்லார்க்கும் எல்லாம் எனும் கொள்கைப் பாதையில் வழுவாது பயணித்திடும் இந்த அரசு, மாற்றுத்திறனாளிகள் மலர்ந்த முகத்துடனும், தன்மான உணர்வுடனும் தம் வாழ்வை நடத்திடும் வகையில், அவர்தம் நலனில் தனிக் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு, 2021-22 ஆம் ஆண்டில் 814 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீடானது, 2025-26 ஆம் நிதியாண்டில் 1,433 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, மாற்றுத்திறனாளிகளின் நலன் காப்பதை, இந்த அரசு தலையாய கடமையாகக் கருதுவதை தெளிவாக்கும். இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில்,
மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு 1,471 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
