பேட்டி: “மாற்றுத்திறனாளிகளைக் கையாள்வதில், பேரிடர்கள்தான் அரசுக்கான படிப்பினை காலம்”: – சமூகப்போராளி அருணாதேவியோடு ஓர் உரையாடல்

பேட்டி: “மாற்றுத்திறனாளிகளைக் கையாள்வதில், பேரிடர்கள்தான் அரசுக்கான படிப்பினை காலம்”: – சமூகப்போராளி அருணாதேவியோடு ஓர் உரையாடல்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

தொடுகை வலையொளி வாசகர்களுக்கு வணக்கம்.

பல்வேறு பார்வை மாற்றுத்திறனாளி ஆளுமைகளை நாம் தொடர்ந்து நேர்காணல் செய்துவருவதை நீங்கள் அறிவீர்கள். அந்த வகையில் இந்தப் பகுதியில் நாம் சந்திக்கவிருப்பவர் திருமதி. அருணாதேவி அவர்கள். நிறைய சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.  தனிப்பட்ட சூழலிலும் சரி, சமூக அளவிலும் சரி பார்வை மாற்றுத்திறனாளி பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்துவருபவர். அவரைக் குறித்தான பெரிய அறிமுகமும் நம்மவர்களிடையே இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் தான் செய்யக்கூடிய செயல்களை விளம்பரப்படுத்திக்கொள்ள அவர் விரும்புவதில்லை என்பதை என்னளவில் அறிந்திருக்கிறேன்.

மகேந்திரன்: மேடம் வணக்கம். இந்த நேர்காணல் வழியே உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

அருணாதேவி: வணக்கம் மகேந்திரன்.

கே: உங்களுடைய ஆரம்பகால வாழ்க்கை குறித்து நாங்கள் அறிந்துகொள்ள விரும்புகிறோம். உங்களுடைய ஊர், பெற்றோர் மற்றும் தொடக்கப்பள்ளி நாட்கள் குறித்துச் சொல்லுங்களேன்?

ப: வாசகர்களுக்கு வணக்கம். என்னுடைய ஊர் விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை என்ற சிறு கிராமம். பன்னிரண்டாம் வகுப்புவரை நான் அங்கேதான் படித்தேன். என்னுடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். நாங்கள் விவசாயக் குடும்பம். என் பெற்றோர் சொந்தத்தில் திருமணம் செய்துகொண்டதால், எனக்கும் என் சகோதரருக்கும் ரெட்டினைட்டிஸ் பிக்மண்டோசா என்ற குறைபாட்டால் பார்வை இழப்பு ஏற்பட்டது.

நான் சரியாகப் பன்னிரண்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது, அதிகமாகவே பார்வை மங்கத் தொடங்கிவிட்டது. எனக்கு என் குடும்பத்திலோ, பள்ளியிலோ வழிகாட்ட யாரும் இல்லை. மிகுந்த சிரமங்களுக்கிடையே பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வை நானே எழுதினேன். கணக்குப் பதிவியல், வணிகவியல், கணினி அறிவியல் போன்ற பாடங்களைத் தேர்ந்தெடுத்திருந்த நான், தேர்வுக்குத் தயார்படுத்திக்கொண்ட காலம் முதல், தேர்வெழுதியதுவரை பார்வை சார்ந்து ஏகப்பட்ட சவால்களைச் சந்தித்தேன். அதை இப்போது நினைத்தாலும் ஒரு கணவென்றே தோன்றுகிறது.

எப்படியோ பொதுத்தேர்வை எழுதிவிட்டேன். அந்தக் கோடை விடுமுறையில் என் பார்வை முற்றிலுமாகப் பறிபோய்விட்டது. நான் பதினோராம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது என் தந்தை காலமாகிவிட்டார்.  எனக்கும் முழுப் பார்வையும் போய்விட்டது. இனி என்னை எப்படிப் படிக்கவைப்பது என்று அம்மா யோசித்தார். வழிகாட்ட யாருமில்லை. பார்வையில்லாத தன் மகளைத் தன்னந்தனியாக வெளியூரில் எப்படிப் படிக்கவைப்பது? விடுதியில் தங்கிப் படிக்க வேண்டுமென்றாலும் அதற்கும் நிறைய செலவாகும் எனப் பல்வேறு யோசனைகள். அதனால் நான் வீட்டிலிருந்தபடியே தீப்பெட்டி ஒட்டும் வேலை பார்க்கத் தொடங்கிவிட்டேன்.

ஒருநாளைக்கு 70 ரூபாய் சம்பாதிப்பேன். “பணத்த செலவு பண்ணாம ஏதாவது பேங்க்ல போட்டுவைப்போம். என் காலத்துக்கு அப்புறம் அதுதான்   உனக்கு உதவியா இருக்கும்” என அம்மா சொல்லிக்கொண்டே இருப்பார்.

கிட்டத்தட்ட எட்டாண்டுகள்; அதாவது 1993ல் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தேன். 2001ல்தான் கல்லூரியில் என்னால் சேர முடிந்தது.

கே: நீங்கள் கல்லூரியில் எப்படிச் சேர்ந்தீர்கள்?

ப: ஒருமுறை சென்னையில் வசிக்கும் என் அக்காவைப் பார்ப்பதற்காக நானும் அம்மாவும் ரயிலில் வந்தோம். அப்போது நாங்கள் சந்தித்த ஒரு மாற்றுத்திறனாளி நபர், “ஏன் ஃபுல் டிக்கெட்ல வாரீங்க? நமக்குத்தான் கன்சிஷன் இருக்கே” எனக் கேட்டார். எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. பிறகுதான் அந்தப் படிவம் எங்கே கிடைக்கும் என விசாரித்தோம்.

சிந்தாதிரிப்பேட்டையில் டெலிபோன் பூத் வைத்திருக்கும் ஒரு பார்வையற்றவரிடம் அந்தப் படிவம் இருக்கலாம் என என் அக்கா சொன்னார். நாங்கள் அவரை அணுகிக் கேட்டபோது, அவர் “எக்மோர்ல மெடிக்கல் சர்டிஃபிகேட் வாங்கிக்கோங்க. டீநகர்ல டக்கர்பாபா ஸ்கூல்ல எங்க அசோஷியேஷன் இருக்கு. அங்க உங்களுக்கு எல்ஆ ஃபார்ம்ஸும் கிடைக்கும்” என்றார். நாங்கள் அந்தத் தகவலை அப்படியே கடந்துவிட்டோம். ஒருநாள் ஆட்டோவில் வடபழனி வழியே வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, எனக்குத் திடீரென டக்கர்பாபா பள்ளிக்குப் போகவேண்டும் எனத் தோன்றியது. ஆனால், அப்போதும்கூட அதை ஒரு பள்ளி என்றுதான் நினைத்தேன். சங்கம் ஒன்று அங்கே இருப்பதாக நான் நினைக்கவில்லை.

நான், அக்கா, அம்மா மூவரும்தான் அங்கே சென்றோம். அங்கே பல பார்வையற்றவர்களைச் சந்தித்தோம். மார்கண்டேயன் சாரை மட்டும்தான் இப்போது என் நினைவில் இருக்கிறது.

பலதரப்பட்ட பார்வையற்றவர்களின் அறிமுகம் எங்களுக்குக் கிடைத்தது. சிலர் முதுகலை முடித்திருப்பதாகச் சொன்னார்கள். வேறு சிலர் எம்ஏ, எம்ஃபில் முடித்திருப்பதாகவும், சிலர் பள்ளியில் ஆசிரியர்களாகவும், இன்னும் சிலர் கல்லூரியில் பேராசிரியர்களாகவும், வேறு சிலர் வங்கிப்பணியில் இருப்பதாகச் சொன்னது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. தங்களைப் பற்றிப் பகிர்ந்துகொண்ட  அவர்கள் என்னைப் பற்றியும் விசாரித்தார்கள். கல்லூரியில் சேர்வதென்றால் நிறைய செலவுபிடிக்கும் என்கிற எங்களின் அச்சத்தை நாங்கள் சொன்னோம். அதற்கு அவர்கள் அரசுக்கல்லூரிகளில் செலவாகாது என்றார்கள். கன்சிஷன் படிவத்தைப் பெற்றுக்கொண்டு நாங்கள் வீட்டுக்கு வந்துவிட்டோம்.

ராணிமேரி கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய ஒரு பெண், என் அக்கா வீட்டிற்கு எதிர் வீட்டில் குடியிருந்தார். அவரும், “எங்க காலேஜ்ல ஐம்பதுக்கும் மேல பார்வையில்லாத பெண்கள் படிக்கிறாங்க” எனச் சொல்லி, சில பெயர்களையும் சுட்டிக்காட்டினார். நான் கல்லூரியில் சேர அவரும் சில உதவிகளைச் செய்தார். கல்லூரியில் சேர்வதற்கு முதலில் ஊனமுற்றோர் அடையாள அட்டை வாங்க வேண்டும். என்னிடம் அப்போது கையில் ரேஷன் அட்டைகூட இல்லை. எல்லாமே ஊரில் இருந்தது. மார்க்கண்டேயன் சார் அடையாள அட்டை பெறுவதில் உதவி செய்தார்.

24 வயதாகிவிட்டதால், கல்லூரியில் சேர எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்தியன் வங்கியில் பணியாற்றும் திரு. அன்புமலர் அவர்கள், ராணிமேரி கல்லூரி முதல்வரிடமே எனக்காகப் பேசினார். நம்முடைய பட்டதாரிகள் சங்கம் உள்ளிட்ட பலதரப்பிலுமிருந்து எனக்காக கல்லூரி நிர்வாகத்திடம் பேசினார்கள். நான் எழும்பூரில் மருத்துவச் சான்று வாங்கச் சென்றிருந்த சமயத்தில், யாரோ ஒரு பார்வையற்றவர் எனக்கு வனஜா அக்காவின் எண்ணைத் தந்து பேசச் சொன்னார். வனஜா அக்காவும், தனது அமைப்பின் பெயரில், “விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலேயே இந்தப் பெண்ணால் உரிய நேரத்தில் கல்லூரியில் சேர இயலவில்லை. எனவே கல்லூரியில் சேர இவரை அனுமதிக்க வேண்டும்” எனக் கல்லூரி நிர்வாகத்துக்கு ஒரு கடிதம் எழுதி, அதை என் வீட்டு முகவரிக்குக் கொரியர் செய்தார்.

இப்படிப் பலரும் என்னுடைய நன்மைக்காக வாதாடினார்கள். ஒருவழியாக 2001, ஆகஸ்ட் மாதம் நான் ராணிமேரி கல்லூரியில் இளங்கலை சமூகவியல் (B.A. Sociology) படிப்பில் சேர்ந்தேன். அங்கே எனது விரிவுரையாளர்கள், என் உடன் படித்த நண்பர்கள், அத்தோடு தோழி மாரியம்மாள் வாயிலாக எனக்கு தன்னார்வ வாசிப்பாளராக அறிமுகமாகிய கல்யாணி மேடம் என ஒவ்வொருவரிடமும் எனக்கான உற்சாகத்தையும் நம்பிக்கையையும் பெற்றபடியே இருந்தேன். போதாதற்கு, கல்யாணி அவர்களின் மகளும் சமூகப்பணியில் முதுகலை (M.A. Social Work) படித்துக்கொண்டிருந்தார்.

சரியான வழிகாட்டலோ, விழிப்புணர்வோ இல்லாததால் வாழ்க்கையில் எட்டாண்டுகளை வீணடித்துவிட்டேன்.  என்னைப் போலவே விழிப்புணர்வின்றி இருக்கும் கிராமப்புறப் பார்வையற்ற பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நான் சமூகவியல் படிப்பையே தேர்ந்தெடுத்தேன்.

கே: உங்களைப்போல இருக்கும் பார்வையற்ற பெண்கள் முன்னேற வேண்டும் என்கிற உங்களின் உயரிய நோக்கம் புரிகிறது. ஆனால், ஏற்கனவே எட்டாண்டுகள் படிக்காமல் கழிந்துவிட்டது. மொழியோ, வரலாறோ எடுத்துப் படித்தால் வேலை கிடைக்கும். சமூகவியல் படித்தால் வேலை கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற அச்சமோ, பதட்டமோ  உங்களுக்கு எழவில்லையா?

ப: அப்படி ஒரு நிலை இருக்கிறது என்ற விழிப்புணர்வுகூட எனக்குக் கிடையாது. எனக்குச் சொல்லப்பட்டதெல்லாம், இதற்கு முன்பு குருமூர்த்தி என்ற பார்வையற்றவர் மட்டுமே இந்தப் படிப்பை முடித்திருக்கிறார். அடுத்து நான்தான். ஆகவே, B.A.  முடித்து, MSW, பிறகு M.Phil முடித்தால் வேலை எளிதாகக் கிடைத்துவிடும் என்பதுதான். அதேசமயம், பட்டதாரிகள் சங்கத்தில் ஒன்றுகூடல் (get together) நடக்குமே. அப்போது பத்மராஜ் சார் உட்பட பலரும் என்னை அந்தப் படிப்பை மாற்றி, வரலாறோ, இலக்கியமோ கேட்கச் சொன்னார்கள். இந்தப் படிப்பு கிடைப்பதற்கே ஏகப்பட்ட போராட்டங்கள். இனியும் மாற்றிக் கேட்பதா என்று விட்டுவிட்டேன்.

இளங்கலை மூன்றாம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே அடுத்து MSW படிப்பது என முடிவு செய்து, அது தொடர்பான தகவல்களைத் திரட்டத் தொடங்கினேன். பல கல்லூரிகளில் விண்ணப்பித்தேன். அப்போது ஒரே நேரத்தைக் குறிப்பிட்டு, மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க்ஸ் மற்றும் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலிருந்து எனக்கு நுழைவுத்தேர்வுக்கான அழைப்பு வந்தது. குறித்த நாளுக்கு ஒருநாள் முன்பாக ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்குச் சென்று துறைத்தலைவரைச் சந்தித்தேன்.

மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க்ஸிலும் அடுத்த நாள் நுழைவுத்தேர்வுக்குச் செல்ல வேண்டியிருப்பதாகச் சொன்னேன். அப்போது அவர், “சரி நாளை நீ அங்கே போய் தேர்வை எழுது. இங்கே இப்போதே உனக்கு ஸ்கிரைப் ஏற்பாடு செய்து தந்தால், உன்னால் தேர்வெழுத முடியுமா?” என்று கேட்டார். நானும் ஒப்புக்கொண்டேன். அதன்படியே அன்று பிற்பகல் ஸ்டெல்லா மேரிஸில் தேர்வெழுதிவிட்டு, அடுத்தநாள் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க்ஸிலும் நுழைவுத்தேர்வை எதிர்கொண்டேன்.

பிற்பகல் மீண்டும் நேர்காணலுக்காக ஸ்டெல்லா மேரிஸ் வந்தேன். ஆனால், அந்தத் துறைத்தலைவரோ, “நீ இந்த படிப்பு படிப்பதற்கு கல்லூரி சார்பில் நாங்கள் என்னென்ன வசதிகளைச் செய்துதர வேண்டும் என்பதை மட்டும் எங்களுக்குச் சொல்” என்றார். காரணம் என்ன தெரியுமா? மும்பையிலு்ள  டாட்டா இன்ஸ்டியூட் ஆஃப் சோஷியல் சைன்ஸில் MSW முடித்துவிட்டு, நல்ல முறையில் யூ.கே.யில் பணியாற்றிக்கொண்டிருக்கும் கௌஷிக் என்ற பார்வையற்றவர் இவரின் நண்பர். இருவருமே டாட்டா இன்ஸ்டியூட்டில் படித்தவர்கள். எனவே, அவருக்குக் கிடைத்த அதே வாய்ப்பை இங்கே எனக்கு ஏற்படுத்திவிட வேண்டும் என்கிற உள்ளார்ந்த ஆவல் துறைத்தலைவருக்கு இருந்தது.

தவிர, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் சேரும் முதல் பார்வையற்றவர் நான் என்பதால், ஒரு பார்வையற்றவருக்கு என்னென்ன வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும் என்கிற கருத்துக்கேட்பாகவே அந்த நேர்காணல் அமைந்தது. “களப்பணி, அறிக்கைகள் தயார்செய்தல் போன்ற தருணங்களில் நாங்கள் உனக்கு எந்தெந்த வகைகளில் உதவ வேண்டும்” என்று கேட்டார்கள்.

மகேந்திரன்: மிக சுவாரசியமான வித்யாசமான நேர்காணலாக இருக்கிறதே!

அருணாதேவி: ஆமாம். ஆனால், நான் “எதுவும் வேண்டாம், இடம் கிடைத்தால் போதும்” என அவர்களிடம் சொல்லிவிட்டேன். இரண்டே நாட்களில் கல்லூரியில் சேர்வதற்கான அனுமதிக் கடிதம் வந்து சேர்ந்தது ஆனால் ஓர் அதிர்ச்சித் தகவலுடன்.

சேர்க்கை கட்டணமாக ரூ. 10500 செலுத்த வேண்டும். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. நான் சகஜமாக இந்த விஷயத்தை என்னுடைய வாசிப்பாளரிடம் பகிர்ந்தேன். அவர் ராணிமேரி கல்லூரியில் வேதியியல்துறை பேராசிரியர். ஸ்டெல்லாமேரிஸ் கல்லூரியின் துணைமுதல்வரும் இவரும் நண்பர்கள் என்பதால், இவர் சொல்லித்தான் நான் ஸ்டெல்லாமேரிஸில் விண்ணப்பித்தேன்.

விஷயத்தை நான் சொன்னதுதான் தாமதம், உடனடியாக 10000 அடங்கிய ஒரு ரூபாய்க்கட்டினை என் கையில் கொடுத்து, “அருணா உடனே நீ ஃபீஸ் கட்டிடு. அங்கே படிச்சா உன்னோட பெர்சனாலிட்டி இன்னும் டெவலப் ஆகும். இதைக் கடனா வச்சுக்கோ. வேலைக்குப் போய் எனக்குத் திருப்பிக்கொடு போதும்” என்று சொன்னார்.

மகேந்திரன்: அந்த வாசிப்பாளரின் பெயரை நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். நாங்கள் அறிந்த தன்னம்பிக்கையான அருணாதேவியை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றிய அந்த வாசிப்பாளரின் செயல் நன்றிக்குரியது அல்லவா?

அருணாதேவி: அவரின் பெயர் திருமதி. பர்வதம் ராமசாமி.

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் MSW படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு பயிற்சியின் நிமித்தமாக தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் பணியாற்றிய திரு. சஃபருல்லா அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. அவரும் பார்வையற்றவர். ஏற்கனவே என்னுடைய பேராசிரியர்கள் என்ன்ஐப் பற்றி அவர்களிடம் சொல்லியிருப்பார்கள்போல. அத்தனை பெரிய கூட்டத்துக்கு இடையேயும் என்னுடைய பெயரைச் சொல்லி அழைத்து என்னிடம் அவர் பேசினார்.

“அருணா! நான் 1986ல் MSW முடித்தேன். தென்னிந்திய அளவில் MSW முடித்த முதல் பார்வையற்றவர் நான்தான். அதுபோல, நீ 2004ல் இந்தப் படிப்பில் சேர்ந்திருக்கிறாய். தென்னிந்திய அளவில் MSW முடிக்கும் முதல் பார்வையற்ற பெண்ணாக நீ இருப்பாய். இந்தப் படிப்பு எவ்வளவு சவாலானது என்பது எனக்குத் தெரியும். அதே சவால்களும் போராட்டங்களும் அழுத்தங்களும் உன்னுடன் படிக்கும் சக தோழிகளுக்கும் இருக்கும் என்பதால், நீ ஒருபோதும் எதற்காகவும் அவர்களைச் சார்ந்து இருக்காதே. தன்னார்வ வாசிப்பாளர்களை பயன்படுத்திக்கொள். அறிக்கைகள் தயார் செய்தல் உள்ளிட்ட கற்றல் தொடர்பான எந்த ஒரு உதவியானாலும் என்னை நீ அணுகலாம்” என எனக்கு முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கினார். நானும் நல்ல முறையில் படித்து தேர்ச்சிபெற அவரின் வழிகாட்டல்கள் உதவின.

பிறகு, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் M.Phil படித்தேன்.

சிறைத்துறையில் பெண் கைதிகள் குறித்து எனது ஆய்வினைத் தொடங்கினேன். ஏற்கனவே வழக்கறிஞர் திருமதி. சுதா ராமலிங்கம் அவர்கள் பெண் கைதிகளின் அன்றைய நிலை குறித்து ஓர் ஆய்வினை நடத்தியிருந்தார். எனவே நான், சிறையிலிருந்து விடுதலையாகும் பெண்களின் நிலையை எவ்வாறு உயர்த்தலாம், அவர்களின் வாழ்வாதாரத்துக்கு அரசு என்ன செய்ய வேண்டும் என்கிற ரீதியில் என்னுடைய ஆய்வை அமைத்துக்கொண்டேன்.

காரணம், கைதிகளுக்குச் சிறையில் மறுவாழ்வுப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன என்றாலும், அவற்றிலும் சில போதாமைகள் உண்டு. குறி்ப்பாக சிறையிலிருந்து வெளியே வரும் பெண்கள் குறித்த சமூகத்தின் தப்பெண்ணங்கள் அவர்களின் அன்றாடத்தை வெகுவாகப் பாதிக்கும் என்பதால், சிறையிலிருந்து அவர்கள் வெளியே வரும்போது அவர்களுக்கு ஏதேனும் ஒரு பணிவாய்ப்பையோ அல்லது சுய தொழில் செய்வதற்கான வழியையோ அரசு ஏற்படுத்தித்தர வேண்டும் என்பதே என்னுடைய பரிந்துரை.

எனது ஆய்வுக்காக நான் புழல் மத்திய சிறையில் பெண்களின் பிரிவைத் தேர்ந்தெடுத்து அங்கே சென்று பல பெண் கைதிகளிடம் பேசும் வாய்ப்பைப் பெற்றேன். அவர்கள் குறித்துத் தெரிந்துகொண்டு, என் ஆய்வின் வாயிலாக அரசுக்கு சில பரிந்துரைகளை வழங்கினேன்.

அன்றைய காவல்த்துறையின் துணை இயக்குனர் திரு. சேகர் அவர்களிடமும் எனது ஆய்வு முடிவுகளைப் பகிர்ந்துகொண்டேன். அந்தவகையில், கடந்த 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல், ஒவ்வொரு ஆண்டும் சிறையிலிருந்து வெளியே வரும் கைதிகளுக்கு, ஆண்கள் என்றால், அவர்கள் சுய தொழில் செய்யும் வகையில், மின்சாரம் மற்றும் தண்ணீர்க்குழாய் பழுது நீக்கும் கருவிகள் அடங்கிய பெட்டகமும் (kit), பெண்கள் என்றால், அவர்களுக்கு மாவறைக்கும் இயந்திரம், தையல் இயந்திரம் என ஏதாவது ஒரு தொழில்சார் உதவி உபகரணங்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்படுவதை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

மகேந்திரன்: மிக முக்கியமான, பலரின் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய பணியைச் செய்திருக்கிறீர்கள்.

அருணாதேவி: இருப்பினும் எனக்கு நம்முடைய பார்வையற்ற மக்களிடம் பணியாற்ற வேண்டும் என்பது கனவாகவே இருந்தது.  அந்த காலகட்டத்தில் நான் ஒரு குடும்ப நல ஆலோசனை மையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அங்கு நான் நம்முடைய மாற்றுத்திறனாளி மக்கள் நிறைய பேரைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன். அப்படி ஒரு சமயம், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் என்னை அணுகி, சுனாமி பேரிடருக்குப் பின்னான காலகட்டத்தில் ஊனமுற்றவர்களின் நிலை குறித்து ஆக்‌ஷன் எய்ட் என்ற அமைப்போடு இணைந்து ஒரு செயல்திட்டத்தைத் தொடங்கியிருப்பதாகவும், அதில் இணைந்து பணியாற்ற முடியுமா என என்னைக் கேட்டார்கள். எனக்கும் என்னுடைய கனவு நிறைவேறும் ஒரு வாய்ப்பு அது எனப்பட்டதால், உடனே சம்மதித்தேன். அப்படித்தான் பிற மாற்றுத்திறனாளிகளுக்கான (cross disability) தளத்தில் முதன்முறையாக என்னை நான் இணைத்துக்கொண்டேன்.

மகேந்திரன்: தொடக்க காலத்தில் கிராஸ் டிசபிலிட்டி தளத்தில் இயங்கிய முக்கியமானவர்களுள் நீங்களும் ஒருவர் என நினைக்கிறேன். அந்த அனுபவம் எப்படி இருந்தது? அவர்களுடைய அணுகுமுறை குறித்துச் சொல்லுங்கள். அத்தோடு, சுனாமிப் பேரிடரில் மாற்றுத்திறனாளிகளை அரசு எப்படிக் கையாண்டது? களத்தில் நீங்கள் பார்த்து வருத்தப்பட்ட நிகழ்வுகள் ஏதேனும் உண்டா? எந்த வகையான மாற்றங்களை உங்களால் கொண்டுவர முடிந்தது என்பது பற்றிச் சொல்லுங்கள்.

அருணாதேவி: அன்றும் சரி, இன்றும் சரி நிலைமைகள் பெரிதாய் மாறிவிடவில்லை. நான் ஸ்டெல்லாவில் படித்துக்கொண்டிருந்தபோதே சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உடனடி நிவாரணத்தேவைகள் குறித்த ஒரு கணக்கெடுப்புக்காக நாகப்பட்டினத்திலேயே 45 நாட்கள் தங்கி நிறைய பேரைச் சந்தித்திருக்கிறேன். தங்கள் உதவி உபகரணங்கள் உட்பட எல்லாவற்றையும் இழந்து நிற்கதியாய் நின்ற பல மாற்றுத்திறனாளிகளை அங்கே நாங்கள் சந்தித்தோம். தற்காளிக முகாம்களில் குடியிருந்த மாற்றுத்திறனாளிகள், அவர்களுக்கான கழிப்பிட வசதிகள் என எல்லாமே மிகப் பின்தங்கிய நிலையில்தான் இருந்தன. அத்தகைய இக்கட்டான காலகட்டத்தில் தொண்டு நிறுவனங்களின் பணி அலப்பரியதாக இருந்தது.

அவர்கள்தான் வீடிழந்த பல மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகட்டித் தந்தார்கள். அப்போதுதான் மாற்றுத்திறனாளிகளுக்குரிய பிரத்யேக வசதிகளை உள்ளடக்கிய வீடுகள் அவர்களால் கட்டப்பட்டன. அந்தவகை முயற்சிகள் அரசுக்கும் ஓர் படிப்பினையாக அமைந்தன.

உதாரணமாக, மாற்றுத்திறனாளிகளுக்கு கீழ் தளத்திலேயே வீடுகள் கட்டப்பட வேண்டும். சாய்வுதளங்கள் அமைக்கப்பட வேண்டும். வழுக்கும் டைல்ஸ் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பார்வையற்றோருக்கு தொடுகை (tactile floors) சார்ந்த தளங்களை அமைக்க வேண்டும் என அரசாங்கம் கற்றுக்கொண்டதும் அப்போதுதான்.

சுனாமி களப்பணியின் மூலம், ஆஸ்த்ரேலியாவின் சிட்னி நகரில் சிட்னி லாயர்ஸ் ஹவுஸ் மற்றும் இண்டர்நேஷனல் டிசபிலிட்டி அலையன்ஸ் (International Disability alliance) இணைந்து நடத்திய ஒரு பயிலரங்கில் பங்கேற்று, இந்தியாவில் பேரிடரின்போது ஊனமுற்ற குழந்தைகள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள், அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஒரு அறிக்கை சமர்ப்பித்துப் பேசும் வாய்ப்பைப் பெற்றேன். பேரிடரில் பெரும்பாலான ஊனமுற்ற குழந்தைகள் கல்வி தொடர்பான இழப்புகளையே அதிகம் எதிர்கொள்கின்றனர். இடைநிற்றல், இடப்பெயர்வின் காரணமாக தங்களின் நட்புறவுகளை இழத்தல், அன்றாடக் கற்றலை அணுகுவதில் நிலவுகிற குறைபாடுகள் என அனைத்தையும் குறித்து அங்கு பேசினேன்.

மகேந்திரன்: மிகச் சிறப்பான ஒரு செயலை ஆற்றியிருக்கிறீர்கள். தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பில் முக்கிய தலைவர்களான சிதம்பரநாதன் மற்றும் சிம்மச்சந்திரன் அவர்களோடு இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்துச் சொல்லுங்கள்.

பேட்டியின் தொடர்ச்சியைப் படிக்க, இங்கே க்லிக் செய்யுங்கள்.

பகிர

2 thoughts on “பேட்டி: “மாற்றுத்திறனாளிகளைக் கையாள்வதில், பேரிடர்கள்தான் அரசுக்கான படிப்பினை காலம்”: – சமூகப்போராளி அருணாதேவியோடு ஓர் உரையாடல்

  1. ஆவணப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கேள்விகள் எழுப்பிய பேராசிரியர் மகேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *