
அறிவியல் வளராத அந்தக் காலத்தில் இருந்தே உடல் உறுப்புகளில் முக்கியமானதாகச் சொல்லப்படுபவை கண்கள். கிடைத்ததற்கரிய வரப்பிரசாதமான பார்வையை இழந்து வாழ்பவர்களுக்குத்தான் அதன் அருமை பெருமை நன்றாகத் தெரியும். பார்வையின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில், பார்வை இழப்பைத் தவிர்க்கவேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் தேசீய பார்வையிழப்புத் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்படுகிறது.
நவீன வாழ்க்கைமுறை மாற்றங்களில் முக்கிய இடம்பெறுவது போக்குவரத்து. முன்பொருகாலத்தில் கால்நடையாக மைல் கணக்கில், மணிக்கணக்கில் நம் முன்னோர் நடந்து சென்றனர். ஆனால், இன்று நாம் அடுத்த தெருவுக்குச் செல்வதற்குக்கூட இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்தவே விரும்புகிறோம். நீளமும், அகலமும் அதிகரிக்காத நம் ஊர்த் தெருக்களில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் தவிர, வாழும் காலம் முழுவதும் கண் பார்வையை இழந்து பரிதவிக்கும் நிலை பலருக்கு ஏற்படுகிறது. 78.5 கோடி இந்தியர்கள் ஏதாவது ஒருவிதத்தில் கண் பார்வைக் குறைபாடு உடையவர்களாக இருக்கிறார்கள். இந்தக் குறைபாடு சரிசெய்ய முடியாத நிலையில் உள்ளது. இந்தப் பார்வை இழப்புகளில் பெரும்பாலானவை முழுமையாகச் சரிசெய்யக் கூடியவையே. சரியான நேரத்தில் சரியான சிகிச்சை அளிக்கப்பட்டால் இந்தக் குறைபாடுகளில் பெரும்பாலானவை குணப்படுத்தக்கூடியவையே. வறுமை என்ற ஒரு விஷயமும் இந்தியாவைப் பொறுத்தவரை மற்ற வளர்ந்துவரும் நாடுகளைப் போலவே பார்வை இழப்புக்கு ஒரு முக்கியக் காரணம். மொத்த மக்கள்தொகையில் 21.9% மக்கள் இன்னமும் வறுமையில் உழல்கிறார்கள். பார்வை இழப்பும், வறுமையும் ஒன்றையொன்று பாதிக்கும் விஷயங்களாக உள்ளது. வறுமை பார்வை நலத்தைப் பாதிக்கிறது. குறைப்பார்வை அல்லது பார்வையற்ற தன்மை ஒருவரின் பெறக்கூடிய கல்வி வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள்,மற்ற பொதுச்சமூக வாய்ப்புகள் போன்றவற்றைப் பெரிதும் பாதிக்கிறது. 16 வயதுக்கும் குறைவாக இந்தியாவில் மட்டும் 5 லட்சம் குழந்தைகள் பார்வையற்றவர்களாக வாழ்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இந்திய மக்கள்தொகையில் 33.3% மக்கள் விழிலென்ஸ் மற்றும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பார்வை இழப்பைத் தவிர்க்க வேண்டும் என்றால், கல்வி அறிவு, வேலை வாய்ப்புகள் போன்றவை பெருக வேண்டும். பார்வையற்றவர்கள் ஒதுக்கிவைக்கப்படாமல், சமூக மற்றும் அரசியல் தளங்களில் அதிகம் பங்கேற்கும் நிலை ஏற்படவேண்டும். உலக சுகாதார நிறுவனம் பார்வை இழப்பைத் தவிர்ப்பதற்காக உலகளவில் உலக பார்வை நல செயல்திட்டம்’ (Global eye health action plan) என்ற திட்டத்தை 2014 முதல் நடைமுறைப்படுத்திவருகிறது. பார்வை இழப்பைக் குறைப்பது, பார்வையற்றவர்களின் மறுவாழ்வு சேவைகளை அதிகப்படுத்துவது இதன் நோக்கம் ஆகும். கடந்த சில ஆண்டுகளில் பார்வை இழப்பின் விகிதம் இந்தியாவில் குறைந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. சாலை விபத்துக்களில் மட்டும் வருடம்தோறும் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துவருகிறார்கள். இதில் வியப்பூட்டும் செய்தி உயிரிழப்பவர்களின் அதே அளவுக்கு சாலை விபத்துகளால் பார்வையை இழப்பவர்களும் இருக்கிறார்கள். விபத்துகளில் பலவகைகள் ஒருவரின் பார்வையைப் பறிக்கக் காரணமாக இருக்கிறது. விபத்துகளின் மூலம் ஒருவர் பகுதியளவு பார்வையை இழக்க நேரலாம். அல்லது முழுவதுமாகவே பார்வையை இழந்துவிடலாம். மின்னணு விளம்பரப்பலகைகள், செல் போனில் பேசிக்கொன்டு ஓட்டுவது, திசை திரும்புவதற்காக சரியான சமிக்ஞையை போடாமல் வாகனத்தைத் திருப்புவது, போக்குவரத்து விதிகளைச் சரியாக மதிக்காமல் வாகனத்தில் செல்வது, இரவில் முகப்புவிளக்கொளியின் ஒளி அளவை உயர்ந்தநிலையில் (high beam) வைத்துக்கொண்டு செல்வது போன்றவை சாலை விபத்துகளில் பார்வை இழப்பிற்கான சில காரணங்கள். பெரும்பாலான பார்வைஇழப்புகள் கவனக்குறைவால் ஏற்படுகின்றன. வேதிப்பொருட்கள், கூர்மையான பொருட்கள், சாலை விபத்துகள், உயர் ஒளியை பார்க்க நேரிடுவது,மின் அதிர்ச்சி,தலைக்காயங்கள், ஆபத்தான தூசுகள் கண்களில் விழுவது போன்றவையும் பார்வை இழப்புக்குரிய காரணங்கள் ஆகும்.

கலவரங்களின்போது ஏற்படும் விபத்துகளால் தலையிலும், முகப்பகுதியிலும் உண்டாகும் காயங்கள் பார்வையைப் பறிக்கின்றன. பென்சில், பேனா போன்ற கூர்மையான பொருட்கள், கிரிக்கெட் பந்து, பூப்பந்து போன்ற பந்துகள் கண்ணில் படுவது, வேதிப்பொருட்கள் கண்ணில் விழுவதால் ஏற்படக்கூடிய ஆபத்துகளின்போது பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டும். உலோகத்துண்டுகள், கற்துகள்கள் விழுந்துவிட்டால் ஒரு காகிதக்கப்பை கண்ணின் மீது வைத்து மூடியபடி மருத்துவரைச் சென்று சந்திப்பதே சிறந்தது. தொழிற்சாலைகளிலும், ஆய்வகங்களிலும் ரசாயணப்பொருட்களால் விபத்துகள் ஏற்படலாம். வண்ணப்பூச்சுகள், அமிலங்கள் போன்றவை கண்ணுக்குள் விழும்போது, அவை கண்ணின் அமில காரத்தன்மையை பாதிக்கிறது. ரசாயணப்பொருட்களால் விபத்து ஏற்படும்போது, பாதிக்கப்பட்டவரை உடனடியாக ஓடும் தண்ணீரில் 15 நிமிடங்கள் தொடர்ச்சியாக கண்களைக் கழுவச் செய்யவேண்டும். உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லவேண்டும். இயந்திரங்களுடன் வேலை பார்ப்பவர்கள் தங்கள் கண்களில் பாதுகாப்பு கண்ணாடிகளை அணிந்துகொள்ள வேண்டும். தலை அல்லது முகக் காயங்கள் ஏற்படும் சமயங்களில் கண்பார்வையும் பாதிக்கப்படலாம்.
கண்களில் ஏற்படும் கோளாறுகள் அவை சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் உடனடியாகக் கவனிக்கப்படவேண்டியவையே. உலகில் 80% முதல் 90% பார்வை இழப்புகளை தகுந்த கல்வியறிவை அளித்தல், நல்ல மருத்துவப் பராமரிப்புக்கு வசதி செய்தல், சரியான கண்ணாடிகள் கிடைக்குமாறு செய்தல் ஆகியவற்றின் மூலம் தடுக்கமுடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. பார்வை இழப்பைச் சரிசெய்யமுடியாத நிலையில் இருப்பவர்களுக்கு சிறப்பான விதத்தில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு அவர்களின் வாழ்வு ஒளிமயமானதாக ஆவதற்குரிய உதவிகள் செய்யப்படவேண்டும். பார்வை இழப்பு என்பது வாழ்வே அதோடு முடிந்துவிட்டது என்று கருதிவிடக்கூடாது. இந்தியாவில் ஏராளமான நிறுவனங்கள் பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு சிறப்பான பயிற்சிகள் அளிப்பதற்கும், அவர்களின் வாழ்வை இயல்பானநிலைக்குக் கொண்டுவருவதற்கும் பாடுபட்டுவருகின்றன. கண்களில் ஒளி இழந்தாலும், பல தடைகளைத் தாண்டி உலகப் புகழ்பெற்றவர்களின் வாழ்வை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு விழித்திறன் மாற்றுத்திறனாளிகள் வாழவேண்டும். அவர்களில் சிலர், கலிலியோ கலிலி, ஹெலன் கெல்லர், உலகப்புகழ்பெற்ற பியானோ இசைக்கலைஞரும், இசையமைப்பாளருமான ரீ சார்ல்ஸ், ஓவியர் ஷெல்ப் அம்மான்.
உள்ளொலியைத் தெளிவாக, உறுதியாக வைத்துக்கொண்டு வாழ்வில் திறமையுடன் நடைபோட ஆரம்பித்தால் வெளிப்பார்வை இல்லாமல் போனாலும் கவலைப்பட வேண்டியதில்லை. Keep Moving. நம் கண்களை கண் போல காத்து நலமுடன் வாழ்வோம். இறந்தபிறகு, நம் விழிகளை அடுத்தவர்களுக்குத் தானமாகக்கொடுக்கவும் உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும். இந்த உலகை விட்டு நாம் சென்ற பின்னரும்கூட அவர்களின் விழிகளின் வழியாக நம்மால் இந்த உலகைக் காணமுடியும்.
தொடர்புக்கு: nrvikram19@gmail.com
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
