Categories
கட்டுரைகள் சிறப்புப் பள்ளிகள் Uncategorized

சிந்தனை: விரிசல் வெளிச்சமும், விட்டில் பூச்சிகளும்!

அறிதலில் பெரும்பாலும் மொழிப்புலத்தையே சார்ந்திருக்கும் பார்வைத்திறன் குறையுடைய மாணவர்கள் இப்படிச் செய்திருக்கிறார்கள் என்று கேள்விப்படுகையில், ஐயோ என்று தலையில் அடித்துக்கொள்ளத்தான் முடிகிறது நம்மால்.

தலைக்குறிப்பு: பதிவை முழுவதும் படித்துவிட்டு உங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும்.

அரசால் நடத்தப்படும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு அவர்களின் குறைபாட்டைக் கருத்தில்கொண்டு, பதிலி எழுத்தர்கள் வழங்குவது, கூடுதல் தேர்வுநேரம், ஏதேனும் ஒரு மொழிப்பாடத்திலிருந்து விலக்கு போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இந்தச் சலுகைகள் குறித்து விரிவாகப் பேசுகிறது பள்ளிக்கல்வித்துறையின் அரசாணை எண் 62.

அந்த அரசாணையின் இணைப்பில், தேர்வுக்கான சலுகைப்இடம்பெற்றுள்ளது. அந்தப் பட்டியலில் இருக்கிற தவறுதலாகக் கொடுக்கப்பட்டுள்ள ஒரு சலுகையின் எதிர்மறை விளைவுகள் பார்வையற்ற சமூகத்திடம் மெல்லத் தலைகாட்டத் தொடங்கியிருக்கின்றன.

அது என்ன சலுகை என்றா கேட்கிறீர்கள்? பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களுக்கு ஏதேனும் ஒரு மொழிப் பாடத்திலிருந்து விலக்கு!

இடைக்குறிப்பு: இதற்கும் முகப்புத் தலைப்புக்கும் என்ன தொடர்பு என்று கேட்காமல் தொடர்ந்து படிக்கவும்.

தவறுதலாக வழங்கப்பட்டுள்ள இந்தச் சலுகையை, முன்பின் யோசிக்காமல் கையிலெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள் பார்வைத்திறன் குறையுடைய மாணவர்கள்.

பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பொதுத்தேர்வை எதிர்நோக்கியிருக்கும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களில் தலா 20க்கும் மேற்பட்டவர்கள் ஆங்கிலப்பாடத்துக்கான தேர்வெழுதுவதிலிருந்து விலக்கு கேட்டு விண்ணப்பித்திருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கின்றன.

“பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வை எழுதவிருக்கும் மாற்றுத்திறன் மாணவர்கள், ஏதேனும் ஒரு மொழிப் பாடத்துக்கான தேர்விலிருந்து விலக்கு பெறலாம்” என்கிற அரசாணையைக் காட்டி, ஆங்கிலப்பாடத்துக்கான தேர்வெழுதுவதிலிருந்து விலக்குபெற விண்ணப்பித்திருக்கிறார்கள்.

அறிதலில் பெரும்பாலும் மொழிப்புலத்தையே சார்ந்திருக்கும் பார்வைத்திறன் குறையுடைய மாணவர்கள் இப்படிச் செய்திருக்கிறார்கள் என்று கேள்விப்படுகையில், ஐயோ என்று தலையில் அடித்துக்கொள்ளத்தான் முடிகிறது நம்மால்.

அவர்களைச் சொல்லி நோவதற்கில்லை.

ஒவ்வொரு மாற்றுத்திறனாளியின் சிறப்புத் தேவையைக் கருத்தில்கொண்டு வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண் 62-ல்நேர்ந்திருக்கிற ஒரு சிறிய விரிசல், அதன்வழியே கசிகிற அவாவொளி, ஒரு சமூகத்தின் அறிவு வெளிச்சத்தை மெல்ல விழுங்கத் தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே அரசாணையில் தவறுதலாக இடம்பெற்றுள்ள இந்த அம்சத்தைக் காட்டிக் காட்டி, பொதுப்பள்ளிகளில் பல பார்வைத்திறன் குறையுடைய மாணவர்கள் தங்கள் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் ஆங்கிலப் பாடம் தேர்வெழுதுவதிலிருந்து விலக்கு பெற்று, அவர்களைப் பொருத்தவரை வெற்றிகரமாகப் பள்ளிப் படிப்பை முடித்திருக்கிறார்கள்.

இதன் பக்க விளைவாக, பள்ளிக்கல்வித்துறையின் இதயம் என்று அழைக்கப்படும் எமிஸ் இணையதளத்தில், மாற்றுத்திறன் மாணவர்களின் பருவத்தேர்வு  மற்றும்  இடைத் தேர்வு மதிப்பெண்களை உள்ளீடு செய்யும் பகுதியில் ஆங்கிலப்பாட மதிப்பெண்களை உள்ளீடு செய்வதற்கான வசதி அகற்றப்பட்டுவிட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக இணையதளம் இப்படித்தான் இயங்கிவருகிறது.

நல்ல நிலையில் உள்ள ஒருவர், தனது 85% அறிதலுக்காகத் தன் பார்வைப் புலத்தையே சார்ந்திருக்கிறார். ஒரு பார்வையற்றவரோ, தான் இழந்த அந்த 85 விழுக்கா்ட்டினை  ஈடுசெய்யும் பொருட்டு,  தொடுகை, முகர்தல் கடந்து பெரும்பாலும் ஒலிக்குறிப்புகளையே அதிகம் சார்ந்திருப்பார். மொழிதான் அவருடைய அறிதலைச் செழுமைப்படுத்தி, அவரைப் பொருட்படுத்தத்தக்க  ஒரு ஆளுமையாக பொதுச்சமூகத்தோடு ஒருங்கிணைக்கிறது.

நடைமுறை சார்ந்து சிந்தித்தாலும்கூட, பார்வைத்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளும் பிறரோடு சம போட்டியையும் சம பங்கேற்பையும் போராடிப் பெற உற்ற துணையாய் இருப்பது வளர்ந்துவரும் இன்றைய தொழில்நுட்பம். அதற்கு ஆங்கில அறிவு அவசியமான ஒன்று.

தனது மேல்நிலை வகுப்பில் ஆங்கிலத்தைப் புறக்கணித்து, வெறும் ஐந்து பாடங்கள் தாங்கிய மதிப்பெண் சான்றிதழோடு கல்லூரி புகும் ஒரு பார்வையற்ற மாணவனுக்கான இடமும் மதிப்பும்  என்பது என்னவாக இருக்கும்?

விதி விலக்குகள் தவிர, கலைப்பாடப் பிரிவுதான் உயர்கல்வி பயிலப் புகும் ஒரு பார்வையற்ற மாணவனுக்கான மிகச் சிறிய வாய்ப்பு. அதிலும் ஒரு முக்கிய கதவை நிரந்தரமாக அடைத்துவிடுவதற்கான ஆயத்த நடவடிக்கையைப் பள்ளியிலேயே, அதுவும் சிறப்புப் பள்ளியிலேயே நிகழ்த்துவதெல்லாம் அந்தப் பார்வையற்ற மாணவனுக்கு, அவனுடைய எதிர்காலத்துக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய அநீதி.

“ஆங்கிலப் பாடத்திலிருந்து விலக்கு பெற்று, தேர்வெழுதினால் அது காலப்போக்கில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்?” என விரிவாகவெல்லாம் பத்தாம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் யோசித்திருக்க நியாயமில்லைதான். ஆனால், அவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் உரிய வழிகாட்டல்களை வழங்க வேண்டிய ஆசிரியர்களாகிய  நாமே, அரசாணையைக் காரணமாகச் சுட்டி அமைதி காப்பதெல்லாம் அறம் ஆகுமா?

பார்வைத்திறன் குறையுடைய மாணவர்கள், தங்களுடைய பொதுத்தேர்வைக் கணினியைப் பயன்படுத்தித் தாங்களே எழுதலாம்” என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க வாய்ப்பை வழங்கியிருக்கிற அதே தமிழக அரசின் ஒரு அரசாணையில், இப்படிப்பட்ட மிகப்பெரிய விரிசல் இருப்பது அவலம்.

அதனினும், அந்த விரிசலைக் கண்டும் காணாமல் கடந்து செல்வதும், எவ்வித ஆலோசனைக்கும் ஆய்வுக்கும் உட்படுத்தாமல், அப்படியே அதனை அமலாக்கத் துடிப்பதும் பேரவலமாகும்.

கடைக்குறிப்பு: இப்போது முகப்புத் தலைப்பை மீண்டும் படிக்கவும்.

அரசாணைநிலைஎண்.62, பகஅ.தேத்துறை, நாள் 25.03.2022-ல் இடம்பெற்றுள்ள தேர்வுக்கான சலுகைகள் அட்டவணையில் உடனடியாகத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏதேனும் ஒரு மொழிப்பாடத்திலிருந்து பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிற விலக்கு என்கிற அம்சம் அகற்றப்பட வேண்டும்.

ஏதேனும் ஒரு மொழிப்பாடத் தேர்வெழுதுவதிலிருந்து வழங்கப்படும் விலக்கு என்கிற சலுகை செவித்திறன் குறையுடைய மாணவர்களுக்கானது. அதனை நீட்டித்து, இயல்புக்கு மாறாக, மொழியையே தங்கள் அடிப்படைக் கற்றல் மூலமாகக் கொண்டிருக்கும் பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களுக்க்உம் அமல்ப்படுத்திக்கொண்டிருப்பது அறிவார்ந்த, அடிப்படைப் புரிதலில் மேம்பட்ட சமூகத்தில் நிகழக்கூடாத ஒன்று.

இறுதித் தொடுகை! சே! மொழிபெயர்ப்பு பொருத்தமாக இல்லை.

சரி, Final Touch!

உரியவர்கள் சிந்திப்பார்கள், உகந்த முடிவு வரும் என நம்புவோம். இல்லையெனில், தொடர்ந்து உரைத்தபடியே இருப்போம்.

***சாமானியன்.


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.