நூல் அறிமுகம்: கூண்டில் ஏற்ற முடியாத குற்றவாளிகள்: ஆசிரியர் திரு. முருகேசன் அவர்கள், இணைப்பேராசிரியர், அரசு கலைக்கல்லூரி ஆத்தூர்.
தொடர்புக்கு: 9962445442
பாரதி புத்தகாலயம்,
பக்கங்கள் 240
விலை 240.

கூண்டில் ஏற்ற முடியாத குற்றவாளிகள் என்ற நூலின் வழியே பொதுச்சமூகத்தோடு உரையாட விழைந்திருக்கும் பேராசிரியர் திரு. முருகேசன் அவர்களுக்குப் பார்வையற்ற சமூகம் கடன்பட்டிருக்கிறது. தன்னுடையதுதான் என்றில்ல்ஆமல், தன் நண்பர்கள், வேறு பல பார்வையற்றவர்களின் அனுபவங்களை நூல் முழுக்க எடுத்தாண்டிருக்கிறார். அவற்றுள் பல மனதைத் தைக்கும் அழகான குட்டிக் கதைகள்.
பொதுச்சமூகத்தோடு உரையாடுவதுதான் இந்த நூலின் நோக்கம். நிச்சயம் இந்த நூலைப் படித்து முடிக்கும் ஒரு பார்வையுள்ள நபர் பார்வையற்றோர் குறித்த தன் பல கண்ணோட்டங்களை மறுபரிசீலனை செய்துகொள்வார் என்பது திண்ணம்.
உரையாடலைத் தன் பிறந்த வீட்டிலிருந்து தொடங்கும் ஆசிரியர், இந்தியக் குடும்பங்களில் அதீத சமத்துவமின்மையை எதிர்கொள்ளும் பெண் குழந்தைகளைவிட நூறு மடங்கு பாகுபாட்டினைத் தங்கள் குழந்தைப் பருவத்தில் பார்வையற்றவர்கள் சந்திப்பதாகச் சொல்கிறார். ஒரு பார்வையற்ற குழந்தையின் பிறப்பினால் பெற்றோருக்குக் கிடைக்க வேண்டிய குழந்தைச் செல்வப் பெருமிதம் கிடைக்காமல் போவது உள்ளிட்ட பல காரணங்கள் இத்தகைய நிலைக்கு வழிகோளுவதாகத் தகுந்த சான்றுகளுடன் சுட்டும் ஆசிரியர், அதன் பாதிப்பை பார்வையற்றவர்கள் தங்கள் திருமணத்துக்குப் பிறகும் அனுபவிப்பதாகச் சொல்வது இன்றைக்கும் மாறாத உண்மையாக இருக்கிறது.
குழந்தைப் பருவத்தில் தங்களைச் சூழ்ந்துகொள்ளும் எதிர்நிலைச் சொற்களால் நம்பிக்கையிழக்கும் பார்வையற்றவர்களுக்குத் தாய்மடியாய் இருப்பது சிறப்புப்பள்ளிதான். ஆனால், போதிய விழிப்புணர்வு இன்மை காரணமாக, அங்கேயும் உரிய வயதில் பலர் சேர்வதில்லை என்கிறார். இப்போதெல்லாம் உரிய வயதிலேயே பெரும்பாலான பார்வையற்ற குழந்தைகள் பள்ளிகளில் சேர்ந்துவிடுகிறார்கள். ஆனால், அவர்கள் சிறப்புப்பள்ளிகளில் சேர்கிறார்களா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.
சிறுவயதிலிருந்தே விடுதியில் தங்கிப் படிப்பதால் குடும்ப நிகழ்ச்சிகள் குறித்தோ, ஏன் முக்கியமான உறவுகளின் இறப்பு குறித்தோ பார்வையற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதில்லை என்கிற ஆசிரியரின் ஆதங்கத்தில் பெருமளவு உண்மை இருக்கிறது. இவ்வாறு காலந்தோறும் குடும்பத்துக்கும் ஒரு பார்வையற்றவருக்குமிடையே ஏற்படும் ஒருவகை ஒட்டுதல் இன்மை காரணமாக, நியாயமாகத் தங்களுக்குச் சேரவேண்டிய சொத்துரிமைக்கே பார்வையற்றவர்கள் போராட வேண்டியிருக்கிறது. ஆனால், விடுதியில் இருந்துவிட்டோம் என்பதை மட்டும் ஒரு காரணமாகச் சொல்லித் தங்கள் பொறுப்பைப் பார்வையற்றவர்கள் என்றில்லை எவருமே தட்டிக்கழிக்க முடியாது. நாமும் பருவத்தேர்வு விடுமுறைகளில் வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் பெற்றோரிடம் அனைத்தையும் அக்கறையாக விசாரித்து, குடும்பம் சார் நடவடிக்கைகளில் நமக்கான இடத்தை உறுதிசெய்திட முயல வேண்டும். இந்த விடயத்தில் நம்மில் பெரும்பாலோர் பின்தங்கிவிடுகிறோம். விடுதியில் இருந்து வந்திருப்பதாலேயே ஓரிரு நாட்களுக்கேனும் நமக்கான கவனிப்புகளும் விசாரிப்புகளும் பலமாகவே இருக்கும். அத்தகைய நிகழ்வுகளில் நாமும் நம் சுயத்தை நம்மை அறியாமலேயே தொலைத்துவிடுகிறோம் என்று தோன்றுகிறது.
குடும்ப உறவுகள் மற்றும் சமூகத் தொடர்புகளைப் பேணுவதில் பார்வையற்றவர்களுக்கு இருக்கிற பல்வேறு தடைகளைச் சில பொருண்மைகளில் பகுத்துக்கொண்டு தொகுத்திருக்கிறார் ஆசிரியர். உறவினர்களின் வீட்டுக்குப் போவதில் இருக்கிற சிக்கல்கள் குறித்து அவர் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கும் காரணங்கள் நம்மையே நாம் கிள்ளிப் பார்த்துக்கொள்ளத் தூண்டுகிறது. எந்த உறவினர் வீட்டுக்குப் போகலாம் போகக்கூடாது என சிறுவயதிலேயே தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட நிபந்தனை எல்லாமே படிக்கப் படிக்கச் சுவைகூட்டுபவை.
அதுபோல, சமூகப் புழங்கு பரப்பான கல்வி நிலையங்கள், பணியிடங்களில் உரையாடலும் உறவாடலும் ஒரு பார்வையற்றவருக்கு எவ்வளவு இடர் நிறைந்ததாக இருக்கிறது என்பதைக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த தனக்கும், சமகாலத்தில் அதே கல்லூரியில் பணியாற்றிய தன்னைப் போன்ற ஒரு பார்வையற்ற பேராசிரியருக்கும் நடந்த நிகழ்வொன்றின் வழியே சுட்டுகையில் இதயம் கணக்கத்தான் செய்கிறது.
எதிர்பாலினரிடம் தொடுகை வழியே உரையாட இயலாத நிலைக்குத் தன் நண்பர் கன்னியப்பனுக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தைச் சான்று பகர்ந்திருக்கும் ஆசிரியர், இந்தப் பொருண்மையின்கீழ் கொஞ்சம் கூடுதலாக உரையாடி இருக்கலாம் எனப்படுகிறது.
பார்வையற்றவர்களுக்குச் செய்யப்படும் உதவிகளை ரகம் ரகமாய் பிரித்து, ஒவ்வொன்றுக்கும் பின்னே இருக்கிற சமூக பொது உளவியலைத் தன் எழுத்தின் வழியே சித்திரமாய்த் தீட்டியிருக்கிறார் ஆசிரியர். உடன்வருதலுக்கும் அழைத்துச் செல்வதற்குமான வேறுபாட்டைஅறியாத பார்வையுள்ள நண்பர்கள் நிச்சயம் இந்தப் பகுதியைப் படித்தால் புதிய தெளிவைப் பெறுவார்கள். கூடவே, பார்வையற்றவர்கள் தங்களுக்குள்ளாகவே உதவிகள் பெறுவதற்கு வைத்திருக்கிற சில நெறிமுறைகளை வரிசைப்படுத்தியிருக்கிறார். பேராசிரியரைப் போன்ற முற்போக்கு மனம் படைத்த, தனித்து இயங்குதலை தங்களின் இலக்காகக் கொண்டிருக்கிற பார்வையற்றவர்களுக்கு இதை் படிக்கையில் ஒருவகைப் பெருமிதம் ஏற்படும். அப்படியல்லாத பார்வையற்ற தோழர்களுக்கு இது பெரும் படிப்பினையாக, வழிகாட்டிப் புத்தகமாக இருக்கும்.
பார்வையற்றவர் உதவி கேட்கையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அதிகம் பேசப்பட்டவை. ஆனால், பார்வையற்றவர்களிடம் உதவிபெறுவதிலேயே பொதுச்சமூகத்துக்கு மிகப்பெரிய மனத்தடை இருப்பதைப் பட்டவர்த்தனமாகப் பேசியிருக்கிறார் ஆசிரியர். அதிலும் தன் துணைவரோடான தொடர்வண்டிப் பயணத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி வெகுஜன ஆழ்மன அழுக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாய் அமைந்துள்ளது சிறப்போ சிறப்பு. நூலில் இது அதிமுக்கியப் பகுதி என்பது எனது கருத்து.
ஒன்றல்ல, பல புத்தகங்கள் எழுதுமளவுக்குப் பார்வையற்றோரின் மன உறவுச் சவால்கள் காணப்படுகின்றன. ஆயினும், முக்கியப் பிரச்சனைகளைத் தொட்டுக்காட்டும் ஆசிரியர், மன உறவு தொடர்பாக இரண்டு பெண்களிடம் உரையாடல் நிகழ்த்தி, அதையும் இந்த நூலில் பதிவு செய்துள்ளார்.
அவர்களுள் ஒருவர் பார்வையற்ற நபரை மணந்துகொண்ட பார்வையுள்ள பெண். இன்னொருவர் பார்வையற்றவரையே மணந்திருக்கும் பார்வையற்ற பெண். முன்னவரின் பேச்சு எதார்த்தமானது. பின்னவருடையது மனதுக்கு நம்பிக்கையளிப்பது.
மனித நுகர்வு மனப்பான்மை காட்சிப்புலத்தையே அதிகம் சார்ந்திருக்கிறது என்ற ஆசிரியரின் கூற்றுக்குக் கட்டியம் கூறுவதாய் சரோரமேஷின் பேச்சு அமைந்தாலும், பரஸ்பர நம்பிக்கையும் மதிப்புமே திருமண வாழ்வில் அதி முக்கியமானது எனக்கூறி எல்லோருக்கும் பொதுவான உண்மைதான் இங்கேயும் செல்லுபடியாகும் என்பதைச் சொல்கிறார்.
மேலும், பார்வையற்றவர்களுக்குள்ளாக மணம் செய்துகொள்ளும் இணையர்களுக்கிடையே காணப்படும் பல்வேறு ஒத்திசைவுகளைப் பட்டியலிடுகிறார் ஆசிரியர். இந்தப் பட்டியலை வேறு எவரையும்விட, தனக்கு பார்வையுள்ள பெண்ணே மனைவியாக வரவேண்டும் என ஆயுளைக் கடத்திக்கொண்டிருக்கும் பார்வையற்ற தோழர்கள் படிப்பது அவர்கள் சிந்தனைக்குள் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக அமையும். கூடவே, பார்வையுள்ள பெண்களையேத் தேடித் திருமணம் செய்த பார்வையற்றவர்கள் எத்தகைய கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டார்கள் என்பதையும் படித்துவிட்டால் நிச்சயம் பித்து தெளிந்துவிடும் என்றே நினைக்கிறேன்.
“எங்களில் ஒரு சாரார், பார்வை உள்ளவரையே மணம்புரிய வேண்டும் என்று விரும்புகின்றனர். அவ்வாறு நினைப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இன்றைய காலகட்டத்தில் இது சரியான கூற்றாகத் தோன்றவில்லை.” நானும் ஆசிரியருக்கு அதையேதான் சொல்ல விரும்புகிறேன். இன்றைய காலத்தில் தங்களின் கூற்றும் சரியான ஒன்றாகத் தோன்றவில்லை. இன்றைய சூழலில், ஒரு முழுப் பார்வையற்றவரை மணந்துகொள்ள பெரும்பாலான இருபால் பார்வையற்றவர்களுமே பரஸ்பரம் விரும்புவதில்லை. ஒரு முழுப் பார்வையற்ற பெண்ணோ, ஆணோ தனக்குக் குறைந்தபட்சம் ஒரு குறைப்பார்வையுடையவராவது வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டுகிறார். ஆகவே, இன்றைய நிலையில் நம்மில் ஒரு சாரார் மட்டுமே தங்களைப் போன்ற பார்வையற்றவர்களையே மணம்புரிய விரும்புகிறார்கள்.
பார்வையற்றவர்களின் அன்றாடப் பயணங்களும் அயர்ச்சியூட்டும் அனுபவங்கள் என்ற தலைப்ப்இல், பொதுப் போக்குவரத்து தொடங்கி, பார்வையற்றோருக்கும் பொதுமக்களுக்குமிடையேயான தனிநபர் ஊடாட்டங்களை வரிசைப்படுத்தியிருப்பது சிறப்பு. அதிலும் நம்முடைய கால் பங்கு பயணக் கட்டணச் சீட்டைப் பெறுவதற்குள் பேருந்து நடத்துநர்களுடன் ஒரு உலகப் போராட்டமே நடத்த வேண்டியிருக்கிறது என்கிற கொந்தளிப்பில்லாத தமிழகப் பார்வையற்றவர்கள் இருக்க முடியாது. பிற பயணிகளை மரியாதை விகுதியில் விளிப்பதும், நாம் பேராசிரியரே ஆனாலும்கூட “எங்க போற” என ஒருமை விகுதி பேசுவது எனப் பல நடத்துநர்களின் திமிர்வாத நடவடிக்கைகளால் மனஉளைச்சலுக்கு ஆளான பார்வையற்றவர்களில்அடியேனும் அடக்கம்.
அப்படிப்பட்ட ஒரு நடத்துநருக்கு, தன் பெரம்பலூர் பேருந்து அனுபவத்தில் ஆசிரியர் கொடுத்ததெல்லாம் மரண அடி. நிகழ்வைப் படித்து சபாஷ் போட்டு முடிப்பதற்குள், நம்மிடம் வீர ஆவேசத்துடன் மல்லுக்கு நிற்கும் பல பேருந்து நடத்துநர்கள் குடிகாரர்களிடம் பம்மிப் பதுங்கும் காட்சியை ஆசிரியர் வர்ணித்திருப்பார். சிரித்துக்கொண்டே பூரிப்பில் படித்துமுடித்தேன்.
ஆனால், தமிழகப் போக்குவரத்துக் கழகத்தைப் பொருத்தவரை, நடத்துநர் நம்மிடம் காட்டும் எதிர்்மறை அணுகுமுறைக்கு முழுக்க முழுக்க அவர் மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. பணிமனையின் உயர் அலுவலர்கள் ஒரே பேருந்தில் மாற்றுத்திறனாளிகளை அதிகம் ஏற்றிவிட வேண்டாம் என பல நடத்துநர்களை எச்சரித்தே அனுப்புகிறார்கள்.
மேலும்…
***ப. சரொணமணிகண்டன்
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
