கவிதை: குடி காக்கும் குத்து விளக்கு

கவிதை: குடி காக்கும் குத்து விளக்கு

ஆக்கம் விஜயலட்சுமி வெளியிடப்பட்டது

மண்ணில் வந்த மதுரமே,

மானுடப் பிறப்பின் உதிரமே;

உயிருடன் ஒளியிடும் சிற்பமே,

கவியின் கவிக்கு கருப்பொருளே!

உனக்கு உரைப்பேன் புகழுரையே:

ஆக்கப் பிறந்தவள் நீயம்மா,

ஆளும் சக்தியை கொண்டாயே!

ஆண் ஆதிக்கத்தை வென்று நின்றாயே.

பெண்ணின் வரவை பெரிதும் வெறுத்தார்;

பெண் கல்வியை பலரும் எதிர்த்தார்.

பேசா மடந்தையாய் வாழவே நினைத்தார்!

மேற்கூறிய யாவும் மறைந்ததா என்றால்,

லெகுவாய் குறைந்தது என்றுரைப்பேன்.

வரைந்த கோட்டுக்குள் வாழ்க்கை இல்லை;

வேடிக்கைப் பொருளாய் மகளிரும் இல்லை.

கல்வி இல்லா கண்மணி இல்லை,

வேலைகள் இல்லா மங்கையும் இல்லை!

தொல்லைகள் தாரா ஆடவர் இல்லை,

போட்டிகள் போடா இடங்கள் இல்லை.

பெண்டிரில்லாத் துறைகள் இல்லை,

அன்னையை விரும்பாப் பிள்ளைகள் இல்லை!

மங்கையரை சிறப்பிக்க மறு பிறப்பு வேண்டுவதில்லை.

பெற்றோரைப் பேணுவதில் பெரும் பங்கு உண்டு.

எத்தனை முகங்கள் தான் உனக்கு உண்டு?

தாய்மையும் வாய்மையும் உனக்கு உண்டு,

போராடி வாதிடும் குணமும் உண்டு.

பகிர்ந்தழித்து பண்பினை வளர்ப்பாய்,

உவந்தளித்து உறவினைக் காப்பாய்.

உப்பாய் ஒளியாய் குல விளக்காய்,

உலகம் போற்ற வலம் வருவாய்!

முதியோர் இல்லம் முறியடிப்பாய்,

அனாதை இல்லம் அகற்றிடுவாய்.

தாயாய் சேயாய் நலம் செய்வாய்,

தவறுகள் நடப்பதை தடை செய்வாய்!

கற்புக் கரசியாய் திகழ்ந்திடுவாய்;

கணவனை  மதித்து நடந்திடுவாய்.

இறைவன் ஈந்த சிற்பமாய்,

இனியும் சிறப்பாய் வாழ்ந்திடுவாய்!

(குத்து விளக்காகி ஒளி தரும் மகளிருக்கு இக்கவிதை சமர்ப்பணம்.)

***தொடர்புக்கு: vijisweet3060@gmail.com

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *