Categories
books Uncategorized

கூண்டு மட்டுமல்ல, கூடும் வேண்டும்! பகுதி (3)

பார்வையற்றோரின் கஷ்டங்களை எழுதுகிறேன் என்ற பேர்வழித் தங்கள் இஷ்டத்துக்கு இட்டுக்கட்டியிருக்கும் எழுத்து மேதைப் பட்டியலில் சுஜாத்தாவும் வைரமுத்துவும் சுலபமாகச் சேர்ந்துகொள்கிறார்கள்.

நூல் அறிமுகம்: கூண்டில் ஏற்ற முடியாத குற்றவாளிகள்: ஆசிரியர் திரு. முருகேசன் அவர்கள், இணைப்பேராசிரியர், அரசு கலைக்கல்லூரி ஆத்தூர்.

தொடர்புக்கு: 9962445442

பாரதி புத்தகாலயம்,

பக்கங்கள் 240

விலை 240.

பார்வையற்றோர் சாப்பிட்ட தேனீருக்கு யாரோ பணம் கொடுப்பது, தானாக முன்வந்து பொருள் கொடுத்து உதவுவது போன்றவை உதவாத உதவிகள் என வகைப்படுத்துகிறார் ஆசிரியர். பார்வையற்றோரின் உண்மையான தேவைகள் பல. அவற்றைப் பொருட்படுத்தாமல் அவை குறித்து உரியவர்களிடம் கலந்தாலோசிக்காமல் அவர்களுக்கான பயன்பாட்டுக் கருவிகளை வடிவமைப்பது, பார்வையற்றவர்கள் தொடர்பான பொருண்மைகளில் ஒருங்கிணைக்கப்படும் கூட்டங்கள், பயிலரங்குகளில் தொடர்பே இல்லாத பார்வையுள்ளவர்கள் முதன்மைப் பங்கேற்பாளர்களாக இருப்பது போன்ற அபத்தமான எதார்த்தங்களை இனிய தமிழில் எடுத்துரைக்கிறார்.

முனைப்பான செயல்துடிப்பு கொண்ட பார்வையற்றவர்களின் முழுப் பங்கேற்பு வாய்ப்பு மறுக்கப்படுவதைப் பல்வேறு சான்றுகளுடன் எடுத்துரைக்கும் ஆசிரியர், கவனக்குறைவுக்கும் இயலாமைக்கும் வேறுபாடு உண்டு என்பதையே இந்தச் சமூகம் ஏற்க மறுக்கிறது என்கிறார். தனது இந்தக் கருத்தை வலியுறுத்தும் வண்ணம், சமையலுக்காக உப்பிடுதலில் ஒரு பார்வையற்ற பெண்ணுக்கும் பார்வையுள்ள பெண்ணுக்கும் இடையே காட்டப்படும் பாகுபாட்டைச் சான்றாக எடுத்தாண்டிருப்பது சிறப்பு.

பல நிறுவனங்களில் பார்வையற்றவர்கள் உயர்பதவிகளில் அமர்த்தப்படுவதோடு, அவர்களுக்கான நிறை ஊதியமும் அளிக்கப்படுகிறது. ஆனாலும், அவர்களின் முனைப்பான செயலூக்கம் அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதை வங்கிப் பணியாளர் ஒருவரின் பணியனுபவத்தைக்கொண்டு விளக்கியிருக்கிறார். பள்ளிகள் அல்லாத பிற அலுவலகங்களில் எத்தனை எத்தனை ரகமான அலுவலர்கள், அனுபவங்கள் என விக்கித்து நிற்கச் செய்கிறது அந்த வங்கி ஊழியரின் அனுபவங்கள். அவற்றைச் சீர்மை குன்றாமல் தன் மொழியில் நெறிப்படுத்தித் தந்திருக்கும் ஆசிரியருக்கு பாராட்டுகள்.

ஒருவரின் சினத்துக்கு முதன்மைக் காரணமாக அமைவது அவர் எதிர்கொள்ளும் புறக்கணி்ப்பு. அத்தகைய மிக எளிய புறக்கணிப்புகளைப் பார்வையற்றோர் நொடிக்கு நொடி எதிர்கொள்கிறோம். ஆகவேதான் நம்மிடம் தனியாத சினமும், தாருமாறான சீற்றமும் தலைதூக்கியபடியே இருக்கின்றன. ஆனாலும் பல நேரங்களில் நாம் சினத்தை வெளிக்காட்டாமல், உள்ளேயே அடக்கிக்கொள்கிறோம் என்கிறார் ஆசிரியர். அதற்கு அவர் எடுத்தாளும் உதாரணங்களைத் தங்கள் வாழ்வில் அன்றாடம் எதிர்கொள்ளாத பார்வையற்றவர்களே இருக்க இயலாது.

கடைக்கு ஆளோடு போனால், “அவர அங்கேயே நிறுத்திட்டு வாங்க.” குடும்பத்தோடு வெளியே போனால், “இவர ஏன் இழுத்தாந்தீங்க.” அலுவலகம் சென்றால், “அவர அங்கேயே விட்டுட்டு நீங்க வாங்க.” சீற்றம் கொள்ளாமல் எப்படியிருப்பது?

பொங்கி எழும் உணர்வுகளும் போராட்ட வழிமுறைகளும் என்ற தலைப்பின்கீழ் பார்வையற்றவர்கள் நடத்துகிற போராட்டங்கள் குறித்தும், அவற்றைத் திட்டமிடுதல் தொடங்கி, நிறைவேற்றுகைவரை மேற்கொள்ளப்படும் உத்திகள் குறித்தும் விரிவாகப் பேசுகிறார் ஆசிரியர். பார்வையற்ற இளைய தலைமுறை படிக்கவேண்டிய நூலின் முக்கியமான பகுதி இது எனக்கருதுகிறேன்.

போராட்டக் களங்களில் காவல்த்துறையினரின் நேர்மறை மற்றும் எதிர்மறை அணுகுமுறை குறித்துப் பேசும் ஆசிரியர், அவர்களின் லத்தி உடைந்தால் ஏன் அவர்களுக்குக் கோபம் வருகிறது என்பதற்குச் சொல்கிற காரணம் புதிய செய்தியாக இருக்கிறது. அத்தோடு, காவல்த்துறை உயர் அதிகாரி கிரிஸ்டோபர் நெல்சன் அவர்களுக்கு ஒரு பார்வையற்ற தோழர் கொடுத்த பதிலடி நம்மை சபாஷ் போடவைக்கிறது. செல்போன் இல்லாத காலத்திலேயே இவ்வளவு வீரியமான ஒருங்கிணைப்பைப் படிக்கையில் வியப்பே மேலிடுகிறது. அதேசமயம், அவசர ஊர்திக்குக்கூட வழிவிடாத போராட்ட உத்தியை ஏற்க இயலவில்லை. ஆசிரியர் அவர் போராடிய காலத்தில் காணப்பட்ட பொதுமக்கள் ஏற்பு இப்போது நம்முடைய போராட்ட வழிமுறைகளுக்கு இல்லை என்பதும் கள எதார்த்தம்.

மேலும், பார்வையற்றவர்கள் தங்கள் வாழ்வியல் சார்ந்த கோரிக்கைகளுக்காக மட்டும் போராடுவதில்லை. மாநிலத்தை, நாட்டை பாதிக்கும் பிற காரணங்கள், நிகழ்வுகள், அது தொடர்பாகப் பொதுச்சமூகத்திடம் எழும் அறச்சீற்றங்கள் ஆகியவற்றோடு தங்களையும் இணைத்துக்கொண்டு பல போராட்டங்களை முன்னெடுக்கிறோம் என்பதை, ஈழத்திற்கு ஆதரவான போராட்டங்கள் தொடங்கிப் பல போராட்டக்களங்களைச் சுட்டி சான்று பகர்கிறார்.

இந்த நூலில் சிந்தனையாளர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்வோரும், அறிஞர் பெருமக்கள் என அகிலம் அங்கீகரித்து வைத்திருக்கும் மேதகு ஆன்றோர் பலரும் தவறவிடாமல் படிக்க வேண்டிய கட்டுரை கூடுவிட்டுக் கூடு.

பல இலக்கியவாதிகளும் எழுத்தாளர்களும் பார்வையின்மை குறித்தும் பார்வையற்றோர் குறித்தும் எவ்வாறெல்லாம் அபத்தங்களைக் கதைகளாக்கிக் கட்டுரைகளாக்கி சமூகத்திடம் உலவ விட்டிருக்கிறார்கள் என்பதைத் தொட்டுக்க்ஆட்டவில்லை, மாறாகத் தோலுரித்திருக்கிறார் ஆசிரியர்.

பார்வையற்றோரின் கஷ்டங்களை எழுதுகிறேன் என்ற பேர்வழித் தங்கள் இஷ்டத்துக்கு இட்டுக்கட்டியிருக்கும் எழுத்து மேதைப் பட்டியலில் சுஜாத்தாவும் வைரமுத்துவும் சுலபமாகச் சேர்ந்துகொள்கிறார்கள்.

அதிலும் ஐயா வைரமுத்துவின் அந்தப் பிறவிப் பெருங்கடல் ஒப்பீடு.  வார்த்தைகளில் விளையாடுவதாக எண்ணி, வார்த்திருக்கும் வாக்கியத்தைப் படித்தால், அவர் நமது வாழ்வியலைத் துளியும் அறியாதவர் என்ற உண்மை புலனாகிறது. அதேசமயம், சாலையைக் கடத்திவிடுதல் எல்லாம் வைரமுத்துவின் கதையில் செய்தியாகிறது என வியக்கிறார் ஆசிரியர். சமகாலத்தில் பார்வையற்ற ஒருவரை சாலை கடத்திவிட்ட கேரளப் பெண் காணொளியெல்லாம் வைரல் ஆனதும், அதனைப் பாராட்டும் முகமாக, அந்தப் பெண் பணியாற்றிய நிறுவனம் அவருக்குப் பரிசலித்ததையும் நினைவுகூர்கிறேன்.

     துளிப் புரிதலும் இல்லாமல், எது ஒன்று பற்றியும் அள்ளித் தெளிக்கும் அறிஞர் பெருமக்களுக்கு ஆசிரியர் தன் கட்டுரையின் முத்தாய்ப்பாய் ஒரு முக்கியக் குறிப்பைத் தருகிறார்.

“எதார்த்த வாழ்க்கையை மட்டும் கொண்டு இலக்கியம் படைக்க முடியாது என்பது எந்த அளவிற்கு  உண்மையோ, அதைவிட பல மடங்கு பெரிய உண்மை வாழ்க்கையின் மறுதலிப்புகளை மட்டும் கொண்டு எதார்த்தத்தைப் புறந்தள்ளிய கற்பனையால்  இலக்கியம் படைக்க முடியாது என்பதாகும்.”

அறிஞர் பெருமக்களுக்கு இதில் மறுப்பேதும் இராது.

நூலின் இறுதியாக அமையும் ‘நூலிழை மாற்றங்கள்’ என்ற கட்டுரை அதன் அமைவிடத்துக்குப் பொருத்தமானது எனலாம். முதல் தன்னார்வ வாசிப்பாளர் அண்ணம் நாராயணன் தொடங்கி, குரல்க்கொடை வழங்கிய பெருந்தகையோர் மற்றும் அவர்சார் அமைப்புகளுக்கு நன்றி பகரும் கட்டுரையாக அமைந்ததில் சிறப்பு. வாசிப்பாளர்களுக்குத்தான் என்றில்லை, சாலை கடத்திவிடுகையில் தங்களுக்காக உயிர் நீத்தவர்களையும் நெகிழ்ச்சியோடு நினைவுகூர்கிறார்.

தன்னோடு பொதுச் செயல்பாடுகளில் இணைந்து பங்்கேற்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினரைச் சுட்டும் இதே கட்டுரையில், கல்லூரிக் கலையரங்கம் தொடர்பாக நிகழ்ந்த ஒரு அரசியல்வாதியோடான சந்திப்பும் இடம்பெற்றிருக்கிறது. ஒன்றுக்கொன்று முரண்கொண்ட இந்த இரண்டும் படிக்கச் சுவைக்கின்றன.

நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் பல சமயங்களில் ஆளும் அரசுகளுக்கு ஊதுகுழலாய் மாறிவிடுவதே இன்றைய எதார்த்தம் என்பதைச் சுட்டுவதோடு நில்லாமல், அதே நீதிமன்றங்கள் பார்வையற்றோர் தொடர்பாக வெளியிடும் பல்வேறு தீர்ப்புகள் பல ஆக்கபூர்வமான மாற்றங்களுக்கு அடிகோலியிருப்பதையும் நன்றியோடு நினைவுகூர்கிறார் ஆசிரியர்.

முத்தாய்ப்பாக, இதுவரை எவரும் பேசாத அல்லது பேசத் தயங்கும் ஒரு விடயத்தை விரிவாகப் பேசியிருக்கிறார்  ஆசிரியர். பார்வையற்றோரும் பிற மாற்றுத்திறன் கொண்டோரும் இணைந்து செயலாற்றுவதில் இழையோடுகிற இயல்பான சிக்கல்களை ஒவ்வொன்றாக வரிசைப்படுத்தியதன் உள்விழைவு, உரியவர்கள் பரிசீலிக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.

இதுவரை நூலின் சிறப்பம்சங்கள் என எதுவெல்லாம் என் மனக்கண்ணில் அகப்பட்டதோ அத்தனையையும் சுட்டிவிட்டேன். பல இடங்களில் எதைவிடுவது, எதனை எடுப்பது என்பதிலும் தடுமாறியிருக்கிறேன். ஆங்காங்கே நூலின் ஆசிரியரோடு முரண்பட்டிருக்கிறேன். என்றாலும் இந்த நூலின் வழியே நானும் ஆசிரியரும் ஓர் இனிய உரையாடலை நிகழ்த்தியிருக்கிறோம். தனது எழுத்தின் வழியே எனக்குள் பல புரிதல்களைக் கடத்தியிருக்கும் ஆசிரியருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஒட்டுமொத்த நூலையும் படித்து முடிக்கையில், பொதுச்சமூகத்தோடான இனிய உரையாடலைச் சாத்தியப்படுத்தி, அதன்வழியே அவர்களின் அணுகுமுறை மாற்றங்களைக் கோருவதற்கான அன்பார்ந்த அழைப்பிதழே இந்த நூல்  என்ற நெகிழ்வுப் புரிதல் ஏற்படுகிறது. அதேசமயம், இத்தகைய இனிய உரையாடலின் தொடக்கமாய் அமையும் நூலிற்கான தலைப்புதான் சங்கடம் தருவதாக இருக்கிறது. நூலைக் கையிலெடுக்கும் ஒரு பொதுஜனத்தின் மனதில் “எங்க ஏரியா உள்ள வாராத” என்றல்லவா நூலின் தலைப்பு தொனிக்கிறது. மலர்ச்சரம் உடுத்து மனங்களைத் தைக்கும் ஆயிரம் ஆயிரம் சொல்லம்புகள் சுருண்டு கிடக்கும் சொர்ணப்பேழை அன்றோ புத்தகங்கள். ஆகவே அதற்கொரு புதுப்பெயர் சூட்டலாமே!

பார்வையற்றவர்களும் பொதுச்சமூகத்தினரும் ஒருங்கிணையும் உரையாடல்க்களம்தான் இந்த நூல். ஆனால், நூல் முழுக்க பார்வையற்றவர்கள் தரப்பில் நின்று சமரசமே இன்றி வழக்காடிக்கொண்டே இருக்கிறார் ஆசிரியர். வாதம் முடிந்துவிட்டது, தீர்ப்பை பொதுஜனம் எழுதட்டும். அதற்கு முன்பாக உங்களிடம் ஒரு வேண்டுகோள்.

வாதாடியது போதும், வழிகாட்ட வாருங்கள். அங்கியைக் கழற்றிவிட்டு, அனுபவம் நிறைந்த பார்வையற்ற ஆசிரியராக இருந்து, சக பார்வையற்றவர்களுக்கு வழிகாட்டும் நோக்கில் தங்களிடமிருந்து இன்னொரு நூல் வெளிவர வேண்டும் என எதிர்பார்க்கிறேன். ஏனெனில், பார்வையற்றவர்களும் தங்களைத் தாங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளும் ஏராளமான அம்சங்கள் இருக்கின்றன என்பது தாங்கள் அறியாததா?

கூண்டு கட்டிவிட்டீர்கள், கூடு அமைப்பது எப்போது?

நிறைந்தது.

***ப. சரவணமணிகண்டன்

தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.