
இஸ்லாமியர்களின் புனித மாதமாகிய ரமலானின் வருகையை மாற்று மதத்தவர்க்கும் அறிவித்துவிடுவது பள்ளிவாசலில் வழங்கப்படும் நோன்பு கஞ்சி என்றால் அது மிகையல்ல. அரபு நாட்காட்டியின்படி , ஒன்பதாவதாக இடம்பெறுகின்ற ரமலான் மாதத்தில் திருக்குர்ஆன் அருளப்பட்டதாகவும், அந்த மாதத்தில் 29 முதல் 30 நாட்கள் இஸ்லாமியர்களின் ஐந்து முக்கிய கடமைகளுள் மூன்றாவதாகக் கருதப்படும் நோன்பு கடைபிடிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
மெக்காவிலிருந்து முகமது நபிகள் தன் நண்பர்களுடன் மெதினாவிற்கு இடம்பெயர்ந்த கி.பி. 622ஆம் ஆண்டு ஹிஜ்ரி ஆண்டின் முதல் நாளாகக் கணக்கில்கொள்ளப்பட்டு,இன்றுவரை நடைமுறையில் உள்ளது. அதன்படி, ஹிஜிரி 2ஆம் ஆண்டிலிருந்து, (கி.பி.624) நபிகளாரின் அறிவிப்பின்படி, இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து, இறை நம்பிக்கையை வளர்த்துக்கொள்வது முக்கியக் கடமையாக்கப்பட்டுக் கடைபிடிக்கப்பட்டு வருவதாக சில வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கப் பெறுகின்றன.
உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும் நோன்பானது, காலை சூரிய உதயத்துக்கு முன்பு தொடங்கி மாலை சூரியன் அஸ்தமிக்கும்வரை நிறைவேற்றப்படுகிறது. நோன்பின்போது, உட்கொள்ளப்படும் காலை உணவானது சகர் என்றும், மாலை உணவானது இப்தார் என்றும் பரவலாக அறியப்படுகிறது. நோன்பாளிகள் நோன்பு திறக்கும்போது தண்ணீர் பேரீச்சம்பழம் இவற்றோடு, ஆரோக்கியமான, ஊட்டச்சத்து நிறைந்த, செரிமான மண்டலத்தைச் சீராகச் செயல்பட வைக்கின்ற நோன்புக் கஞ்சியை உண்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதைக் காணலாம்.
கொரோனா காலத்தில், தொடுகைக்கு வாய்ப்பே இல்லாதபோதும் தோழி ரிஸ்வானா தனக்கும் தன் கணவருக்குமான நோன்புக் கஞ்சியை தானே தயாரித்ததைக் கண்டு வியப்படைந்தேன். பள்ளிவாசல்களை எதிர்பாராமல் செயல்பட்ட அவருடைய இந்த ஆர்வம் தந்த பிரமிப்பு எப்போதும் குறையப்போவதில்லை. அதே பிரமிப்போடு அந்த நோன்புக் கஞ்சியை எவ்வாறு தயாரிப்பது என்ற முறையையும் அவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். இதோ, இப்போது உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
நோன்புக் கஞ்சி செய்யத் தேவையான பொருட்கள்
சீரகசம்பா குருணை அரிசி கால் கிலோ,
பாசிப்பருப்பு 100 கிராம்,
3 பட்டை, 3 லவங்கம், 3 ஏலக்காய்,
சிறிதளவு சோம்பு, சிறிதளவு சீரகம், சிறிதளவு வெந்தயம்,
2 பெரிய வெங்காயம், 2 பச்சை மிளகாய், இரண்டு தக்காளி,
சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது, சிறிதளவு மல்லி இலை,
சிறிதளவு புதினா இலை, சிறிதளவு மஞ்சள் தூள்,ஒரு தேக்கரண்டி மிளகாய்த் தூள்.
செய்முறை
முதலில், சீரக சம்பா குருணை அரிசியையும், பாசிப்பருப்பையும் நன்றாக ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு, அடுப்பிலே ஒரு பாத்திரத்தை ஏற்றி, சிறிதளவு எண்ணை ஊற்றி, அதனுடன் சிறிதளவு நெய் சேர்க்கவும். எண்ணை நன்கு சூடானவுடன், தாளிக்கத் தேவையான பொருட்களை முதலில் போடவும். 3 பட்டை ,3 லவங்கம், 3 ஏலக்காய் ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
அடுத்து சிறிதளவு சோம்பு, சிறிதளவு சீரகம், சிறிதளவு வெந்தயம் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
அதனையடுத்து, 2 பெரிய வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். இவற்றையெல்லாம் வதக்கும்பொழுது, அடுப்பு குறைந்த தீயில் இருக்க வேண்டும்.
வெங்காயம் நன்கு வதங்கியவுடனே, சிறிது இஞ்சி பூண்டு விழுது, 2 பச்சை மிளகாய் இவற்றையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
சிறிதளவு மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய்த் தூள் இவற்றையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். பிறகு 2 தக்காளி பழங்களையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். இவற்றுடன் சிறிதளவு கொத்தமல்லி இலையையும்,, புதினா இலையையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
இவை அனைத்தும் நன்கு வதங்கிய பின்னர், 3 லிட்டர் தண்ணீரைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்தவுடனே,தேவையான அளவு உப்பினைச் சேர்த்து சரிபார்த்துக் கொள்ளவும்.
பின்னர், ஊறவைத்த அரிசியையும், பருப்பையும் நன்கு கலந்துவிடவும். இதனைக் கைவிடாமல் கலந்துகொண்டே இருக்கவும். கஞ்சிப் பதத்திற்கு வரும்வரை நன்கு கலக்கவும்.
கஞ்சிப் பதத்திற்கு வந்த பின்னர், உப்பின் அளவைச் சரிபார்த்துக் கொண்டு, அடுப்பினை அணைத்துக் கொள்ளவும். மேற்சொன்ன முறைப்படி தயாரிக்கப்படும் நோன்புக்கஞ்சியை 5 பேர் வரை பருகலாம். மேலும், சைவப் பிரியர்கள் கேரட்டையும், அசைவப் பிரியர்கள் கைமா எனப்படும் கொத்துக் கறியையும் தேவைப் படின் பயன்படுத்திக் கொள்ளலாம்.
என்ன நண்பர்களே, பகிர்ந்துண்ணலுக்குப் பெயர்பெற்ற இஸ்லாமியர்கள் பாரம்பரிய முறைப்படி தயாரிக்கும் நோன்புக் கஞ்சியை, அடுத்த ரமலான் மாதத்தில் நாமும் தயாரித்துப் பகிர்ந்து மகிழ்வோமா?
***தொகுப்பு: X. செலின்மேரி
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
