
கலைவாணர் அரங்கில் இன்று (ஜூன் 12, 2025) மற்றும் நாளை (ஜூன் 13, 2025) நடைபெறும் “TECH4ALL 2025” கண்காட்சிக்குச் சென்றது, தொழில்நுட்பம் மனிதநேயத்துடன் கைகோர்க்கும் அற்புதத்தைக் காணும் அரிய வாய்ப்பாக அமைந்தது. மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை ஒளிமயமாக்கும் புதிய தொழில்நுட்ப உதவி சாதனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப்களின் புதுமையான மாதிரிகளை அங்கு காண முடிந்தது என்பது மகிழ்ச்சி அளித்தது.
குறிப்பாக, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காகப் பத்திற்கும் மேற்பட்ட பிரத்தியேக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இது என் மனதைத் தொட்டது. இந்த அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்ட அனைத்துக் கருவிகளும் பார்வை மாற்றுத்திறனாளிகளின் கல்வியை மேம்படுத்துவதற்காகவே வடிவமைக்கப்பட்டிருந்தன.

“கண்டுபிடிப்புகள் ஒரு சிறு புள்ளியில் இருந்துதான் மகத்தான பயணத்தைத் தொடங்கும்” என்பதற்கு ஏற்ப, இந்தத் தொழில்நுட்பங்கள் சில ஆரம்பகட்டக் குறைகளுடன் இருந்தாலும், பல நிறைகளுடன் தங்கள் சமூகப் பணியைத் தொடங்கியுள்ளன.
Orbital Reader, OCR Reader, OCR Scanner போன்ற அதிநவீன கருவிகள், சமகால மாணவர்களுக்குக் கல்வியை எளிதில் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் பெரும்பான்மையான அரங்குகளில் இடம்பெற்றிருந்தன. “தேவைப்பட்டால் தனியார் நிறுவனங்களின் CSR (Corporate Social Responsibility) நிதியின் மூலம் இதனைப் பெற்றுத் தர முயல்கிறோம்” என்ற உறுதிமொழி, இந்தத் தொழில்நுட்பங்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தைப் பிரதிபலித்தது.

இந்தத் தொழில்நுட்பங்கள் தற்போது உகந்ததாக இருந்தாலும், நாளைய உலகில் இவை காலம் கடந்தவையாக மாறிவிடாமல் இருக்க, மேலும் நவீன தொழில்நுட்பங்களை, குறிப்பாக AI (Artificial Intelligence), இணையதள அணுகல் மற்றும் சுலபமான கையாளுதல் (User-friendly Interface) போன்றவற்றைச் செயல்படுத்த வேண்டும் என்ற எனது கருத்துக்களையும் அந்தக் குழுவினரிடம் கூறினேன்.
சென்னை மற்றும் சென்னைக்கு அருகில் வசிக்கும் நண்பர்கள், இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு இந்தக் கண்காட்சிக்குச் சென்று வரலாம். நம்முடைய கருத்துகள், குறை நிறைகளுடன் அவர்களைச் சென்று சேர்ந்தால்தான் புதிய புதிய கண்டுபிடிப்புகள் அதிகம் வரும். ஆகையால், வாய்ப்பு இருப்பவர்கள் பங்கேற்று, கண்டுபிடிப்புகளைப் பார்த்துவிட்டு தங்களின் நிறை குறைகளை கூறினால், அது இனிவரும் கண்டுபிடிப்புகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
இதுபோன்ற ஒரு சமூக முயற்சிக்கு வித்திட்ட தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கும், தமிழக அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றி. மேலும், இதுபோன்ற நிகழ்வுகளை ஒருங்கிணைத்து, “எல்லோருக்கும் எல்லாம்” என்பதைச் செயல்களின் மூலம் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சமூகத்திற்குப் பயன் தரும் இதுபோன்ற ஒரு நல்ல முயற்சியைக் கண்ட மகிழ்ச்சியுடனும், எதிர்கால நம்பிக்கையுடனும், ஒரு சிறந்த அனுபவத்தைப் பெற்றுக்கொண்டு விடைபெற்றேன்.
***கார்த்திக் வெ.
தொடர்புக்கு: karthick.v.scholar@gmail.com
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
