ஆக்கம்: U. சித்ரா
தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க:


இப்போதுதான் முக்கியமான கட்டத்திற்கு வந்திருக்கிறோம். 2004 ஆம் ஆண்டில் எங்கள் சர்ச்சில் தவக்கால தியானம் நடைபெற்றது. அருட்தந்தை சுரேஷ் சார்லஸ் வழிநடத்திய அந்த தியானத்தில் நானும் என் அப்பாவும் கலந்துகொண்டோம். தியானத்தின்போது யாருக்காவது ஏதாவது கவுன்சிலிங் தேவைப்பட்டால் தன்னைச் சந்திக்கும்படி சொன்னார் அருட்தந்தை. இவரைச் சந்தித்தால் எனக்கு ஒரு வழி கிடைக்கும் என என் உள்ளுணர்வு உறுதி தந்தது. உடனே நான் என் மனதிலிருந்ததை என் அப்பாவிடம் கூற, அவரும் அதற்கு இசைந்தார். இருவரும் அவரைச் சந்தித்தோம்.
அவரைப் பார்த்ததும் ஆன் செய்த ரேடியோவைப் போல என் பள்ளிப் படிப்பு தொடங்கி எல்ஐசியில் வேலை கிடைக்காத கதைவரை அனைத்தையும் மளமளவெனக் கொட்டினேன். எல்லாவற்றையும் கேட்டபிறகு, “உன்னால் ஏதாவது செய்ய முடியும் என நம்புகிறாயா?” என அவர் கேட்டார். நான் “கன்டிப்பாக எனக்குச் சரியான வழிகாட்டல் கிடைக்கும் பட்சத்தில் உறுதியாக செய்வேன்” எனக் கூறினேன். என் சோகக்கதையை சொன்னபோது என் அம்மாவின் பிடிவாதத்தைப் பற்றியும் கூறியிருந்ததால், என் அம்மாவிடம் பேசவேண்டுமென சொன்னார். மறுநாள் நான், என் அப்பா, என் அம்மா என மூவரும் அவரைச் சென்று சந்தித்தோம்.
“தைரியமாகவும் தன்னம்பிக்கையாகவும் இருக்கிறாள்தானே, அவளை மேற்கோண்டு படிக்க வைக்கலாமே!” எனச் சொன்னார். அப்படிச் சொன்னதுதான் தாமதம், “அவ நல்ல புத்திசாளி, திறமையானவ; இந்த கண் பிரச்சனையாலதான் வேலை கிடைக்காமப் போயிடுச்சு” எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் அம்மா. மீண்டும் அவர் என் அம்மாவிடம், “அவ சமாளிச்சுக்குவா, அதனால அவளப் படிக்க வைங்க” எனச் சொல்ல, என் அம்மா சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தார். அருட்தந்தை கோபமுற்று என் அம்மாவைக் கடுமையாகப் பேசிவிட்டார். சற்று வருத்தமாக இருந்தாலும், எனக்கு ஏதாவது ஒரு வழி கிடைக்குமே என அமைதியாக இருந்தேன்.
என் அம்மா அவர் பேசியதைக் கேட்டுக் கோபமுற்று அமைதியாகிவிட்டார். வீட்டுக்கு வந்தபிறகு என் அம்மாவிடம் பயந்து பயந்து மெதுமெதுவாகப் பேசத் தொடங்கினேன். “என்னம்மா ஃபாதர் சொன்னதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க? நான் படிக்கட்டுமா? எனத் தயங்கித் தயங்கிக் கேட்டேன். பாசத்தில் தோய்ந்திருந்த அவர், ஆதங்கத்தைக் கோபக் கணலாக வெளிப்படுத்தினார். “உனக்கு நான் மட்டும்தான் பொல்லாதவ, ஊர்ல இருக்கிறவங்க எல்லாம் நல்லவங்க; நீ என்ன வேணுமுனாலும் செய், நான் இனிமேல் உன் விஷயத்தில தலையிடமாட்டேன்” எனக் கூறி, வேண்டாவெறுப்பாக என் விருப்பத்திற்குச் சம்மதித்தார். அந்தக் கோபம் எனக்கு வருத்தத்தைத் தந்தாலும், நான் மேற்கொண்டு படிக்கக் கிடைத்த அவரின் அனுமதி மகிழ்ச்சியைத் தந்தது.
என் அப்பா ஃபாதரை தொலைபேசியில் அழைத்துப் பேசியபோது, ஓரிரு நாட்களில் சிலரிடம் பேசிவிட்டு அழைப்பதாகக் கூறினார் ஃபாதர். அவருடைய அழைப்பிற்காகக் காத்திருந்தேன். அவர் சொன்னபடியே அழைத்து என்னை சென்னை தேனாம்பேட்டையிலுள்ள சிறுமலர் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு உதவிபெறும் பள்ளிக்கு (LFC) அழைத்து வரச்சொன்னார். நாங்கள் அங்கே சென்றோம். அங்கு டாம்னிக்மேரி என்ற அருட்சகோதரியைச் சந்தித்தோம். அவர் என்னைப் பற்றிய எல்லா விவரங்களையும் கேட்டபின் எனக்கு நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்லி, என்னை தைரியப்படுத்தினார். “உனக்கு இப்போது மூன்று வாய்ப்புகள் உள்ளன; டெல்லியில் கவுல் சாரிடம் ஸ்டெனோகிராஃபி படிக்கலாம்; குஜராத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட ஃபிஸியோதரபி படிக்கலாம் அல்லது என்ஐவிஃஎச்சில் புதிதாகத் தொடங்கப்போகும் கால் செண்டர் ட்ரைனிங்கில் சேர்ந்து படிக்கலாம்” எனவும் “அதற்கெல்லாம் முன்னதாக ணீ பிரெயிலும் மொபிலிட்டியும் கற்றுக்கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தினார். “யோசித்து முடிவெடு, முதலில் மொபிலிட்டி பயிற்சி எடுக்கத் தொடங்கிவிடலாம்” எனச் சொன்னார்.
முதல்நாள் மொபிலிட்டி வகுப்புக்குச் சென்றேன். என்னை மகிழ்ச்சியாய் வரவேற்ற டாம்னிக்மேரி ஸிஸ்டர், ப்லேஸ்மண்ட் ஆஃபீசர் மைதிலி மேடத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். சிறிதுநேரம் என்னுடன் உரையாடியபிறகு பயிற்சியைத் தொடங்கலாம் எனக் கூறி, சத்யஜோதியைவிட்டு வெளியே அழைத்துச் சென்றார். என் கைகளை சகஜமாகக் கோர்த்துக்கொண்டு lfc வளாகம் முழுவதும் சுற்றி வந்தபடியே எனக்கு ஒவ்வொன்றாக விவரித்து வந்தார். அக்காக்கள் தறி போடுற இடம், விடுதி, வகுப்பறைகள், ஆசிரியர் விடுதி, சத்யஜோதி என ஒவ்வொரு இடத்தையும் கடந்து செல்லும்போது சொல்லிக்கொண்டே வந்தார். பின்பு மீன்டும் சத்யஜோதியின் வாசலுக்கே அழைத்துவந்தார். அதாவது தொடங்கிய இடத்திற்கே வந்தோம். வந்ததும் பிளைண்ட் ஃபோல்ட் போட்டு என் கண்களை மூடினார். அதற்கு முன்பாக ஒரு லாங் கெய்னை என்னிடம் கொடுத்து அடிமுதல் நுனிவரை தொட்டுப்பார்க்கச் சொன்னார். பிறகு கெய்னை முன்புறமாக வயிற்றின் மையப்பகுதிக்கு நேராக வரும்படி ஆள்காட்டி விரல் முன்பும் மற்ற விரல்கள் பின்புறமாக இருக்கும்படியாகக் கோலை உறுதியாகப் பிடித்துக்கொள்ளும்படி பயிற்சி அளித்தார்.
கெய்னைப் போட்டு நடக்கும் பயிற்சியை அளித்தார். இடப்புறமாகக் கெய்னைப் போடும்போது வலக்காலையும், வலப்புறமாக கெய்னைப் போடும்போது இடக்காலையும் என மாறிமாறிப் போட்டு நடக்கவேண்டும். சத்யஜோதி வாசலிலிருந்து நேராகச் சென்றால் படிக்கட்டுகள் வரும். அதில் ஏறிப் பின் இறங்கி, சத்யஜோதியின் வாசலுக்கே சென்று சேரவேண்டும். கண்கள் மூடப்பட்டிருந்ததால் சிறிது இல்லைஇல்லை கொஞ்சம் அதிகமாகவே பயமாக இருந்தது. இருப்பினும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன். நடக்கும்போது என்னால் நேராக நடக்க இயலவில்லை. கிராஸாகவே சென்றதால், வாசலுக்கு இருபுறமும் இருந்த பள்ளங்களில் விழுந்துவிடும் வாய்ப்பும் உண்டு. ஆனால் அதற்குள் மேடம் வந்து என்னைப் பிடித்துவிடுவார்கள். இப்படியாக ஒவ்வொருநாளும் பயிற்சியளிக்கப்பட்டது.
Sighted Guide Techniques, narrow spacer guidance, lower body protection, upper body protection என இன்னும் பிற மொபிலிட்டி நுட்பங்களைக் கற்றுக்கொண்டேன். ஏறத்தாழ ஒரு மாதகால பயிற்சிக்குப்பின் எனக்கு மொபிலிட்டி தேர்வு வைக்கப்பட்டது.
ஒவ்வொரு நாளும் என் அப்பா என்னை அழைத்துக்கொண்டு சென்றார். இரண்டு மணிநேரம் அந்த வளாகத்தில் ஸ்டோன் பெஞ்சில் அமர்ந்து மேகசீன்ஸ் மற்றும் நியூஸ் பேப்பர்களைப் படித்து நேரத்தை ஓட்டுவார். மூன்று வார காலத்திற்குப்பிறகு மைதிலி மேடம் என்னைத் தனியாகப் பேருந்தில் ஏறி வரச் சொன்னார். நீண்ட காலமாக துணையுடன் சென்று பழகிவிட்டதால் தனியாக வர சற்று தயக்கமாக இருந்தது. பஸ் நம்பர் படிக்க முடியாதே என கூறினேன். அதற்கு அவர் பப்லிக்கிடம் உதவி கேள் என கூறினார். நானும் சரி என சொல்லிவிட்டு சென்றுவிட்டேன்.
மறுநாள் கிளம்பி பஸ்ஸ்டாப் செல்லும் வரை மனம் பதபதைத்தது. ஒரளவு பார்வை தெரிந்ததால் ஃபோல்டிங் கேனை கையில் வைத்துக் கொண்டேன் பயன்படுத்தவில்லை. பேருந்து நிறுத்தத்தில் இருந்தவரிடம் பேருந்து எண் கேட்டு பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டேன். அடுத்து டிஎம்எஸ் ஸ்டாப் வந்துவிட்டதா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது எனத் தெரியவில்லை. அப்பொழுதெல்லாம் என் குரல் மிக மெல்லிதாக இருக்கும். கண்டக்ட ஸ்டாப்பிங் பெயரைச் சொல்கிறாரா என கவணித்துக்கொண்டே வந்தேன். என் நல்ல நேரம் அவர் சொல்லவில்லை. என்னடா அதை நல்லநேரம் எனச் சொல்கிறேன் என யோசிக்கிறீர்களா? உங்க மைன்ட் வாய்ஸை கேச் பன்னிட்டேன். கன்டக்டர் சொல்லாததால் பயத்தில் பக்கத்தில் இருந்தவரிடம் டிஎம்எஸ் வந்தா சொல்லுங்க என சொல்லி வைத்துவிட்டேன். இதைதான்necessity is the mother of invention என சொல்கிறார்கள் எனப் பின்னாளில் புரிந்து கொண்டேன்.
கடைசி நாளில் எனக்கு பரிட்சை வைக்கப்பட்டது. என் கண்களை மூடி என்னை அழைத்துக் கொண்டு போய் ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு சத்யஜோதி வாசலுக்குச் செல்லச் சொன்னார்கள்.
பரிட்சையில் வெற்றி பெற்றேனா? என்ன நடந்தது? அடுத்த பகுதியில் சொல்கிறேன்.
தொடர்புக்கு: anbirkiniyaval@gmail.com
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.

One reply on “தொடர்: பார்வைகள் புதிது, ஸ்பரிசங்கள் இனிது! (5)”
சகோதரிக்கு பாராட்டுக்கள் தங்களுடைய இந்த நிஜ வாழ்க்கை பலருடைய வளர்ச்சிக்கு துணையாக இருக்கும்
LikeLike