Categories
books Uncategorized

கூண்டு மட்டுமல்ல, கூடும் வேண்டும்! பகுதி (2)

மனிதத் தன்மையற்ற இயந்திரங்கள் உலவும் இடமாக அந்த ஆணையரகத்தைச் சித்தரிக்கும் அவர், “இயந்திரங்கள்கூட” என ஒரு சுவையான முரண் தொடரை எழுதிச் செல்கிறார். அதை உரியவர்கள் படித்தாலும் உள்ளுக்குள் சிரிப்பு எழுவதையும் தங்களைத்தாங்களே தன்னிச்சையாகக் கிள்ளிப் பார்த்துக்கொள்வதையும் அவர்களால் தவிர்க்கவே இயலாது.

நூல் அறிமுகம்: கூண்டில் ஏற்ற முடியாத குற்றவாளிகள்: ஆசிரியர் திரு. முருகேசன் அவர்கள், இணைப்பேராசிரியர், அரசு கலைக்கல்லூரி ஆத்தூர்.

தொடர்புக்கு: 9962445442

பாரதி புத்தகாலயம்,

பக்கங்கள் 240

விலை 240.

பார்வையற்றோரின் பயணங்களில் அவர்கள் அதிகம் விரும்புவது தொடர்வண்டிப் பயணங்கள்தான். ஆனால் அவற்றிலும் அதிகம் விவாதிக்கப்படாத பல உள்ளார்ந்த சிக்கல்களைப் பார்வையற்றவர்கள் எதிர்கொள்வது குறித்தும் இந்த நூலில் விரித்துரைத்திருக்கிறார் ஆசிரியர்.

தனியே செல்கையில், “கூட யாரையாச்சும் கூட்டிட்டு வரலாமே” என்கிற பொதுஜனத்தின் கேள்வியால் பார்வையற்றோரிடம் ஏற்படும் நம்பிக்கையிழப்பைச் சுட்டும் ஆசிரியர், பேருந்து நிறுத்தத்தில் தனக்கான பேருந்தின் எண் கேட்டு ஏறுவதற்குள் பார்வையற்றோர் அடையும் மனப்பதட்டங்களையும், அவற்றை அதிகரிப்பதாக அமையும் பொதுஜனத்தின் சில நடவடிக்கைகள் குறித்தும் விளக்கியிருப்பது சிறப்பு.

காப்பீடு என்ற பெயரில், கணிசமான தொகை வசூலிக்கும் பல காப்பீட்டு நிறுவனங்கள் பார்வையற்றோருக்கு விபத்துக் காப்பீடு வழங்குவதில்லை என்கிற, இன்றைய நிலையில் அதிகம் பேச வேண்டிய ஒரு பொருண்மையைச் சுட்டியிருப்பார் ஆசிரியர். கூடவே, பயணத்தில் வழிப்பறிக் கொள்ளையர்களால் ஏற்படும் அசௌகரியங்கள் பற்றியும் குறிப்பிட்டிருப்பதைப் படித்தபோது, “இந்த ஆடு அறுவா, மாலை மேளம்” என உள்ளுக்குள் வடிவேல் குரல் ஒலிப்பதை என்னால் ஒன்றுமே செய்ய இயலவில்லை.

பார்வையற்றவர்கள் பணிவாய்ப்பு பெறத் தொடங்கிய முந்தைய காலம் தொடங்கி, இன்றுவரை ஆசிரியர்கலாகத்தான் அதிகம் பணியாற்றுகிறோம். அத்தகைய ஆசிரியர்ப் பணியிலேயே நாம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்பவை எத்தனை காலம் மாறினாலும் அதன் இயல்பு மாறாமல் எப்போதும் தொடர்பவை என்பது, ‘ஆசிரியர்ப் பணியும், ஆறறிவின் அணுகுமுறையிம்’ என்ற அத்தியாயத்தைப் படித்தால் நன்கு விளங்கும்.

பத்தாம் வகுப்பு நடத்த அனுமதிக்கமாட்டார்கள். மாணவர்கள் மற்றும் பள்ளி வளர்ச்சி நடவடிக்கைகளில் பார்வையற்ற ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்க மாட்டார்கள். தானாக முன்வந்து ஏதேனும் செயல்பட்டால்கூட அதற்கு ஆதரவு நல்க மாட்டார்கள் என ஒருபக்கம் ஆசிரியர் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கிக்கொண்டே செல்ல, இன்னொரு பக்கம் “அதேதான், அதேதான்” என்ற சொல் மட்டும் உள்ளுக்குள் ஒலித்தபடி இருக்கப் படித்துக்கொண்டிருந்தேன் நான்.

பொதுப்பள்ளிகளை விடுங்கள், நான் பணியாற்றுகிற சிறப்புப் பள்ளிகளிலேயே இதுதான் நிலை. ஆசிரியர் பயன்படுத்தியிருக்கும் காட்சியதிகாரம் என்ற கலைச்சொல் தன் முழு உரு தரித்துக் கோர தாண்டவம் ஆடுவதெல்லாம் இங்கே அன்றாடம்.

சக ஆசிரியர்கள் தவறு செய்தால் அதை மறைக்கப் பார்க்கும் ஆசிரியர் சமூகம், பார்வையற்ற ஆசிரியர் செய்யாத தவறையும் அவர்மீது சுமத்தப் பார்க்கும் என்ற ஆசிரியரின் கருத்தை நான் முற்றும் ஆமோதிக்கிறேன். கூடுதலாக இங்கே சிறப்புப்பள்ளிகளில் அந்தப் பணிகளைக் கண கச்சிதமாக சக பார்வையற்ற ஆசிரியரே செய்து முடிப்பார் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

நம்முடைய வகுப்பைப் பிற ஆசிரியர்கள் கட்டுப்படுத்த முயல்வதென்பது நம் உளவியல்மீது மிகச் சாதாரணமாகத் தொடுக்கப்படும் போர் என்றே கருதுகிறேன். ஆசிரியரும் அதைச் சுட்டியிருப்பது ஆறுதலைத் தருகிறது.

மாணவர்களுக்கு எழுத்துகளைக் கற்பிப்பதில் ஒரு பார்வையற்ற ஆசிரியர் மேற்கொள்ளும் பல்வேறு உத்திகள் குறித்த ஆசிரியரின் விவரிப்பை, புதிதாக ஆசிரியர்ப் பணியேற்கும் நம் பார்வையற்றவர்கள் படிக்க வேண்டும். படித்தால் மனதில் உற்சாகம் பிறக்கும். அந்த விளக்கத்தின் பிற்பகுதியில், நம்மால் எழுத்துகளைக் கற்பிக்க இயலாது என்று பொத்தாம் பொதுவாகச் சாடுகிற பொதுச்சமூகத்திடம் போகிற போக்கில் அல்ல, பொது வெளியில் உலவும் தரவினைச் சுட்டி ஆசிரியர் ஒரு கேள்வி எழுப்பியிருப்பார். பொட்டில் அறைகிற கேள்வி மட்டுமல்ல அது. நம்மைக் குற்ற உணர்வினிலிருந்தும் விடுவிக்கிற வீரியமான வில்லம்பு.

அதிகாரத்தின் அதிகாரம் என்ற தலைப்பில், நமக்காக முழு வீச்சுடன் செயல்பட வேண்டிய மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, எப்படி முட்டுக்கட்டை போடும் துறையாக இருக்கிறது என்பதை ஆவேசத்துடன் விளக்கியிருக்கிறார் ஆசிரியர். அதிகாரம் என்ற பெயரில், இந்த உயர் அலுவலர்கள் பார்வையற்றோரிடம் நடந்துகொள்ளும் அணுகுமுறை குறித்து ஆசிரியர் அடுக்கியிருக்கும் சீற்றமான செய்திகளுக்குச்  சீழ்க்கையடித்தபடியே இருக்கிறது மனம்.

மனிதத் தன்மையற்ற இயந்திரங்கள் உலவும் இடமாக அந்த ஆணையரகத்தைச் சித்தரிக்கும் அவர், “இயந்திரங்கள்கூட” என ஒரு சுவையான முரண் தொடரை எழுதிச் செல்கிறார். அதை உரியவர்கள் படித்தாலும் உள்ளுக்குள் சிரிப்பு எழுவதையும் தங்களைத்தாங்களே தன்னிச்சையாகக் கிள்ளிப் பார்த்துக்கொள்வதையும் அவர்களால் தவிர்க்கவே இயலாது.

தன்னோடு சம ஊதியம், சக ஊழியர் எனப் பணியாற்றுபவர்கள்கூட அதிகாரம் வந்துவிட்டால், அழைத்துச் செல்வதற்கும் இழுத்துச் செல்வதற்குமான வேறுபாடுகள் அறியாதவர்கள்ஆக மாறிவிடுகிறார்கள் என ஆசிரியர் எடுத்துக்காட்டியிருப்பது இன்றைய எதார்த்தத்தின் ஒரு துளி மட்டுமே. அதனால்தான், தன்னுடைய அதிகாரக் கரங்களைப் பார்வையற்றவர்மீது படரவிடத் துடிக்கும் துறை உயர் அலுவலர்களுக்குத் தன் தொனியை உயர்த்தி இப்படிச் சொல்கிறார் ஆசிரியர்.

“ஒருவன் எத்தகைய உடல் குறைபாட்டுடன் இருந்தாலும் அவன் என்ன வேலை செய்ய முடியும்? என்ன வேலை செய்ய முடியாது? என்பதை அவன்தான் முடிவு செய்ய வேண்டும். விமானம் ஓட்டும் பணிக்கு நானே விண்ணப்பிக்க மாட்டேன். அதை அரசு சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. எங்களால் எந்த வேலை செய்ய முடியும் என்பதை நாங்கள் முடிவு செய்கிறோம். நாங்கள் ஏற்கும் வேலையைச் சரியாகச் செய்கிறோமா என்பதை அரசு கண்காணிக்கலாம்.”

இப்படியெல்லாம் சொல்லி, பணி அடையாளம் கண்டறியும் குழுவுக்கு அவர்களின் பணிச்சுமை குறைக்க முயலும் ஆசிரியரின் நல்லெண்ணத்தை அவர்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும்.

நூலகத்தில் உறுப்பினராகக்கூட தன்னைத் தகுதியற்றவன் என்று நினைத்த அதிகாரத்தின் முன்னே, ஆசிரியர் காட்டியிருக்கும் நிமிர்வு அபாரமானது என வியக்கவும், வணக்கம் சொல்வதில்கூட இத்தனை விதிமுறைகளைக் கடைபிடிக்கும் இவரிடமிருந்து கற்றுக்கொள்ளவும் நமக்கு ஏராளமான பாடங்கள் இருக்கின்றன.

எத்தனை படித்தாலும், எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், பார்வையற்றோரின் இருப்பு மறுப்பு என்பது தொடர்கதையாகவே இருப்பதைப் பல்வேறு சான்றுகளுடன் சுட்டுகிறார் ஆசிரியர். பெண் பார்க்கும் படலத்தில் ஒரு ஆங்கில ஆசிரியருக்கு நிகழ்ந்தது ஒரு சுவையான குட்டிக்கதை என்றாலும், அதன் உள்ளே பொதிந்திருக்கும் வேதனைக்கு கனம் அதிகம். கல்வியில் சிறந்து விளங்கும் தன் நண்பரை உலகியல் தொடர்பான விடயங்களில் கண்டுகொள்ளாமல், அவருடைய அறிவையே குடும்பம் மறுதளிக்கிறது. இது ஒருபுறம் என்றால், பார்வையற்றவர்களுக்கு பக்கத்தில் இருந்துகொண்டே பாலுறவுச் செயல்பாடுகளில் ஈடுபடும் பலர் அவர்களின் உயிர் இருப்பையே பொருட்படுத்துவதில்லை என ஆசிரியர் சொல்லாமல் சொல்கையில் உள்ளுக்குள் சுடுகிறது.

ஆனாலும், பார்வையற்ற ஒருவரின் இருப்பைப் பொருட்படுத்தாத சில சமூகவிரோதிகளுக்கு என்ன நேர்ந்தது என்பதைச் சொன்னபோது, சற்று ஆறுதலாகத்தான் இருந்தது.

பார்வையற்றோர் குறித்தும், பார்வையின்மை குறித்தும் பொதுச்சமூகம் கொண்டிருக்கிற தப்பும் தவறுமான அபிப்பிராயங்களைப் பல்வேறு சான்றுகள் தந்து விளக்குகிறார் ஆசிரியர். ஒவ்வொரு சான்றும் ஒரு சுவாரசியமான சிறுகதையைப் போல நம் உள்ளத்தைத் தைக்கிறது.

ஒரு பார்வையற்றவர் நோயாளி என்றாலும், அவருடைய உடல்நலம் குறித்து அருகிருப்பவரிடம் கேட்பது, ஒரு பார்வையற்றவர் தன் குழந்தையோடு கடைக்குச் சென்றால், “என்ன வேணும் பாப்பா?” என அந்தக் குழந்தையை நோக்கியே உரையாடுவது என எத்தனை எத்தனை புறக்கணிப்புகள்?

இவையெல்லாம் சராசரிப் பொதுச்சமூகத்தின் புரிதல் என்று அங்கலாய்த்துக்கொண்டிருக்கையில், பார்வையற்றவர்களுக்குக் கற்பிக்கும் சிறப்புப்பள்ளி ஆசிரியர்களுக்கே அத்தகைய பல முன்கணிப்புகளும் முன் முடிவுகளும் இருப்பதை சென்னை மாங்காடு பள்ளி நிகழ்வின் மூலம் விளக்கியிருக்கிறார் ஆசிரியர். களத்திலேயே இருப்பதாலோ என்னவோ, எனக்கு அந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை.

பொதுவாக ஒரு மனிதனின் தரம் அவனுடைய நிறைகளை மட்டுமே கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. அந்த நிறைகளின் மிகை மதிப்பால் அவனுடய குறைகள் மறைந்து போகின்றன. ஆனால் பார்வையற்றோராகிய எங்களுடைய வாழ்வில் இது நேர் மாறாக நடக்கிறது. அது என்ன எப்படி என்பதை அவர் விளக்க நீங்கள் படிப்பதே சுவாரசியமாக இருக்கும்.

மேலும்.

***ப. சரவணமணிகண்டன்


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.