பார்வையற்றோர் பணிவாய்ப்பில் ஒரு விழுக்காடு கோரிக்கை ஏன்? எப்படி?
சே.பாண்டியராஜ்.
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 12 நாட்களாக தொடர் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஒன்பது அம்ச கோரிக்கைகளில் பெருவாரியான கோரிக்கைகளை ஒற்றைச் சொல்லில் அடக்கிவிடலாம். அது சட்டப்படி பார்வையற்றோருக்கு வழங்கி இருக்க வேண்டிய ஒரு விழுக்காடு இட ஒதுக்கீடு. இதை வலியுறுத்திதான் நம் சங்கம் பல ஆண்டுகளாக போராடி வருகிறது. பலருக்கும் நாம் கேட்கும் இந்த ஒரு விழுக்காடு பயனளிக்குமா? நாம் சரியான பாதையில்தான் செல்கிறோமா என்ற ஐயம் மேலோங்க தொடங்கியுள்ளது. ஐயமும் வேண்டாம் அச்சமும் வேண்டாம் கொஞ்சம் நம் கோரிக்கையின் ஆழத்தை அளந்து பார்ப்போம் வாருங்கள்!
பார்வையற்றோருக்கான ஒரு விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டி நம் சங்கம் தொடர்ந்து பல ஆண்டுகளாக போராடிவருகிறது.
தங்களது தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளது போல பொருப்பேற்றவுடன் சட்டப்பேரவையில் 17 ஏப்ரல் 2023 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 விழுக்காடு இட ஒதுக்கீடு முறையாக கணக்கிட்டு சிறப்பு ஆட்சேர்ப்பு மூலம் பணி நியமனம் வழங்கப்படும் என்று அறிவித்தார். 24 ஜூலை 2023 அன்று அரசாணை எண் 20 வெளியிடப்பட்டது. அதில், அனைத்து அரசுத் துறைகளிலும் உள்ள A, B, C மற்றும் D தொகுதிகளில் பணிபுரியும் மொத்த பணியாளர்களை கணக்கில் கொண்டு. அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சதவிகித இட ஒதுக்கீடு வழங்க ஏதுவாக, அனைத்து பணியிடங்களையும் தெரிவு செய்து சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வினை (Special Recruitment Drive) நடத்தி அப்பணியிடங்களை ஓராண்டிற்குள் நிரப்புவது தொடர்பான நடவடிக்கையினை அரசின் அனைத்துத் துறைகளும் மேற்கொள்ள வேண்டும் என்று தொடரும் இந்த அரசாணையைப் படித்ததும் மனதில் மகிழ்ந்து உணர்வில் கொண்டாடி உள்ளபடியே மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டோம். ஏனென்றாம் இப்படி ஒரு அரசாணைக்காகத்தான் பல ஆண்டுகளாக பார்வையற்றச் சமூகம் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகள் போராடி வந்துள்ளோம்.
இந்த அரசாணை சும்மா கேட்டதற்காக கருணை அடிப்படையில் போடப்பட்டதன்று.
ஊனமுற்றோர் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாகவே நம் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் போராட்டத்தின் விளைவாக அரசாணை எண். 602 நாள் 14.08.1981 சமூக நலத்துறையால் வெளியிடப்பட்டது. அதில், அரசு, அரசு சார்பு நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு நிதி உதவி பெறும் நிறுவனங்கள்,தன்னாட்சி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றில் ஊனமுற்றோருக்கு 3 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை அமல்படுத்தவும், அதில் பார்வையற்றவர்களுக்கு ஒரு விழுக்காடு இட ஒதுக்கீட்டினை கட்டாயம் அமல்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு பிறகு ஊனமுற்றோர் சட்டம் 1995 நடைமுறைப்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் பிரிவு 33 இட
ஒதுக்கீடு பற்றிப் பேசுகிறது. அதனைத் தொடர்ந்து ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றுத் திறனாளிகள் சட்டம் 2016 நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில் பிரிவு 34 இட ஒதுக்கீடுப்பற்றி பேசுகிறது. இந்தச் சட்டப் பிரிவுகளின்படி பணி நியமனத்தின் போது மொத்த பணி இடங்களை இட ஒதுக்கீட்டின்படி கணக்கிட்டு, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாளம் காணப்பட்ட பணி இடத்தில் பணி அமர்த்த வேண்டும். மத்திய மாநில அரசுகள் இச்சட்டப் பிரிவுகளின்படி பணி நியமனங்களை மேற்கொள்ளாமல், மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாளம் காணப்பட்ட பணியிடங்களில் உள்ள பணிகளைக் கணக்கிட்டு அதில் இட ஒதுக்கீட்டின்படி பணி நியமனங்களை வழங்கி வந்தது.
இன்நிலையில், தேசிய பார்வையற்றோர் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக வழக்கு தொடுத்திருந்தது. 08.10.2013 அன்று வெளியான (CIVIL APPEAL NO.9096OF 2013 ( Arising out of SLP ( Civil ) No.7541 of 2009) Union of India & Anr. Versus National Federation of the Blind & Ors.) தீர்ப்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை அடையாளம் காணப்பட்ட பணி இடங்களைக்கொண்டு கணக்கிடாமல், அரசால் அறிவிக்கப்படும் மொத்த பணி இடங்களை இட ஒதுக்கீட்டின்படி கணக்கிட்டு, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாளம் காணப்பட்ட பணி இடத்தில் பணி அமர்த்த வேண்டும். தகுதி உடைய மாற்றுத் திறனாளியால் குறிப்பிட்ட துறையின் பணி இடத்தில், அவருடைய ஊனத்தின் காரணமாக பணி அமர்த்த இயலவில்லை என்றால், அந்த பணிக்கு இணையான மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாளம் காணப்பட்ட பணி இடத்தில் பணியமர்த்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பின்படி மத்திய மாநில அரசுகள் இட ஒதுக்கீட்டைக் கணக்கிட்டு சிறப்பு ஆட்சேர்ப்பு மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு பணி நியமனங்களை வழங்கத் தொடங்கின. இந்த நீதிமன்ற உத்தரவின்படி நமக்கு என்ன கிடைத்தது என்பதைப் பார்ப்பதற்கு முன்பாக மற்றொரு வழக்கைக் குறித்து சற்று அறிந்துக்கொள்வோம்.
சென்னை உயர்நீதிமன்ற மாண்பமை நீதியரசர் மணிக்குமார் ஐயா அவர்கள் வேறொரு வழக்கின் விசாரனையின்போது, மாற்றுத் திறனாளிகளின் இட ஒதுக்கீடு குறித்து தாமாக முன்வந்து விசாரித்து, (வழக்கு எண்.9096/ 2013 மீதான தீர்ப்பாணை.4.நீதிபேராணை எண்கள்.W.P.No.15777, 15776 மற்றும் 15550/2004) தமிழக அரசு ஊனமுற்றோர்ச் சட்டம் 1995ன்படி இட ஒதுக்கீட்டினை முறையாக கணக்கிட்டு உடனடியாக சிறப்பு ஆட்சேர்ப்பு நடத்த 19.12.2013 நாளன்று இடைக்கால தீர்ப்பு வழங்கினார்.
இன்நிலையில் தமிழக் அரசு உச்ச நீதி மன்ற உத்தரவு மற்றும் சென்னை உயர்நீதி மன்ற இடைக்கால உத்தரவுகளின்படி அரசு பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதிபடுத்தும்பொருட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவு பணியிடங்களை நிரப்பிட அரசாணை(நிலை) எண்.10 நாள்:04-03-2014 அன்று வெளியிட்டது.
இந்த அரசாணையின்படி, பணியாளர்களைத் தேர்வு செய்யும் முகமைகளான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்,
வேலைவாய்ப்பு அலுவலகம், ஆசிரியர் தேர்வு வாரியம், மற்றும் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவைகளிடமிருந்து பெறப்பட்டு பரிசீலனை செய்ததில், வேலை வாய்ப்பு அலுவலகம் (Employment Exchange) மூலம் 392 பணியிடங்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board) மூலம் 1107 பணியிடங்களும், உயர்கல்வித் (பல்கலைக்கழகங்கள்)துறை மூலமாக 91 பணியிடங்களும் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் (Medical Recruitment Board) மூலம் 79 பணியிடங்களும் மற்றவை மூலம் 259 பணியிடங்களும் ஆக மொத்தம் 1928 பணியிடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவுப் பணிகளாக கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வரசாணையின்படி மாற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவு பணியிடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன என்று சொன்னால் அதிர்ச்சியடைந்துவிடுவீர்கள். ஆனால் சட்டத்தின் பார்வையில் அப்படித்தான் காட்டப்பட்டுள்ளது. மேலே கூறப்பட்டுள்ள பணியிடங்களை 2014ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு ஏதேனும் சிறப்பு ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டுள்ளதா என்பதை நீங்களே சிந்தித்து பாருங்கள். ஒரு வேலை அப்பொழுது நடத்தப்பட்ட சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நினைவுக்கு வந்தால் அது சிறப்பு ஆட்சேர்ப்பு அல்ல என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் அது அந்த ஆண்டிற்கான நடப்பு பணியிடங்களின் இட ஒதுக்கீட்டின்படி மட்டுமே நடத்தப்பட்டு பணி வழங்கப்பட்டது. மேலும், 1996ஆம் ஆண்டு முதல் அதாவது ஏறக்குறைய 20 ஆண்டுகளில் நடத்தப்பட்ட நியமனங்களின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய பணி இடங்கள் மேலே குறிப்பிட்ட எண்ணிக்கைதான் இருக்குமா என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.
இவ்வாறாக உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் ஊனமுற்றோருக்கான சட்டம் 1995ன்படி அச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட 1996ஆம் ஆண்டு முதல் பின்னடைவு பணியிடங்களை அதாவது காலந்தோரும் நியமிக்கப்பட்ட மொத்த பணி இடங்களில் இட ஒதுக்கீட்டின்படி கணக்கிட்டு அதில் மாற்றுத் திறனாளிகளுக்கான நான்கு விழுக்காட்டினைக் கணக்கிட்டு அவர்களுக்கான அடையாளம் காணப்பட்ட பணி இடங்களில் பணி அமர்த்த வேண்டும் என்ற உத்தரவை இன்றளவும் நடைமுறைப்படுத்தவில்லை என்பது மிகுந்த வேதனயை அளிக்கிறது.
இவ்வாறு சட்டங்களையும், நீதிமன்ற உத்தரவுகளையும், அரசாணைகளையும் தொடர்ந்து வலியுறுத்தி போராடி வந்த நிலையில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அரசாணை எண் 13. நாள் 12.10.2020 அன்று மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016 பிரிவு 34ன்படி பின்னடைவு காலி பணி இடங்களை கணக்கிட்டு சிறப்பு ஆட்சேர்ப்பு (Special drive) நடத்தப்படும் என குறிப்பிட்டு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையில் ஊனமுற்றோர் சட்டம் 1995 பிரிவு 33-ன்படி நிரப்பப்பட வேண்டிய பின்னடைவு காலிப் பணி இடங்கள் குறித்து இதில் எவ்வித குறிப்பும் இல்லை. மேலும், இவ்வரசாணையில் மொத்த காலி பணி இடங்கள் குறித்தோ, நிரப்பப்படும் காலம் குறித்தோ குறிப்பிடப்படவில்லை. எனவே, இவ்வரசாணையைத் திரும்பப் பெற்று,
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஊனமுற்றோர் சட்டம் 1995, மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016 மற்றும் மாண்பமை உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற தீர்ப்புகளின்படி பின்னடைவு காலிப் பணி இடங்களை முறையாக கணக்கிட்டு உடனடியாக சிறப்பு ஆட்சேர்ப்பு மூலமாக பணி நியமனம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று நம் சங்கம் தொடர்ந்து கோரிக்கை வைத்து கடுமையாக போராடி வந்தது.
இன்நிலையில்தான் தற்போதைய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கான 4 விழுக்காடு இட ஒதுக்கீடு ஆட்சிக்கு வந்தவுடன் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்தார். அதேப்போல் மேலே தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளது போல சட்டப்பேரவையில் அறிவித்து, சட்டங்களும், நீதிமன்றங்களும் கூறியுள்ளபடி வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணையை வெளியிட்டார். தற்பொழுது சங்க பேச்சுவார்த்தைக் குழுவினரிடம் அந்த அரசாணை தவறாக போடப்பட்டுவிட்டது என்றும், மொத்த பணி இடம் என்றால் அறிவிக்கப்படும் பணியிடம் என்றும் பொருள் என்று மாண்புமிகு அமைச்சர் அவர்களும், துறைசார்ந்த அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.
சட்டங்கள், நீதிமன்றங்கள், அரசாணைகள் என எல்லாம் இருந்தும் இவர்கள் ஏன்மறுக்கிறார்கள்? அல்லது இவர்களை எது தடுக்கிறது?
என்று உளவியல் நோக்கில் சிந்தித்தால் அடிப்படையில் நாம் இவர்களுக்கு சமம் இல்லை என்ற இவர்களின் எண்ணமாக இருக்குமோ?
நமக்கான உரிமைகள் நிலைநாட்டப்படாததற்கு என்ன காரணம் என்பதை கேட்க மீண்டும் நீதிமன்றம்தான் செல்ல வேண்டுமோ?
இங்கு கருணையும் இல்லை
உரிமையும் இல்லை
உண்மையும் இல்லை
உணர்வும் இல்லை
என்றாலும் நம்முடைய கோரிக்கை வெல்லும் நாள் தொலைவில் இல்லை!
இந்த தகவல்களை நான் அறிந்துக்கொள்ள உதவிய சங்கத்தின் மூத்தவர்களுக்கும், என் வாழ்க்கைத் துணைவிக்கும், சங்கத்தின் சட்டக்குழு நண்பர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதில் பிழை ஏதும் இருப்பின் அது என் கவனக்குறைவே. பிழைகள் இருப்பின் சுட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன்.
நன்றி.
இவண்
சே.பாண்டியராஜ்.
பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டத்தை கைவிட வேண்டும்: மாற்றுத் திறனாளிகள் நலத் துறை வேண்டுகோள்
https://vpdroid.com/vpservices/web/vpnews24/share/65d7ffa5dc0ba12282ffbae2
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் உண்ணாவிரதம் மற்றும் தொடர் போராட்ட அறிவிப்பு.
நாள் (12): 23/2/2024.
நேரம்: காலை. 10.30.
சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில், மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டையை திரும்ப ஒப்படைத்தல்.
தொடர்புக்கு: 9382804040, 7449158045, 7904881610.
அனைவருக்கும் வணக்கம்! தற்சார்பு, சுய மரியாதை, சுய முன்னேற்றம் போன்ற கொள்கைகளை மையமாகக் கொண்டு, பார்வையற்றோரின் உரிமைக்காகவும், வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும் பாடுபடும் சங்கம் நமது சங்கம். தீவிரமாக நடை பெற்று வரும் நம் போராட்டத்தில் பணியில் உள்ளோரும், பணி நாடுனர்களும், மாணவர்களும் பெருந்திறளாகக் கலந்துகொண்டார்கள்.
கிட்டத்தட்ட 4 மாவட்டங்களில், சென்னையில் 2 இடங்களில் நம் போராட்டங்கள் இன்று களம் கண்டன. அலைகடலெனத் திரண்ட நம் கூட்டத்தையும் ஆற்பரிப்பையும் கண்டு அதிர்ந்தது தமிழகம்.
எனினும் அரசின் அச்சுருத்தல்கள் தொடர்ந்தன. மாணவர்களுக்கு அரசு விடுதிகளும் தொல்லைகள் தரத் துனிந்ததன் தொடர்ச்சியாக சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு அரசு விடுதியில் உள்ள 19 மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். காலை 4 மணி அளவில் சென்ற காவலர்கள் மற்றொரு விடுதியில் அத்துமீரி நுழைந்து தூங்கிக்கொண்டிருந்த பார்வையற்ற மாணவர்களைக் கூண்டோடு கைது செய்ய முயன்றனர். பார்வையற்றோரை அச்சுறுத்தும் வகையில் அவர்களை எல்லாச் சாலைகளிலும் பின் தொடர்கிறார்கள் காவலர்கள்.
இது ஒரு புறமாக, இன்று 2 முறை நம் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார் மாண்பு மிகு சமூக நலன் மற்றும் சத்துணவுத் துறை அமைச்சர். அவரைச் சந்தித்து, 9 அம்சக் கோறிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பல வகையில் வற்புறுத்தியதன் பேரில் தற்போதைக்கு 3 வருகை விரிவுரையாளர் பணி வழங்குவதாகக் கூறி, ஜூலை வரை போராட்டத்தினை ஒத்திவைக்கும்படி நிர்பந்தித்தார். அதனை உண்ணாவிரதத் தியாகிகளும் சங்க நிர்வாகிகளும் ஏற்க மருத்த நிலையில் போராட்டம் தொடர்கிறது.
அதே நேரத்தில் காலையில் சாலை மரியல் செய்த நம் சகோதரப் போராளிகளை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தும் சட்டைகளைக் கிழித்தும் அராஜகம் செய்ததோடு, நம் சங்கத்தின் பெண் உறுப்பினர்களை ஆண் காவலர்கள் அநாகரீக முறையில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பார்வையற்றோரை, மாலை விடுவிப்பதிலும் தாமதப் பட்டதால் பெண்கள் மிகவும் இன்னலுற்றனர். இப்படிப்பட்ட அச்சங்களால் நம் போராட்டத்தின் வலிமை குன்றும் என ஆள்வோர் நினைக்கிறார்கள். இல்லை இல்லை எங்கள் பலமே ஒற்றுமை என்பதனை உரக்கச் சொல்லவும், கோரிக்கைகளை வென்றெடுக்கவும் உரிமைகளை மீட்கவும் தமிழகமெங்கும் உள்ள பார்வையற்ற சமூக உறவுகள் பெறும் திரளாக கலந்து கொண்டு இந்த தொடர் போராட்டத்தை வெற்றி போராட்டமாக மாற்ற வாருங்கள் வாருங்கள் என்று உங்களை சங்க செயற்குழு மற்றும் போராட்டக் குழு இருகரம் கூப்பி அழைக்கிறது. பயத்தை மரைக்க, எதிரியை அச்சுறுத்துவது இப்போதைய அரசின் குணம் போலும்! அச்சமே நம்மைக்கண்டு அச்சம் கொள்ளும் என ஆற்பரித்துச் சொல்ல வாருங்கள் தோழர்களே!
வேலை வாய்ப்பு உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை மையப்படுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தினை நம் சங்கம் நடத்தி வருகிறது.
இந்தப் போராட்டத்தை ஒடுக்க எவ்வளவு வேலைகள், எவ்வளவு கனிவுகள்!
பலவீனத்தை தன் பலமாகக் கொள்ளும் அதிகார வர்கத்துக்கு நம் பலம் எதுவெனக் காட்ட இதைவிட ஒரு தருணம் வேண்டுமோ?
இந்தப் போராட்டத்திக்கு அணிதிரண்டு வரும்படி அனைவரையும் அழைக்கிறோம்!
வீருகொண்டு எழும்படி வீரர்ச் சிங்கங்களை விளிக்கிறோம்!
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற வரிகளுக்கு பொருள் காண வாருங்கள்!
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற உண்மையை உலகுக்குச் சொல்ல உங்கள் கரங்களை ஒன்று சேருங்கள்!
உருதி மிகுந்த போராட்டமே வேலையைப் பெற்றுத் தரும்!
போராட்டம் வென்றிடுவோம்,
வெற்றி வாகை சூடிடுவோம்.
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
