Categories
கட்டுரைகள் தொடர்

உலக இசைநாள்: அலசல்: வலசைப்பாதையின் வரலாறு பகுதி (2)

Hi everyone!
we need 20 volunteers to write an online exam in Tamil from home (objective type questions and answers) for the visually challenged persons for 4 hours on 6th July (Sunday) between 10 am – 2 pm. Thank you.
For further details please contact:
Chitra – +91 96550 13030

இரண்டாம் பகுதிக்குள் செல்வதற்கு முன் முதல்ப்பகுதியைப் படித்துவிடுங்கள்.

“திருச்சியில் மக்கள் அதிகமாகக் கூடும் முக்கிய இடங்கள், வீதிகள் என்று சுற்றி, இரவு வரை கச்சேரி செய்தோம். விழிச்சவால் உடையவர்களை, பொதுமக்கள் அதுவரை இப்படிப் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை அல்லவா?

மொபைல் ஆர்க்கெஸ்ட்ரா சித்தரிப்புப் படம்

நாங்கள் சென்ற இடமெல்லாம் பாராட்டுக்களும், தாராளமாக நிதியும் கிடைத்தது. பொதுமக்களே சிலர் தன்னார்வலர்களாக முன்வந்து, எங்களிடமிருந்த உண்டியலைப் பெற்று, பலரிடம் நிதி வசூல் செய்து, எங்களிடம் கொடுத்தார்கள். அன்று ஒருநாளில் மட்டும் பதினைந்தாயிரம் வரை நிதி வசூலானது. அன்று இது பெரிய தொகை.

அதை நாங்கள் அப்போதைய திருச்சி கலெக்டர் மூர்த்தி அவர்களின் மூலமாக கார்கில் போர் நிதிக்கு அனுப்பி வைத்தோம். அங்கும் எங்களுக்குக் கிடைத்த பாராட்டுக்களை எங்களால் மறக்க முடியாது. அந்த ஒருநாள் மட்டும்தான் நாங்கள் வண்டியில் வைத்து கச்சேரி செய்தோம். அதற்குப்பிறகு நாங்கள் இதைத் தொடரவில்லை.

அடுத்த ஓரிரு ஆண்டுகள் கழித்து, மதுரையைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவரும், சென்னையில் தற்போது வசித்துவரும் சாமிநாதன் என்பவரும் இணைந்து இதனை முழுநேரத் தொழிலாகத் தொடங்கினார்கள். சாமிநாதன் என்பவர், திருச்சியில் எங்களோடு இருந்தவர். தொடக்கத்தில் சாமிநாதனின் பங்களிப்பு இருந்தாலும், அந்த இசைக்குழுவைத் தொடர்ந்து நடத்தியது ராமமூர்த்தி என்பவர்தான். பல பகுதிகளில் இருந்த விழிச்சவால் உடையவர்களை ஒருங்கிணைத்து அறிமுகப்படுத்தியதற்கு, இந்த மொபைல் ஆர்கெஸ்ட்ரா ஒரு முக்கியப் பாலமாகச் செயல்பட்டிருக்கிறது.

ஆரம்ப காலகட்டத்தில் இப்படி ஒரு வண்டியை செய்தி சேகரிப்பவர்கள் பார்த்தால், அது பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் செய்தியாக வரும். ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, அப்படி ஒரு நிகழ்வு நடந்தது.

சென்னையில் T.K. ராஜன் என்பவர் நடத்திவந்த இசைக்குழு ஜெயா டிவியில் செய்தியாக வர, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அதைப் பார்த்து, அந்த இசைக்குழுவை அழைத்து அவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி செய்தார்கள். அப்போதெல்லாம் இசைக்கலைஞர்களோடுதான் கச்சேரி நடக்கும். கேட்பதற்கும் இனிமையாக இருக்கும். இப்போது, கரோக்கி (Karaoke) என்ற ஒன்று வந்துருச்சு. அது பல இசைக்கலைஞர்களின் வாழ்வாதாரத்தையும், வருமானத்தையும் பாதிப்படைய செய்ததோடு, பாடல்களின் தரத்தையும் குறைச்சிருச்சு. இது ஒருபக்கம் இருந்தாலும், பல விழிச் சவால் உடையவர்களின் வாழ்க்கை, இதை நம்பித்தான் இருக்கு. இதன் தொடக்கத்தில் நானும் இருந்தேன் என்பதை நினைக்கும்போது, எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. என்னை அழைத்துப் பேசியதற்கு நன்றி.”

  நாமும் அவருக்கு நன்றி கூறி, அவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டோம். ராமமூர்த்தி என்பவர் யார்? அவர் எந்த ஊரைச் சார்ந்தவர்?  என்ற தகவல்களைத் திரட்ட முயற்சி செய்தோம். இதுதான் என்று ஆணித்தனமாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. எனினும் அவரைப்பற்றித் தெரிந்தவர்கள் கூறிய தகவல்களைத் தருகிறோம்.

சிவகங்கையைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர், மதுரை சுந்தர்ராஜன் பட்டியில் உள்ள (IAB) அதாவது (Indian Association for the Blind) எனப்படும் விழிச் சவால் உடையவர்களுக்கான பள்ளியில் சில காலம் தங்கியிருந்தார் என்று அவரைத் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். எனினும் அவர் அங்கு படித்தாரா என்ற தகவல் எதுவும் தெரியவில்லை. பின் 1997 காலகட்டங்களில் பொள்ளாச்சியில் விழிச்சவால் உடையவர்களுக்கான ஒரு காப்பகத்தைத் தொடங்கி நடத்திவந்தார். அந்தக் காப்பகக் கட்டடத்தைச் சீரமைப்பதற்காக லூயி என்ற பெயரில் ஒரு நடமாடும் இசைக்குழுவை (Mobile Orchestra) தொடங்கி நிதி திரட்டினார். அதனை அப்போதைய கோவை (DSP) தொடங்கிவைத்தார்.

அப்போதைய அரசும் அவர்களுக்குச் சில உதவிகளைச் செய்தது. விழிச்சவால் உடையவர்களுக்காக பொள்ளாச்சியில் பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டும் முயற்சியில் ஈடுபட்டார். அதன்பின் என்ன காரணம் என்று தெரியவில்லை, அந்த முயற்சியைச் செயல்படுத்தவில்லை. இந்த மொபைல் ஆர்கெஸ்ட்ராவில் போதிய வருவாய் கிடைத்ததால், பல விழிச் சவால் உடையவர்களுக்கு வேலையும் கொடுத்து, இது போன்ற பல மொபைல் ஆர்கெஸ்ட்ரா தமிழ்நாட்டில் உருவாகி பல குடும்பங்கள் வாழ காரணமாக இருந்திருக்கிறார் என்று அவரைப் பற்றித் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.

அவர் மனைவி பெயர் சாந்தி என்றும், அவர் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் என்றும், ராமமூர்த்தியின் மறைவுக்குப் பின் லூயி ஆர்கெஸ்ட்ராவை, தொடர்ந்து பொள்ளாச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு நடத்திவருபவர் அவர்தான் என்றும் கூறுகிறார்கள். இதனை உறுதி செய்வதற்காகப் பலமுறை சாந்தி அவர்களைத் தொடர்புகொண்டோம். ஏனோ அவர் இதைப்பற்றிப் பேசத் தயங்குகிறார். அவர் ஒருவேளை நம்மிடம் இதைப்பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டால், மகிழ்ச்சியுடன் அதையும் வெளியிடக் காத்திருக்கிறோம்.

   நலிவடைந்த பார்வையற்றோர் இசைக்குழு என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது குருஞ்சி என்ற பெயரில் ஈரோட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிக்கொண்டிருக்கும் இசைக்குழுவினர்களுடன் பேசினோம். இந்த இசைக்குழு, தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திமிருப்புடிச்சவன் என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. அதனைத் தொடங்கியவர் நம்முடன் பகிர்ந்துகொண்ட விடயங்கள் இவை:

“வணக்கம். என்னோட பேரு திருமணி. என் மனைவி பேரு ஜெய்லட்சுமி. அவங்க பாலயங்கோட்டை பள்ளியில் பத்தாவது வரை படிச்சிருக்காங்க. அவங்க சொந்த ஊர் தூத்துக்குடி. எனக்கு ஈரோடுதான். எனக்கு படிப்புன்னு எதுவும் பெருசா கிடையாது. நான் ஆரம்பத்துல ராமமூர்த்தி குழுவுலதான் இருந்தேன். பின்னாடி அங்கிருந்து பிரிந்து சென்ற ஒருவரின் குழுவில் சில காலம் இருந்தேன். பிறகு நாமே ஒரு குழுவைத் தொடங்கலாம் அப்படினு யோசிச்சு, இரண்டாயிரத்தி நாலு ஏப்ரல் நாளில் ஆரம்பிச்சதுதான் இந்த இசைக்குழு.

ஆரம்பத்துல பேட், கீபோர்ட்னு வச்சு லைவாத்தான் நடத்திக்கிட்டிருந்தோம். இப்போ ஒரு ரெண்டு மூனு வருஷமாதான், கரோக்கி போட்டு நடத்துறோம்.

அப்போதெல்லாம் திருமணம், திருவிழானு, எப்படியும் மாசத்திற்கு ஆறேழு புரோகிராம் எங்களுக்குக் கிடைக்கும். பாண்டிச்சேரி சென்ட்ரல் ஜெயிலில்கூட நாங்க புரோகிராம் பண்ணிருக்கோம். கிட்டத்தட்ட ஒரு பதினைஞ்சு பதினாறு வருஷம் நல்லாத்தான் போய்கிட்டிருந்துச்சு. இந்த கொரோனா காலத்துலதான் ஒரு ரெண்டு வருஷம் வருமானமே இல்லை. இப்போ கொஞ்சம் பரவாயில்லை. பழைய மாதிரி வருமானம் வர ஆரம்பிச்சிருக்கு.

இதுல லாபமும் வரும், ஒருசில நாட்களில் நட்டமும் ஏற்படும். அதுமாதிரியான சூழல்ல குழுவினர்களோட ஒத்துழைப்பு இல்லாம தொடர்ந்து ஓட்ட முடியாது. வண்டி வாடகை, டீசல், சம்பளமுன்னு கையில இருந்து கொடுக்கவேண்டிய நிலைமையும் ஏற்படும். என்னுடைய குழுவினர்களைப் பொறுத்தவரை, அப்படி ஏதும் பிரச்சனை இல்லை. ஆரம்பத்துல இருந்து என்னோட எல்லா நிலைமையிலும் பங்கெடுத்துக்கிடுவாங்க. என்னோட குடும்பத்துல ஒருத்தராதான் ஒவ்வொருவரையும் பார்க்கிறேன். இன்னைக்கு நானும், என்னுடைய குடும்பமும் நல்லா இருக்கோம்னா அதுக்கு அவங்க எல்லாரும்தான் காரணம்” என்று அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, அவரின் குழுவினர்களில் ஒருவர் அவரிடமிருந்து அலைபேசியை வாங்கி நம்மைப்பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். அந்த விசாரிப்பில் அவர்களுக்கு அவர்மேலுள்ள அக்கறையையும், அவருக்கு அவர்கள்மேலுள்ள அக்கறையையும் புரிந்துகொள்ள முடிந்தது.

“உங்களுக்கு இந்தத் தகவல்கள் எல்லாம் ஏன்? எதற்கு?” என்ற விசாரணைக்குப் பின், அவர்கள் ஒவ்வொருவரிடமும் நன்றி கூறி விடைபெற்றுக்கொண்டோம்.

***இறுதிப் பகுதி நாளை.

***விரல்மொழியர் மின்னிதழுக்காக எழுதப்பட்டு, ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறது இந்தக் கட்டுரை.

தொடுகை மின்னிதழில் வெளியிடுவதற்கு அனுமதி அளித்த விரல்மொழியர் மின்னிதழ் ஆசிரியர் குழுவிற்கும், இதை வெளியிட சம்மதித்த தொடுகை மின்னிதழ் ஆசிரியர்க் குழுவிற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல. இந்தத் தலைப்பை எனக்குக் கொடுத்தது, விரல்மொழியர் மின்னிதழ் ஆசிரியர், திரு. பாலகணேசன் அவர்கள்.

இந்தக் கட்டுரைக்காகத் தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி, தகவல்களைத் தந்து உதவிய ஒவ்வொரு நல் உள்ளங்களுக்கும் சாதாரணமாக நன்றி என்று மட்டும் சொல்லிக் கடந்து செல்ல முடியாது. ஏனெனில், இவர்கள் ஒவ்வொருவரும் கூறிய தகவல்களை வைத்து ஒரு புத்தகமே எழுதலாம். அவ்வளவு சுவாரசியமான பல விடயங்கள் தோண்டத் தோண்ட வந்துகொண்டே இருக்கஇன்றன.

சில விடயங்களை நாகரிகம் கருதி எழுத முடியாது. சில விடயங்கள் இரகசியமானவை. இந்தக் கட்டுரையை நாட்கள் கடத்தாமல் சீக்கிரம் முடிக்கவேண்டும் என்ற அவசரத்தில் சில விடயங்களை எழுதமுடியவில்லை. வாய்ப்பு இருந்தால் பின்னர் இதை ஒரு புத்தகமாக வெளியிடுவதற்கு முயற்சிக்கிறேன்.

தொடர்புக்கு: gmmuthukumar06@gmail.com


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.