Categories
காணொளிகள் தொடுகை மின்னிதழ்

சிந்தனை: புரட்சிக்கான முதல் விதை, உரையாடல்

சாய்வு நாற்காலியின் ஐந்தாம் பகுதி, மனதிற்கு ஆறுதலையும், நம் மூத்தோர் மீதான ஒருவிதப் பெருமித உணர்வையும் நம்முள்ளே கடத்துகிறது.

ஓய்வு பெற்ற மூத்த ஆசிரியர் திருமதி. சந்திரிகா அவர்களோடான உரையாடல் பலரையும் ஈர்த்திருக்கிறது. சிலர் மிகவும் நீண்ட உரையாடல்கள் எனக் கொஞ்சம் சலிப்படையவும் கூடும். இன்னும் சிலர், அவருடைய பேச்சு ஒருதலைச் சார்பு என்றும் விமர்சிக்கிறார்கள்.

எல்லாவற்றிலும் பகுதியளவு உண்மை இருக்கவே செய்கிறது. ஆனாலும் அவருடைய உரையாடல் நடை தனித்துவமானது. சில தருணங்களில் நம்மைப் பேட்டி எடுப்பவராக அவர் கருதினாலும், பல தருணங்களில் “இல்லடா கண்ணா, ஐயா என்னயா நீ” என உரையாடல் வழியே உறவாடும்போது, நாமும் நம் அம்மாவின் அல்லது மூத்த அக்காளின் கடந்த காலத்தை உடனிருந்து கேட்கிற பூரிப்பை அடைகிறோம்.

அவர் சொல்லும் பல நிகழ்வுகள் நம்முடைய நிகழ்காலத்துக்கும் மிகமிக நெருக்கமானவை. ஆகவே, அவற்றில் நமக்குப் பல படிப்பினைகள் இருக்கின்றன. அவருடைய கோர்வையான பேச்சின் வழியே, தான் கடந்துவந்த பாதையை மட்டுமல்ல, பார்வையற்ற சமூகத்தின் அரை நூற்றாண்டு பயணத்தையும் சேர்த்தேதான் முன்வைக்கிறார்.

அந்த வகையில், சாய்வு நாற்காலியின் ஐந்தாம் பகுதி மிக முக்கியமானதாகப் படுகிறது. அதிலும், சங்கங்களின் தலைவர்களால், அவர்களின் தன்னை முன்நிறுத்தும் குணங்களால், ஒருவித விரக்தியோடே போராட்டம் என்றாலே ஒவ்வாமையுடன் ஓடி ஒளிந்துகொள்ளும் நமது தம்பிகள்/தங்கைகள் இந்தப் பகிர்வை நிச்சயம் கேட்க வேண்டும்.

இன்று நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு வாய்ப்புக்குப் பின்னாலும் ஒரு வரலாறு இருக்கிறது. இத்தனை தொழில்நுட்ப வாய்ப்புகள் இருந்தும் நாம் பெரிதாக எதைச் சாதித்துவிட்டோம்? எந்த ஒரு தொழில்நுட்ப வாய்ப்போ, தடையற்ற போக்குவரத்தோ ஏன் தன்னுடைய கோரிக்கையை முறையாக எழுதித்தர ஒரு எழுத்தரோ கிடைக்காமல் அல்லாடிய நம் மூத்தவர்கள் சாதித்ததில் நூற்றில் பத்தைக்கூட நம்மால் சாதிக்க முடியவில்லையே ஏன்?

ஏனென்றால், நமக்குப் பல விடயங்களில் ஆழ்ந்த புரிதலோ அறிவோ இல்லை. அத்தகைய புரிதல்களை ஏற்படுத்தும் வழிகாட்டிகளும் இல்லை. உண்மை வழிகாட்டிகளை ஏற்கவும் நாம் தயாராக இல்லை.

ஒரே ஒரு நிகழ்வையோ, அறிதலையோ வைத்துக்கொண்டு ஒட்டுமொத்தத்தையும் முடிவு செய்துவிடுபவர்களாக இருக்கிறோம் நாம். எதிலும் முழுமை நோக்கு நமக்கு கைகூடவே இல்லை. இங்கே பலரிடம் முனைப்பு இருக்கிறது. சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற நினைப்பும் பாடாய் படுத்துகிறது. ஆனால், நான் செய்வேன், நானே செய்வேன் என்று அவரவரும் அவரவர் இடத்திலேயே நின்றுகொண்டிருப்பதுதான் பிரச்சனை.

இத்தகைய இக்கட்டான காலகட்டத்தில், சாய்வு நாற்காலியின் ஐந்தாம் பகுதி, மனதிற்கு ஆறுதலையும், நம் மூத்தோர் மீதான ஒருவிதப் பெருமித உணர்வையும் நம்முள்ளே கடத்துகிறது. கேட்டுப் பாருங்கள். உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதை உரையாடல் வழியே பகிருங்கள்.

ஆம்! புரட்சியின் முதல் விதை உரையாடல்தான். தூவுங்கள்! தூவிக்கொண்டே இருங்கள்.

சாய்வு நாற்காலியின் ஐந்தாம் பகுதியைக் கேட்க:

https://www.youtube.com/watch?v=MDtyc86pZoI


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.