இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சேர்ந்த தஹ்சீன் பாத்திமா பிறவியிலிருந்தே பார்வைக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். பார்வை நரம்புகளில் குன்றிப்போன இரத்த ஓட்டத்தால், பார்க்கும் திறனைப் பெருமளவில் இழந்த இவரால் புத்தகங்களில் உள்ள எழுத்துகளைப் படிக்க முடியாது.

தன் பார்வைக்குப் புலப்படும் வெளிச்சத்தைக்கொண்டு, தனது ஆடையின் நிறத்தைக்கூட பகுத்தறிய இயலாத பாத்திமாவின் ஒற்றை வெளிச்சம் அவரின் குடும்பம். கோழியின் செட்டைக்குள் அடைக்களம் பூண்ட குஞ்சினைப்போல், அப்பா அம்மா அரவணைப்பில் வளர்ந்தபடி, அருகாமைப் பொதுப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பை முடித்திருக்கிறார் பாத்திமா.
இவர் தற்போது வெளியாகியுள்ள பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் பெற்றிருக்கிற மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? 600க்கு 580.
தமிழ்வழியில் படித்த மாணவர்களுள் மாவட்ட அளவில் பாத்திமாவுக்கே முதலிடம்.
ஆறு பாடங்களிலும் 90க்கு மேலே. வணிகவியலில் 100, கணக்குப் பதிவியலில் 99.
தமிழில், வரலாறில் தலா 98, பொருளியலில் 94 என்றால், ஆங்கிலத்தில் 91.
சிறப்புப் பள்ளியில் படிக்கவில்லை, பிரெயிலும் தெரியாது. ஆனாலும் இது எப்படிச் சாத்தியம் எனக் கேட்டால், அரவிந்த் கண் மருத்துவமனையில் வாங்கிய நவீன உருப்பெருக்கி (lens) கொஞ்சமாய், அறிவுப் பெருக்கியாய் அமைந்த அம்மாவின் குரல் அதிகமும் அதிகமாய் உதவியதாகப் பூரிக்கிறார் இவர்.
ஐஏஎஸ் படிப்பதையே குறிக்கோலாகக் கொண்டிருந்த பாத்திமாவின் பரிசீலனைப் பட்டியலில் தற்போது சட்டப் படிப்பும் சேர்ந்திருக்கிறது. சட்டமும் பட்டமும் பெற்றுச் சண்டை செய்யத் தயாராகிவிட்ட சக்திப்பெண் பாத்திமாவுக்குஓர் அழுத்தமான சல்யூட்.
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.

One reply on “வாழ்த்து: சக்திப் பெண்ணே! சல்யூட்!”
Congratulations!! A great great achievement.. God bless you.
LikeLike