நன்றி: வையம் – ஏப்ரல் 2025
“கூண்டில் ஏற்ற முடியாத குற்றவாளிகள்” முனைவர்.மு.முருகேசன், பாரதி புத்தகாலயம், விலை ரூபாய்.240/-


அறிவும் மானமும் யாருக்கு இருக்கிறதோ அவன்தான் மனிதன். இதுதான் பெரியாரின் சுயமரியாதை கோட்பாட்டின் அடிநாதம். எந்த ஒரு மனிதனும் தான் சமமாக மட்டும் அல்ல கௌரவத்தோடும், சுயமரியாதையோடும் நடத்தப்பட வேண்டும் என நினைக்கிறான். விளிம்பு நிலை மாந்தர்களில் ஒருவகையினரான மாற்றுத்திறனாளிகள் மட்டும் இதில் விதிவிலக்கு பெற முடியுமா என்ன? ஐநா மகா சபை உலகெங்கும் தேடி பத்தாயிரம் வாதங்களை திரட்டியதாம். அவற்றை ஆராய்ந்த போது அவற்றின் உள்ளடக்கமாக இருந்தது சுயமரியாதை வாதம்தான்.
பார்வை மாற்றுத்திறனாளிகள் அனுபவிக்கும் வலிகளையும் வேதனைகளையும் சுயமரியாதை இழப்புகளையும் சுரண்டல்களையும் அப்பட்டமாக அம்பலப்படுத்தியிருக்கிறார் முனைவர் முருகேசன். இவர் இணைப் பேராசிரியர். ஆத்தூர் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் தமிழ் துறை தலைவராக பணியாற்றி வருகிறார். தன் வாழ்நாள் அனுபவங்களை ஒன்று திரட்டி பிறர் அனுபவங்களையும் பேட்டி கண்டு கேட்டறிந்து அவற்றை தொகுத்து நூலாக்கியிருக்கிறார். 15 அத்தியாயங்களைக் கொண்ட இந்நூலில் அவர் முதல் அத்தியாயத்தில் கையில் எடுத்த சாட்டையை பன்னிரெண்டாவது அத்தியாயத்தில் தான் கீழே வைக்கிறார். அதேசமயம் தனக்கும் தன் போன்றோருக்கும் உதவியவர்களை நெகிழ்வோடு குறிப்பிடுகிறார். பார்வையற்றோருக்கென்று வாசிப்பாளர் அமைப்பை தொடங்கிய திருமதி அன்னம் நாராயணன், அவரை சார்ந்தவர்கள், பார்வையற்றோருக்கென்று தன் வீட்டில் இடத்தை கொடுத்து வாசித்துக் காட்டி தன் குடும்பத்தாரையும் அதில் ஈடுபடுத்தி பார்வையற்றோரின் இயக்கத்தை வழி நடத்திய எஸ்.எஸ்.கண்ணன், கருத்தரங்கை எப்படி நடத்த வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து அதற்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்த தமிழாய்வு நிறுவனத்தைச் சேர்ந்த கோதண்டம் என இவரது நன்றிக்கடன் பட்டியல் நீள்கிறது.
மேலே நாம் சாட்டை என்று குறிப்பிட்டோம் தவறில்லை தான். அடிப்பவனுக்கும் அடி வாங்கியவனுக்கும் நீதி ஒன்றல்ல. எனவே வலியின் வெளிப்பாடாக வரும் ஒவ்வொரு சொல்லும் ஆயிரமாயிரம் அர்த்தங்களைத் தன்னோடு சுமந்து வருகிறது. பார்வை மாற்றுத்திறனாளியின் துன்ப துயரங்கள் தொடங்கும் இடமே அவன் வீடுதான். நூலாசிரியர் குறிப்பிடுவது போல திருநர் வீட்டைவிட்டுத் துரத்தப்படுகிறார், பார்வை மாற்றுத்திறனாளி அவ்வாறு செய்யப்படுவதில்லை அவ்வளவே.
உலக வரலாற்றை ஊடுருவிப் பார்த்தால் உலகில் நடக்கும் அனைத்துப் போராட்டங்களுக்கும் அடிப்படைக் காரணி, ‘தான் ஒதுக்கப்படுகிறோம்’ என்பதே. பிரெஞ்சுப் புரட்சியானாலும் சரி, இரஷ்ய புரட்சியானாலும் சரி, ஈழம் எதிர்கொண்ட உள்நாட்டுப் போரானாலும் சரி இந்த எண்ணத்தின் வெளிப்பாடே.
ஒரு பார்வை மாற்றுத்திறனாளி தான் படித்து முன்னேறி அனைத்து கஷ்ட நஷ்டங்களையும் கடந்து வரும்வரை அவன் குடும்பம் அவனை ஒட்டுண்ணியாகப் பார்க்கிறது. அவன் தனக்கென ஒரு வேலையை தேடிக்கொள்கிறபோது அவன் அக்குடும்பத்தின் ஒட்டுமொத்த சுமைதாங்கியாக்கப்படுகிறான். அவனுக்கென சில ஆசைகள் சில கோட்பாடுகள் வாழ்க்கைப் பற்றுகள் போன்றவை இருக்கும் என்பதைப்பற்றி குடும்பம் கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை.
“மன உறவுச் சவால்களும் மதிப்பு மிக்க இல்லறமும்” என்ற அத்தியாயத்தில் பார்வையற்றவர்கள் வாழ்வில் நிகழும் மன உறவுகள் பற்றி விரித்து பேசுகிறார். மட்டை விளையாட்டு முன்னால் வீரரும் தொழிலதிபருமான விஜய் மெர்சன்ட் பார்வையற்றவன் மனம் பற்றி பேசும்போது “அவர்களுக்குத் தேவை மெல்லிய தொடுதல் இனிய குரல்” என்கிறார். தேவை இதற்கு அப்பாலும் நீடிக்கும் என்பதை அவர் ஏனோ மறந்து விட்டார். இந்த நூலாசிரியரும் இனிய குரல் என்பதை ஒப்புக்கொள்கிறார்.
இங்கே நாம் விவாதிக்க வேண்டிய மிகப்பெரிய பொருண்மை அழகியல் உணர்வு பற்றியது. ஒரு பார்வை மாற்றுத்திறனாளியையும் அவருடைய பார்வை உள்ள மனைவியையும் நேர்காணல் வழியாகப் பேசியதை இக்கட்டுரையில் சேர்த்திருக்கிறார். பாலுறவின் போது மட்டும் தன் அங்கங்களின் அழகை ரசிக்க தன் கணவருக்குப் பார்வை இல்லையே என்று அவர் வருந்தியதாக அந்த பெண்மணி ஒப்புக்கொண்டிருக்கிறார்.
அழகு ரசனையின் வாயில் கண் என்று கூறப்படுகிறது. இந்தக் கண்தான் காதலுக்கு முதன்மைக் கருவி என்று சொல்லப்படுகிறது. இதனால்தான் கண்ணதாசன், “கண்கள் இரண்டும் குருடானால் காதல் கதைகள் பிறப்பதில்லை” என்கிறார். இதன் உட்பொருள் என்ன? பார்வையற்றவர்களுக்கு காதல் போன்ற உணர்வுகள் வர வாய்ப்பில்லை என்பதுதான். இதுபற்றி விவாதமும் ஆய்வு மிக நீளமானது. அது இங்கு தேவையற்றது.
கண் ஒரு கேமரா என்றுதான் அறிவியல் பாடத்தில் போதிக்கப்படுகிறது. அப்படியானால் கேமராவின் வேலை என்ன? பொருள் என்ன? நிறம் என்ன? என்று படம் பிடித்து மூளைக்கு கொடுப்பதுதான். மூளைதான் அவற்றை பகுத்து ஊடுருவி அறிகிறது. பார்வையற்றவருக்கு கேமரா பழுதுற்றுள்ளது மூளை சரியாக உள்ளது. அப்படியானால் இதன் நிலை என்ன? இதழின் செந்நிறம் அவனுக்குத் தெரியாமலிருக்கலாம். தேன் துளியின் ருசி? பாகங்களின் வண்ணம் அவனுக்குத் தெரியாமல் இருக்கலாம் தொடுதலில் அதன் வடிவமும் அழகும் தெரியுமே! அழகை ரசிக்க இது போதாதா? வள்ளுவன் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து என்கிறான். ஒரு பார்வை மாற்றுத்திறனாளிக்கு காண்பது மட்டும்தான் சிக்கல் மற்ற மூன்றும் இருக்கிறதே. இந்த மூன்றை வைத்து மனைவியின் நலம் பாராட்ட பார்வை மாற்றுத்திறனாளி கணவனால் முடியும் தானே?
அழகியல் கோட்பாடு என்பது மேட்டுக்குடிகளுக்கானது மட்டுமல்ல, அது ஒற்றமைப் பண்பைக் கொண்டதல்ல. அமெரிக்க கவிஞன் வில்லியம் பிளேக் கூறுவது போல சூழ்நிலைக்கும் மனிதனின் மனோநிலைக்கும் தகுந்தாற் போல மாறக் கூடியது. எல்லாவற்றுக்குள்ளும் அழகு இருக்கிறது. இசையின் அழகு கண்ணுக்குத் தெரியாது, ஓவியத்தின் அழகு காதில் கேட்காது. ஒட்டுமொத்தமாக ஒற்றைத் தன்மையைக் கையில் ஏந்தி அழகற்றவை வாழத் தகுதியற்றவை என்கிற நீட்சேவின் கூற்றை ஏற்பது என்பது தான் அல்லது தன்னைப் போன்றவர்களைத் தவிர மற்றவர்கள் யாரும் உலகுக்குத் தேவையற்றவர்கள் என்கிற உலக மாந்தர் மீதான வெறுப்பு உமிழ் கோட்பாடாகும். அழகியல் என்பது எல்லாவற்றிலும் அவ்வவற்றின் தகுதிகளுக்கு ஏற்ப விரவிக் கிடக்கும் ஒன்றாகும்.
இந்த அத்தியாயத்தில் மிக முக்கியமான பேசப்பட வேண்டிய ஒரு பொருண்மை பற்றிப் பேசுகிறார். அதாவது நல்ல வேலையில் இருக்கிறார் நல்ல சம்பளம் கிடைக்கிறது என்பதற்காக, பார்வை உள்ளவர் பார்வையற்றவரைத் திருமணம் செய்துகொள்வதில் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றிப் பேசுகிறார். இந்த விடயத்தில் நல்ல வேலையில் இருக்கும் பார்வையற்ற பெண்களைப் பார்வை உள்ள ஆண்கள் மணம் புரிந்துகொண்டு செய்யும் சித்திரவதைகள் கருதிப் பார்க்கத்தக்கதே. இத்தகைய நிலைக்கு இவர் கூறும் தீர்வு பார்வை மாற்றுத்திறனாளி பார்வை மாற்றுத்திறனாளியை மணப்பதுதான். கமலஹாசன் தயாரித்த ராஜபார்வை படத்தில் ஒரு காட்சி வருகிறது. பார்வையற்ற அந்தப் பெண் பார்வையற்ற கமலஹாசனிடம் “நாம கல்யாணம் செஞ்சுக்கலாமா” என்று கேட்கிறாள். கமலஹாசனோ “நாம கல்யாணம் பண்ணிக்கிட்டா கண்ணாமூச்சிதான் விளையாட முடியும்” என்கிறார். முனைவர்.முருகேசனின் தீர்வு கமலஹாசனுக்கு ஏற்புடையதாக இருக்குமா?
அத்தியாயம் 13ல் நூலாசிரியர் தான் சார்ந்த இயக்கத்தின் கோரிக்கைகள் பற்றியும் அவற்றை வென்றெடுக்கப் போராடிய விதங்களைப் பற்றியும் விதந்தோதியிருக்கிறார். தோழர் எஸ்.எஸ்.கண்ணன் இப்போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு நல்கியதோடு வழிகாட்டியும் இருக்கிறார். இவர் கூறும் அந்த இயக்கத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டவன் நான். பின்னாளில் எஸ்.எஸ்.கண்ணன் அவர்களுக்கு ஒத்துழைக்கிறார் என்று கேள்விப்பட்ட போது என்னுள் ஒரு நம்பிக்கை பிறந்தது. தோழர் எஸ்.எஸ்.கண்ணன் எப்படியும் இவர்களை அரசியல்மயப்படுத்தி, சமூக உணர்வு ஊட்டி இச்சமூகத்தில் அவர்களை சிறந்த மனிதர்களாக, போராளிகளாக மாற்றிவிடுவார் என்று நினைத்திருந்தேன்.
தோழர் எஸ்.எஸ்.கண்ணன் அதை முழுமனதாக விரும்பவில்லையா அல்லது இவர்கள் ஒத்துழைப்பு அவருக்கு கிடைக்கவில்லையா என்று தெரியவில்லை. எது எவ்வாறு இருப்பினும் எஸ்.எஸ்.கண்ணன் போன்றோரின் கையில் இருந்த ஓர் அமைப்பு அதன் முழுமையை நோக்கிப் பயணிக்கவில்லை என்பது வருத்தத்துக்குரிய செய்திதான்.
பார்வை மாற்றுத்திறனாளிகளின் துன்ப துயரங்களைத் தொட்டுப் பேசி வந்த முனைவர்.முருகேசன் அத்தியாயம் 14ல் இலக்கிய சர்ச்சை ஒன்றைத் தொட்டிருக்கிறார். சில காலமாகவே தமிழ்நாட்டில் தலித் இலக்கியங்களைப் பற்றிய எதிர்மறை நேர்மறை உரையாடல்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இது பற்றி எனது சந்தேகமும் கேள்வியும் அடிப்படையிலேயே அது எப்படி என்பதாக இருக்கிறது. லா.சா.ரா, ஜானகிராமன், பாலகுமாரன் இப்படி இன்னும் பலர் பிராமணர்களைப் பற்றி எழுதிய போது அது பிராமண இலக்கியம் என்று யாரும் சொல்லவில்லை. எம். வி என்று அழைக்கப்படும் எம்.வெங்கட்ராமன், தமிழ்நாட்டிற்கு வந்து இங்கேயே தங்கிப் பல தலைமுறைகளைக் கண்ட சௌராஷ்டிரர்களைப் பற்றி எழுதிய போது அது சௌராஷ்டிர இலக்கியம் என்று யாரும் சொல்லவில்லை. ஆயின் தலித்துகள் எழுதத் தொடங்கியதும் தலித் இலக்கியம் என்று அதற்குப் பெயர் தரப்பட்டது ஏன்? இத்தகைய கேள்விகளுக்கு ஒரு விடையைத் தர முருகேசன் முயன்றிருக்கிறார். அவர் கூறும் விடை இவர்கள் கூடு விட்டு கூடு பாயும் சக்தி வாய்ந்தவர்கள் என்பதுதான். இவர்கள் எல்லாரைப் பற்றியும் எழுதுவார்களாம். ஆனால் பாதிக்கப்பட்டவன் தன்னைப் பற்றி எழுதக் கூடாதாம்.
பின்நவீ னத்துவத்தில் ஆணிவேரைத் தேட முயன்ற லத்தின் அமெரிக்க முற்போக்கு எழுத்தாளர்கள் இப்போது சொல்வதெல்லாம் அவரவர் துயரை அவரவர் எழுத வேண்டும் என்பதுதான். தென்னாப்பிரிக்காவின் நைஜீரியாவைச் சேர்ந்த சினு ஆச்சிப்பை இதைத்தான் எழுதி வந்தார். இப்போது மாற்றுத்திறனாளிகளும் இதைத்தான் செய்ய முற்பட்டிருக்கிறார்கள்.
மாற்றுத்திறனாளிகளைப் பற்றி இலக்கியம் படைக்கிறோம் என்கிற பெயரில் கவிஞர் வைரமுத்துவும், சோ.தர்மனும், சுஜாதாவும் அபத்தங்களை அள்ளிக்கொட்டியிருக்கிறார்கள். இதை வாசித்த இந்நூல் ஆசிரியர் தன் உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பார்வை மாற்றுத்திறனாளிகள் மீது சமூகத்தின் ஒடுக்குதலும், சுயமரியாதை சூறையாடப்படுதலும், சுரண்டலும் எப்படி நிகழ்கின்றன என்பதை விளக்க முருகேசனின் ஒரு நூல் போதாது. இன்னும் பல நூல்கள் இன்னும் பலரால் படைக்கப்பட்டு வெளிக்கொணரப்பட வேண்டும்.
கடைசி அத்தியாயமான “நூலிழை மாற்றங்கள்” சுருங்கக் கூறுவது இதுதான், இயற்கையில் ஒரு பொருள் ஒரு தாவரம் அல்லது செடி அதன் பயன்பாடு நமக்குத் தெரியவில்லை என்கின்ற ஒற்றைக் காரணத்திற்காக இயற்கை பயனற்றதை படைத்து விட்டது என்று சொல்லக்கூடாது. அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொண்ட பிஎல் 480 உடன்படிக்கை வாயிலாக இறக்குமதி செய்யப்பட்ட கோதுமையுடன் பார்த்தீனியமும் இறக்குமதியானது என்று கூறப்பட்டது. அது ஒரு களைச்செடியாக நம் விவசாயிகளின் எதிரியாக உருவானபோது அதை அழிக்க அரும்பாடுபட்டனர். ஆனால் கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் அதை உரமாக மாற்ற முடியும் என்று கண்டறிந்தது. இங்கே நூலாசிரியர் சொல்ல விரும்புவதும் அதுதான்.
பார்வை மாற்றுத் திறனாளியை ஒன்றுக்கும் உதவாதவர் என்று ஒதுக்குவதை விட, அவரை எப்படி உற்பத்திக் காரணியாக மாற்றுவது என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். அத்தகைய ஆக்கபூர்வமான சிந்தனைகள் நாட்டிற்கு நன்மை தரும். பார்வை மாற்றுத்திறனாளியின் வாழ்க்கையில் வளம் சேர்க்கும். அவர் சார்ந்த வீட்டிற்கும் நலம் சேர்க்கும்.
நூலைக் கையில் எடுத்து வாசிக்கும் ஒவ்வொருவரையும் தானும் ஒரு கூண்டிலேற்ற முடியாத குற்றவாளி தானோ என்று இந்நூல் யோசிக்க வைக்கும். “ஆம்” அப்படித்தான் தன்னை யோசிக்க வைப்பதாக அணிந்துரை நல்கிய பேராசிரியர் நா.மணி கூறியிருக்கிறார். “உதாசீனம்” “உரிமை மறுப்பு” “சுயமரியாதை தகர்ப்பு” “அவமானங்களின் குவிப்பு” என சமூகச் சாட்டை வீச்சால் ஏற்பட்டிருப்பது உளமெங்கும் இரணங்கள். அந்த இரணங்களின் வெளிப்பாடு முனைவர் முருகேசனின் இந்த நூல். வலியில் துடிப்பவர் பொறுக்க முடியாத போது அவருள் இருந்து வருவது சற்று வேகம் மிகுந்ததாகத்தான் இருக்கும். எனினும் நாம் வன்முறையைக் கையில் எடுத்துக் கொள்வதாக ஒரு தோற்றம் உருவாகிவிடக் கூடாது.
முருகேசன் வங்கிகளைப் பற்றிப் பேசும்போது சற்று அதிகமாகவே ஆவேசப்படுகிறாரோ என்று தோன்றுகிறது. அடுத்த பதிப்பில் தன் வேகத்தைச் சற்று குறைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கலாம். இன்னும் பலர் அவர் கூறுவது போல் குறிப்பாக பெண்கள் தங்கள் வேதனைகளை வெளியிட வேண்டும். மொத்தத்தில் “கூண்டிலேற்ற முடியாத குற்றவாளிகள்” முடிவல்ல ஒரு தொடக்கம். இதை முருகேசன் தொடங்கி வைத்திருக்கிறார். அவ்வளவே. சமூகத்தைத் தோலுரித்துக் காட்டிய பேராசிரியர் முருகேசன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
***எழுத்தாளரும் கவிஞருமான திரு. வே. சுகுமாரன் அவர்கள், பணிநிறைவு பெற்ற வரலாற்றுத்துறை பேராசிரியர். நெருப்பு நிஜங்கள், காத்திருப்பு கவிதைத் தொகுப்புகள், எங்கிருந்து வந்தாள் குறுநாவல், நியாயங்கள் காயப்படுவதா கட்டுரைத் தொகுப்பு, காட்டுவாத்துகள் மூன்று சீனப்பெண்களின் கதை (மாவோவின் மறுபக்கமும்கூட ) என்ற ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு முதலான நூல்களை எழுதியுள்ளார்.
குறிப்பு: எங்கிருந்து வந்தாள் குறுநாவல், மதுரையிலு்ள்ள இந்தியப் பார்வையற்றோர் சங்கத்தால் (IAB) பிரெயிலில் வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்புக்கு: sukumaran97@gmail.com
அலைபேசி: 9443112831
***வே. சுகுமாரன்.
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
