பகிர்வு: பாடல்கள் பலவிதம்

பகிர்வு: பாடல்கள் பலவிதம்

ஆக்கம் X செலின்மேரி வெளியிடப்பட்டது

இசைக்கு இசைந்தபடி இந்த பூமி அசைந்தாடுகிறது. குழந்தையாகப்  பிறந்ததிலிருந்தே பாடல்களைக் கேட்டு வளர்கின்றோம். வானொலியில் ஒளிபரப்பாகும் பாடல்கள், திருவிழாக்களின்போது இசைக்கப்படும் பாடல்கள், கேசட்டுகளில் பதியப்பட்டு கேட்கும் பழைய சினிமாப்பாடல்கள், பழைய கிறிஸ்தவப் பாடல்கள் போன்றவை என் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.  எல்லாப் பாடல்களுக்கும், அதன் பொருள் புரிந்து கேட்கும் பழக்கம் பள்ளியில் சேர்வதற்கு முன்பிருந்தே எனக்கு இருந்தது. அப்போது ஓவ்வொரு பாடலுக்கும் அப்பா பொருள் சொல்லித்தருவார். ‘பள்ளிக்கூடம் போகலாமா’ பாடலைக் கேட்டுவிட்டு, அப்பாவிடம் “பள்ளிக்கூடத்தில் சொல்லித் தராமல் பாடம் எப்படிப் புரியும்” என்று கேட்டதற்கு, “குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு விளக்கம் சொல்லாமலே பாடங்கள் புரியத் தொடங்கும்” என்றார். அந்த வயது வரும்போது, இயற்கை எங்களிடமிருந்து அவரைப் பிரித்துவிடும் என்பது அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

பள்ளியில் சேர்ந்தபோது நிறைய புதிய கிறிஸ்தவப் பாடல்களைப் பல மாணவர்கள் பாடக் கேட்டு வியந்து எழுதி மனப்பாடமும் செய்துகொள்வதுண்டு. எங்கள் பள்ளியில் கலை நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். சிறுவயதிலிருந்து எனக்குப் பாடல்கள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். நான் படித்த பள்ளியில், எங்கள் அருட்சகோதரிகளுக்கான நாம விழாக்கள், ஆசிரியர்தின விழா, சூசையப்பர்தின விழா, எங்கள் பள்ளி டோனர்களின் பிறந்தநாள் மற்றும் திருமண நாட்கள்   போன்ற சில சிறப்பு நிகழ்வுகளுக்கு மாணவர்களே சினிமா மெட்டுக்களை எடுத்து,  தம்  சொந்த வரிகளைப் போட்டு நிரப்பி, எங்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்ட இசைக்கருவிகளை இயக்கிப் பாடல்களைப் பாடி எங்கள் பயிற்றுவிப்பாளர்களை மகிழ்விப்போம். ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’, ‘செம்பருத்திப் பூவே’, ‘செவ்வந்திப் பூவுக்கும் தென்பாண்டிக் காற்றுக்கும்’, ‘உனை நினைத்து நான் எனை மறப்பது’, ‘வந்தேண்டா பால்காரன்’, ‘நிலவே வான் நிலவே’, ‘எனக்கொரு ஸ்நேகிதி’, இவை எங்களது மெட்டுப் பாடல்களுள் சில. நானும் அழகுலக்‌ஷ்மியும் சேர்ந்துதான் பாடல் வரிகளை எழுதுவோம். வரிகளைச் சிந்திப்பது என் பொறுப்பு. பாடல் வரிகளோடு பொருத்திப் பார்த்து நான் அந்த வரிகளை மறப்பதற்குள் பிரெயிலில் எழுத்தாக்குவது அழகுலக்‌ஷ்மியின் பொறுப்பு. பள்ளியில் தொடங்கிய பழக்கம் வாழ்க்கையின் அடுத்தடுத்தக் கட்டங்களிலும் என்னுடன் பயணித்தது.

ஒன்பதாம் வகுப்புக்கு ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் சேர்ந்தேன். அது டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற சமயம். அப்பொழுது எம் பள்ளியின் பார்வையற்றோர் சார்பாக நாங்கள் சிலர், ‘செம்பருத்திப் பூவே’ பாடலுக்கு மெட்டமைத்து, அவர் பொறுப்பேற்ற அன்று வழிபாட்டுக் கூட்டத்தில் பாடினோம். அந்த வரிகளுக்கு எழுத்துவடிவம் கொடுத்து எம் பள்ளியின் சார்பாக  அனுப்பிவைத்தார்கள். அந்தப் பாடலுக்கு அவரிடமிருந்து எங்களுக்கான சில அறிவுரைகளைத் தாங்கிய  ஏற்புக் கடிதம் கிடைத்தது.

அந்த ஆண்டு ஆசிரியர்தினக் கொண்டாட்டங்களுக்காக ‘என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச’ என்ற சொக்கத்தங்கம் பாடலுக்கு வரிகளை எழுதி, ஹார்மோனிய இசையுடன் பாடி மகிழ்வித்தோம்.

அடுத்து ஐஎபி , பதினோராம் வகுப்பில் ‘பூவே முதல் பூவே’ பாடலுக்கான வரிகள் ஆசிரியர் தினத்திற்காக எழுதப்பட்டன.  அடுத்தடுத்து எவ்வளவோ பாடியிருக்கிறேன்; எழுதி இருக்கிறேன்; எந்த வரியும் நினைவில் இல்லை.

கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிரிவு உபச்சார விழாவில்,  எங்களுடைய பேராசிரியர்களுக்காக ‘வெண்மேகம் பெண்ணாக உருவானதோ’ பாடலில் மெட்டில் வரிகளை அமைத்து, கொடுக்கப்பட்ட குறைந்த நேரத்தில் அவசர அவசரமாக எழுதிப் பாடினேன். அடுத்தநாள் அந்தப் பாடல் வரிகளைக் கேட்ட என் தோழிகளுக்குக்கூட திரும்பச் சொல்லும் அளவிற்கு வரிகள் நினைவில் இல்லை.

அடுத்தடுத்து பணிவாய்ப்பைப்  பெற்ற பிறகு பாடல் எழுதுவதை நிறுத்திவிட்டேன். பிறகு தொழில்நுட்பம் வளரவளர கொஞ்சம்கொஞ்சமாக அலைபேசியில் தட்டச்சு செய்யத் தொடங்கினேன்.

என் தோழி  அழகுலக்ஷ்மி ‘Reaching The Unreached’ என்ற ஆசிரமத்தில் தான் தங்கியிருந்தாள். படிக்கும் காலங்கள் தவிர விடுமுறை நேரங்களை அவள் அங்கேதான் செலவழிப்பாள்.

அவள் தங்கியிருந்த ஆசிரமத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளுக்கான பாடல்களை நாங்கள் இருவருமாக அலைபேசியில் உரையாடியபடி, தேவை ஏற்படும்போதெல்லாம், நேரத்தை உருவாக்கிக்கொண்டு  எழுதுவதுண்டு. பெரும்பாலும் பள்ளி இடைவேளை நேரங்களிலும், பாப்பாவை உறங்க வைத்த பிறகும் பாடல்களை எழுதுவோம். நாங்கள் வார்த்தைகளைச் சிந்தித்து எழுதுவதோடு சரி. அந்தப் பாடல் இசைக்கப்படும் விதம், வெளிவரும் நேரம், பாடகர்களின் குரல்வளம் என்று எல்லா பொறுப்புக்களையும் அழகுலட்சுமி பார்த்துக்கொள்வார்.

அந்த ஆஸ்ரமத்தின் நிறுவனர் பெயர் ஜேம்ஸ் கிம்டன். அவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அவரை அங்கு வசிக்கும் எல்லோருமே தாத்தா என்றுதான் அழைப்பர். ஒரு மாலைப்பொழுது அழகு  அந்தத் தாத்தாவுக்காக அவர் பாடிய பாடலை வீடியோவாக என்னுடன் பகிர்ந்துகொண்டாள். அந்தப் பாடலுக்கான யூட்யூப் லிங்க் இதோ.

கேட்பதற்கு மிகவும் எளிமையாக இருந்தது. இசையோடு இசைந்து ஒலித்தது என் தோழியின் குரல். வரிகள் பாடலுக்கு மேலும் மெருகூட்டின. எனக்கு அந்த வரிகளைக் கேட்டபோது, எங்களைப் போலவே யாரோ சிந்தித்திருப்பதாகத் தோன்றியது. அதை அவளிடம் சொல்ல, அவள் உடனடியாக கலகலவென சிரித்துவிட்டாள். எனக்கு எதுவும் புரியாமல் மீண்டும் காரணம் கேட்க, “ஐயோ செலின்மேரி, நீயும் நானும்தான் சேர்ந்து ஒரு மத்தியான வேளையில் எழுதினோம்” என்று சொல்ல எனக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி ஏற்பட்டது. இசையிலும் எழுத்திலும் ஆர்வமுடைய என் நண்பர்களோடு பகிர்ந்துகொண்டு, அவர்களுடைய கருத்துக்களையும், பாராட்டுமொழிகளையும் கேட்டுச் சுவைத்தேன்.

சிறுவயதில் உருவான பாடல் எழுதும் பழக்கம் இப்பொழுதும் தொடர்கிறது. முக்கிய விழாக்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் அல்லது வாழ்வின் ஏதாவது சோகமான தருணங்களைப் பாடலாக வடிப்பது என்று முடிவெடுத்து, சில சமயங்களில் வரிகளை மட்டும் எழுதுவதுண்டு.

முதலில் நான் ஏதாவது ஒரு பாடலை எடுத்துக்கொண்டு, அதன் டியூனுக்கு வரி எழுதுவேன். பிறகு இசையமைப்பாளர்கள் கிடைத்தபிறகு வரி அமைப்பை மட்டும் எழுதி, whatsapp குழுக்களிலோ, தனிப்பட்ட நபருடைய எண்ணிற்கோ அனுப்பிவைப்பதுண்டு. அப்படியாக ஐந்து பாடல்களுக்கு இசை வடிவம் கிடைத்தது.

எழுத்து இசையாக்கப்பட்ட பாடல்கள் உட்பட நான் எழுதிய எந்தப் பாடலுக்குமான  வரிகள் நினைவில் இல்லை.

2017ல் ஒருமுறை, பள்ளியில் என்னுடைய செல்போன் தொலைந்து விட்டது. அந்த வருத்தத்தில், ‘மொபைலே மொபைலே நீ எந்தன் ஹெல்மெட்டா ஹெல்த் மேட்டா சொல் சொல்’ என்று ஒரு பாடலை எழுதி, இசைக்குழுமத்தில் பகிர்ந்தேன். அதிசயத்திலும்  அதிசயமாக அந்தப் பாடலுக்கு இசைவடிவம் கிடைத்திருந்தது. நண்பர் ஹிதையத்துல்லா  சொந்தமாக மெட்டமைத்து, தம்முடைய கணீர்க் குரலில் பாடி அசத்தியிருந்தார். அந்தப் பாடலை முதன்முறையாக நான் கேட்டபோது நான் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளில்  எழுதிவிட முடியாது.

அடுத்தடுத்து ஆசிரியர்தினப் பாடல், தமிழ்ப்புத்தாண்டு பாடல், சுதந்திரதினப் பாடல், கொரோனாப் பாடல் போன்ற பாடல்களுக்கு  இசைவடிவம்  கிடைத்தது. அத்தனைக்கும் இசையமைப்பாளரும், பாடகரும் நண்பர் ஹிதையதுல்லா தான்.

அதிலும் சுதந்திர தினத்திற்காக எழுதிய ‘இது என் பாரதம்’ பாடல் தனித்துவம் மிக்கது. எதார்த்தமாக இருவரும் உரையாடும்போது, “நாம் இருவரும் பாடல் உருவாக்கி சிலகாலம் ஆகிவிட்டது” என்று உரையாடலின் நடுவே இடம்பெற்ற வரிகளுக்கு ஒரே நாளில் முழு வடிவம் கிடைத்துவிட்டது. மறுநாள் காலையில் வரிகளை அனுப்பிவிட, அன்று மதியமே நண்பர் அதற்கு இசையமைத்துக்  கொடுத்ததோடு, அருமையாகப் பாடியும் இருந்தார்.

கொரோனாப் பாடலைப் பொறுத்தவரை, அது எழுதப்பட்ட  காலகட்டத்தில் அதைப் பாடலாக்குவதற்கான சூழல் அமையவில்லை. எழுதி ஓராண்டிற்குப் பிறகு, அது பாடலாக உருப்ப்பெற்றது. இன்னும் அந்தப் பாடலின் இசையும் வரிகளும் பலரை ஈர்த்ததாகக் கேள்விப்பட்டு மகிழ்ந்தேன்.

தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கும்விதமாகச் சில வரிகளை எழுதி, சாதாரணக் கவிதையாக இசைக்குழுவில்  பகிர, இசையோடு கேட்டால் நன்றாக இருக்கும் என்று நண்பர்கள் கருத்து தெரிவிக்க, அதுவும் இசைவடிவம் பெற்றது.

ஆசிரியர் தினத்திற்காக சில வரிகளை எழுதி வாட்ஸ் அப்பில் பகிர்ந்தபோது, அதற்கு ஒரு புது இசைவடிவம் கிடைக்கும் என்றெல்லாம் சிந்திக்கவே இல்லை.

நான் பார்த்துப் பார்த்து எழுதிய பல பாடல்களுள் ஐந்துக்கு மட்டும் இசைவடிவம் கிடைத்திருக்கிறது.

அத்தனையும் நண்பர் ஹிதை கைவண்ணத்தில் உருவானவைதான். பாடல் வரிகளை பிரெயிலில் எழுதிப் பாடுவதாக நண்பர் சொல்லக் கேட்டபோது நான் அடைந்த பெருமிதத்திற்கு அளவே இல்லை.

இதையத்துல்லா

ஒரு பாடலுக்கு இசையமைத்துத் தருவதாகச் சொன்ன நண்பரைக் கொரோனா கொன்று தின்றுவிட்டது.

எங்களுடைய பாடல்களைச் சுமந்து வருகிறது இதோ இந்த லிங்க்.

https://drive.google.com/drive/folders/1-44C_gLx5HtkRYGdUESnsA8JQym9pbQM

தொழில் நுட்ப வளர்ச்சி என்னுடைய எழுத்துக்கு உறுதுணையாக இருக்கிறது. முதலில் இண்டிக் கீபோர்டைப் பயன்படுத்தி ஒவ்வொரு எழுத்தாக தட்டச்சு செய்து கொண்டிருந்தேன். விவோ வாங்கிய போது, கூகுள் வாய்ஸ் டைப்பிங் கை கொடுத்தது. இப்போது சாம்சங் F62 வில் ஜி போர்டு பயன்படுத்தி பாடல்கள் மட்டுமல்ல, பெரிய பெரிய கட்டுரைகளையும் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன். Hope Foundation  மூலம் பெறப்பட்ட ஐ3 ப்ராசசருடன் கூடிய HP மடிக்கணினியைப் பயன்படுத்தித் தட்டச்சு செய்கிறேன்.

எவ்வளவோ பெரிய கட்டுரைகளும் கவிதைகளும் தராத நிறைவை, அளவில் சிறிய, சிறப்பான வரியமைப்பைப் பெற்ற, சுருக்கமாகச் சூழலை விளக்குகின்ற பாடல்கள் கொடுத்துவிடுகின்றன.  பலவிதமான பாடல்களை எழுதி,இசையோடு கலந்து  இசைபட வாழ்வோம்!

தொடர்புக்கு: celinmaryx@gmail.com

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *