Categories
அறிவிப்புகள் தொடுகை மின்னிதழ்

தொடுகை அஞ்சல்: ஒன்றுகூடுவோம், உரையாடுவோம்!

வாட்ஸ் ஆப் குழு என்ற ஏற்பாடே நமது டீக்கடை பெஞ்சுகள் போலக் கூடலுக்கும் கலைதலுக்குமான ஓர் இடம் அவ்வளவுதான். அங்கே நாம் நிகழ்த்தும் உரையாடல்கள், பகிரும் தகவல்களுக்கு ஒரு நிலைத்தன்மை இல்லை.

தொடுகை மின்னிதழ் சின்னம் மற்றும் லூயி பிரெயில் இணைந்த புகைப்படத்தில் thodugaimail என எழுதப்பட்டுள்ளது.

அன்புத் தோழமைகளே!

தகவல்கள் சூழ் உலகில் உறைவது தவிர்க்க இயலாததாகிவிட்டது. இன்று பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகள் என்ற தலைப்பின்கீழ் பொதுத்தள செய்தி ஊடகங்கள் ஏதேனும் ஒன்றில் ஒரு செய்தியாவது வராத நாளில்லை. நாமும் அவற்றை அப்படியே வெட்டி, ஒட்டி நாம் உலவும் வாட்ஸ் ஆப் குழுக்களில் பகிர்ந்துவிட்டு அமைதியடைகிறோம்.

நம்மில் பலர் எங்கிருந்து நாம் அந்தத் தகவலை எடுத்தோமோ அந்தத் தளத்துக்கு ஒரு நன்றிகூடச் சொல்வதில்லை. இப்படிப் பகிரப்படும் செய்திகள் அன்றைக்கு செய்திகளாகவும், நாட்பட நாட்பட சேதிகளாகவும் குறுகி, மறைந்து காணாமலேயே போய்விடுகின்றன. நமக்கென்று ஒரு அவசரம் நேருகையில் அந்தச் செய்தியின் தேவை எழுகையில் அது நம் கையில் அகப்படுவதே இல்லை.

மேலும் வாட்ஸ் ஆப் குழு என்ற ஏற்பாடே நமது டீக்கடை பெஞ்சுகள் போலக் கூடலுக்கும் கலைதலுக்குமான ஓர் இடம் அவ்வளவுதான். அங்கே நாம் நிகழ்த்தும் உரையாடல்கள், பகிரும் தகவல்களுக்கு ஒரு நிலைத்தன்மை இல்லை.

எனவே, பார்வையற்றோர் குறித்த உரையாடல்கள் அனைத்துத் தளங்களிலும் நிகழ வேண்டும் என்பது எவ்வளவு அவசியமோ, அவை ஒரு தொகுப்பாக எதிர்காலச் சமூகத்துக்குக் கையளிக்கப்பட வேண்டும் என்பது அவசியத்திலும் அவசியமான ஒன்று. அத்தகைய முயற்சிகள் தமிழ்ச் சூழலில் மின்னிதழ்கள் வாயிலாகச் சிறிதும் பெரிதுமாய் நடந்துகொண்டிருந்தாலும், அவற்றிலும் மொழி, பொருண்மைகள், பங்கேற்பு போன்ற தடைகள் உள்ளன. அந்தப் போதாமைகளையும் ஈடுகட்டும் வகையில், தமிழில் பார்வையற்றோருக்கான ஒரு மின்னஞ்சல் குழுமத்தை ‘தொடுகை அஞ்சல்’ (Thodugaimail) என்ற பெயரில் நமது
ஞானத்தகப்பன் லூயி பிரெயில் அவர்களின் பிறந்த நாளான இன்று, (ஜனவரி 4) தொடங்குவதில் மகிழ்வடைகிறது தொடுகை மின்னிதழ் குழு.

இந்தக் குழுமம் தமிழ் பேசும் பார்வையற்றோருக்கானது என்றாலும், பதிவுகள் மற்றும் பகிர்வுகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அமையலாம்.

குழுமத்தில் இணைய விரும்புவோர், thodugaimail@googlegroups.com என்ற மின்னஞ்சல் வழியே எங்களைத் தொடர்புகொள்ளவும்.

மேலும் சில முக்கிய நிபந்தனைகள்:

*மாற்றுத்திறனாளிகள் தொடர்பான தகவல்கள், சிந்தனைகள், பகிர்வுகள் மற்றும் உரையாடல்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்.

*பதிவுகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் இடம்பெறலாம்.

*எந்த ஒரு செய்தியையும் அப்படியே நகல் செய்வதைக் காட்டிலும், ஒரு சிறு குறிப்புடன் அந்தச் செய்திக்கான இணைப்பைப் பகிரலாம்.

*தனிப்பட்ட நல விசாரிப்புகள், காழ்ப்புகள், வசைச்சொற்கள் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்.

*மின்னஞ்சலில் இணைக்கப்படும் ஒலிக்கோப்புகள், காணொளிகள், புகைப்படங்கள், பிடிஎஃப் கோப்புகளுக்கான விளக்கங்கள் ஒரு சிறுகுறிப்பாக இடம்பெற வேண்டும்.

 பொறுப்புத் துறப்பு:

குழுமத்தில் இணைந்து பயணிக்கும் ஒவ்வொருவரும் வயதிலும் அறிவிலும் முதிர்ச்சியுடையவர்கள் என்பதால், தங்கள் கண்ணியத்தையும் சுய மரியாதையையும் பேணிக்கொள்ளும் கடமையும் பொறுப்பும் முதன்மையாக அவரவருக்கே உண்டு. எனவே, குழுமம் தனிப்பட்ட ஒருவரின் நடத்தைக்குப் பொறுப்பேற்காது. அதேவேளை, மேற்கண்ட விதிகளைக் கடைபிடிக்காதவர்கள், குழுமத்தின் முதன்மை நோக்கத்தையே சிதைக்கும் நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுபவர்கள் என அடையாளம் காணும் எவரையும் எப்போது வேண்டுமானாலும் நீக்கிவிடும் உரிமை குழுமத்தின் நிர்வாகிகளுக்கு உண்டு.

குழுமத்தில் பதிவிடப்படும் அல்லது பகிரப்படும் தகவல்களின் உண்மைத்தன்மைக்கு பகிர்வோர் மற்றும் பயனாளிகளே  பொறுப்பேற்கக் கடமைப்பட்டவர்கள், குழுமம் எவ்வகையிலும் பொறுப்பேற்காது.

தொடுகை அஞ்சல்: உரையாடுவோம், உரையாடல் நிமித்தமாய் ஒன்றுகூடுவோம்.

அனைவருக்கும் லூயி பிரெயில்தின வாழ்த்துகள்.

***தொடுகை மின்னிதழ்

https://groups.google.com/g/thodugaimail


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.