Risk Factor

Risk Factor

ஆக்கம் தொடுகை செய்திகள் வெளியிடப்பட்டது
health insurance

எனது நண்பர் ஒருவர்

star health

வாடிக்கையாளர் சேவை மையத்தின் எண்ணான 18004252255கு  போன் செய்து ஒரு மருத்துவக் காப்பீடு எடுப்பது குறித்துப் பேசியுள்ளார்.

அவர், தானும் தன் மனைவியும் மாநில அரசு ஊழியர்கள் என்பதைத் தெரிவித்த வரைக்கும் சிக்கல் இல்லை. நண்பர், தாங்கள் இருவருமே முழுப் பார்வையற்றவர்கள் என்று சொன்னதுதான்  தாமதம், உடனேயே “முழுப் பார்வையற்றவர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க இயலாது” என எதிர்முனையிலிருந்து பதில் வந்திருக்கிறது.

இந்தத் தகவலை உறுதி செய்யும் பொருட்டு, மேற்கண்ட எண்ணைத் தொடர்புகொண்ட எங்களுக்கும் கிடைத்த பதில் அதுதான். அதற்காகச் சொல்லப்பட்ட காரணத்துக்கு சிரிப்பதா, சீறுவதா தெரியவில்லை. காரணம் இதுதான், “முழுப் பார்வையற்றவர்களுக்கு விபத்துக்குள்ளாகும் சாத்தியங்கள் (risk factors) அதிகம்.”

மாற்றுத்திறனாளிகள் என்ற காரணத்தைச் சொல்லி, அவர்களுக்கு மருத்துவக் காப்பீட்உ மறுக்கப்படக் கூடாது என ‘சௌரப் சுக்லா VS மேக்ஸ் பியூபா’ வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை  வழங்கியிருக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்.

2022 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் தொடங்கி நடைபெற்ற இந்த வழக்கில், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை  ஆணையத்திற்கும்

(Insurance Regulatory Development Authority of India IRDAI)

சில வழிகாட்டல்களைச் செயல்படுத்தும்படி அறிவுரைகளை வழங்கியிருக்கிறார் நீதிபதி பிரதீபா M. சிங்.

அதன்படி, தங்கள் மருத்துவக் காப்பீடு ஒழுங்குமுறை விதி எண் 8(B) ‘யில் திருத்தம் செய்து, மாற்றுத்திறனாளிகளைக் குறிப்பதான (sub standard lives) என்ற சொற்பயன்பாடு அகற்றப்பட்டிருக்கிறது.

மேலும், டெல்லி  உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டலுக்கு இணங்க, கடந்த ஜனவரி 18ஆம் தேதி, பல்வேறு மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் பங்கேற்ற கூட்டத்தினை நடத்தியது இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம்.  அந்தக் கூட்டத்தில், காப்பீட்டு நிறுவனங்களின் உயர் அலுவலர்கள் ஆறுபேரை உள்ளடக்கிய ஒரு குழுவை அமைத்து, மாற்றுத்திறனாளிகள், ஹெச்ஐவி  நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிறப்பாகவும் உள்ளடக்கும் வகையிலும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை (policies) வடிவமைத்து வெளியிடுவது என முடிவு செய்யப்பட்டது.

திட்டத்தை வடிவமைக்கும் வகையில், ஆணையமே ஒரு மாதிரிப் படிவத்தினை தயார்செய்து, அது தொடர்பான சுற்றறிக்கை ஒன்றினையும் கடந்த பிப்பரவரி மாதம் அனைத்து நிறுவனங்களுக்கும்  அனுப்பியது.

இந்தத் தகவல்களை உயர்நீதிமன்றத்தில் பகிர்ந்துகொண்ட ஆணையம், நான்கு அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட சுமார் 29 காப்பீட்டு நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகள், ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு என சிறப்புடனும் உள்ளடக்கும் வகையிலும் புதிய காப்பீட்டுத் திட்டங்களை (policies) வடிவமைத்துள்ளதாகவும் கூறி, அந்த நிறுவனங்களின் பெயர்ப்பட்டியலையும் சமர்ப்பித்தது. அந்தப் பட்டியலில்  முதல் இடம் பிடித்திருப்பது Star Health நிறுவனம்தான்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்்ந்த இந்தத்  தீர்ப்பின் வாயிலாக, மருத்துவக் காப்பீடு குறித்தும், அது மாற்றுத்திறனாளிகளுக்கு மறுக்கப்படுவது சமத்துவம் ஆகாது என்பது பற்றியும் நீதிபதி நிறைய கருத்துகளை வெளியிட்டுள்ளார். அது குறித்தெல்லாம் சட்டம் அறிந்த வல்லுநர்கள் விரிவாக எழுத வேண்டும் என விழைகிறேன்.

நிலைமை இப்படியிருக்க, Star Health நிறுவனம் தன் வாடிக்கையாளர் சேவை மையத்தின் வழியே நமக்கு வழங்கும் தகவல் முரணாக இருக்கிறது. உண்மையில், சமீபத்திய நகர்வுகள் குறித்தும், தங்கள் நிறுவனத்தின் மாறிவிட்ட நிலைப்பாடுகள் குறித்தும் தங்கள் சேவை மைய அதிகாரிகளுக்கு நிறுவனத்தால் போதிய தகவல்கள் வழங்கப்படவில்லையோ என்ற ஐயம் எழுகிறது.

டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இத்துடன் இணைக்கப்படுகிறது. விரிவாகப் படித்துவிட்டு, Star Health நிறுவனத்தின் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு உண்மை அறிய முயலுங்கள். அப்படியே இதர காப்பீட்டு நிறுவனங்களின் நிலைப்பாடுகள் குறித்தும் அறிய வேண்டியது அவசியம்.

முழுப் பார்வையற்ற ஒருவருக்கு மருத்துவக் காப்பீடு பெறும்  வாய்ப்பை மறுக்கும்  செயலினை, அவரின் வாழும் உரிமையை பரிகசிக்கும் முயற்சி என்றே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

ஒருகாலத்தில் முழுப் பார்வையற்றவர்களுக்கு ஏடிஎம் வழங்க மறுத்து வங்கிகள் சொல்லிவைத்தாற்போல் உதிர்த்ததும், காப்பீட்டு நிறுவனங்கள் ஒரு முழுப் பார்வையற்றவருக்கு எதிராக என்றைக்கும் கைக்கொள்ளும் சொற்பயன்பாடும் இதுதான், ‘risk factor.’

மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016க்குப் பிறகும் இதுதான் நாட்டின் நிலை என்றால், உண்மையில் Risk factor என்பது எது?

சட்டமா? அல்லது சமூகத்தின் மனப்போக்கா?

***சகா,

தொடர்புக்கு: anbullasaga@gmail.com

தீர்ப்பைப் படிக்க மற்றும் பதிவிறக்க:

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *