பணி செய்யும் இடத்திற்கு எவ்வித இடைஞ்சலும் இன்றி சென்றுவரும் வகையில் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசால் மாதாந்திர ஊர்திப்படி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஊர்திப்படியைப் பெறுவதில்தான் எத்தனை தடைகள்? எத்தனை கேள்விகள்? கோடை விடுமுறையில் வழங்குவது சரியா? தற்செயல் விடு்ப்புக்குப் பிடித்தம் செய்ய வேண்டாமா?
இவ்வாறாகப் பல மேதகு தணிக்கையாளர்களின் மேதாவித்தன கேள்விகளுக்கெல்லாம் அரசு அவ்வப்போது தெளிவுரைகள் வழங்கி திணறடித்தாயிற்று. ஆயினும் தொக்கி நின்றது ஒரு துணைக்கேள்வி. அந்த ஒற்றைக் கேள்வியைப் பற்றிக்கொண்டு சில தலைமை அலுவலர்கள் பார்வையற்ற அரசு ஊழியர்களுக்கு ஊர்திப்படி ஆணை பிறப்பிப்பதில்லை என்பதும் கள நிலவரமாக உள்ளது.
அந்தக் கேள்வி இதுதான். “நீங்கதான் பஸ் பாஸ் வச்சிருக்கீங்களே! அதனால ஊர்திப்படி கொடுக்க முடியாது.” அடடா! என்னே ஒரு மகத்தான ஆராய்ச்சி.
அடிப்படை ஊழியர்களாக இருக்கும்போது, ஊதிய நிர்ணயம், ஊக்க ஊதியம் என்ற வகையில் கூடுதலாக ஏதாவது கிடைத்துவிடாதா என அரசாணைகளைப் பீறாய்பவர்கள், உயர் அலுவலர்களாய் வந்தபிறகு எவருக்கும் எதுவும் கிட்டிவிடக் கூடாதென்பதற்காக அரசாணைகளை அங்குலம் அங்குலமாய் ஆராய்கிறார்கள்.
நம்மவர்களும் அவர் கேட்பது சரிதான் என்ற எண்ணத்தில் ஊர்திப்படி பெறும் முயற்சியைக் கைவிட்டுவிடுகிறார்கள். ஆனால், போக்குவரத்துச் சலுகைகளைப் (travel concession) பெறும் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் ஊர்திப்படி பெறத் தடையில்லை என 1994லேயே தமிழக அரசு தெளிவுரை வழங்கிவிட்டது என்பதை மேற்கண்ட இரு தரப்பினரும் அறிவதில்லை.

“அது எப்படி சார்? இரண்டு சலுகைகள் அதுவும் ஒரே விடயத்துக்கு” எனக் கேட்பவர்களுக்கு இந்த விளக்கம்.
கிராமமானாலும், நகரமென்றாலும் பேருந்துகள் சாலைவசதியைச் சார்ந்து இயக்கப்படுபவை. நம் நாட்டிலோ பெரும்பாலான பள்ளிகள், அரசு அலுவலகங்கள் பேருந்துவழித் தடங்களுக்கு அருகில் அமைந்திருக்கிறது எனச் சொல்லிவிட இயலாது. பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, சில தொலைவு ஏன் பல சமயங்களில் 1 அல்லது 2 கிலோ மீட்டர்கள்கூட நாம் நடக்கவோ அல்லது ஆட்டோவில் செல்லவோ வேண்டியிருக்கும். அதாவது, இயன்றவர்கள் நடந்தே செல்லலாம். ஆனால், மாற்றுத்திறனாளிகள்?
அதனால், சாமி வரம் கொடுத்தாயிற்று, பூசாரி தடுப்பானேன்!
அரசு கடிதத்தைப் படிக்க மற்றும் பதிவிறக்க:
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
