Categories
இலக்கியம் கவிதைகள் ப. சரவணமணிகண்டன் கவிதைகள்

கவிதை: ஓய்வுநாள்

பார்வையற்ற தோழமைகளே! உங்கள் படைப்புகளும் தொடுகை மின்னிதழில் இடம்பெற வேண்டுமா?
உங்கள் படைப்புகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.

ஓய்வுநாளில் எப்போதும் நாங்கள்

உறங்கித் திழைத்ததே இல்லை.

வழக்கமான அதிகாலை ஆறுமணி,

வழக்கமான ஞானப்பாடல்கள்,

வழிபாட்டு இறைஞ்சல்கள்,

தண்ணீர் இல்லாத இரும்பு மக்கோடு

ஒவ்வொரு அறையாய்ப் பரவும் அக்காவின் மிரட்டல்கள்.

சோப்பு டப்பா தேடுவதான பாவனையில்,

அலமாரிக்குள் கவிழ்ந்த தலையோடு கண் செருகல்கள்.

தப்பிக்கவே வழியில்லை என்றானபிறகு,

தளர்ந்த உடல் நகர்த்தி,

தர்பாரில் ஐக்கியமாகி,

இடது உள்ளங்கை இசைவாய் குழித்துப்

பற்பொடிக் கேவல்கள்,

பாத்ரூம் குளியல்கள்.

புளிப்புத் தண்ணீரைத்

தக்காழிச் சட்டினியாய் தகவமைத்துக்கொண்டு,

சில உப்பிய மாவு வட்டங்களை

உள்ளுக்குள் அனுப்பிடும் சாகசங்கள்.

இன்று அம்மாக்களின் வருகையை

ஆவலோடு எதிர்பார்க்கும்

எங்கள் பிஞ்சுக் காதுகளில்

இறைகிறது என்னவோ

அக்காவின் குரல்தான்.

ஏய்! “எரும வந்து வரிசையில நில்லு”

இரண்டிரண்டாய் கைகோர்த்து,

திரண்டிருக்கும்  மந்தைக் கூட்டம்

விடுதிப் பட்டியிலிருந்து விடைபெற்று,

அடுத்த ஒரு மணிநேரம்

ஆலயப் பட்டியில் அடைபட

அணிவகுத்துப் போகிறது.

பராக்குப் பார்வைகள்,

பல் இளிப்புகள்,

உரத்த உரையாடல்கள்,

மிதிபடும் கால்களிலிருந்து மேலெழும் சச்சரவுகள்,

அத்தனையும் அக்காவின் ஒரு உஸ்ஸுக்கு

புஸ் என்று ஆகிறது.

தரை உராயும் நூறு கால்கள்,

பின்பற்றி நடக்கும் பெண் தோழிகளுக்குள்

சின்னச் சின்னச் சிணுங்கல்களுடன்

அடுத்த சில வினாடிகளில்

ஆலயப் பிரவேசம்.

வாரவாரம் வரவேற்று,

வசதியாய் அமர்த்திக்கொள்ளும்

நீள  பெஞ்சுகளுக்குள்

நெளிந்து நிறைகிறது வரிசை.

வலப்பக்கம் வகுப்புத் தோழன்,

இடப்பக்கம்விடுதி யூதாசு,

சேட்டைச் சிறுவர்

இருவர் சகிதம்

என் முதுகுக்குப் பின்னால் அமர்ந்தபடி

மூச்சுவிடுகிறாள் அக்கா.

பரிமளத் தைலங்களும்

பட்டாடை சிராய்ப்புகளுமாய்

எளியமகன் இல்லத்துக்குள்

இன்னும் பலர் நுழைகிறார்கள்.

தடக் தடக் சத்தத்துடன்

தலைக்கு மேலே மின்விசிறிகள்

காற்றையும் அமைதியையும்

கவனமாய் கிழிக்கின்றன.

இறங்கிவரும் குளிர்காற்றும்

இருக்கையின் சாய்மடியும்

இதமாய் எனைத் தழுவ,

இழைகிறது ஆலயமணி.

எழுதல், இருகை கூப்பல்,

கானத்தைப் பாடி

கர்த்தரைத் தொழுதல் – பின்

அமர்தல், சாய்ந்துகொள்ள எத்தணிக்கையில்

இடப்பக்க யூதாசின்

அசைவுக்கு இசைந்து

முழந்தாளிடுதல்,

முன் இருக்கையின் முதுகில்

மூட்டுவாய் பொருத்துதல்,

உள்நின்று உடற்றும்

முருகன் டாலரை

ஓரங்கட்டி ஒதுக்கி

உள்சட்டைக்குள் பதுக்குதல்.

இப்படியே இயந்திரச் சுற்றுகள்

இரண்டு மூன்று கழியும்,

காணிக்கைப் பாடலுக்கெல்லாம்

கால்கள் கொஞ்சம் நெளியும்,

உபதேசப் பகுதி வரும், அதுவே

உட்காரக் கிடைத்த நீள் தருணம்.

உபதேசி உரை தொடங்க,

வகுப்புத் தோழனும் அதை

ஆமோதிக்கத் தொடங்குகிறான்.

தன் சிரசால் என் தோள் உரசி,

என்னையும் ஆமோதிக்கச் சொல்கிறான்.

என் இடப்பக்கத் தோளில்

முத்தமிட்டபடியே

எப்போதோ யூதாசும்

மூர்ச்சையாகிவிட்டான்.

இடையில் இருக்கும் எனக்கும்

இருவரோடு இணைந்துகொள்ளும்

ஆவல் மிகுகிறது …

அக்கா செறுமுகிறாள்!

உபதேசி ஏதோ

எண் சொன்ன மாத்திரத்தில்

காற்றுக்குச் சலசலக்கும் மெல்லிய

கண்ணாடி இலைகளென

உருள்கின்றன கைப்பனுவல்களின்

ஒருநூறு பக்கங்கள்.

எழுகிறது எங்கோ ஓர் குரல்,

அமிழ்கிறது என்னுள் அது.

நானும் கண்மூடி ஆழ்ந்து

கேட்கத் தொடங்குகிறேன்.

“சிறு பிள்ளைகள் என்னிடத்தில்

வருகிறதற்கு இடங்கொடுங்கள்;

அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்;

பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.”

மத்தேயு-19-14

என் கன்னம் தடவி

யேசுவேதான் சொல்கிறார்.

எங்கள் மூவரின் தலையையும்

தன் வயிற்றோடு அணைத்தபடி

நின்றிருக்கும் கர்த்தரை

நெருங்குகிறோம் நாங்கள்.

ஆணி அறைந்த துளைகளைக் கைகளால்

தொட்டுப் பார்க்கத் துழாவுகிறேன்,

‘பிதாவே மன்னியுங்கள்’ என

பீறிடும் அன்பில் பிதற்றிய

அன்னத்தூவி இதழ்களில் என்

கன்னம் வைக்கத் துடிக்கிறேன்.

மீதூறும் என் அவா அறிந்து

மீட்பர் தலை குனிந்த கணத்தில்,

காதைத் திருகும் ஆசையில்,

என்  கைகள் விரல் பரப்பிய நொடியில்

அந்த முள்முடியின் முனையா

என் முதுகில் அழுந்தியிருக்கும்?

அதிர்ச்சியில் விதிர்த்தேன்,

அடுத்த நொடி விழித்தேன்,

தொட்டுப் பார்த்தால்

தோழனும் யூதாசும்.

தூயவரைக் காணவில்லை …

துரத்தியடித்தவள் மெர்சி அக்கா!

***ப. சரவணமணிகண்டன்


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

One reply on “கவிதை: ஓய்வுநாள்”

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.