Categories
தொழில்நுட்பம் Uncategorized

தொழில்நுட்பம்: தி கிரேட் கிரேட்டா

கிரேட்டா ஆப் குறித்து உரையாடுங்கள். அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

இவன்: நண்பா! நாளை தைப்பூச விடுமுறைக்கு,,,,

அவன்: திருத்தணி மாதிரி ஏதாச்சும் திருத்தளம் போகலாமா?

இவன்: திருத்தளம் வேணாம். திரைத்தளம் போவோம்.

அவன்: என்ன படம்? முன்கூட்டியே சொல்லிட்டா நான் ஒருமுறை பார்த்துடுவேன். உன்னோடு வந்து உனக்கு ஒவ்வொரு காட்சியா விளக்குவேன்.

இவன்: படம் விடாமுயற்சி, விட்டுடு இனி அது வேண்டாத முயற்சி.

அவன்: என்ன சொல்ற? புரியல.

இவன்: நான் விரும்புற திரைப்படத்தையெல்லாம் உனக்கு பிடிக்குதோ இல்லையோ நீ முன்கூட்டியே பார்த்து, பிறகு என்னைக் கூட்டிபோய், காட்சிக்குக் காட்சி என் காதுல கிசுகிசுத்த அந்த கிரேட்டான காலங்கள் மேலும் கிரேட்டா கிரேட்டாவால மாறப்போகுது.

அவன்: யாரு அந்த கிரேட்டா? எனக்குத் தெரியாம?

இவன்: என் கைக்குள்ள இருக்கிற செயலி. காதுக்கு நல்ல குயிலி.

அவன்: you mean android app?

இவன்: yes, you are absolutely right.

இந்தச் செயலியில விடுதலை 2, விடாமுயற்சி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்களுக்கெல்லாம் ஆடியோ டிஸ்க்ரிப்ஷன் இருக்கு. அது மட்டுமில்ல, இனி வரப்போற நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்துக்கும் ஆடியோ டிஷ்க்ரிப்சன் போடப் போறதா அறிவிப்பும் இருக்கு. சினிமாவுக்குப் போறதுக்கு முன்னாலேயே நாம படத்துக்கான ஆடியோ டிஷ்க்ரிப்சனை டவுன்லோட் செஞ்சுக்கலாம். தியேட்டர் போய், காதுல ஹெட்ஃபோன் மாட்டிக்கிட்டு, படம் தொடங்கிட்டா அந்த படச்சத்தத்தை இது உள்வாங்கிக்கிட்டு ஸ்கிரீன்ல என்ன காட்சி ஓடுதோ, அதுகூட சிங்க் ஆயிடும். அப்புறம் என்ன? எல்லோர்கூடையும் சேர்ந்துகிட்டு, நானும் சரிக்குச் சரி விசிலடிக்கலாம், கைதட்டலாம், உச்சுக்கொட்டிக்கலாம். நச்சுன்னு இருக்குல்ல.

அவன்: ஹே செம மச்சி.

இவன்: அப்புறம் முக்கியமான விஷயம் என்னான்னா தியேட்டர்தான்னு இல்ல, அதில இருக்கிற படத்த நீ ஓடிடில பார்த்தாலும், டிவிடில பார்த்தாலும் இந்த ஆப் அந்தப் படத்தோட சிங்க் ஆயிடும். உன்னை மாதிரியே காட்சிக்குக் காட்சி விளக்க ஆரம்பிச்சிடும்.

அவன்: ஹே என்னால நம்பவே முடியல.

இவன்: நேத்து ரஞ்சித் ப்ரோ சொன்னப்போ எனக்கும் ரொம்ப ஆச்சரியமாத்தான் இருந்துச்சு.

அவன்: அவரு என்ன சொன்னாரு?

இவன்: நிறைய சொன்னாரு. இந்த

லிங்க்க க்லிக்

பண்ணிப் பாரேன்.

அவர் சொன்னதுக்கு அப்புறமா நான் விடுதலை 2 படத்தோட ஆடியோ டிஷ்க்ரிப்சனை ஆப்ல டவுன்லோட் பண்ணிட்டு, அப்புறம் பிரைம்ல இருக்கிற விடுதலை 2 படத்தோட சிங்க் பண்ணிப் பார்த்தேன்.

மச்சி சான்ஸே இல்ல. வேற லெவல்.

அவன்: சில குறிப்பிட்ட படத்துக்குத்தான் இந்த ஆப்ல ஆடியோ டிஷ்க்ரிப்சன் கிடைக்குமா?

இவன்: அப்படி இல்ல. அது நம்ம தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் கையிலதான் இருக்கு. அவுங்க தங்களோட படத்த முடிச்சுட்டு, அதுக்கான ஆடியோ டிஷ்க்ரிப்சனை மட்டும் தயார்பண்ணி இந்த ஆப் டெவலப்பர்ஸ்கிட்ட கொடுத்துட்டா போதும். படத்தோட எப்படி சிங்க் பண்ணுறதுங்கிறதையெல்லாம் அவுங்க பார்த்துக்குவாங்க. ஒரு படத்த எடுக்கிற செலவில நூத்துல ஒரு விழுக்காடு செலவுகூட இந்த ஆடியோ டிஷ்க்ரிப்சனுக்கு ஆகாதுங்கிறதுதான் உண்மை.

அப்புறம் இதெல்லாம் ரொம்ப முக்கியமாங்கன்னு படத் தயாரிப்பாளர்கள் கேட்க முடியாது. ஏன்னா ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016 மற்றும் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தோட வழிகாட்டு நெறிமுறைகளெல்லாம் என்ன சொல்லுதுன்னா, கண்டிப்பா உங்க படங்கள் பார்வையற்றவர்களுக்கும், காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கும் அணுகத் தக்க வகையில இருக்கணும். அதுவே கலைச்சமத்துவத்துக்கான வழினு சொல்லுது. அதனால இனிவரும் ஆண்டுகள்ல இதெல்லாம் கருணையல்ல கட்டாயமா மாறிடும்.

அவன்: எல்லாப் படங்களுக்கும் ஆடியோ டிஷ்க்ரிப்சன் வந்துட்டா, நீயும் திரைவிமர்சனமெல்லாம் எழுத ஆரம்பிச்சிடுவியே?

இவன்: மச்சி. இந்த ஆப்போட டெவலப்பர்ஸ் என்ன சொல்றாங்க தெரியுமா? நிறைய விஷுவலி இம்பையர்ட் ஃப்லிம் மேக்கர்ஸ் உருவாகனுமாம். அதுவே அவுங்களோட அல்டிமேட் கோலாம்.

என் காலத்துல இல்லைனாலும்  என் தம்பிங்க வரட்டுமே. வச்சு செய்யட்டுமே!

அவன்: சரி மச்சி, உன் பஸ் வந்துடுச்சு. கிளம்பு.

இவன்: சீட்டு ஃப்ரீயாஇருக்கா. முதல்ல இதுக்கு ஒரு ஆப் டிசைன் பண்ணச் சொல்லணும்.

***செயலியைப் பதிவிறக்க:

குறிப்பு: செயலியில் பெரிய அளவில் குறைபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, செயலி குறித்த விழிப்புணர்வின் பரப்பை விரிவுபடுத்தலாமே என நினைத்து, திரைப்படங்களை அனைவருக்குமானதாக மாற்றும் செயலில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிற இந்தியாவின் முன்னோடி நிறுவனமான எக்சல் சினிமாவின் வாட்ஸ் ஆப் குழுவில் நண்பர் ரஞ்சித் அவர்களின் காணொளியைப் பகிர்ந்தேன். அந்தக் குழுவின் உறுப்பினர்களில் பெரும்பான்மை வட இந்தியப் பார்வையற்றவர்கள். அவர்கள் சொன்ன கருத்துகள் ஆலோசனைகளாக கீழே:

*திரைப்படத்துக்கான ஆடியோ டிஷ்க்ரிப்சனை உருவாக்குவதில் மேலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. தேவையான இடங்களில் மிகக் குறைந்த அளவிலான விளக்கங்கள் இந்தச் செயலியின் மிகப் பெரிய குறைபாடு என்கிறார்கள் அவர்கள். சான்றாக, வெறும் அடித்தார்கள் என்று சொல்லாமல், அடிவிழும் கோணம் பற்றிய விளக்கங்கள் வேண்டும்.

*மேலும், உரையாடல்களுக்கு இடையே விழும் இடைவெளிகளில் ஆடியோ டிஷ்க்ரிப்சன்கள் இருப்பதாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

*காட்சி நிகழிடம், சுற்றித் தெரியும் சூழல், வெளிச்சம், நடிகர்களின் ஆடை மற்றும் ஒப்பனைகள் குறித்த விவரங்கள் அனைத்துமே பதிவு செய்யப்பட வேண்டும்.

*அரசின் விதி கட்டுப்படுத்துகிறது என்பதாலேயே ஒப்புக்குச் செய்திடலாம் என்ற சிந்தனை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

இறுதியாக அவர்கள் சொன்னது, இந்தச் செயலியில் தென்னிந்தியத் திரைப்படங்களே அதிகமாக இடம்பெற்றிருக்கிறதாம். எக்சல் சினிமாவின் நோபோஃப்லிக்ஸ் செயலியில் ஒரே ஒரு தமிழ்ப்படம்கூட இல்லை என்ற குறையை இந்தச் செயலி நேர் செய்திருக்கிறது. அதுபோல காலமாற்றத்தால் அவர்களின் மனத்தாங்களும் சரிசெய்யப்படும் என நம்புவோம்.

***ப. சரவணமணிகண்டன்

முக்கிய இணைப்புகள்:

https://www.gretaundstarks.de/multilingual/


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.