முந்தைய பகுதிகள்:
பார்வையற்ற மெல்லிசைக் கலைஞர்கள் நலச்சங்கத்தின் தலைவரும், விடியல் இசைக்குழுவின் உரிமையாளருமான முருகன் அவர்களிடமும், அச்சங்கத்தின் பொருளாளர் வரதராஜன் அவர்களிடமும் நிகழ்த்திய உரையாடல் இது.
“வணக்கம். எனது பெயர் முருகன். சொந்த ஊர், தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகில் உள்ள மேட்டூர். இப்போது திருச்சியில் வசிக்கிறேன். பார்வையற்ற மெல்லிசைக் கலைஞர்கள் நலச்சங்கமானது, கடந்த 13 ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தச் சங்கம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் பார்வையற்ற மெல்லிசைக் கலைஞர்களுக்குத் தேவையான சட்டம் சார்ந்த உதவிகள், பாதுகாப்பு சார்ந்த உதவிகள், வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் பிரச்சனைகள் சார்ந்த உதவிகள் போன்றவற்றை செய்து வருகிறோம். அதுமட்டுமல்லாமல், தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்காலங்களிலும் தேவையான உதவிகளைச் செய்து வருகிறோம்.
இப்போது எங்கள் சங்கத்தில் அறுபது முதல் எழுபது நபர்கள் வரை உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இப்படி ஒரு சங்கம் இருப்பது பலருக்கும் தெரியாது. அனைத்து பார்வையற்ற இசைக்கலைஞர்களையும் ஒன்றுசேர்ப்பதே எங்களின் நோக்கம். இந்தச் சங்கத்தில் உறுப்பினர்களாக இணைவதற்கு எங்களைத் தொடர்புகொள்ளலாம்.”
முருகன் (தலைவர்): +919442002944
வரதராஜன் (பொருளாளர்): 9443876377
சரி. விடியல் இசைக்குழுவைப்பற்றி சொல்லுங்கள் என்று கேட்டோம்.
“நான் ஒரு ரிதம் கலைஞர். எங்கள் இசைக்குழுவை இதுவரை பழமை மாறாமல் மேனுவலாகத்தான் அதாவது நேரடியாக இசைக்கருவிகளை இயக்கித்தான் நடத்தி வருகிறோம். மேடைக் கச்சேரியும் செய்கிறோம். டெல்லி, ஹைதராபாத் போன்ற வெளிமாநிலங்களிலும் கச்சேரி செய்த அனுபவமும் எங்களுக்கு இருக்கிறது. திருவிழா, திருமணம் போன்ற விழாக்களுக்கும் எங்களை அழைக்கலாம்” என்று கூறி முடித்தார்.
நாமும் அவரிடமும், வரதராஜனிடமும் நன்றி கூறி விடைபெற்றுக்கொண்டோம்.
நடமாடும் இசைக்குழுவின் கள நிலவரம் பற்றி பலரிடம் நிகழ்த்திய உரையாடல்களின் தொகுப்பு கீழே:
ஒரு இசைக்குழுவிற்கு எத்தனை நபர்கள் தேவைப்படுவார்கள்? மற்றும் அதன் அமைப்பு எப்படி இருக்கும்? என்று கேட்டோம்.
பெரும்பாலும் பார்வையற்றவர்கள்தான் குழுவின் முதலாளியாக இருப்பார்கள். ஒருசில இடங்களில் பார்வை உள்ளவர்களும், பார்வையற்றவர்களை வைத்து நடத்துகிறார்கள். அப்போதெல்லாம் மினி லாரியில் தான் நடத்துவார்கள்.
ஒரு இசைக்குழுவில் பத்தில் இருந்து பதினைந்து நபர்கள் வரை வேலை செய்வார்கள். இசைக்கருவிகளை மீட்ட மூன்று பேர், பாடகர்கள் ஐந்தாறு பேர், உண்டியல் வைத்து காசு வாங்குவதற்கு ஒரு மூன்றுபேர், பார்வை உள்ளவர்கள் மட்டும் ஓட்டுனருடன் சேர்த்து உதவிக்கு நான்குபேர் என்று ஒரு கூட்டமே இருக்கும். வருமானமும் நல்லா இருந்தது. இப்போது ஒரு இசைக்குழுவிற்கு ஐந்தாறு நபர்கள் மட்டும் இருந்தாலே போதும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. மினி லாரியிலிருந்து டாடா ஏசிக்கு மாறிவிட்டார்கள்.
இசைக்கருவிகளுக்குப் பதில், கரோக்கியைப் பயன்படுத்தி பாடுகிறார்கள். உதவிக்கு ஓட்டுனருடன் ஒருவர் மட்டுமே இருக்கிறார். இப்படி ஐ.டி. கம்பெனிகளிலிருந்து, ஆர்கெஸ்ட்ரா வரை எல்லா இடங்களிலும் ஆள் குறைப்பு செய்கிறார்கள் என்று வருந்துகிறார்கள், இந்தத் தொழிலையே வாழ்வாதாரமாக நம்பி வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள்.
இந்த இசைக்குழுவைத் தொடங்க எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? மற்றும் இதிலிருந்து கிடைக்கும் வருமானம் எப்படி இருக்கும்? என்று கேட்டோம்.
முதலீடு ஏதும் செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. வாடகைக்குக்கூட வண்டி, ஜெனரேட்டர், ஒலிப்பெருக்கி போன்றவற்றை எடுத்து நடத்தலாம். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. கச்சேரி நடந்தாலும், நடக்காவிட்டாலும் தினமும் வாடகை கொடுக்கவேண்டும். சிலரிடம் சொந்த வண்டியும், பொருட்களும் உள்ளது. ஆனால் அவர்களும் ஆரம்பத்தில் வாடகைக்கு எடுத்து நடத்தியவர்கள்தான். இன்று நான்கைந்து வண்டிகள்வரை வைத்து தொழில் நடத்தும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார்கள். இதை வைத்து வாழ்ந்தவர்களும் உண்டு, வீழ்ந்தவர்களும் உண்டு.
வருமானத்தைப் பொறுத்தவரை ஏற்ற இறக்கமாகத்தான் இருக்கும். இதனால் சில குழுவில் சம்பளப் பிரச்சனைகள்கூட ஏற்படுவதுண்டு. அதனால்தான் இப்போதெல்லாம் அதிகமானோர் தரைக்கச்சேரி செய்ய கிளம்பிவிட்டார்கள். ஒரு ஸ்பீக்கர், மைக் இருந்தால் போதும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உட்கார்ந்து கரோக்கி போட்டு பாடினால், அதில் ஒருநாள் முழுவதும் பாடி வாங்கும் சம்பளத்தை, இதில் மூன்று நான்கு மணிநேரத்தில் எடுத்துவிடலாம்.
அரசிடம் இருந்து இந்தத் தொழிலுக்கு ஏதாவது உதவிகள் கிடைக்குமா? என்று கேட்டோம்.
அரசும், அரசு அதிகாரிகளும், காவல்துறை நண்பர்களும் இதுவரை இந்தத் தொழிலுக்கு பெரிய அளவில் கட்டுப்பாடும், தடைகள் ஏதும் செய்யாததே பெரிய உதவிதான் என்கிறார்கள்.
இதில் பணிபுரியும் பெண்களின் நிலை என்ன?
இந்தத் தொழிலில் இருக்கும் ஆண்களே நம் குடும்பம் நம்மைப் பற்றி என்ன நினைக்கும்? நம் உறவினர்கள் நம்மேல் வைத்திருக்கும் மதிப்பு என்னவாகும்? இந்த சமூகம் நம்மை எப்படிப் பார்க்கும்? என்றெல்லாம் யோசிக்கும்போது, பெண்களின் நிலையிலிருந்து யோசித்துப் பார்த்தால், அதிலிருந்து துக்கமும், துயரமும் ஒருபடி மேல்தான். இருப்பினும் இதெல்லாம் ஒரு ஜான் வயிற்றுக்காகத்தான்.
தங்கும் இடத்தில் அவர்களுக்குப் பிரச்சினை ஏதும் ஏற்படாமல் பாதுகாக்கவேண்டும். தொழிலுக்குச் செல்லும் இடங்களில் மற்றவர்களால் தொல்லை ஏதும் வராமல் இருக்க பாதுகாப்பு கொடுக்கவேண்டும்.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், கொடிதினும் கொடிது பசி கொடுமை என்றால், அதனினும் கொடுமை புசித்ததை கழிக்கச் சரியான இடச் சூழல் இல்லாமையாகும். ஆண்கள் என்றால் தூய்மை இந்தியாவில் ஓரஞ்சாரம் ஒதுங்கலாம். அதுவும் விழிச்சவால் உடைய பெண் என்றால்?. உதவிக்கு இருக்கும் வேலையாட்களில் பெண்கள் இருந்தால் அவர்களிடம் சொல்லுவார்கள். அல்லது, அவர்களுக்கு நம்பிக்கையான ஒருவரிடம் சொல்லி, அருகில் உள்ள கழிவறை அருகே வண்டியைப் போகச்சொல்லுவார்கள்.
இத்தனைக்குப் பின்னும் அவருக்கு ஓரளவு பார்வை இருந்தால் அவரே சமாளித்துக்கொள்வார். இல்லையென்றால் அங்கும் ஒருவரை உதவிக்குத் தேடவேண்டும். பாதுகாப்பு ஒருபக்கம் இருந்தாலும், இவ்வளவு பிரச்சனைகளையும் தாண்டி ஏதாவது தவறுகள் நடக்குமா என்றால், “சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர், நிறைகாக்கும் காப்பே தலை” என்கிற ரீதியில் கூறுகிறார்கள், தகவல்களுக்காக நாம் தொடர்புகொண்ட நபர்கள்.
சில சுவாரசியமான அனுபவங்கள்:
இந்தத் தொழிலைப் பொறுத்தவரை காமடிக்கும், டிராஜடிக்கும் பஞ்சமே இருக்காது. ஒவ்வொருவரிடமும் அவ்வளவு விடயங்கள் இருக்கின்றன. அப்படி ஒருவர் நம்மிடம் போதை ஆசாமி ஒருவரின் அட்ராசிட்டி பற்றி பகிர்ந்துகொண்டார்.
“ஆறேழு வருஷத்துக்கு முன்னாடி. ஒருநாள் இரவு எட்டு, ஒன்பது மணி இருக்கும். மதுரை மேலூரில் வண்டி ஓட்டிக்கிட்டிருந்தோம். அப்போ எங்க குழுவில் ஒரு பாடகர், என் புருஷன் குழந்தை மாதிரி என்ற திரைப்படத்தில் உள்ள, வேதனையில் போட்டுக்கிட்டேன் மப்பு அப்படின்ற பாட்டைப் பாடின்டு இருந்தார். திடீரென்று ஒருத்தர் வண்டிக்குள்ள ஏறினார். ஃபுல் ஃபார்மில் இருந்தார்.
‘தலைவா, ஆயிரந்தடவை இந்தப் பாட்டப் பாடு! எவ்வளவு கேட்டாலும் தாறேன். நீ பாடினாத்தான் நான் வண்டிய விட்டு இறங்குவேன்’ அப்படின்னுட்டார். நம்ம ஆள் அஞ்சாறு தடவை பாடி, டயர்டாயிட்டார். ஒவ்வொரு முற பாடி முடிக்கிறச்சயும், நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்துக்கிட்டேயிருந்தார். அவர் இப்படி போதைல யோசிக்காம ரூபாயைக் கொடுக்கிறதைப் பார்த்து, எங்களுக்கு ஒருமாதிரி ஃபீலாயிருச்சு.
சிலர் இப்படித்தான். யோசிக்காம நிறைய பணத்தைக் கொடுத்திருவாங்க. வாங்கும்போது மகிழ்ச்சியா இருந்தாலும், அப்புறம் நினைச்சா கஷ்டமாயிருக்கும். ஒருவழியா அவரை ஆட்கள வச்சு வண்டியிலிருந்து இறக்கிவிட்டோம். அப்புறமும் எங்கள ஃபாலோப்பண்ணி கொஞ்ச தூரம் வந்தார்.
ஒருநாள் ரெண்டுநாள் இல்லை. தினமும் இப்படி ஏதாவது ஒரு சம்பவம் நகைச்சுவையாவோ, இல்லனா வருத்தப்படும்படியோ நடந்திரும்.
உண்டியலைத் தட்டி காசு போட்டுட்டேன்னு ஏமாத்துறது, பாட்டுப் பாடும்போது கூடவே சேர்ந்து பாடுறது, ஆடுறது, பாராட்டு, கண்ணீர், இப்படி ஏதாவது நடக்கும்” என்கிறார்.
இதுமட்டுமல்ல. இன்னும்கூட நாம் பல விடயங்கள் கேள்விப்பட்டோம். நல்ல காதல், கள்ளக் காதல், மோதல், விபத்து என்று, அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
இந்தக் கட்டுரைக்காக தகவல்களைக் கொடுத்து உதவியவர்களின் பெயர்கள்:
மணிகண்டன் – கன்யாகுமரி
பார்த்தசாரதி – பாளையங்கோட்டை
முத்துகிருஷ்ணன் – நெல்லை
கண்ணன் – சுரண்டை
சிவன்ராஜ் – தென்காசி
ராஜதுரை – ராமநாதபுரம்
சாமுவேல் – திருச்சி
வரதராஜன் – திருச்சி
திருமணி – ஈரோடு
லிகோரிராஜ் – திண்டுக்கல்
இசக்கிமுத்து – கேந்திமங்களம்
முருகன் – திருச்சி
துரை – பொள்ளாச்சி
மன்மதன் – சிவகாசி
மாரியப்பன் – தென்காசி
இவர்கள் அனைவருக்கும், இன்னும் பெயர் கூற விரும்பாத நண்பர்களுக்கும் நன்றி.
நான் முத்துகுமார் – ராயகிரி.
மீண்டும் சந்திப்போம் நண்பர்களே, எழுத்துக்களின் ஊடாக. மெய்ப்பொருள் காண்பது அறிவு.
***விரல்மொழியர் மின்னிதழுக்காக எழுதப்பட்டு, ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறது இந்தக் கட்டுரை.
தொடுகை மின்னிதழில் வெளியிடுவதற்கு அனுமதி அளித்த விரல்மொழியர் மின்னிதழ் ஆசிரியர் குழுவிற்கும், இதை வெளியிட சம்மதித்த தொடுகை மின்னிதழ் ஆசிரியர்க் குழுவிற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல. இந்தத் தலைப்பை எனக்குக் கொடுத்தது, விரல்மொழியர் மின்னிதழ் ஆசிரியர், திரு. பாலகணேசன் அவர்கள்.
இந்தக் கட்டுரைக்காகத் தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி, தகவல்களைத் தந்து உதவிய ஒவ்வொரு நல் உள்ளங்களுக்கும் சாதாரணமாக நன்றி என்று மட்டும் சொல்லிக் கடந்து செல்ல முடியாது. ஏனெனில், இவர்கள் ஒவ்வொருவரும் கூறிய தகவல்களை வைத்து ஒரு புத்தகமே எழுதலாம். அவ்வளவு சுவாரசியமான பல விடயங்கள் தோண்டத் தோண்ட வந்துகொண்டே இருக்கஇன்றன.
சில விடயங்களை நாகரிகம் கருதி எழுத முடியாது. சில விடயங்கள் இரகசியமானவை. இந்தக் கட்டுரையை நாட்கள் கடத்தாமல் சீக்கிரம் முடிக்கவேண்டும் என்ற அவசரத்தில் சில விடயங்களை எழுதமுடியவில்லை. வாய்ப்பு இருந்தால் பின்னர் இதை ஒரு புத்தகமாக வெளியிடுவதற்கு முயற்சிக்கிறேன்.
தொடர்புக்கு: gmmuthukumar06@gmail.com
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
