Categories
தொடுகை மின்னிதழ் தொழில்நுட்பம்

நிகழ்வு: சித்திரம் வரையலாம், முதலில் சுவர் வேண்டும்!

பார்வையின்மையால் ஏற்படும் 85% அறிவிழப்பை சரிபாதி அளவேனும் ஈடுகட்டும் ஒரே வாய்ப்பு தொழில்நுட்பம் என்பதை உண்மையில் பார்வைத்திறன் குறையுடையோரின் மறுவாழ்வுக்காகச் செயலாற்றும் எல்லாத் தரப்பினரும் உணர வேண்டிய தருணம் இது.

தலையங்கம்: அனைவருக்கும் கணினித் திட்டம்

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, நிகழ்வு சிறப்பாக நடந்தேறியதில் மகிழ்ச்சி. பங்கேற்ற பிரசாத் அருண், சாம் கார்த்தி, சிவமாயன், பொன். குமரவேல் மற்றும் பொன். சக்திவேல் என ஐவருமே டெக்கி ஜாம்பவான்கள். சமகாலத்தில் தமிழகப் பார்வையற்றவர்களில் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி அரங்குகளுக்கு அழைக்கப்பட வேண்டியவர்களுள் முன்வரிசையில் இருப்பவர்கள்  இவர்கள்.

ஜூம் செயலியோடு மொபைலை இணைத்து, கூடவே திரைவாசிப்பானையும் ஒலிக்கவிட்டு அடேங்கப்பா! சவால்களையெல்லாம் சவட்டிப்போட்ட சாதுரியம் ஐவருக்குமே அத்துபடியாக இருந்தது. அவர்கள் செய்துகாட்டிய செய்முறை விளக்கங்கள் தாண்டி, நிகழ்வில் பேசப்பட்ட ஒரு முக்கியப் பொருண்மை குறித்தே இங்கு எழுத விரும்புகிறேன்.

“ஒரு பிரபல தனியார் மருத்துவமனை சார்பில் ஸ்மார்ட் கண்ணாடிகள் வழங்குகிறார்கள், அதுவும் விலையில்லாதவைகளாக”. இதுதான் சென்னையில் பார்வையற்றோரிடையே பகிரப்படும் தற்போதைய பரபரப்புச் செய்தி.

ஸ்மார்ட் கண்ணாடிகள் (Smart Vision Glasses) புத்தகம் படிக்கவும், எதிரே இருக்கும் பொருட்களை இன்னதென்று அறிவிக்கவும், முகங்களைக் கண்டறியவும் என பார்வையற்றோருக்கு உதவக்கூடிய தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்டவை. ஒரு கண்ணாடியின் விலை ரூ. 35000. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கண்ணாடிகள் பரபரப்புச் செய்திகள்.

இந்தியக் குடிமைப்பணிகள் தேர்வில் வெற்றிபெற்ற பூரணசுந்தரி என்ற பார்வையற்ற பெண்ணுக்கு அன்றைய திருப்பரங்குன்றம் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த திரு. சரவணன் அவர்கள் அதுபோன்ற ஒரு ஸ்மார்ட் கண்ணாடியை விலையில்லாத ஒன்றாக வழங்கினார் என்ற செய்தி அதிகம் பேசப்பட்டது. மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையிலும் அதுபோன்ற ஒரு ஸ்மார்ட் விஷன் கண்ணாடி குறித்தெல்லாம் செய்முறைப் பயிற்சிகள் நடத்தப்பட்டன. அப்போதெல்லாம் வியப்பையும் பிரமிப்பையும் ஏற்படுத்திய அதுவும், அதில் உள்ளடக்கப்பட்டிருந்த வசதிகளும் இன்று நாம் பயன்படுத்தும் ஒரு ஸ்மார்ட் போனுக்குள் வந்துவிட்டது அதுவும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உட்போதித்தலோடு.

பீமை ஐஸ்,

என்விஷன் ஏஐ,

கூகுல் லுக் அவுட்,

சீயிங் ஏஐ,

சலிவன் ப்லஸ்,

டெக் ஃப்ரீடம்

போன்ற செயலிகளை உங்கள் ஆண்டிராய்டு ஸ்மார்ட் போன்களில் நிறுவிக்கொண்டால், அந்த ஸ்மார்ட் விஷன் கண்ணாடிகளுக்கு அவசியமே இராது. இன்னும் உடைத்துச் சொன்னால், இந்தச் செயலிகளின் தொழில்நுட்பத்தைத்தான் ஒரு கண்ணாடியாக வடிவமைத்து நமக்கு வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் மேற்சொன்ன செயலிகள் செய்யும் பணிகளில் ஒன்றிரண்டைத்தான் இந்தக் கண்ணாடிகள் செய்கின்றன.

எனவே, ரூ. 35000 மதிப்புள்ள கண்ணாடிகளை விலையில்லாமல் வழங்க முன்வரும் தன்னார்வத் தொண்டு நிறுவன நிர்வாகிகளே! அதே விலையில் ஒவ்வொரு பார்வையற்றவருக்கும் ஒரு மடிக்கணினி வாங்கித் தந்தால், அது நீண்டகால நோக்கில் ஆழ்ந்த வாழ்வியல் மாற்றங்களை அந்தப் பார்வையற்றவரிடம் ஏற்படுத்தும்.

sullivan+ செயலியின் புகைப்படம்

ஒரு பார்வையற்றவர் தன் வாழ்வில் இழந்த ஒளியை ஓரளவேனும் ஈடுகட்டும் ஏதேனும் ஒன்றை அவருக்குக் கையளித்துவிட வேண்டும் எனும் உங்களின் உளப்பாங்கு புரிகிறது. அதற்கு ஸ்மார்ட் கண்ணாடியைவிட மடிக்கணினியே மிகப் பொருத்தமானதாய் அமையும். கண்ணாடி வழங்குவதால் அவரின் வாழ்வில் நீங்கள் ஒளியேற்றலாம், கணினி கிடைத்தால் அவர் இந்தச் சமூகத்துக்குச் சிறந்த ஒளியாகத் திகழும் வாய்ப்பைப் பெறுவார்.

பார்வையற்ற நண்பர்களே! ஒரு பார்வையுள்ளவர் பைக் வாங்கத் துடிப்பதுபோல, நீங்களும் எப்படியாகிலும் ஒரு மடிக்கணினி வாங்கித்தான் ஆகவேண்டும் என்ற எண்ணத்தை ஆழ மனதில் பதித்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு உதவ முன்வரும் ஒவ்வொருவரிடமும் உங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தியபடியே இருங்கள். எத்திசையிலும் வந்துசேரும் நிதிவளங்களைச் சிறுகச் சிறுகச் சேமித்து ஒரு மடிக்கணினி வாங்கிவிடுவது என்பதில் உறுதியாக இருங்கள்.

ஒரு குழந்தை பிறப்பதற்கு ஆணும் பெண்ணும் தேவைப்படுவதுபோலத்தான் ஒரு பார்வையற்றவர் தன் குறைபாட்டைச் சமன்செய்து புதிய பிறப்பெடுக்க கணினி அதி அவசியமான ஒன்று. இதைவிட எனக்குப் பொருத்தமான சான்று எதுவும் தோன்றவில்லை. கணினி நமக்கான இன்னொரு ஊன்றுகோல். செல்போன் அல்ல, கணினி அல்லது மடிக்கணினி என்பதை மனதில் வையுங்கள்.

கணினி என்பது நமது பிறப்புரிமை, நமது ஆயுள் சொத்து. பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் பெட்டகம் தரும் நமது அரசு, அக்குழந்தை பார்வைச்சவால் கொண்டது என அறிந்த அந்த தருணத்திலே, அடையாள அட்டை, ஊன்றுகோல் இவைகளோடு ஒரு மடிக்கணினியையும் அந்தக் குழந்தையின் பெற்றோரின் பொறுப்பில் கையளித்திட வேண்டும். தொடக்கக்கல்விக்காக பள்ளிச் சாலைகளில் நுழையும் ஒவ்வொரு பார்வைச்சவால் உடைய குழந்தைக்கும் தங்களால் ஒரு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

பார்வையின்மையால் ஏற்படும் 85% அறிவிழப்பை சரிபாதி அளவேனும் ஈடுகட்டும் ஒரே வாய்ப்பு தொழில்நுட்பம் என்பதை உண்மையில் பார்வைத்திறன் குறையுடையோரின் மறுவாழ்வுக்காகச் செயலாற்றும் எல்லாத் தரப்பினரும் உணர வேண்டிய தருணம் இது. பயிற்சி கொடுப்பதற்கு முன் கணினி தாருங்கள், சித்திரம் வரையலாம், முதலில் சுவரைக் கட்டியெழுப்புங்கள்.

***ப. சரவணமணிகண்டன்

தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

3 replies on “நிகழ்வு: சித்திரம் வரையலாம், முதலில் சுவர் வேண்டும்!”

சித்திரம் வரையலாம் முதலில் சுவர் எழுப்புவோம் என்ற தொலைநோக்கு பார்வை மிகவும் அருமை. முல்லை முல்லால் எடுப்பது என்பார்கள் அதுபோல பார்வை சவால் கொண்டவர்களின் வலி வேதனை மற்றொரு பார்வை சவால் கொண்டவருக்குதான் ஆழமாக தெரியும். பார்வை சவால் கொண்டவர்களின் வாழ்வில் கணினி எவ்வளவு முக்கியம் என்பதை அழகாக எவராலும் இப்படி சொல்ல முடியாது வாழ்த்துகள் தொடரட்டும் உங்கள் சமுதாய எழுத்து புரட்சி

Like

சித்திரம் வரையலாம் முதலில் சுவர் வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வை மிகவும் அருமை. முல்லை முல்லால் எடுப்பது என்பார்கள் அதுபோல பார்வை சவால் கொண்டவர்களின் வலி
வேதனை மற்றொரு பார்வை சவால் கொண்டவருக்குதான் ஆழமாக தெரியும். பார்வை சவால் கொண்டவர்களின் வாழ்வில் கணினி எவ்வளவு முக்கியம் என்பதை அழகாக எவராலும் இப்படி சொல்ல முடியாது வாழ்த்துகள் தொடரட்டும் உங்கள் சமுதாய எழுத்து புரட்சி

Like

கணினி என்பது நமது பிறப்புரிமை!
கணினியின் அவசியத்தை உணர்த்தும் மிகச் சிறப்பான தொடர்!
வாழ்த்துகள் சார்!

Like

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.