Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் தொடுகை மின்னிதழ் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள்

எதிர்ப்பு: அரசாணையைத் திரும்பப் பெறுக!

“ஒரே ஒரு மாற்றுத்திறனாளியும் மனவருத்தம் அடைந்துவிடக்கூடாது” என்கிறார் முதல்வர். ஆனால், துறையின் புரிதல் அற்ற தொடர் செயல்பாடுகளால் மாநிலத்தில் மனவருத்தம் அடையாத ஒரே ஒரு மாற்றுத்திறனாளிகூட இருக்க மாட்டார்களோ என்ற நிலை வந்துவிடும்போல.

புத்தகக் கட்டுநர் பயிற்சியை நிறுத்துவதாக அரசு வெளியிட்டிருக்கும் ஓர் அரசாணை அதிர்ச்சியையும் ஆழ்ந்த மன வேதனையையும் ஏற்படுத்துகிறது. நவீனமாகிவரும் தொழில்முறைகள், கால மாற்றம், இட ஒதுக்கீட்டையும் கடந்து ஏற்கனவே அரசுப்பணி பெற்றுள்ள பார்வையற்றவர்கள் எனச் சொல்லப்படும் காரணங்களில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கப்போவதில்லை.

ஆனால், அரசாணையின் உள்ளே, பார்வை 3ல் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரின் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தைப் படித்தால், அரசு அச்சகங்களில் பணியாற்றும் பார்வைக்குறையுடைய ஊழியர்கள் தன்னைப் போன்ற பார்வையுள்ளவர்களின் கருணையால் மட்டுமே பணியில் நீடித்துவருவதான தொனி அப்பட்டமாகவே ஒலிக்கிறது.

தனக்குக் கீழே பணியாற்றும் பார்வையற்ற அல்லது பார்வைக்குறையுடைய அச்சக ஊழியர்கள் பணிக்கே லாயக்கற்றவர்களாக இருக்கிறார்கள், பிற பணியாளர்கள் அனைவரும் காலம் தவறாமல், நேரம் பார்க்காமல், முழு அர்ப்பணிப்பு உணர்வோடு நூறு விழுக்காடு பணியாற்றுகிறார்கள். பார்வையற்ற அல்லது பார்வைக்குறையுடைய ஊழியர்களைப் போல் பிற பணியாளர்கள் அதிகாரிகளை உதாசீனம் செய்வதில்லை. அமைதிப் பேருருவங்களாய், சாந்தம் தவழும் முகம், சத்தியமே வடிவெடுத்த மனத்தோடு அலுவலகம் வந்து, தங்களுக்கு அரசால் வழங்கப்பட்டுள்ள பணிகளையும் சிரமேற்று, நிறைவேற்றி, சக பார்வைக்குறையுடைய ஊழியர்களையும் பாதுகாத்து வருகிறார்கள். ஆனால் இந்தப் பார்வையற்ற ஊழியர்கள்தான் பிற அலுவலர்களோடு வளாகத்திலேயே சண்டைபோடுகிறார்கள்; சனிக்கிழமை விடுமுறை கேட்கிறார்கள். “பேசிக்கிட்டேஇருக்கான் டீச்சர்” என வகுப்புத் தலைவன்போல் புகார்செய்கிற தொனி கொண்ட இஆபவின் கடிதம், ஒரு தனி மனிதனின் சராசரி நடத்தையைப் பார்வையின்மையோடும், பார்வையற்றவர்களோடும் தொடர்புபடுத்துகிற “இவுங்கலாம் இப்படித்தான் சார்” மேலாதிக்க மனத்தை அப்படியே வெளிக்காட்டுகிறது.

135 பார்வைக்குறையுடைய ஊழியர்களும் பிற பணியாளர்கள் மற்றும் தன்னைப் போன்ற உயர் அலுவலர்களின் தாராள மனம், தயை குணத்தாலேயே ஊதியம் பெற்று வருகிறார்கள் என்கிற ஆதிக்கவாடையே  அவர் கடிதத்தின் பாதிக்குமேல் பரவியிருக்கிறது.

மேலும் அவர் கடிதத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்,  “பார்வையற்ற பணியாளர்களை அதிகம் நியமிப்பதன் மூலம் திறமையான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது”. அடடே! பிறர்நலம் பேணல் அவருக்குப் பிறவிகுணம் போலும்.

அத்தோடு நிறுத்தவில்லை அவர்.

“மாற்றுத்திறனாளிகளுக்கான பணி செய்மான இலக்கு குறைவாக நிர்ணயிப்பதன் மூலமும் உடற்தகுதியுடைய பணியாளர்களைக் கொண்டு இக்குறைபாட்டினை ஈடுகட்டுவதும் இயற்கை நியதிகளுக்கு முரணாக அமைந்து வருகிறது.” சபாஷ்! உலக அமைதிக்காய் மன்றாடும் ஒப்பற்ற உயர் ஆன்மாவுக்கு வணக்கங்கள்.

உண்மையில் மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவரையும் வேதனையின் உச்சத்திற்கு கொண்டு செல்கிற கூற்றல்லவா இது…

*தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு,

*அரசுப்பணியில் பணிமாறுதல் விலக்கு

*அலுவலகத்துக்கு 15 நிமிடம் தாமதமாக வருதல் மற்றும் அலுவலகத்திலிருந்து 15 நிமிடம் முன்கூட்டிப் புறப்படுதல்

*அலுவலகம் வந்து செல்வதற்கான ஊர்திப்படி இவற்றோடு பொருத்தியே மாற்றுத்திறனாளிகளுக்காக குறைத்து நிர்ணயிக்கப்படும் பணி செய்மான இலக்கையும் புரிந்துகொள்ள வேண்டும். பணி செய்மானம் குறைத்து நிர்ணயிக்கப்படுதல் இயற்கை நீதிக்கு முரண் ஆனது என்றால், மேலே கூறப்பட்டுள்ள அவைகளும் அப்படித்தானா என அந்த ஆணையர்தான் சொல்ல வேண்டும்.

இவை அனைத்துமே சமூகநீதியின் அடிப்படையில் அரசால் வகுக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் உரிமைசார் முன்னெடுப்புகள். இயற்கை நீதிக்கு முரண் என்று தன் அரசு சார் கடிதத்திலேயே ஒரு உயர் அலுவலர் எழுதுகிறார் என்றால், அவருக்கு சமூகநீதி குறித்து இந்த அரசுதான் பாடம் எடுக்க வேண்டும்.

அவர் கடிதத்தில் கூறப்பட்டுள்ள மேலும் சில விடயங்கள்:

“* பார்வைக்குறையுடைய மாற்றுத்திறனாளிகளால் நவீன ரக இயந்திரங்களை இயக்க இயலாத நிலை உள்ளது.

*பல்கலைக்கழக விடைத்தாள்கள் தயாரிப்பது உள்ளிட்ட அவசிய ஆக்கப் பணிகளில், குறிப்பாக முறைமாற்றங்களில் (Shift) பணியாற்ற பார்வையற்றவர்களை அனுமதிக்க இயலாத சூழல் உள்ளது.”

இப்படி இயலாதுகளை வரிசைப்படுத்தி நீள்கிறது எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரின் கடிதம். ஆனால், இந்த இயலாதுகளில் பலவற்றை உரிய பணியிடைப் பயிற்சி, உயர் அலுவலரின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டல் அல்லது பொருத்தமான பணிகளைக் கண்டறிந்து அலுவல் மாற்றம் செய்தல் போன்றவற்றை மாற்றுத் தீர்வுகளாய் முன்வைத்துச் செயல்படலாமே! அதுவும் இயற்கை நீதியின் பாற்ப்பட்டதுதானே!

அத்தகைய திட்டமிடல்களின் மூலமாகத்தான், சம வாய்ப்பையும் (equal opportunity) சம பங்கேற்பையும் (equal participation) உறுதி செய்து, அனைவரையும் உள்ளடக்கிய (inclusive) [சமூகத்தைக் கட்டமைப்பது என்கிற நோக்கத்தைச் செயல்படுத்த இயலும். அதை மறந்து, அரசின் உயர் அலுவலர் ஒருவர், கார்ப்பரைட் அதிகாரியைப்போல் கடிதம் எழுதியிருப்பதும், அதை அப்படியே கட் காப்பி பேஸ்ட் செய்து, அரசாணை வெளியீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்துறை, கவனியுங்கள்!…எதற்கான நலத்துறை? மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்துறை பயன்படுத்தியிருக்கிறது என்றால், உண்மையில் அரசாணையில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘பயனொழி்ந்த’ என்ற பதம் இடம் மாற்றி நினைவில் எழும்புவதைத் தவிர்க்க இயலவே இல்லையே.

வெளியிடப்பட்டுள்ள அரசாணையைத் திரும்பப் பெற்று, அவற்றில் ஆட்சேபனைக்குரிய எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரின் சில கருத்துகளை நீக்கம் செய்யுங்கள். பல்லாண்டு காலமாக பல பார்வையற்றவர்களுக்கு வாழ்வளித்து வந்த ஒரு திட்டத்துக்கு மூடுவிழா நடத்துவதில் தாங்கள் காட்டிய வேகத்தையும், செயல் முனைப்பையும் அதே மையத்தில் தற்கால சூழலுக்குப் பொருந்திப் பணிவாய்ப்பை நல்குகிற, பார்வைக்குறைபாடு உடையோருக்கான புதிய பயிற்சியினைத் தொடங்குவதிலும் காட்டுங்கள்.

“ஒரே ஒரு மாற்றுத்திறனாளியும் மனவருத்தம் அடைந்துவிடக்கூடாது” என்கிறார் முதல்வர். ஆனால், துறையின் புரிதல் அற்ற தொடர் செயல்பாடுகளால்  மாநிலத்தில் மனவருத்தம் அடையாத ஒரே ஒரு மாற்றுத்திறனாளிகூட  இருக்க மாட்டார்களோ என்ற நிலை வந்துவிடும்போல.

இப்படிக்கு,

அளவு கடந்து தன்மானம் சீண்டப்பட்ட தமிழ்நாட்டுப் பார்வையற்றவர்களுள் ஒருவன்.

***சாமானியன்.

அரசாணையைப் படிக்க மற்றும் பதிவிறக்க:


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.