வாழ்த்துகள் மாணவர்களே!

வாழ்த்துகள் மாணவர்களே!

ஆக்கம் தொடுகை செய்திகள் வெளியிடப்பட்டது

12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழக அரசால் நடத்தப்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான  சிறப்புப்பள்ளிகளின் மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று (08.05.2023) வெளியாகின. இந்தத் தேர்வில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான சிறப்புப்பள்ளி மாணவர்கள் கூடுதலான மதிப்பெண்கள் பெற்று தங்களுக்கும் தாங்கள் சார்ந்த பள்ளிகளுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

சென்னை சிறுமலர்ப் பார்வைத்திறன் குறையுடையோருக்கான மகளிர் மேல்நிலைப்பள்ளியின் நிவேதி, 600க்கு 576 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளார்.

இதன்மூலம், 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாநிலத்தின் இரண்டாவது பார்வையற்றவர் என்ற பெருமையைப் பெறுகிறார்.

தஞ்சைப் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் அபிஷேக், 565 மதிப்பெண்கள் பெற்று, மாநிலப் பார்வையற்றவர்களில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

இதேபோல, பாளையங்கோட்டை சிஎஸ்ஐ பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியின் மாணவன் ஹரி ஆகாஷ் மற்றும் சென்னை செயின்ட் லூயிஸ் பார்வைத்திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளியின் மாணவன் தரணிதரன் ஆகியோர், தேர்வில் முறையே, 564, 559 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளனர்.

உயர்கல்வியில் சட்டம் தொடர்பாகப் படிக்க விரும்பும் திருச்சி, பார்வைத்திறன் குறையுடைய மகளிருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்த்தி, தேர்வில் 549 மதிப்பெண்கள் பெற்றுச் சாதித்துள்ளார். இவருடைய அப்பா, அம்மா இருவருமே பார்வையற்றவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்தியப் பார்வையற்றோர் சங்கம் (IAB) நடத்தும் மேல்நிலைப்பள்ளியில் படித்த, நித்யா, வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடங்களில் தலா நூறு மதிப்பெண்கள் பெற்று, மொத்தத்தில் 546 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.

பார்வைத்திறன் குறையுடையோருக்கான புனித வளனார் மேல்நிலைப்பள்ளியின் மாணவி ஷாலினி, 542 மதிப்பெண்கள் பெற்று தான் சார்ந்த பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியிலுள்ள பார்வைத்திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளியின் ஜெயக்குமார் மற்றும் பூவிருந்தவல்லி, பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியின் மாணவன் ஏழுமலை இருவரும் 541 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சிறுவயதிலேயே தன் தந்தையை இழந்து, வறுமையோடு வாழும் ஏழுமலை, நன்கு  படித்து தான் ஒரு ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பது தன் வாழ்நாள் கனவு என்கிறார். இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான மாணவர்கள் வறுமைச் சூழலைப் பின்னணியாகக்கொண்டவர்கள். ஆனாலும், கல்வியின்மேல் அவர்கள் கொண்டுள்ள மாறா வேட்கைக்குத் தலைவணங்குகிறது தொடுகை.

இலக்குகளை அடைய, எதிர்காலம் சிறக்க< வாழ்த்துகள் மாணவர்களே!

***தொகுப்பு: U. சித்ரா மற்றும்

X. செலின்மேரி.

பகிர

3 thoughts on “வாழ்த்துகள் மாணவர்களே!

  1. மசிறப்பான முயற்சி வாழ்த்துகள் ..

    1. தங்களுடைய நேரத்தை இதழை படிப்பதற்காக செலவிட்டதோடு, மாணவர்களை வாழ்த்திய மைக்கும் நன்றி சிஸ்டர்

  2. நான் படித்த பூவிருந்தவல்லி அரசு பார்வையற்றோர் பள்ளியை தேடிக்கொண்டே இந்த பதிவை படித்தேன் கடைசியில் ஆவது அதன் பெயர் வந்தது என்று எண்ணி மகிழ்கின்றேன் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *