தலையங்கம்: அன்பைக் கொடுத்து, அன்பைப் பெறுவோம்

தலையங்கம்: அன்பைக் கொடுத்து, அன்பைப் பெறுவோம்

ஆக்கம் ஆசிரியர் வெளியிடப்பட்டது
தொடுகை பார்வையற்றோரின் படைப்பாக்கத்தளம். உரையாடலும், உரையாடல் நிமித்தமும்.

“மூன்று வயது குழந்தையை ஒரு மனிதர் வல்லுறவு செய்தார், 12 வயது சிறுமியை நால்வர் சேர்ந்து கெடுத்து சிதைத்துக் கொன்றுவிட்டனர், 56 வயது பெண்ணை தனியாக வீட்டில் இருக்கும்போது ஒரு மர்ம நபர் வீடு நுழைந்து பலாத்காரம் செய்தார்” என்றெல்லாம் பல செய்திகளை நாம் அன்றாடம் கேள்விப்படுகிறோம். உண்மையில் இவைதான் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளா?

இவை மட்டும் அல்ல; இதையும் தாண்டி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஒரு ஆணை தந்தையாய், சகோதரனாய், கணவனாய், மகனாய், பேரனாய் இப்படிப் பல உறவுப் பரிணாமங்களில் பாவித்து இன்புற்று மகிழும் ஒரு பெண்ணுக்கு, உற்ற தோழனாய், நல்ல நண்பனாய் ஒரு ஆணை நட்பு பாராட்டுவதில் உள்ள சிக்கல்கள் சொல்லில் அடங்காதவை.

ஒரு பெண் தனித்துவமாக விளங்கினாலோ, தன்னைச் சுற்றியிருப்பவர்களைவிட அதிகமாய் அங்கீகரிக்கப்பட்டாலோ தொடங்கிவிடுகிறது சிக்கல். தனித்துவத்திலும் அங்கீகாரத்திலும் அர்ப்பணிப்பிலும் அன்பு பாராட்டுவதிலும் முன் நிற்கும் ஒரு பெண்ணை இயல்பாக எதிர்கொள்ள இயலாத சக பெண்கள் அந்தப் பெண்ணை வீழ்த்த இறுதியாக எடுக்கும் ஆயுதம் அவளின் நடத்தையை விமர்சிப்பது. அவள் ஆணுடன் கொண்டுள்ள நட்பைக் கொச்சைப்படுத்துவது.

விஞ்ஞானம் விந்தைகள் புரிகிற, தொழில்நுட்பம் தொடுவானம் அளக்கிற இந்த 21ஆம் நூற்றாண்டிலும் இதுதான் நிலை. அன்றுமுதல் இன்றுவரை பெண்ணுக்குப் பெண்ணே எதிரிகளாய் இருக்கும், பெண்ணை பெண்ணே விமர்சிக்கும் நிலை மட்டும் மாறவில்லை.

அவள் சிரித்துப் பேசினால் அடக்கம் இல்லாதவள்; அமைதியாக இருந்தால் உம்முனா மூஞ்சி; அநியாயத்தை தட்டிக் கேட்டால் ஆங்காரி; பரிவுகொண்டு பேசினால் எதற்கோ அலைபவள். இப்படியெல்லாம் விதவிதமான பட்டங்களை வாரி வழங்கும் வள்ளல்களாக சக பெண்களே இருக்கிறார்கள்.

பெண்களைப் பற்றிய இத்தகைய விமர்சனங்கள் அனைத்தையும் முதன்முதலாக உற்பத்தி செய்பவள் பெரும்பாலும் இன்னொரு பெண்ணாகவே இருக்கிறாள் என்பதே எதார்த்தம். அப்படி உற்பத்தி செய்யப்படும் அவதூறுகள், வசைச்சொற்கள் யாவும் பல பெண்களைக் கடந்து, மேலும் உருமாறி, கதைமாறி இறுதியில்தான் ஆண்களை அடைகிறது. எனவே இந்த சமுதாயத்தில் ஆண்கள் மட்டும் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை. நித்தம் நித்தம் இதுபோன்ற விமர்சனங்களை வாரி இறைக்கின்ற ஒவ்வொரு பெண்ணும் இன்னொரு பெண்ணை பாலியல் வன்கொடுமைக்குத்தான் உட்படுத்துகிறாள்.

எனவே, மகளீரின் முன்னேற்றத்திற்கு நாம் எந்தவகையிலும் உதவவில்லை என்றாலும் அவளின் பின்னடைவுக்குப் பெண்கள் நாமே காரணமாய் இருத்தல் தகாது. முன்னேறத் துடிக்கும் பெண்களின் ஒப்பற்ற முயற்சிகளைப் போற்றவில்லை என்றாலும், அவர்களின் வளர்ச்சிக்கு உதவவில்லை என்றாலும், நம்முடைய முன்கணிப்புகளால், முறையற்ற பேச்சுகளால் அவர்களை வீழ்ச்சி அடையச் செய்யாமல், சக பெண்களின் உணர்வுகளை மதித்து, நம் சுதந்திரத்தை சரியாகப் பயன்படுத்தி, நாமும் முன்னேறி, பிறரையும் முன்னேற்றி, நாமும் மகிழ்ந்து, நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் மகிழவைத்து, அன்பைக் கொடுத்து, அன்பைப் பெற்று இனிமையாய் வாழ சர்வதேச மகளிர்தின நல்வாழ்த்துக்கள்.

பகிர

1 thought on “தலையங்கம்: அன்பைக் கொடுத்து, அன்பைப் பெறுவோம்

  1. இந்த கட்டுரையில் சமுதாயத்தில் பெண்களின் நிலை நாடு நிலைமையிலிருந்து சித்தரிக்கப்பட்டுள்ளது.

    ஆண்கள் மட்டுமல்ல பெண்களை பெண்களே வன்கொடுமை செய்வதை நன்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

    கட்டுரை சிறப்பாக உள்ளது.

    பாராட்டுக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *