பேட்டி: “நமக்கான ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு நாம் பேரமைப்பாய் திரள்வது அவசியம்”: சமூகப்போராளி திருமதி. அருணாதேவி அவர்களோடான உரையாடலின் தொடர்ச்சி

பேட்டி: “நமக்கான ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு நாம் பேரமைப்பாய் திரள்வது அவசியம்”: சமூகப்போராளி திருமதி. அருணாதேவி அவர்களோடான உரையாடலின் தொடர்ச்சி

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

மகேந்திரன்: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பில் முக்கிய தலைவர்களான சிதம்பரநாதன் மற்றும் சிம்மச்சந்திரன் அவர்களோடு இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்துச் சொல்லுங்கள்.

அருணாதேவி: கடந்த 2008ல் ஆகஸ்ட் மாதம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த ஒரு பேரணியை என்னால் மறக்கவே இயலாது. அதற்கு முன்பாக நான் பார்வையற்றோரோடு இணைந்து பல போராட்டங்களில் பங்கெடுத்திருக்கிறேன். கிராஸ் டிசபிலிட்டி தளத்தில் நான் பங்கேற்ற முதல் போராட்டம் அது. சுமார் 10000 மாற்றுத்திறனாளிகளைத் திரட்டி, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை தொடங்கி மன்றோஸ் தேவாலயம் வரை மிகப்பெரிய பேரணியை ஒருங்கிணைத்தோம்.

OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA

அந்தப் போராட்டத்தின் வாயிலாகத்தான், நாம் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிற 75 விழுக்காடு பேருந்து கட்டண சலுகை கிடைத்தது. அத்தோடு, அரசுப்பணியில் மாற்றுத்திறனாளிகளுக்கான 3 விழுக்காடு இட ஒதுக்கீடு அமலாக்கத்தைக் கண்காணிக்க உயர்மட்டக் குழு, தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 விழுக்காடு ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை, பிரதம மந்திரி சுய தொழில் கடன் பெற மொத்தச் செலவில் ஐந்து விழுக்காட்டுத் தொகையினைக் குறைந்தபட்ச முன்பணமாகச் செலுத்துவதை மாற்றி, அந்தத் தொகையினை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு அலுவலகத்தின் வாயிலாக அரசே மானியமாக வழங்குவது உள்ளிட்ட எட்டிற்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்தோம்.

மகேந்திரன்: மாற்றுத்திறனாளிகள் வரலாற்றில் திருப்புமுனை போராட்டம் அல்லவா அது!

அருணாதேவி: ஆம். அதன்பிறகு 2010ல் வள்ளுவர் கோட்டத்தில் அன்றைய முதல்வர் ஐயா கலைஞருக்கு ஒரு நன்றி அறிவிப்பு மாநாட்டினை நடத்தினோம். இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். முந்தைய ஆட்சியில் நடந்த அரசு ஊழியர்ப் போராட்டத்தின்போது டிஎன்பிஎஸ்சி சார்பில் சுமார் 10000 பேர் தற்காளிகப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களை நிரந்தரம் செய்யப் போவதாகச் செய்திகள் வந்த நிலையில், அடுத்த அதாவது ஐயா கலைஞரின் 2006-11 ஆட்சி காலத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்த திரு. காசி விஸ்வநாதன் அவர்களை அவ்வப்போது சந்தித்து, “ஐயா இட ஒதுக்கீட்டையே பின்பற்றாமல் பணிநியமனம் செய்யப்பட்ட 10000 தற்காளிகப் பணியாளர்களை தற்போது நிரந்தரம் செய்யப்போவதாகக் கேள்விப்படுகிறோம். அந்த நியமனத்தின்போது எங்கள் பார்வையற்றோர் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டனர் என்பதை மனதில்கொண்டு அவர்களுக்கும் பணிவாய்ப்பு வழங்கிட வேண்டும்” என வலியுறுத்திக்கொண்டே இருந்தேன்.

அவரும், பின்னடைவுக் காலிப்பணியிடங்களைக் கண்டறிந்து, பார்வையற்றவர்களையும் காதுகேளாதோரையும் பணியமர்த்தும் திட்டம் இருப்பதாகச் சொல்லிக்கொண்டேதான் இருந்தாரே தவிர எதுவும் நடக்கவில்லை. அதனை ஐயா கலைஞரின் கவனத்துக்குக் கொண்டுசென்று, ஒரு சிறப்பு பணிவாய்ப்பை (Special Drive) அந்த நன்றி அறிவித்தல் கூட்டத்திலேயே அறிவிக்கச் செய்தோம். 2012ஆம் ஆண்டு அந்த சிறப்பு பணிவாய்ப்பின் மூலம், கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையற்றவர்கள் டிஎன்பிஎஸ்சியில் பணியில் சேர்ந்தனர்.

இதற்கெல்லாம் காரணம் ஐயா சிதம்பரநாதன் அவர்களின் அனுபவம் என்றுதான் சொல்ல வேண்டும். அவரைச் சந்திக்கும் எல்லா அரசு அதிகாரிகளும் அவரிடம் மிகுந்த மரியாதையோடும் பரிவோடும்தான் பேசுவார்கள். அத்தகைய நெகிழ்வான சூழலில், உடனிருக்கும் நம்மாலும் நமக்குத் தோன்றுகிற கோரிக்கைகளை எளிதாகப் முன்வைக்க முடியும்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அந்தச் சிறப்புத் தேர்வுக்கு சாந்தோம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சி நடக்கும். ரயிலில் வியாபாரம் செய்த பல பார்வையற்ற பெண்கள் பயிற்சியில் பங்கேற்பது, பின்பு வியாபாரத்துக்குச் செல்வது எனக் கடினமாக முயற்சி செய்து படித்தார்கள். அத்தகைய உழை்ப்பால் நிறைய பார்வையற்ற பெண்கள் இப்போது பணியில் இருக்கிறார்கள். பணிச்சூழலில் அவர்களுக்கான ஊர்திப்படி பெற்று வழங்குவது, பணிநிரந்தரம் தொடர்பான பிரச்சனைகள் என நான் இப்போதும் அவர்களோடு தொடர்பில் இருக்கிறேன்.

மகேந்திரன்: எத்தனை எத்தனை முயற்சிகள். நிறைய செய்திகள் எனக்கே புதிதாக இருக்கின்றன. சரி, நீங்கள் எப்போது அரசுப்பணி வாய்ப்பைப் பெற்றீர்கள்? அது தொடர்பான சவால்கள், தற்போதைய பணிச்சூழலில் சமூகம் சார்ந்து இயங்குவது குறித்தெல்லாம் சொல்லுங்கள்.

அருணாதேவி: 2003 முதல் 2007 வரை பணிநியமனத்தடை இருந்ததால், புதிய பணிநியமனங்கள் எதுவும் நடைபெறவில்லை. 2007ல் தொகுதி 2 மற்றும் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. என்னுடைய பார்வையற்ற நண்பர்கள் வங்கிப்பணி, குரூப் 4 என எல்லாவற்றுக்கும் தீவிரமாக முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். நான் குரூப் 2ல் மட்டுமே தேர்வெழுதி பணி பெறுவது என்பதில் உறுதியாக இருந்தேன். பள்ளி, கல்லூரி, வங்கி என முடங்கிவிடாமல், உயர் அலுவலராகப்பணி செய்து எப்போதும் பொதுமக்களோடு தொடர்பில் இருக்க வேண்டும் என்பதே என் ஒற்றைக் குறிக்கோளாக இருந்தது. அதே உறுதியோடு தேர்வெழுதினேன். முதல் முயற்சியில் தோற்றேன். பின்னர் 2008ல் மீண்டும் தேர்வெழுதி 2009ல் அதன் முடிவுகள் வெளிவந்தன. நான் சான்றிதழ் சரிபார்ப்பிற்குத் தேர்வானேன்.

வாய்மொழித் தேர்வுக்கு வருமாறு எனக்கு அழைப்புக்கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில், என்னுடைய ஊனமானது, நான் மேற்கொள்ளவிருக்கும் பணிக்கு தடையாக அமையாது என மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்கும்படி குறிப்பிடப்பட்டிருந்தது. மருத்துவர்களோ, “நீங்கள் எந்தப் பணியில் அமர்த்தப்படப்போகிறீர்கள் என்பது தெரிந்தால்தான், உங்களுடைய பார்வையின்மை அதற்குத் தடையாக இருக்கிறதா இல்லையா எனச் சொல்லமுடியும்” என்று சொன்னார்கள். “நீங்கள் பார்வைக்குறைபாடு என்று எழுதுங்கள்” எனச்சொல்லி, அந்த மருத்துவச் சான்றினை வாய்மொழித்தேர்வின்போது சமர்ப்பித்தேன். ஆனால், எனக்கு பணி கிடைக்கவில்லை. மாறாக என்னுடைய பெயர் நிறுத்திவைக்கப்பட்டது.

2010, 2011 என அடுத்தடுத்த தேர்வுகளில் நான் வெற்றிபெற்றும்கூட என்னுடைய பெயர் தொடர்ந்து இரண்டுமுறை (withheld) நிறுத்திவைக்கப்பட்டது. குறிப்பாக, 2011ல் என் தோழி சங்கீதாவின் உதவியோடு புதிய வடிவிலான மருத்துவத் தகுதிச் சான்று (medical fitness certificate) படிவத்தினை வடிவமைத்தோம்.  அந்தப் படிவத்தில் ‘பார்வையின்மை தவிர வேறு பிரச்சனை இல்லை (other than vision)’ என மருத்துவர்களிடம் சான்று பெற்று சமர்ப்பித்தும் மூன்றாவது முறையாக என்னுடைய பெயர் நிறுத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில், டிஎன்பிஎஸ்சி தொகுதி 4 சிறப்புத் தேர்வுகள் நடைபெற்றன. எனக்காக சங்கீதா தயாரித்த மருத்துவத் தகுதிச் சான்றினை பயன்படுத்தி நிறைய பேர் கலந்தாய்வுக்குச் சென்றார்கள். என்னுடைய குறிக்கோளெல்லாம் குரூப் 2 என்பதால் நான் அந்தப் பக்கம் போகவே இல்ஐ.

தொடர்ச்சியாக மூன்றாண்டுகள் என்னுடைய பெயர் நிறுத்திவைக்கப்பட்டதால், 2012 டிசம்பர் மாதம் நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், ஒரு கடிதத்தை அனுப்பினேன். என்னுடைய மூன்றாண்டு பதிவு எண்களைக் குறிப்பிட்டு, “இதற்கான முடிவுகளின் (results) நிலை என்ன?” என்கிற ஒற்றைக் கேள்வியை மட்டும் கேட்டிருந்தேன்.

அடுத்த 30 நாட்களுக்குள் எனக்கு பதில் வரவில்லை. மாறாக, சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருமாறு அழைப்புக் கடிதம்  வந்தது. சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த அன்றைய நாளே கலந்தாய்வும் நடந்தது. நான் இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. என் அம்மாவைத் தவிர வேறு யாரையும் நான் அழைத்தும் செல்லவில்லை. என்ன செய்வதென்றே புரியாத நிலையில், கலந்தாய்வில் பங்கேற்ற நான், அங்கிருந்த ஒருங்கிணைப்பாளரிடம், என்னுடைய நிலையை விளக்கி, எனக்கு இருக்கும் வாய்ப்புகளை அப்படியே மொத்தமாக வாசித்துவிடும்படிக் கேட்டேன். அவரும் ஒவ்வொரு துறையாக வாசித்துக்கொண்டே வந்தார். வருவாய்த்துறைதான் எப்போதுமே என் விருப்பத் துறையாக இருந்தது. “ரெவனியூ என்று சொன்னதும், எந்த அலுவலகம், எங்கு இருக்கிறது என எதையும் நான் யோசிக்கவே இல்லை. உடனே டிக் செய்யச் சொல்லிவிட்டேன். பிறகுதான் தெரிந்தது, நான் எழிலகத்தில் இயங்கும் வருவாய்த்துறை ஆணையரகத்தில் வருவாய் ஆய்வாளராகப் பணியில் சேர்கிறேன் என்று.

மகேந்திரன்: நிச்சயமாக மிக நீண்ட போராட்டம், மிகப்பெரிய சவால். எழுதிய அத்தனை தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுவதெல்லாம் அப்பப்பா. இன்றைய நமது தம்பி, தங்கைகள் இந்தப் பகுதியை உள்வாங்கிப் படிக்க வேண்டும். நாமெல்லாம் ஒருமுறை தோல்வியுற்றாலே சோர்ந்துவிடுகிறோம். உங்களுடைய அயராத முயற்சி, மன உறுதி எல்லாமே இன்றைய இளைஞர்களுக்கு ஒரு பாடம்.

நீங்கள் பெண்கள் தொடர்பான ஒரு அமைப்பில் பணியாற்றுவதாகத்தான் நினைக்கிறேன். அந்தப் பணிகளில் உங்களுடைய செயல்பாடு, அரசுப்பணியையும் சமூகப்பணியையும் ஒன்றாக எப்படிக் கையாள்கிறீர்கள் என்பது பற்றிச் சொல்லுங்கள்.

அருணாதேவி: நான் பணியாற்றிக்கொண்டிருக்கும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் சார்பில் கடந்த 2015ல் மகளிருக்கென்றே ஒரு புதிய துணை அமைப்பைத் தொடங்கினார்கள். அதுவரை அந்த அமைப்பில் நான் மகளிர் தொடர்பான கூட்டங்கள், கருத்தரங்குகள் போன்றவற்றை ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், மகளிருக்கென்றே புதிதாகத் தொடங்கப்பட்ட அமைப்பில் நிச்சயம் நான் பணியாற்ற வேண்டும் என்று மக்கள் விரும்பியதால்,, தற்போதுவரை அந்த மகளிர் அமைப்பின் பொருளாளராகப் பணியாற்றி வருகிறேன். அந்த அமைப்பின் பெயர், Society for Rights of All Women With Disability.

அந்த அமைப்பின் மூலம், மாற்றுத்திறனாளி மகளிருக்கான அன்றாடம், அவர்களுக்கான சட்ட உரிமைகள் பாதுகாப்பு போன்றவற்றில் கவனம் செலுத்திவருகிறோம். எங்களுக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள TTK சாலையில் 1000 சதுரடியில் இடம் கொடுத்திருக்கிறார்கள். அங்கே சுமார் 25 தையல் இயந்திரங்கள் வைத்து, மாற்றுத்திறனாளி மகளிருக்குத் தொழில் பயிற்சி வழங்குகிறோம். அரசுப்பணி பெறுவதற்கான பயிற்சிகளும் வழங்கிவருகிறோம். இப்படி நான் மகளிர் தொடர்பான களங்களில் தொடர்ந்து பணியாற்றி வருவதன் காரணமாக, கடந்த 2011ஆம் ஆண்டு, அமெரிக்க கலாச்சார விவகாரத்துறையின் மூலம் வாஷிங்டன் டிசி சென்று அங்கே 30 நாட்கள் தங்கி, மாற்றுத்திறனாளிகள் நலனில் தொண்டு நிறுவனங்களின் பங்கு குறித்துப் பேசும் வாய்ப்பைப் பெற்றேன். அத்தோடு, அப்போதைய குடியரசுத் தலைவர் ஒபாமா அவர்களின் தனிச்செயலரையும் சந்தித்து அலவலாவும் வாய்ப்பும் கிடைத்தது.

கடைக்கோடி கிராமத்தில் பிறந்து, ஒரு பார்வையற்ற பெண்ணாக தீப்பெட்டித் தொழில் செய்து, ரயிலில்கூடப் பயணிக்க வழி தெரியாமல் ஒரு அமைப்பைத் தேடிவந்த நான், இன்றைக்கு 16 முறை விமானப்பயணம் செய்திருக்கிறேன். வாஷிங்டன் டிசி, கலிஃபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ்,, நயாகராவெல்லாம் சென்றிருக்கிறேன் என்றால், தொடர்ச்சியாக நம் மக்களிடையே எனக்குப் பணியாற்றக் கிடைத்த வாய்ப்புதான் அதற்கெல்லாம் அடிப்படையான காரணம் என நினைக்கிறேன்.

குறிப்பாக, ரயிலில் வியாபாரம் செய்உம் பார்வையற்ற பெண்களுக்கு வியாபாரப் பொருட்கள் வழங்குவது, அவர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவு, சில பெண்களின் திருமணச் செலவு எனத் தொடர்ச்சியாகப் பார்வையற்ற பெண்களின் தொடர்பில் இருக்கிறோம். கரோனா பேரிடரின்போது, முதல் அலையிலும் இரண்டாம் அலையிலும் டெம்போ வாகனத்தில் ஊர் ஊராகச் சுற்றிவந்து ஏறத்தாழ 10000 குடும்பங்களுக்கு மேல் மளிகைப் பொருட்கள் வழங்கியிருக்கிறோம். 100 குடும்பங்களுக்கு மேல் தலா ரூ. 10000கொடுத்திருக்கிறோம். பெரும்பாக்கத்தில் வசிக்கும் 100 குடும்பங்களுக்கு தலா 25 கிலோ அரிசி என நெருக்கடியான நேரங்களில் மக்களுக்குப் பணியாற்றிட என் அரசுப்பணிச் சூழலும் வெகுவாகப் பயன்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

மகேந்திரன்: எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் இவ்வளவு பெரிய பணியை ஆற்றியிருக்கிறீர்கள். உதவி தேவைப்படுவோரின் தகவல்களை எங்கிருந்து பெற்றீர்கள்? காரணம், நீங்கள் “இப்படி நாங்கள் உதவவிருக்கிறோம்” என எவ்வித அறிவிப்பும் வழங்காமல் எப்படி இத்தனை பேரை உங்களால் சென்றடைய முடிந்தது?

அருணாதேவி: எங்களிடம் 10000 மகளிர் மற்றும் குழந்தைகள் பதிவு பெற்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தவிர, ஒரு இடத்தில் நாம் பணிகளைத் தொடங்கினாலே அந்தத் தகவல் அடுத்தடுத்த பகுதிகளுக்கும் இயல்பாகவே பரவிவிடும்.

மகேந்திரன்: நீங்கள் தொடர்ச்சியாக சுனாமி, சென்னைப் பெருவெள்ளம், சமீபத்திய கரோனா என பல்வேறு பேரிடர்களில் களப்பணியாற்றியிருக்கிறீர்கள். அன்றைக்கும் இன்றைக்கும் சட்ட ரீதியாகவோ, அல்லது சமூக அளவிலோ நிலமைகளில் ஏதேனும் மாற்றங்கள் தெரிகிறதா? பேரிடர்த் தருணங்களில் மாற்றுத்திறனாளிகளை அரசோ அல்லது தொண்டு நிறுவனங்களோ கையாளும் முறையில் இதுவரை நாம் வந்து சேர்ந்திருக்கிற இடம் என்ன? இன்னும் நாம் பயணிக்க வேண்டிய தொலைவுகளைப் பற்றிப் பகிருங்கள்.

அருணாதேவி: பேரிடர் காலங்களில் அதிலும் குறிப்பாகச் சென்னைப் பெருவெள்ளத்தின்போது நிறைய மாற்றுத்திறனாளிகள் தங்கள் வீடுகளை இழந்தார்கள். அப்படி நிறைய மாற்றுத்திறனாளிகளுக்கு நன்கொடையாளர்களின் உதவியுடன் வீடுகள் கட்டித் தந்தோம். சான்றாக, கடலூரில் ஒரு காது கேளாத பெண். தானே புயலில் a;அந்தக் குடிசையில் மண் சரிந்து பாம்பு புற்றே வைக்கும் அளவுக்கு நிலைமை இருந்தது. அப்படித் தகுதியானவர்களுக்கு வீடுகட்டித் தருவதில் கவனம் செலுத்தினோம்.

எப்போதுமே அரசுகள் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான செயல்பாடுகளை ஒரு கருணை சார்ந்ததாகவே பார்க்கிற பார்வை இருக்கிறது. நமது தேவைகள் என்பவை உரிமைகள் என அரசுகள் உணர வேண்டும்.

கரோனா காலத்தில் பார்வையற்றவர்கள் நீங்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 1000 கொடுத்தீர்கள். அதன் பலனாய், அரசும் 1000 கொடுக்க முன்வந்தது. அரசின் 1000 வழங்கும் திட்டத்தால் அரசுக்கு மாற்றுத்திறனாளிகள் குறித்த திரட்டப்பட்ட தரவுகள் (Data) கிடைத்தன. இவ்வாறு சேகரிக்கப்பட்ட தரவுகள் தடுப்பூசி போடும் திட்டத்திற்குப் பேருதவியாக இருந்தன. இப்படித் தரவுகள் கிடைத்தபோதுதான், அரசும் தன்னிடம் மாற்றுத்திறனாளிகள் குறித்த ஒருங்கிணைக்கப்பட்ட தரவுகள் இல்லை என்பதை உணர்ந்தது.

பேரிடர் காலம்தான் மாற்றுத்திறனாளிகளுக்கான மாற்று வேலைவாய்ப்பு குறித்து அரசைச் சிந்திக்கத் தூண்டியது. உதாரணமாக, முன்பெல்லாம் ஆவின் பூத் வைப்பதற்கு 10*10 இடம் அரசின் சார்பில் கொடுக்கப்பட்டது. அத்தோடு, ஆவின் பொருட்கள் வாங்கித் தந்துவிடுவார்கள். ஆனால், தற்போது பூத் வைப்பதற்கான பெட்டி உள்ளிட்ட இதர உபகரணங்கள் வாங்கவும் அரசு ரூ. 50000 மானியமாக வழங்குகிறது. அப்படி ஆவின் பூத் வழங்கப்பட்டவர்களில் இரண்டு பார்வையற்றவர்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டுவருகிறார்கள். ஒருநாளைக்கு 700 பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து சாதிக்கிறார்கள்.

இத்தகைய தொடர்ச்சியான களப்பணிகள் காரணமாக, நான் தற்போது மாற்றுத்திறனாளிகள் ஆலோசனை வாரியத்தில் (Advisory Board) உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளேன். இப்போதும்கூட நான் முதல்வர் அவர்களைச் சந்திக்கும்போதெல்லாம் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் ரூ. 2000 ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். அதையும் நம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாகவே வழங்கவேண்டும் என வலியுறுத்திவருகிறேன்.

இதுவரை நான் முதல்வரை 4 5 முறை சந்தித்திருக்கிறேன். அவரும் நிச்சயமாகச் செய்கிறேன் என்றிருக்கிறார். 1000 1500ஆக உயரப்போகிறது என்பது மூன்று மாதங்களுக்கு முன்பே தெரிந்துவிட்டது. நாங்கள் மார்ச் மாதம் அறிவிப்பு வரும் என்று நினைத்தோம். ஆனால், டிசம்பர் 3ஆம் தேதியே அறிவிப்பு வந்ததில் மகிழ்ச்சி. 1500 பெறுவதிலும் நம் மக்கள் ஆங்காங்கே சில சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். உதாரணமாக, ஒரு பார்வையற்றவர், அவரின் மனைவி 1500 ஓய்வூதியம் பெறுகிறார். ஆனால், அவருக்கு வேறு ஏதோ ஒரு திட்டத்தின் கீழ் ரூ. 1000 வழங்கப்படுகிறது. நான் வருவாய்த்துறையில் பணியாற்றுவதால், உரிய அதிகாரிகளிடம் உடனுக்குடன் பேசி இதுபோன்ற சிக்கல்களைத் தீர்ப்பது எளிதாக இருக்கிறது.

மகேந்திரன்: தொடுகை வாசகர்கள் சார்பாக நான் இரண்டு விடயங்களுக்கு என்னுடைய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒன்று, மிகச் சிறந்த செயல்பாட்டாளரான தாங்கள் ஆலோசனை வாரியத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு. மற்றோன்று, பேரிடர் காலங்களில் தொழில்முனைவோராய் திகழழும் விருப்பமும் ஆர்வமும் கொண்ட தகுதியான பெண்களை, குறிப்பாகப் பார்வையற்ற பெண்களைத் தெரிவுசெய்து தாங்கள் தொடர்ச்சியாக உதவி வருவதற்கும் எனது இதயத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

உங்களுடைய இத்தகைய தொடர்ச்சியான சமூகப்பணிக்கும் சரி, உங்களின் அரசுப்பணி சார்ந்தும்  உங்களின் குடும்பம் எந்த அளவிற்கு உதவியாக இருக்கிறது? உங்கள் அரசுப்பணி இந்தச் சமூகப்பணிக்கு இடையூறாக இருக்கிறதா?

அருணாதேவி: முதன்முதலில் நான் பணியில் சேர்ந்தபோது, “உன்னால் இந்த அலுவலகத்தில் எத்தகைய பணிகளைச் செய்ய  முடியும் என்பதைச் சொல். ஏனெனில் உனக்கு எத்தகைய பணிகளை வழங்குவது என்பது குறித்து எங்களுக்குத் தெரியவில்லை” என்றார்கள். நான் தற்போது வருவாய்த்துறையின் ஆணையரகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராகப் பணிய்யாற்றி வருகிறேன். என்னுடைய பணி என்பது, மாவட்டந்தோறும் உயர் அலுவலர்களுக்கான வாகன வசதிகளை ஏற்படுத்துவது, எங்களுடைய அலுவலகத்தில் மின் ஆளுகையின் கீழ் (E-Governance) அனைத்து அலுவல்களும் நடைபெறுவதால், அந்தப் பணிக்குத் தேவையான கணினி உள்ளிட்ட அடிப்படைத் தளவாடக் கட்டமைப்புகளை ஏற்படுத்துவது, அதைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து, உரிய நேரத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுப்பது என முக்கியத்துவம் வாய்ந்ததுதான். என்னிடம் இந்தப் பணியை ஒப்படைத்தால் மிகச் சரியாக நடந்தேறிவிவிடும் என்பதுதான் ஆணையர் உட்பட அனைவருக்கும் என்மீது இருக்கும் நம்பிக்கை.

மகேந்திரன்: உண்மையில் உங்கள் பணிச்சூழல், அதை நீங்கள் சிறப்பான முறையில் செய்துவருவது குறித்தெல்லாம் இன்றைய இளைஞர்கள் நிச்சயமாகத் தெரிந்துகொண்டே ஆகவேண்டும். ஏனெனில், எல்லாமே தனக்கு உடனடியாகக் கிடைத்துவிட வேண்டும் என்ற மேம்போக்கான மனப்பாங்கே பெரும்பாலான இளைஞர்களிடம்இருக்கிறது. எனவே, இன்றைய சூழலில் அரசு வேலையை எதிர்பார்ப்பவர்களுக்கும் சரி, அரசு வேலையில் இருப்பவர்களுக்கும் தாங்கள் சொல்லும் அறிவுரைகள் அல்லது ஆலோசனைகள் என்ன?

அருணாதேவி: எங்கள் காலத்தைக் காட்டிலும் இன்று வாய்ப்புகள் அதிகம் என்றே நினைக்கிறேன். ஆனால் தேவை கடின உழைப்பு. டிஎன்பிஎஸ்சியோ வங்கித்தேர்வோ ஆறுமாதம் முதல் ஒரு வருடம் கடினமாக உழைத்தால், நிச்சயம் பணியில் சேர்ந்துவிடலாம். ஆனால், அதீதக் கடின உழைப்பு தேவை.

பணியில் சேர்ந்தவர்களுக்கும் அதே அர்ப்பணிப்பு அவசியம். முன்புபோல் அல்லாமல், இப்போது தொழில்நுட்ப காலகட்டத்தில் பார்வையுள்ளவருக்குச் சமமாக நம்மாளும் இயங்க முடியும். ஏதோ ஒதுக்கீட்டில் ஒரு பார்வையற்றவருக்கு வேலைகொடுத்தாயிற்று, அவர் வரட்டும் இருக்கட்டும் என்கிற உயர் அலுவலர்களின் பொதுவான மனநிலையை நாம்தான் மாற்ற முயற்சி செய்ய வேண்டும். நமக்கு என்ன பணி தருவது என்பது குறித்து அவர்களுக்குத் தெரியாது. நாம்தான் முன்வந்துஇவ்வகைப் பணிகளை என்னால் திறம்படச் செய்யமுடியும் எனச்சொல்லி நம் இருப்பைப் பொருளுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

 மகேந்திரன்: முன்பே கேட்டதுதான். உங்கள் பணிச்சூழலில் உங்கள்ளுடைய குடும்பத்தின் ஒத்துழைப்பு குறித்துச் சொல்லுங்கள்.

அருணாதேவி: என்னுடைய குடும்பம் எனக்கு மிகப்பெரிய பலம். நம் மக்கள் பெரும்பாலோருக்குத் தெரியும். என்னுடைய அம்மா எப்போதும் என் கூடவேதான் பயணிப்பார். அது வாசிப்பாளர்களைப் பார்ப்பது என்றாலும் சரி, அல்லது யாரேனும் நன்கொடையாகக் கேசட்டுகள் தருகிறார்கள் என்றாலும் சரி, எப்போதும் என்னுடைய தொடக்ககால முயற்சிகளிலிருந்து அத்தனையிலும் என் கூடவே இருப்பவர் அம்மா.

என் சகோதரருக்கும் பார்வை தெரியாது. எனவே, என்னுடைய அக்காதான் எங்கள் குடும்பத்தின் மூத்த பையனாக இருந்து என் வளர்ச்சியில் பங்காற்றினார். அவர் இப்போது ஆசிரியராக இருக்கிறார். நான் படிக்கப்போன பின்புதான் அவர் வேலைக்கே சென்றார். என்னைக் கல்லூரியில் விட்டுவிட்டு, எனக்கான பாடங்களை என் வகுப்பு நண்பர்களிடம் கேட்டு எழுதிக்கொண்டு வந்து எனக்கு பதிவுசெய்து தருவார்.

இப்போதும் நாங்கள் கூட்டுக்குடும்பம்தான். அக்காவின் வீட்டில்தான் நானும் அம்மாவும்இருக்கிறோம். அவருக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனாலும் என் மீதான, என் அன்றாடப் பணிகள் மீதான அக்கறை தொடரவே செய்கிறது. அதேபோல அக்காவின் கணவரும் இந்தக் குடும்பத்துக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார்.

குடும்பத்தின் இத்தகைய ஆதரவால்தான், என்னால் இளங்கலையில் பல்கலைக்கழக ரேங்க் பெற முடிந்தது. மொழிப் பாடத்தில் என்னுடைய கல்லூரியில் நான்தான் முதல் மதிப்பெண் பெற்றேன். என் கிராமத்துக்கே இப்போதுதான் நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பது தெரியும். பார்வையற்றவர்களும் படிக்கலாம், நல்ல பணிக்குச் செல்ல அவர்களாலும் முடியும் என்பதை இப்போதுதான் எங்கள் ஊர் மக்கள் உணர்கிறார்கள்.

நான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன்என்றால், அதற்கு என்னுடைய குடும்பம் மட்டும் இல்லை, எனக்காக உதவிய என்னுடைய நண்பர்கள், சின்னச் சின்ன உதவிகள் என்றாலும் எனக்காகச் செய்தஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் எனஒவ்வொருவரின் பங்கும் அளப்பரியது என்பதைத் தொடுகை மின்னிதழ் மூலமாகச் சொல்லிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

மகேந்திரன்: உங்களுக்குக் கிடைத்த அங்கீகாரம்?

அருணாதேவி: ஒரு குக்கிராமத்தில், தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலை பார்த்த அருணாதேவி போய், அரசுப்பணி, சமூகப்பணி என எத்தனையோ பேருக்கு வழிகாட்டும் வாய்ப்பைப் பெற்றது, தற்போது அரசு ஆலோசனை வாரியத்தில் எனக்கும் உறுப்பினராக வாய்ப்பு தந்து, மேலும் ஒரு தளத்தில் என் பணிகளைச் செய்ய ஊக்கமளித்து இருப்பது என இவற்றைத்தான் மிகப்பெரிய அங்கீகாரங்களாக நான் கருதுகிறேன்.

மகேந்திரன்: உங்களின் நீண்ட  சமூகப்பணி அனுபவத்தை முன்வைத்துக் கேட்கிறேன். எதிர்காலம் குறித்துப் பார்வையற்ற மக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன? நம் உரிமைகளை நிலைநாட்டுவதில் எத்தகைய அணுகுமுறைகளைச் செய்வது பொருத்தமானதாக இருக்கும் எனக் கருதுகிறீர்கள்?

அருணாதேவி: 1995லேயே நமக்கான உரிமைச் சட்டம் வந்துவிட்டது. ஆனாலும் நமக்கான பின்னடைவுக் காலிப்பணியிடங்களைப் பெறுவது போராட்டமாகவே இருக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பாகட்டும், உயர்நீதிமன்ற வழக்காகட்டும் பின்னடைவுப் பணியிடங்களைப் பெறமுடியாமலேயே போய்விட்டது.

இனிவரும் காலங்களிலாவது, அரசுப்பணிகளில் மட்டுமல்ல, அரசு உதவிபெறும் நிறுவனங்கள், தனியார்த்துறை என எல்லா இடங்களிலும் நமக்கான ஒதுக்கீட்டை நாம் பெறுவதற்கு முதலில் நாம் பேரமைப்பாகத் திரள்வது அவசியம் என்று நினைக்கிறேன்.

தனிப்பட்ட முறையில் பார்வையற்ற மக்களுக்குச் சொல்வதென்றால், நாம் கடும் முயற்சி செய்து ஒரு அரசு வேலைக்கு வந்துவிட்டோம். இப்போது நம்முடைய ஊதியத்தில் ஒரு சிறு தொகையை நம் எதிர்காலம் கருதி சேமித்து வருவது முக்கியம் என நினைக்கிறேன். அப்படிச் செய்தால்தான், நாம் எப்போதும் யாருக்கும் பாரமாக இருக்க மாட்டோம். மேலும், நாம் மட்டும் நம்மை சமூகப்பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டால் போதாது. இன்னும் நிறைய நம்முடைய மக்களை சமூகப்பணிக்கு அழைத்துவர நம்மால் ஆனதைச் செய்ய வேண்டும் என இந்தத் தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

மகேந்திரன்: மிக்க மகிழ்ச்சி. இன்னும் நிறைய நிறைய கேட்க வேண்டும். நீங்கள் பகிர்ந்துகொண்டவற்றிலிருந்தே ஒவ்வொன்றையும் விரிவான தலைப்புகளில் பேசவும், உங்களிடமிருந்து கேட்டுப் பெறவும் நிறைய இருக்கின்றன என்றாலும், காலத்தின் அருமை கருதி, இந்தப் பேட்டியை மனமின்றி நிறைவு செய்யும் கட்டாயத்தில் இருக்கிறோம்.

உண்மையில், தொடர்ச்சியாகப் போராட்டமே வாழ்க்கை என்றானபிறகும், மனம் தளராமல் போராடி வென்று, எந்த ஒரு விளம்பரமோ வெளிச்சமோ தன்மீது படாதபோதும், நீண்ட களப்பணியின் மூலம், போராட்டமே அன்றாடமாய்க்கொண்ட நிறைய பேருக்கு உற்ற துணையாய் இருக்கும் ‘அருணாக்கா’ என்று நாங்கள் அறிகிற ஒரு ஆளுமையைப் பேட்டி கண்டதை, ஒரு மிகப்பெரிய அனுபவமாக நான் கருதுகிறேன்.

எங்கள்ளின் அழைப்பை ஏற்று, எங்களுக்கு சமூகம் சார்ந்து நிறையப் புரிதல்களை உங்களுடைய பேட்டியின் வழியே சொல்லியிருக்கிறீர்கள். எங்களுக்குத் தொடர்ச்சியாக உங்கள்ளின் ஆலோசனைகளையும் வழிகாட்டலையும் வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு இந்தப் பேட்டியை நிறைவுசெய்கிறேன் மிக்க நன்றி மேடம்.

அருணாதேவி: தொடுகை மின்னிதழ் பொறுப்பாளர்களுக்கும், இவ்வளவு நேரம் என்னைப் பேட்டிகண்ட மகேந்திரன் தங்களுக்கும், நம்முடைய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக என்னுடைய ஒத்துழைப்பும், ஆதரவும் நம் சமூகத்துக்கு எப்போதும் உண்டு என்பதைச் சொல்லிக்கொண்டு விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.

***திருமதி. அருணாதேவி அவர்களைத் தொடர்புகொள்ள அலைபேசி:

9003281341

எழுத்தாக்கம்: ப. சரவணமணிகண்டன்.

தொடரின் முதல்ப்பகுதியைப் படிக்க இங்கே க்லிக் செய்யவும்.

பகிர

2 thoughts on “பேட்டி: “நமக்கான ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு நாம் பேரமைப்பாய் திரள்வது அவசியம்”: சமூகப்போராளி திருமதி. அருணாதேவி அவர்களோடான உரையாடலின் தொடர்ச்சி

  1. தீபெட்டி தொழிற்சாலையில் கஷ்ட்டபட்டுகொண்டிருந்த அருணா தேவி அவர்கள் முயற்சியாலும், உழைப்பாலும்,
    சில நல்லவர்களின் உதவியாலும் முன்னேறி;
    தானும் உயர்ந்து, சமுதாயத்திற்கும் தன்னால் இயற்ற பணிகளை
    அர்ப்பணிப்பு மனப்பான்மையோடு செய்து வருவது பாராட்டிற்கும்,
    போற்றுதற்கும் உரியது.
    பேட்டி கண்ட திரு. மகேந்திரன் அவர்களுக்கும், எழுத்தாக்கம் செய்த திரு. சரவண மணிகண்டன் அவர்களுக்கும்,
    இந்த பேட்டியின் மூலம் நமது சமுதாயத்திற்கு உத்வேகத்தை ஏற்படுத்தும்
    தொடுகை மின் இதழுக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *