தலையங்கம்: அனைவருக்கும் கணினித் திட்டம்

தலையங்கம்: அனைவருக்கும் கணினித் திட்டம்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
மடிக்கணினியோடு அமர்ந்திருக்கும் பூரணசுந்தரி புகைப்படம்

பொதுச்சமூகத்தைப் போலவே, பார்வையற்றோரிடையேயும் பட்டதாரிகள் பெருகியபடியே இருக்கிறார்கள். கல்வியில் இடைநிற்றல் என்பது ஒப்பீட்டளவில் குறைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால், பட்டதாரிப் பார்வையற்றவர்கள் தங்கள் தகுதிக்கேற்ற திறனடைவைப் பெற்றிருக்கிறார்களா என்றால் நிலைமை மோசம்தான். பொதுச்சமூகத்திலும் இதேநிலைதான் என்றாலும், பார்வையுள்ளவர்களுக்கு ஆயிரம் வாசல்கள் திறந்து கிடக்கின்றன. நமக்கிருக்கும் ஒற்றை வாசல் கல்விதான். அதிலும் திறனோடு பெறவேண்டிய கல்வி.

பார்வையற்றோரைப் பொருத்தவரை அரசின் கல்வி சார் நோக்கங்கள் தெளிவில்லாதவை, அரசால் ஒரு பொருட்டாக நடைமுறைப்படுத்தப்படாதவை என்பதால் நம்மிடையே திறனடைவில் தேக்கம் கொண்ட சில தலைமுறைகள் உருவாகிவிட்டன. இதன் நேரடியான மிக மோசமான விளைவுகளை அப்பட்டமாக நாம் இனிமேல்தான் அனுபவிக்கப் போகிறோம் என்பது கசப்பான, நெஞ்சைப் பிசையும் உண்மை.

பட்டதாரி பார்வையற்றோரில் சரிபாதிக்கு மேல் தன்னுடைய எழுத்தான பிரெயிலறிவோ, அல்லது அதை ஓரளவேனும் ஈடுகட்டும் கணினி அறிவோ இல்லாதவர்கள் பெருகிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அனைவரின் கையிலும் திறன்பேசிகள் ஏந்தித் தெறிக்கவிடுகிறார்கள்.

என்ன செய்யலாம் என்று யோசித்த பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கணினிப் பயிற்சி என்ற பெயர்ப்பலகையோடு சில ஆண்டுகளாக வளம் வருகிறார்கள். போதிய பலன் கிட்டியதா என்றால் அதுதான் இல்லை. காரணம் பயிற்சி முடித்த பெரும்பான்மைப் பட்டதாரிகளிடம் சொந்தமாகக் கணினி இல்லை. அரசும் பள்ளி மாணவர்களுக்கான இலவச மடிக்கணினித் திட்டத்தைச் சிறப்புப்பள்ளிகளுக்கு வழங்குவதை நிறுத்திப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. வறுமையால் வாங்கும் சக்தியும் இல்லை. அதை உணராமல் இருக்கும் வண்ணம் போட்டுக்கொள்கிற மரப்பூசிதான் திறன்பேசிகள் (Smart Phones).

“கார் ஓட்டத்தான் கற்றுக்கொடுக்கலாம், கார் வாங்கித் தரச் சொன்னால் எப்படி” என்று கேட்பவர்களுக்கு பதில் இதுதான். எப்படி ஒரு உடல் ஊனமுற்றவருக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கில் விடுதலையோ, அப்படிப் பார்வையற்றவர்களுக்கு இனி கணினிதான் வாழ்க்கை. தற்சார்பு, சமத்துவம் பெரிய வார்த்தைகளெல்லாம் எதற்கு? அவன் வாழ்க்கை முழுக்க தன்னைச் சூழ்ந்திருக்கும் இருட்டை விரட்டப் போராடிக்கொண்டிருக்கிறானே, அந்தப் போராட்டத்தில் வெற்றியை அவனுக்கு நிச்சயம் ஈட்டித் தருகிற போர்க்கருவி கணினிதான்.

ஆகவே, அரசே! சங்கங்களே! தொண்டு நிறுவனங்களே! பெருந்தன்மை கொண்ட பெரியோர்களே! தாராள மனம் படைத்த தனவான்களே! கைத்தடி, கருப்புக் கண்ணாடி, சோப்பு, சீப்பு, பிஸ்கட் பிரியாணி, துணி, தேவைக்கு அவ்வப்போது ஐநூறு, ஆயிரம், எனப் பார்வையற்றோருக்கு வாரி வழங்கியது போதும். அத்தனையையும் நிறுத்துங்கள். தரமான ஒரு கணினியோ, மடிக்கணினியோ பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருக்கிற ஒவ்வொரு பார்வையற்றவரின் கையிலும் இருப்பதை உறுதி செய்யுங்கள் போதும். மிச்சத்தை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

ஒவ்வொரு சிறப்புப்பள்ளித் தலைமை ஆசிரியர்களும், தங்களிடம் மேல்நிலைக் கல்வியை முடித்து வெளியேறும் அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி ஒன்றைத் தாய்வீட்டு சீதனமாகத் தந்து அனுப்புவதைக் குறிக்கோளாகக் கொள்ளுங்கள். பிறகு அவர்களே உங்கள் பள்ளிக்கான யூட்டூப் வீடியோக்களைத் தயாரித்துத் தருவார்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உங்கள் புரவலர்களிடம் இந்த ஒற்றைச் சிந்தனையை மட்டும் உடனே புகுத்துங்கள். எத்தனை நாளைக்குத்தான் கையில் கிடைத்த கணினியைத் தொட்டுத் தொட்டு முகர்ந்து பார்ப்பது, நீங்கள் தேடிப் போகவேண்டாம், அவர்களே பயிற்சி வேண்டி வருவார்கள்.

விலை அதிகம் ஆயிற்றே! கையில் கொடுத்துவிட்டால் பயன்படுத்துவார்களா, விற்றுவிடுவார்களா? கணினி பயன்படுத்தும் திறமை அனைவருக்கும் இருக்குமா? என்ற கவலையையெல்லாம் முதலில் நீங்கள் விட்டுவிடுங்கள். அவர்கள் போட்டுடைக்கட்டும் அல்லது பீரோவில் பூட்டிவைக்கட்டும். அப்படிப் பூட்டிவைப்பவர்கள் பிச்சை எடுக்கட்டும். அதுபற்றி நமக்கென்ன?

இந்த ஆண்டிலிருந்து பார்வையற்றோரின் ஒற்றை மறுவாழ்வு கணினிதான் என்பதைச் சிந்தித்து, பன்னிரண்டாம் வகுப்பு முடித்த ஒவ்வொரு பார்வையற்றோர் கையிலும் கணினியைக் கொண்டு சேர்க்க உழைப்போம். அனைவருக்கும் கணினித் திட்டம் என்பதுதான் பார்வையற்றோர் மறுவாழ்வை முதன்மை நோக்கமாகக்கொண்ட ஒவ்வொருவரின் அடுத்த ஐந்தாண்டு திட்டமாக இருக்கட்டும்.

அனைவருக்கும் தொடுகை மின்னிதழ் சார்பில் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

பகிர

1 thought on “தலையங்கம்: அனைவருக்கும் கணினித் திட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *