
“தமிழகக் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் பார்வையற்றோர்் நலன்சார்ந்து என்னென்ன கோரிக்கைகள் இடம்பெற வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்” என்ற கருத்துக் கேட்பு உரை, பார்வையற்றோர் பெருமளவில் புழங்கும் அனைத்து வாட்ஸ் ஆப் மற்றும் டெலகிராம் குழுக்களில் தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கத்தின் சார்பில் பகிரப்பட்டது. மேலும், கடந்த 18/ஜனவரி/2026 அன்று தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கத்தால் நமக்கான தேர்தல் அறிக்கை என்ற தலைப்பில் இணையவழிக் கூட்டம் ஒன்று ஒருங்கிணைக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பார்வைத்திறன் குறையுடையோருக்காகப் பணியாற்றும் பல்வேறு சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுத் தங்கள் மேலான ஆலோசனைகளை வழங்கியிருந்தனர். அனைத்துக் கருத்துகளையும் திரட்டி, ஒரு முழு ஆவணமாக மாற்றுவதோடு, அதனை அனைத்துக் கட்சிகளிடமும் கொண்டுசேர்க்கவிருக்கிறது தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கம். எனவே, கீழ்க்கண்ட தொகுப்பினைக் கவனமாகப் படித்து, ஏதேனும்் முக்கியக் கோரிக்கைகள் விடுபட்டிருப்பதாகத் தாங்கள் கருதினால், அதனை குரல்ப்பதிவாகவோ, அல்லது உரைச் செய்தியாகவோ கீழ்க்ண்ட எண்ணுக்கு வாட்ஸ் ஆப் செய்யுங்கள்.
நீங்கள் தொடர்புகொள்்ள வேண்டிய எண்:
9626261773.
உங்கள் திருத்தங்களைச் சொல்ல வேண்டிய இறுதி நாள், எதிர்வரும் பிப்பரவரி 4, 2026 புதன்கிழமை இரவு எட்டுமணி.
மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி
- அனைத்து உடற்குறையுடையவர்களையும் மாற்றுத்திறனாளிகள் என்று பொதுமைப்படுத்தாமல், இயங்குதல் சார் உடற்குறையுடையவர்கள், புலன்சார் உடற்குறையுடையவர்கள் எனப் பகுத்து, அவரவருக்கு உகந்த கல்விச் சூழலை ஏற்படுத்திட வேண்டும்.
- பார்வைத்திறன் குறையுடைய குழந்தைகள், தங்களின் எட்டாம் வகுப்புவரை சிறப்புப்பள்ளியில் தனக்கான சிறப்புக் கல்வியைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
- ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் பார்வைத்திறன் குறையுடையவர்களுக்கான சிறப்பு நடுநிலைப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அந்தப் பள்ளிகளை அந்த மாவட்டத்துக்கான பார்வைத்திறன் குறையுடையோரின் வள ஆதார மையமாகச் (District Resource Centre for VI) செயல்படுத்திட வேண்டும்.
- தற்போது இயங்கிவரும் அனைத்து அரசு சிறப்புப்பள்ளிகளையும் கட்டமைப்பு சார்ந்தும், கற்றல் சூயல் சார்ந்தும் மேம்படுத்துவதோடு, அந்தப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்ப் பணியிடங்களைக் காலமுறை ஊதியத்தின் மூலம் நிரப்பிட வேண்டும்.
- பார்வைத்திறன் குறையுடைய மாணவர்கள் கலைப்பாடப் பிரிவுகளை மட்டுமே சார்ந்திருக்காமல், அறிவியல், கணிதம் போன்ற (STEM) படிப்புகளைத் தங்கள் உயர்வகுப்புகளில் தேர்ந்தெடுக்க அவர்களுக்கஉ வாய்ப்புகள் அளிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
- பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களுக்கு, பிரெயில் பலகை, கணிதப்பலகை, ஸ்டைலஸ், வடிவியல் சார் கோணமானிகள் உள்ளிட்ட சிறப்புக் கற்றல் உபகரணங்கள் அடங்கிய பெட்டகம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட வேண்டும்.
- பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களுக்கான கற்றலை எளிமையாக்கும் வகையிலும்், அவர்கள் எளிதாக அணுகத் தக்க வகையிலும், தொட்டுணரும் படங்களுடன் கூடிய பிரெயில் புத்தகங்கள், (Braille Books with Tactile Pictures) ஒவ்வொரு ஆண்டும் வழங்கிட வேண்டும்்.
- பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களுக்கான பிரெயில்் புத்தகங்களைத் தடையின்றியும் தாமதமின்றியும் அச்சடித்து வழங்கிடும் வகையில், பூவிருந்தவல்லி, பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்திருக்கும் பிரெயில் அச்சகம் மீண்டும் திறக்கப்பட்டு, பிரெயில்் புத்தகங்கள் அச்சடிக்கப்பட வேண்டும்.
- பார்வைத்திறன் குறையுடைய மாணவர்கள் தங்கள் கற்றலை எளிதில்் அணுகும் வண்ணம், அவர்களுக்கான பாடம்சார் புத்தகங்கள் மின்புத்தகங்களாகவும் (Ebooks) வழங்கப்பட வேண்டும்.
- அரசுப்பொதுத்தேர்வை எதிர்நோக்கும் பார்வைத்திறன் குறையுடைய மாணவர்கள், பல்வேறு போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் பார்வைத்திறன் குறையுடைய பணிநாடுநர்களுக்கான பதிலி எழுத்தர்கள் அடங்கிய குழு ஒன்று மாவட்டந்தோறும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
- பார்வைத்திறன் குறையுடைய தேர்வர்கள் தங்கள் தேர்வினைக் கணினி வாயிலாக எதிர்கொள்ளவும் வழிவகைகள் செய்யப்பட் வேண்டும்.
- தேர்வுக்கான வினாத்தாள்கள் பிரெயிலிலும் வழங்கப்பட வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகைகள் உரிய கால இடைவெளிகளில் உயர்த்தப்படுவதோடு, அதைப் பெறுவதற்கு மாநிலம் முழுக்க ஒரே மாதிரியான நடைமுறையைச் செயல்படுத்திட வேண்டும்.
- பள்ளி, கல்லூரி பயிலும் பார்வைத்திறன் குறையுடைய மாணவர்கள், போட்டித்தேர்வுக்குத் தயார்செய்யும் பார்வைத்திறன் குறையுடைய பணிநாடுனர்கள் அனைவருக்கும் உயர்தரமான மடிக்கணினி, ஆர்ப்இட் ரீடர், ஈபுக் ரீடர் அடங்கிய விலையில்லாப் பெட்டகம் வழங்கப்பட வேண்டும்.
தொழில் பயிற்சிகள்:
- நிறுவனங்கள் கோருகின்ற தற்காலத் திறன்களைக் கவனத்தில்கொண்டு, பார்வைத்திறன் குறையுடையவர்கள் தனியார்த்துறையிலும் பணிவாய்ப்புப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில், அரசு சான்றிதழுடன் கூடிய கணினி சார்ந்த பல்வேறு பயிற்சிகள், ஆளுமைத்திறன் சார்ந்த பயிற்சி வகுப்புகள் அரசின் சார்பில் ஏற்படுத்தப்பட வேண்டும்.
- கணினிசார் அடிப்படைத்திறன் வளர்க்கும் பயிற்சி மையங்கள் மாவட்டந்தோறும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
- நடுவயதில் பார்வையை இழப்பவர்களுக்கான அன்றாட வாழ்க்கைத்திறன் (Daily Living Skills) பயிற்சி உள்ளிட்ட மறுவாழ்வுப் பயிற்சிகளை அவரவர் மாவட்டங்களில் ஏற்படுத்தும் வகையில், மேற்சொன்ன பார்வைத்திறன் குறையுடையோருக்கான மாவட்ட வள ஆதார மையங்களைப் பயன்படுத்திட வேண்டும்.
- சுய தொழில்களில் நாட்டம் உடையவர்களைக் கண்டறிந்து, பயிற்சியுடன் கூடிய தொழில்வாய்ப்புகளை அவர்களுக்கு ஏற்படுத்தித் தர அரசு முன்வர வேண்டும்.
- அரசின் வேலைவாய்ப்பு அலுவலகங்களால் நடத்தப்படும் பல்வேறு போட்டித்தேர்வுகள் சார்ந்த பயிற்சி வகுப்புகள் பார்வைத்திறன் குறையுடையவர்களின்் சிறப்புத் தேவையைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்கென்றே பிரத்யேகமாக நடத்தப்பட வேண்டும்.
பணி வாய்ப்புகள்
- பார்வைத்திறன் குறையுடையோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளின் பின்னடைவுக் காலிப்பணியிடங்களை மொத்தமாக இல்லாமல் செய்துவிட்ட அரசாணை எண் 24 உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். மீண்டும் அரசாணை எண் 20-ஐ செயல்பாட்டுக்குக் கொண்டுவந்து, பின்னடைவுக் காலிப்பணியிடங்களைக் கணக்கிட்டு, உடனடியாகச் சிறப்பு ஆட்சேர்ப்பின் மூலம் அவைகள் நிரப்பப்படுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
- அதேபோல, ரத்து செய்யப்பட்ட அரசாணை எண் 151 மீண்டும் அமல்ப்படுத்தப்பட்டு, அரசுத்துறைகளில் இரண்டாண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பணிநிரந்தரம் செய்யப்பட வேண்டும்.
- ஆசிரியர்த் தகுதித்தேர்வில் (TET) மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்ச்சி மதிப்பெண் 40% என நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
- அரசால் நடத்தப்பட்ட புத்தகக் கட்டுநர் பயிற்சி மையத்தில் இணைந்து, பயிற்சி பெற்று பணி வாய்ப்புக்காகக் காத்திருக்கும் பார்வ்ஐத்திறன் குறையுடைய பணிநாடுநர்களுக்கு உடனடியாக அரசுப்பணி வழங்கப்பட வேண்டும்.
- பணிவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான நான்கு விழுக்காடு ஒதுக்கீட்டினை அரசு உதவிபெறும் நிறுவனங்களிலும் முறையாக அமலாக்கப்படுவதைக் கண்காணிக்க, மாற்றுத்திறனாளி நிபுணர்கள் அடங்கிய குழுவினை அரசு ஏற்படுத்திட வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை முறையாக அமல்ப்படுத்தாத அரசு உதவிபெறும் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
- அறநிலையத்துறையின்் கட்டுப்பாட்டின் கீழ்உள்ள கோயில்களில் பார்வைத்திறன் குறையுடைய இசைக்கலைஞர்கள் அரசு ஊழியர்களாகப் பணியமர்த்தப்பட வேண்டும்.
- தனியார்த்துறைகளிலும் தகுதியுடய மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக,முழுப்பார்வையற்றவர்கள் பணியமர்த்தப்படுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
- இடம் விட்டு இடம் சென்று வியாபாரம் செய்யும் பார்வைத்திறன் குறையுடையவர்களின் பொருட்களுக்குத் தனிக்கட்டணமோ, சுமை என்ற பெயரில்் கூடுதல் கட்டணமோ வசூலிக்கக் கூடாது.
- [சுய தொழில் செய்ய விரும்்பும் பார்வைத்திறன் குறையுடையவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கான நிதி ஆதாரங்களை அரசு தன் சொந்த செலவில் அளித்திட வேண்டும்.
- நடுவண் அரசால் தற்போது புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ள விபி ராம்ஜி ஊரகப்பணி வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கப்படாமல், அவர்களுக்கான பணி வழங்கப்படுவதை அரசு கண்காணிக்க வேண்டும்.
பணி பாதுகாப்பு
- மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கான ஊர்திப்படி ரூ. 2500-லிருந்து ரூ. 5000-ஆக உயர்த்தி வழங்கப்பட வேண்டும்.
- மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர்த் தகுதித் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு வழங்கப்பட வேண்டும்.
- மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்துக்குப் (TAPS) பதிலாக பழைய ஓய்வூதியத் திட்டம் (GPF) அமலாக்கப்பட வேண்டும்.
- பொது ஊழியர்களுக்கு வழங்கப்படும் துறைசார்ப் பணியிடைப் பயிற்சிகள் தகவமைக்கப்பட்டு, பார்வைத்திறன் குறையுடைய அரசு ஊழியர்களுக்குப் பிரத்யேகமான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
- பார்வைத்திறன் குறையுடைய அரசு ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் உயர்தரமான மடிக்கணினி, ஆர்பிட் ரீடர், ஈபுக் ரீடர் கொண்ட தொழில்நுட்பப் பெட்டகம் மானிய விலையில்் வழங்கப்பட வேண்டும்.
- மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கென்றே சிறப்பு குறைதீர்ப்பாணையம் அமைக்கப்பட வேண்டும்.
விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு
- தமிழில் வெளியாகும் அனைத்துத் திரைப்படங்களுக்கும் ஒலிவழிக் காட்சி வர்ணனை (Audio Description) கட்டாயமாக்கப்பட வேண்டும்.
- கலையில் சமத்துவம் பேணும் திரைப்பட முயற்சிகளுக்கு சிறப்பு வரிச் சலுகைகள் அளிக்கப்பட வேண்டும்.
- பார்வைத்திறன் குறையுடைய விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு மண்டலம் தோறும் விடுதியுடன் கூடிய சிறப்புப் பயிற்சி மையங்களைத் திறக்க வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகள் நிகழ்ச்சிகளையும் விளையாட்டுகளையும் அரசு விளையாட்டு அரங்குகளில் நடத்தும்போது, அரசு அவைகளுக்குக் கட்டணம் வசூலிக்கக் கூடாது.
- அரசு நடத்தும் முதல்வர் கோப்பை உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுவில் பார்வையற்றவர்கள் உறுப்பினர்களாக இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும்.
சமூகப் பாதுகாப்பு
- மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் ரூ. 5000-ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும்.
- மாநிலத்தின் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முழு பயணக் கட்டணச் சலுகை வழங்கப்பட வேண்டும்.
- தகுதியுடைய மாற்றுத்திறனாளிப் பயனாளர்களுக்கு அரசே தனது சொந்த செலவில் வீடுகட்டித் தர வேண்டும்.
- கூட்டுறவு வங்கிகளில் மாற்றுத்திறனாளிகள் வாங்கியுள்ள கடன்களை முழுவதுமாகத் தள்ளுபடி செய்திட வேண்டும்.
- மாற்றுத்திறனாளித் தம்பதிகளின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும்அரசுப் பணிவாய்ப்புகளில் ஒரு விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
- ஒவ்வொரு மண்டலத்திலும் மாற்றுத்திறனாளி முதியவர்களுக்கான முதியோர் இல்லங்கள் அமைக்கப்பட வேண்டும். அவை ஒவ்வொரு மாற்றுத்திறனாளிப் பிரிவினரின் தனித்த சிறப்புத தேவையைக் கவனத்தில்கொண்டு, அவர்களின் கண்ணியத்தைப் பேணும் வகையில் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
- அரசுப் பொதுக்கட்டடங்கள், பேருந்துகள், என அனைத்து இடங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து அணுகல் வசதிகளும் உருவாக்கப்பட வேண்டும்.
- அரசின் அனைத்து இணையதளங்களும் திரைவாசிப்பான் பயன்படுத்தும் பார்வைத்திறன் குறையுடையோரும் எளிதில்ல் அணுகும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும்.
- பார்வைத்திறன் குறையுடயோரின் எழுத்துமுறையான பிரெயில் தனிமொழியாக அங்கீகரிக்கப்பட்டு, அதன் மேம்பாட்டுக்கென்றே சிறப்பு நிதி ஒதுக்கப்பட வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகள் தொடர்பான ஆய்வுப் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளை முன்னெடுக்க சிறப்பு மையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
- பிரெயில்எழுத்துமுறையைக்கண்டறிந்த லூயி பிரெயில் அவர்களின் பிறந்தநாளான ஜனவரி 4, பார்வையற்றோர் கல்வி வளர்ச்சி நாளாக அரசு அறிவிக்க வேண்டும்.
- லூயி பிரெயில், ஹெலன் கெல்லர், அவருடைய ஆசிரியரான தி மிராக்கில் வொர்க்கர் ஆன் சலிவன்ஆகியோருக்கு அரசின் சார்பில் சிலைகள் நிறுவப்பட வேண்டும்.
***தொகுப்பு: தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கம்.
Tnblindmovement@gmail.com
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
