
கடந்த பிப்பரவரி 1, 2026 ஞாயிற்றுக்கிழமை, நடுவண் நிதி அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்ட 2026-27 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், நடுவண் அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கான (DEPWD) ஒதுக்கீடு கணிசமாக அதிகரித்துள்ளமை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான நடவடிக்கையின் ஒரு பகுதி என அரசு சொல்கிறது.
நடப்பு நிதியாண்டான 2025-26 வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும், இதே ஆண்டின் திருத்திய மதிப்பீட்டில் (Revised Estimation) கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைக்கீழ்க்கண்ட அட்டவணையின் மூலம் நாம் அறியலாம்.
| காலம் | ஒதுக்கீடு (கோடிகளில்) | திட்டகாலம் |
| 2025–26 (BE) | ₹1,275.00 | நிர்ணயிக்கப்பட்ட தொகை |
| 2025–26 (RE) | ₹1,291.60 | தற்போதைய திருத்தப்பட்ட மதிப்பீடு |
| 2026–27 (BE) | ₹1,669.72 | முன்மொழியப்பட்ட தொகை |
2025-26ஆம் ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீட்டின் முக்கிய அம்சங்கள்:
நடப்பு நிதியாண்டின் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும், கூடுதலாக சுமார் 16 கோடி திருத்தப்பட்ட மதிப்பீட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளதை அட்டவணை நமக்கு உணர்த்துகிறது. அந்தவகையில், எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு ஒதுக்கீடுகள் என்பதையும் பார்த்துவிடுவோம்.
- தேசிய நிறுவனங்கள்:
மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி மற்றும் மறுவாழ்வுச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு ரூ. 381.44 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- நடுவண் துறைசார் திட்டங்கள்:
மொத்த ஒதுக்கீட்டில், ரூ. 810.60 கோடியானது, மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான உதவி உபகரணங்கள் வாங்குவதற்குத் துணைபுரியும் ஆடிப் (ADIP) திட்டம் மற்றும்் ஊனமுற்றோருக்கான உரிமைகள் சட்டம் 2016-ஐ அமல்ப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சிப்டா (SIPDA) திட்டத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
- துறைசார் செலவுகள்:
துறைசார்ந்த செயலகம் மற்றும் அதனோடு தொடர்புடைய அலுவலகங்களை நிர்வகிப்பதற்கான செலவுகளாக மறுமதிப்பீட்டில் தோராயமாக ரூ. 38.00 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இனி, 2026-27 வரவு செலவு திட்டத்தில் எந்தெந்த திட்டங்கள் எவ்வளவு ஒதுக்கீட்டைப் பெறுகின்றன எனப் பார்ப்போம்.
2025-26 ஆம் ஆண்டின் திருத்திய மதிப்பைக் காட்டிலும், 2026-27 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கான ஒதுக்கீடு 29 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, துறைக்கான தற்போதைய ஒதுக்கீடு ரூ. 1669.72 கோடி. இந்த உயர்வில் அதிக ஒதுக்கீட்டைப் பெறுபவை நடுவண் துறைசார் திட்டங்கள்தான். அவற்றுக்கான ஒதுக்கீடு ரூ. 1117 கோடி.
| நிதி விவரம் | FY 2025–26 (RE) | FY 2026–27 (BE) | மாறுபடும் விழுக்காடு |
| மொத்த ஒதுக்கீடு | ₹1,291.60 cr | ₹1,669.72 cr | +29.3% |
| நடுவண் துறை திட்டங்கள் | ₹810.60 cr | ₹1,117.00 cr | +37.8% |
முக்கிய திட்டங்கள் மற்றும் நிறுவனங்களுக்கான ஒதுக்கீடு
ஏற்கனவே செயல்பாட்டில்் இருக்கிற திட்டங்கள் தவிர, மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய இரண்டு திட்டங்களை அறிவித்ததன் மூலம், 2026-27 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டமைப்பு சார்ந்த புதிய மாற்றத்தைக் கோரி நிற்கிறது.
- திவ்யாங்ஜன் கோசல் யோஜ்னா ரூ. 200 கோடி:
- இந்தப் புதிய முன்னெடுப்பின் வாயிலாக, சுமார் 20,000 மாற்றுத்திறனாளிகளுக்கு, அதிவேக வளர்ச்சித்துறைகளான தகவல் தொழில்நுட்பம், விருந்தோம்பல் துறைகளில் AVGC தொடர்பான தொழில்த்துறை சார் திறன்களை வளர்ப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்படும்.
- திவ்யாங்ஜன் சகாரா யோஜ்னா (ரூ. 100 crore):
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கி, மாற்றுத்திறனாளிகளுக்கான உயர்தர உதவி உபகரணங்கள் தயாரிப்பதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லுதல்.
B. ஏற்கனவே இருக்கிற திட்டங்களுக்கான ஆதரவு
- ஆடிப் ADIP (Assistance to Disabled Persons):
2025-26 ஆம் ஆண்டின் திருத்தியமதிப்பீட்டில் ரூ. 330 கோடியாக இருந்த இந்த திட்டத்துக்கான நிதி தற்போது 375 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை:
தொடக்கக் கல்வி முதல் முனைவர் பட்டம் வரையிலான கல்வி உதவித்தொகைகளுக்கான ஒதுக்கீடு அதே நிலையில், சுமார் 145 கோடியாக நீடிக்கிறது.
தீனதயால் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுத் திட்டம் (DDRS):
சிறப்புப்பள்ளிகள் மற்றும் தொழில் பயிற்சி மையங்களை நடத்திவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கான நிதியாக ரூ. 165 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- சிப்டா (SIPDA):
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016-ஐ அமல்ப்படுத்துவதற்கான இந்தத் திட்டத்துக்கு திருத்திய மதிப்பீட்டில்் ஒதுக்கப்பட்ட 200 கோடி, தற்போது வெகுவாகக் குறைக்கப்பட்டு, ரூ. 125 கோடியாக உள்ளது. கவலையளிக்கும் இந்த நடவடிக்கையைப் பல்வேறு உரிமைசார் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் விமர்சித்துள்ளன.
C. நிறுவனம் சார் ஆதரவு
- அலிம்கோ (Artificial Limbs Manufacturing Corp):
திருத்திய மதிப்பீட்டில் ரூ. 124 கோடியாக இருந்த இந்நிறுவனத்துக்கான ஒதுக்கீடு, உற்பத்தி மையங்களை நவீனப்படுத்துதல், உதவி உபகரணங்களுக்கான புதிய அங்காடிகள் அமைத்தல் என்ற நோக்கத்துக்காக தற்போது 143 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
- தேசிய நிறுவனங்கள்(NIs):
பார்வைத்திறன், செவித்திறன், அறிவுசார் குறைபாடு என ஒவ்வொரு குறைபாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள 9 தேசிய நிறுவனங்களின் செயல்பாட்டுக்காக அதே ரூ. 381.44 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
3. புதிய அணுகுமுறை
- சில்லறை அங்காடி “:
புதிய பாணியில் நவீனமுறையில் ஏற்படுத்தப்படும் சில்லறை விற்பனை அங்காடிகள் வாயிலாக, மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான உதவி உபகரணங்களைப் பரிசோதித்து, பரிசீலித்துத் தேர்ந்தெடுக்கலாம். இவற்றைப் பெறுவதற்கு இனி மாற்றுத்திறனாளிகள் அரசால் ஏற்படுத்தப்படும் சிறப்பு முகாம்களை சார்ந்திருக்கத் தேவையில்லை.
- செயற்கை நுண்ணறிவு உள்ளடக்கம்:
குறைப்பார்வையுடையோருக்கான உதவி உபகரணங்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை உள்ளடக்குவதோடு, மனத்திறன் சார் மறுவாழ்வில் உதவிகரமான தீர்வுகளைப் பெறுதலில் கவனம்செலுத்தப்படுகிறது.
- மனவளக் காப்பு:
இது மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கான நேரடி ஒதுக்கீடு இல்லை என்றாலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையோடு இணைந்து செயல்படும் வகையில், ராஞ்சி மற்றும் தேஸ்பூரில் செயல்படும் தேசிய மனவள நிறுவனங்கள் (NIMHANS) விரிவுபடுத்தப்படும் என 2026-27 வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடுகள் நிறைவான பலனைத் தர வேண்டுமானால், நிறைவேற்றத்தில் போதிய கவனமும் அக்கறையும் அரசுக்கு வேண்டும். மாற்றுத்திறனாளிகள் தொடர்பான தனது அக்கறையில் எத்தனை விழுக்காட்டினை உயர்த்தப்போகிறது அரசு?
தொகுப்பு: சகா.
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
