“ஒரு கதை சொல்லட்டுமா” எனத் தொடங்கலாம் என்றால், இது கதையும் இல்லை. “இந்தப் படத்தில் வரும் சம்பவங்கள் யாரையும் குறிப்பதல்ல” என்று சொல்லிவிடவும் முடியாது. சரி நேரடியாகவே விஷயத்துக்குள் போய்விடுவோம்.
சென்ற ஆண்டு வெளியான வேட்டையன் திரைப்படம் குரல்வழிக் காட்சி விவரிப்போடு வந்திருப்பதாக விதந்தோதி பல செய்திகள் படித்தோம். ஆடியோ டிஸ்க்ரிப்ஷனை (Audio Description) தமிழ்ப்படுத்தினால் அவ்வளவு எடுப்பாக இல்லை என்பதைக் கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு, சொல்லவந்ததைச் சொல்லிவிடுகிறேன்.
ஓடிடி தளங்களில் அல்லாமல், திரையரங்கிலேயே வேட்டையன் இந்த வசதியோடு வெளிவருவதாகச் சொன்னார்கள். ஆனால், அந்த வசதியைப் பார்வையற்றவர்கள் எப்படிப் பயன்படுத்துவது, எல்லாத் திரையரங்குகளிலும் இந்த வசதி இருக்குமா, அல்லது குறிப்பிட்ட திரையரங்குகள் மட்டும்தானா போன்ற கேள்விகளுக்கெல்லாம் பெரிதாக எவரிடமும் பதில் இல்லை. அதனால்தானோ என்னவோ, படம் வெளிவந்த பின் அதன் தாக்கம் குறித்துப் பார்வை மாற்றுத்திறனாளிகளிடமிருந்து குறிப்பிடத்தக்க பதிவுகள் எதுவும் வரவில்லை.
வேட்டையன் படம் திரையரங்கிலேயே ஆடியோ டிஸ்க்ரிப்ஷனோடு வருகிறதென்றால், அது எக்சல் சினிமாவின் பணியாகத்தான் இருக்கும் என நான் உறுதியாக நம்பினேன். காரணம், இதுபோன்ற புதுமையான முயற்சிகளின் தோற்றுவாய் எக்சல் சினிமாதான். திரைப்படங்களைப் பார்வையற்றோரும் அணுகி, அதன் தாக்கத்தை அனுபவிக்க வேண்டும், அதுவே பொழுதுபோக்குச் சமத்துவம் என நம்பும் மென் பொறியாளர் தீப்தி பிரசாத் அவர்கள்தான் எக்சல் சினிமாவின் நிறுவனர்.


தன்னுடைய மேலான நோக்கத்தைச் செயல்படுத்தும் வகையில்,
என்ற தளத்தை ஏற்படுத்தி, அதில் பல ஹிந்தித் திரைப்படங்களுக்கு ஆடியோ டிஸ்க்ரிப்ஷனைத் தயாரித்து படத்தோடு அதை இணைத்து வெளியிட்டு வருகிறார் அவர். வெறும் 349 வருடாந்திரச் சந்தாவில் இந்தத் தளத்தில் இணையலாம். சந்தா செலுத்த இயலாத பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு நன்கொடை வழங்கி, அவர்களையும் தளத்தில் சந்தாதாரராக இணைக்கும் வசதியும் உண்டு. கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர் போன்ற சிக்கலான படத்தையும்கூட என்னால் எளிதாக இந்தத் தளத்தின் வழியே சுவைக்க முடிந்தது என்றால் இதன் முக்கியத்துவம் உங்களுக்குப் புரியவரும் என நினைக்கிறேன்.
இங்கே தமிழ்நாட்டில் அத்தகைய முயற்சிகள் எதுவும் நடக்கவில்லை. ஆனாலும்கூட, பரபரப்புடன் வெளியாகி வெற்றிகரமாக ஓடும் சில வணிகத் திரைப்படங்களை, குரல்வழிக் காட்சி விவரணைகளோடு திரையரங்கிலேயே சிறப்புக் காட்சி ஒன்றினை ஏற்படுத்தி, பார்வையற்றவர்களும் சுவைக்க அவ்வப்போது முன்னெடுப்புகளைச் செய்கிற அகல் அமைப்பின் அம்பிகா அவர்களுடைய முயற்சி போற்றுதலுக்குரியது. கபாலி, சைக்கோ, பொன்னியின் செல்வன், கோட் போன்றவை அவருடைய முயற்சிகளுக்கான சில சான்றுகள்.

நோபோஃப்லிக்ஸ் போன்ற செயலி வழியாக மட்டும் பார்வையற்றோர் திரைப்படங்களைச் சுவைத்தால் போதாது. அவர்களும் திரையரங்கில் அதே அனுபவத்தைப் பெற வேண்டும் என அம்பிகாவைப்போலவே தீப்தியும் யோசித்தார். ஆனால், தீப்தியின் யோசனை முழுக்க முழுக்க, நவீனமானது, பார்வையற்றவர்களின் தற்சார்பையும் தன்னம்பிக்கையையும் கூட்டுவது. பார்வைத்திறன் குறையுடைய பிரபல தொழில் அதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின்் வாழ்க்கையை கதைக்களமாகக்கொண்டு ஹிந்தியில் வெளிவந்த படம் ஸ்ரீகாந்த். அந்தப் படத்தைப் பார்வையற்றவர்கள் அனைவரும் திரையரங்கில் ஆடியோ டிஸ்க்ரிப்ஷனோடு பார்க்கலாம் என அறிவித்த தீப்தி, அதற்கென்றே உருவாக்கப்பட்ட எக்சல் சினிமா செயலியை வெளியிட்டதோடு, அதனைப் பயன்படுத்தி, ஸ்ரீகாந்த் திரைப்படத்தை எப்படித் திரையரங்குகளில் பார்ப்பது என்பது பற்றிய செய்முறை விளக்கக் காணொளிகளைத் தொடர்ந்து வெளியிட்டார்.
தீப்தியின் இந்த முயற்சியால் திரையரங்கில் பிறரின் உதவியில்லாமல் ஒரு பார்வையற்றவரால் படத்தைப் பார்க்க முடிந்தது. பார்வையுள்ளவர்களுக்குச் சமமாக, சம கணத்தில் கைதட்டவும், கண்ணீர் வடிக்கவும் முடியும் என்பது எத்தனை மகத்தான சமத்துவப் பார்வை. இப்போது அதே திரைப்படம் நெட் ஃப்லிக்ஸ் தளத்தில் ஆடியோ டிஸ்க்ரிப்ஷனோடு காணக்கிடைக்கிறது.
நான் தீப்தியைத் தொடர்புகொண்டேன். “வேட்டையன் ஆடியோ டிஸ்க்ரிப்ஷன் நீங்களா செய்கிறீர்கள்?” எனக் கேட்டேன். அவர் இல்லை என்றார். அத்தோடு நான் அந்தச் செய்திகளைக் கண்டுகொள்ளவில்லை.
இப்போது கேமராவைக் கட் செய்து அடுத்த ஷாட்டுக்கு வருவோம். ஒரு மொட்டை மாடி காண்பிக்கப்படுகிறது. அங்கே ஓர் அழகான வாலிபன் ஒரு முனையிலிருந்து மறுமுனை என நடை பயிற்சியில் இருக்கிறான். வாலிபன் இல்லை என்கிறீர்களா? போகட்டும், அழகான என்பதையாவது ஒப்புக்கொள்வீர்கள் என்றால், அவன் நான்தான் என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன்.
கையில் ரெட் மீ 9 செல்போன். பொதுவாக இன்ஸ்டா ரீடரில் புத்தகங்களை ஸ்கேன் செய்து, அதை ஆடியோவாக ஓடவிட்டு, டிவைஸ் லாக் செய்து பனியனுக்குள் போட்டுக்கொண்டு, ஒரு கை பக்கவாட்டுச் சுவரை இலேசாக தொட்டபடித் தொடர, இன்னொன்றை முன்னும் பின்னும் வீசி நடப்பதுதான் வாடிக்கை. அன்றைக்கு என்னவோ தெரியவில்லை. எனக்குப் புத்தகம் படிக்கிற ஆர்வம் இல்லை. சந்தா செலுத்தி வைத்திருக்கிற நெட் ஃப்லிக்ஸ், பிரைம் ஓடிடி தளங்களைத் துலாவினேன். பிரைமில் வேட்டையன் படம் முன்வரிசையில் இருந்தது. “பிரைமில் வேட்டையன் ஆடியோ டிஸ்க்ரிப்ஷனோடு வெளியாகியிருக்கிறது” என சன்னமாக சவுண்டப்பன் தொடுகை மின்னிதழ் வாட்ஸ் ஆப் குழுவில் குரல்ப்பதிவிட்டதும் நினைவுக்கு வந்தது. சரி வரிசையில் இருக்கும் மேலும் சில படங்கள் என்னென்ன எனப் பார்க்க ஆர்வமானேன்.
‘கொட்டுக்காளி’ என திரைவாசிப்பான் அறிவித்ததால் அங்கேயே நின்றுவிட்டது ஆட்காட்டி விரல். உடனே ‘கொட்டுக்காளி’யைக் குட்ட , சில நிமிடங்களில் படம் தொடங்கியது. ஓடிடி தளங்களில் எந்தப் படம் பார்ப்பதாக இருந்தாலும், அந்தப் படத்தின் ஆடியோ மற்றும் சப் டைட்டில்ஸ் பகுதியைத்தான் முதலில் துழாவுவேன். ஆடியோ டிஸ்க்ரிப்ஷன் இரு்க்கிறதா என்கிற தேடல் பெரும்பாலும் ஏமாற்றத்தில்தான் முடியும். ஆனாலும் காளிமீது கனத்த நம்பிக்கை இருந்தது. சதி செய்துவிட்டாலே சமத்துவக் காளி என்ன செய்வது?
சரி, வழக்கம் போல வசனம், பின்னணி இசை என கைகொடுக்கும் கனவான்களைத்தான் அண்ட வேண்டும். படம் வெறும் ஒன்றரை மணி நேரம்தான் என்பதும் ஒரு சிறிய ஆறுதல். ஆனால், தொடங்கி ஐந்து நிமிடம் ஆகிவிட்டது. குயில் கத்துகிறது, பூச்சிகள் கிறீச்சிடுகின்றன, யாரோ நடக்கும் சத்தம். பாலுமகேந்திரா அவர்களின் சந்தியாராகம்தான் நினைவுக்கு வந்தது. பேச்சை மட்டும் காணோம். பிறகு ஒவ்வொருவராக மெல்ல மெல்லப் பேசத் தொடங்கினார்கள். ஆட்டோ பயணம், அதனைப் பின்தொடரும் இருசக்கர வாகனம். எங்கேயோ கோவிலுக்குக் குடும்பமாகச் செல்கிறார்கள் என்பது மட்டும் உத்தேசமாகப் புரிகிறது. “ஊஹூம் இது சரிவராது. துணைக்கு எவரையாவது வைத்துக்கொண்டுதான் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என முடிவு செய்தேன்.

மீண்டும் வேட்டயனுக்கு அழைத்து வந்தது சுட்டுவிரல். கரோனா முடக்கத்தின்போது நெட் ஃப்லிக்ஸ் தளத்தில் ஆடியோ டிஸ்க்ரிப்ஷனோடு வெளியான ஜகமே தந்திரம் பார்த்து அசந்து போன எனக்கு, வேட்டையன் ஆடியோ டிஸ்க்ரிப்ஷன் அத்தனை திருப்திகரமாக இல்லை. என்றாலும்கூடப் படத்தைப் புரிந்துகொள்ளும் வகையில்தான் அது வடிவமைக்கப்பட்டிருந்தது. “நல்ல ஸ்டோரிதான், ஹீரோயிசத்துக்காக வீணடித்துவிட்டார்கள் சார்” என பதினோராம் வகுப்பு மாணவன் நித்திஷ் சொன்னது நினைவுக்கு வந்தது.
வேட்டையன் பார்த்து முடித்தபோது பரவாயில்லை எனத் தோன்றினாலும், ஒன்று மட்டும் உறுத்தியபடியே இருந்தது. ஹிந்தி அளவுக்கு இல்லை, ஆனாலும் கம்பீரமாகத்தான் இருந்தது அமிதாபின் குரல். இந்த வேட்டையன் குரலோ, கிழச்சிங்கத்தின் உறுமல். சமீபகாலமாக ரஜினியை வைத்துப் படம் செய்யும் எந்த இயக்குநரும் இதுபற்றிக் கவலைப்படுவதே இல்லை. சண்டை, ஸ்டைல் மிடுக்கு போதும், குரல் அவ்வளவு முக்கியமா என்ன ஒப்பேற்றிக்கொள்ளலாம் என நினைக்கிறார்கள்.
முள்ளும் மலரும் படத்தில் சரத்பாபுவோடான சவால்விடும் காட்சி, விடுதியில் தம்பிக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் கொடுத்துவிட்டுக் கிளம்ப மனமில்லாமல் மருகும் படிக்காதவன் ரஜினி, அண்ணாமலையில் தன் மகளை அமர்த்திக்கொண்டு அறிவுரை சொல்லும் நேரத்தில் குரலில் காட்டும் படிப்படியான ஏற்ற இறக்கம், “உன்கிட்ட இருந்து எப்டி உண்மைய வரவைக்கணுமுனு எனக்குத் தெரியும்” என்பதாகச் சீறும் பாஷா என எப்படியெல்லாம் அவரின் குரலை அனுபவித்திருக்கிறோம். அவர் மலையை மலே என்பார். எப்படியை எப்டி என்பார். ஆனால் அதில் ஒரு இன்னோசென்ஸ் இருந்ததால் பொருத்துக்கொண்டோம். இதையெல்லாம் பொருத்துக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள் இயக்குநர்களே.
“நாட்ல எவ்வளவோ பிரச்சனை இருக்கு. இதெல்லாமா பஞ்சாயத்து” என நம்மவர்கள் மனக்குரல்எனக்கு கேட்கவே செய்கிறது. இது பஞ்சாயத்து இல்லை மக்களே! திரையுலகத்துக்கு நம் தரப்பிலிருந்து நாம் விடுக்கும் சிறு செய்தி. பஞ்சாயத்து அடுத்த பத்தியில்.
துணையாள் ஒருவருடன் அமர்ந்து பார்க்கலாம் என கொட்டுக்காளியை விட்டுவைத்திருந்தேன் அல்லவா? இரண்டு மாதங்களில் அதற்கான வாய்ப்பை உருவாக்கினேன். துணையாள் யார் தெரியுமா? ஆறாம் வகுப்புப் படிக்கும் மகள் வெண்பா.
ஏர்டல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் மூலமாக டீவிப் பெட்டியில் விரிந்தது திரை. உள்ளே என்ன நடந்தாலும் ஒன்றுவிடாமல் சொல்ல வேண்டும் எனச் சொன்னேன். திரையிலிருந்து யாரோ ஒருவர் பேய் என்ற சொல்லை உச்சரித்தார். அவ்வளவுதான் மகளுக்குப் படத்தின்மீதான எதிர்பார்ப்பு எகிறியது. “பேய்ப்படமாப்பா” என்றாள். நானும் அப்போதைக்கு ஆம் எனத் தலையசைத்து வைத்தேன்.

பெரும் திருப்பங்கள் இல்லாமல் மெல்ல நகரும் திரைக்கதைதான் வெண்பாவுக்கான பிரச்சனை. “ஏன் பா அமரன் எப்படி இருந்துச்சு. இதெல்லாம் ஒரு படமுன்னு.” சலித்துக்கொண்டாள். அவளுக்கு விடுதலை (2) பிடித்திருக்கக்கூடும். ஆனால் குழந்தைகளை அழைத்துச் செ்ல்ல இயலாது என்கிற அவசியமற்ற தடையால் நானும் என் மாமனாரும் போய்வந்தோம்.
“கூட்டிப் போயிருந்தாலும் குழந்தைக்கு எப்படிங்க விடுதலை புரியும்” என்றா கேட்கிறீர்கள். அப்படித்தான் நானும் ஜிகர்தண்டா டபில் எக்ஸ் பார்த்துவிட்டு யோசித்தேன். அவளுக்கு அந்தப் படத்தில் எல்லாமே புரிந்தது. சொல்லப்பட்ட அரசியல் உட்பட.
சரி கொட்டுக்காளிக்கு வருவோம். “ஒரு பாட்டி ஒரு அக்காவுக்கு தலையில எண்ணெய் தேச்சுவிடுறாங்க. பிரிச்சு தேய்க்காம அப்படியே தேய்க்கிறாங்க.” காட்சி வர்ணனையோடு தன் கருத்துகளையும் இணைத்து இணைத்து சொல்லிக்கொண்டே வந்தாள் மகள். படத்தில் எல்லாமே எனக்கும் பிடித்திருந்தது. அதிலும் பைக் ஓட்டிச் செல்லும் இருவரின் உரையாடல்.
பார்வையற்றவர்களுக்குப் படத்தின் பின்னணி இசைதான் பெரும்பாலும் நல்ல கதை சொல்லியாக இருக்கும். இந்தப் படத்தில் அது இல்லை என்றாலும், பின்னணியில் ஒலிக்கும் சூழலுக்கான சத்தங்களே மிகத் துல்லியக் கலவைகளாக இருந்தன என்பது கூடுதல் சிறப்பு. அதற்கும் ஒரு சான்று சொல்கிறேனே.
ஆட்டோ ஒன்றின் தொடர் பயணத்தை அப்படியே காட்சிப்படுத்திக்கொண்டிருந்த மகளை ஒரு காட்சியில் நான் முந்தினேன். “இப்போ ஆட்டோ ஒரு ஊருக்குள்ள வந்திருச்சுதானே? அங்க மைக்செட்டில பாட்டு ஓடுது. சடங்கு விசேஷம் அப்படித்தானே?” என்றேன். அவளும் ஆமோதித்தாள். திரையில் ‘மானூத்து மந்தையில’ பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. “ஏங்க இதெல்லாம் ஒரு கண்டுபிடிப்பா?” என்று கேட்பீர்கள்.
ஆம்! விசேஷம் என்றால் பாட்டு ஒலிக்கும்தான். ஆனால், அந்தப் பாடலை தூரத்தில் இருந்து கேட்டால் எப்படி ஒலிக்கும்? அதிலும் ஒரு ஆட்டோவில் பயணம் செய்துகொண்டு கேட்டால், பாடலை நெருங்குகையில் தெளிவாகவும், அதைக் கடந்து செல்கையில் கொஞ்சம் இழுவையாக ஒலிக்கும் என்பதையெல்லாம் பயணத்தில் எத்தனை பார்வையற்றவர்கள் அவதானித்திருக்கிறோம் எனத் தெரியவில்லை. கிட்டத்தட்ட இதையெல்லாம்கூட மிக நுட்பமாகக் கவனித்து ஒலிக்கோர்ப்பு செய்திருந்தார்கள். அதனால்தான் என்னாலும்கூட துல்லியமாக அந்தக் காட்சியைக் கணிக்க முடிந்தது. ஒலிப்பதிவாளர்கள் சுரேன், அழகிய கூத்தன் மற்றும் ராகவ் ரமேஷ் மூவரோடும் ஒரு மானசீகக் கைகுலுக்கல்.
“என்னப்பா இந்தப் படத்துல அப்பப்போ யாராவது ஒருத்தர் ரெஸ்ட் ரூம் போய்க்கிட்டே இருக்காங்க” என்று கேட்ட மகளுக்கு அப்போதைக்கு ஒரு புன்சிரிப்பை மட்டும் பதிலாகத் தந்து படத்தோடு ஒன்றினேன். அது நம் நாட்டிலிருக்கிற உன் போன்ற பெண் பிள்ளைகளின் சுதந்திரத்தோடு தொடர்புடைய காட்சி என்பதைத் தாமதமாகத்தான் அவளுக்கு விளக்கினேன். என் விளக்கத்தை மட்டுமல்ல, கொட்டுக்காளி படத்தையும் ஒரு விதையாக அவளுக்குள் விதைத்திருக்கிறேன் என்பதே எனக்கான சமாதானம்.
ஒன்றரை மணிநேரத்தில் கொட்டுக்காளி முடிந்தது. “அமரன் கதை பிடிக்கலைங்கிற, கொட்டுக்காளி சூப்பருங்கிற, என்னப்பா உன் ரசனை” என்ற மகளின் குரலையும் தாண்டி என் மனதுக்குள் சில சிந்தனைகள் ஓடியபடியே இருந்தன.
விடுதலை, கொட்டுக்காளி போன்றவை கலையின் வழியே சமூகத்தில் சமத்துவத்தை விதைக்கிற மகத்தான படைப்புகள். ஆனால், அத்தகைய படைப்புகளை பார்வையற்றவர்களும் துய்ப்பதுபற்றி ஏன் திரைப்பட ஆக்குநர்கள் சிந்திப்பதில்லை. திரைப்படம் காட்சி ஊடகம்தான். ஆனால், அவை காணப்படுவதால் அல்ல, மனதால் புரிந்துகொள்ளப்படுவதாலேயே வெற்றி பெறுகின்றன. எங்களுக்கும் மனம் இருக்கிறது, ரசனை இருக்கிறது. எல்லாம் இருந்தும், நாங்கள் மட்டும் ஏன் ஒதுக்கப்பட வேண்டும்?
பொழுதுபோக்கு உட்பட அனைத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்குச் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 ஆணையிட்டும்கூட, ஓடிடி தளங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமென சில திரைப்படங்களைத் தவிர, இன்றளவும் பல திரைப்படங்கள் குரல்வழிக் காட்சி விவரிப்பு audio description) இல்லாமலேயே வெளிவருகின்றன ஏன்? கொஞ்சமே கொஞ்சம் மெனக்கெடலில், குறைந்த செலவில் இந்த வசதியைத் திரைப்படங்களில் செய்துவிடலாம். இருந்தும் ஏன் இதுபற்றி எவருமே யோசிப்பதில்லை?
இதுபோன்ற முயற்சிகளை முதல்கட்டமாக நூறு விழுக்காடு என்ற இலக்கோடு ஓடிடி தளங்களில் தொடங்க வேண்டும். ஓடிடி தளங்களுக்கு வழங்கப்படும் எந்த மொழித் திரைப்படம் ஆனாலும், திரைப்படங்களில் நிச்சயம் அந்தந்த மொழியில் குரல்வழிக் காட்சி விவரணைகள் இருப்பதை ஆளும் அரசுகள் கட்டாயமாக்க வேண்டும். தணிக்கை சான்று நடவடிக்கை போலவே இவற்றையும் தகுதியுடைய பார்வையற்றவர்களைக்கொண்டு ஆய்வுக்கு உட்படுத்தி, உரிய பொருத்தப்பாட்டோடு திரைப்படங்கள் வெளியிடப்படுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.

இதுதான் கட்டுரையின் கடைசி ஸ்லைடு. ஆனால், இறுதிக் காட்சியில் தீப்தியும், அம்பிகாவும், வெண்பாவும் ஒற்றைப் புள்ளியில் கைகோர்த்து நிற்கிறார்கள். அந்தப் புள்ளியில் இணைந்து நிற்கும்படி , திரு. வெற்றிமாறன், திரு. வினோத்ராஜ் போன்ற சமத்துவத்தை எல்லா நிலைகளிலும் விரும்பிநிற்கிற கலைஞர்கள், படைப்பாளர்கள் மற்றும் தயாரிப்பாளர் என ஒவ்வொருவரையும் அழைக்கிறோம்.
சமத்துவம் என்பது சகலத்திலும் வேண்டும் என்பதே சரியான விடுதலை.
“பார்ட் இரண்டில் சந்திப்போம்.”
“என்னது பார்ட் இரண்டா?”
அட! நாம் வேண்டுகிற முன்னெடுப்புகள் நிகழ்ந்தால், வரவேற்றுப் பாராட்டி எழுதுவோம் இல்லையா? அதுதான் பார்ட் 2.
***ப. சரவணமணிகண்டன்
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.

One reply on “சிந்தனை: சகலத்திலும் வேண்டும் சமத்துவம்”
புதிய கோணத்தில் உங்களுடைய சிந்தனை உள்ளது. உங்களுடைய சிந்தனை வெல்லட்டும் மேலும் சிறக்க வாழ்த்துகள்
LikeLike