சிந்தனை: கொண்டாட்டம் அல்ல, தேவை தெளிந்த நல்அறிவோட்டம்!

சிந்தனை: கொண்டாட்டம் அல்ல, தேவை தெளிந்த நல்அறிவோட்டம்!

ஆக்கம் தாஹீரா வெளியிடப்பட்டது

காலங்காலமாக சாதி, மத, கலாச்சாரச் சீரழிவுகளால் அடக்கி ஒடுக்கப்பட்ட பெண்ணினம் தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும் காக்க, தன்னம்பிக்கை என்னும் கூரியமுனை கொண்டு அதன் வீரியத்தை சற்றே குறைத்து வருகின்றது. மகத்தான மாற்றங்கள் எல்லாம் ஒரு சிறு புள்ளியிலிருந்துதான் ஆரம்பம் ஆகின்றன என்பதை மெய்ப்பிக்கும் வகையில், அன்றைய ஆணாதிக்கச் சமூகத்தை எதிர்த்துப் பெண்களால் மாபெரும் போராட்டம் ஒன்று வெடித்தது. அதன் விளைவாகத்தான் மார்ச் எட்டாம் நாளை சர்வதேச மகளிர்தினமாக  1975 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.

அன்றைய தினத்தை வெறும் கொண்டாட்டத்திற்குரிய நாளாக மட்டுமே சித்தரித்து, கேளிக்கைகளையும் வாழ்த்துக்களையும் மட்டும் பரப்புவது வேதனைக்குரிய செயலாகும். அன்றுமுதல் இன்றுவரை  பெண் என்பவள் தாய்மை, விருந்தோம்பல், கற்பு நெறி உள்ளிட்ட தலைசிறந்த பண்பு நலன்களால் சமுதாயத்தின் மூல காரணியாகத் திகழ்கின்றாள்.  விருட்சம் என வளர்ந்து நிற்கும் சமுதாயத்தின் ஆணி வேராகத் திகழ்பவள் பெண் என்பதை மறுத்து, இன்னமும் அவளுக்கு எதிரான வன்முறைகள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன.

இவையெல்லாம் ஒரு பக்கம் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கும் வேளையில், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் அதன்மீது கொண்ட தீரா மோகத்தாலும் பெண்களுள் சிலர் தங்கள் வாழ்க்கையின் மறுபக்கத்தை ஒளியிழந்து இருள் சூழ்ந்ததாக மாற்றிவருகின்றனர்.சில ஆண்களின் ஆசை வார்த்தைக்குத் தன்னையே அடமானம் வைக்கும் பெண்களின் அவலநிலை பற்றியும், நவீன மாற்றத்தின் போதை மயக்கத்தால் தங்கள் வாழ்க்கையை இழந்து சீரழியும் பெண்களின் நிலைபற்றியும்  இனி இக்கட்டுரையின் வாயிலாகக் காண்போம்.

இன்றைய நவீன யுகத்தின் முதுகெலும்பாகத் திகழ்வது தொழில்நுட்ப வளர்ச்சி என்று சொன்னால் அது மிகையாகாது. அதிலும் குறிப்பாக, சமூக வலைதளங்களின் ஆக்கிரமிப்பு என்பது கணக்கில் அடங்காதது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழலில் தான் நாம் அனைவரும் இருக்கின்றோம். ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதை நாம் நினைவு கூற மறந்ததில் இருந்துதான் நமக்கான வீழ்ச்சி ஆரம்பம் ஆகின்றது.அறிவாற்றல், மனவலிமை, புத்தி கூர்மை, செயல்திறன் போன்ற மனிதவள ஆற்றல்களை பெண்களுள் சிலர் சமுதாய வலைதளங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதன் விளைவாக அவர்களின் நேரம் சுரண்டப்படுவதோடு மட்டுமல்லாமல், சுயமரியாதையின்மை, பாலியல் வன்கொடுமை, மன அழுத்தம், பாதுகாப்பற்ற சூழல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை எதிர்கொள்வதால் பெண்களின் வாழ்க்கைநிலையானது நட்டத்தைச் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றது.

சமீபத்தில் டெல்லியில் வசிக்கும் பெண் ஒருவர் தன் பத்து வயது மகனுடன் ஆபாசமான அங்க அசைவுகளுடன் நடனமாடி,இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட காணொளியானது காண்போரை முகம் சுளிக்க வைத்தது. தாய்மையே பெண்மைக்கான முழு சக்தி என்பதை இலக்கியம் தொடங்கி இன்று வரை பறைசாற்றிக் கொண்டிருக்கும் வேளையில், சில பெண்கள் போலியான புகழ்ச்சிக்காக இப்படி அருவருக்கத்தக்க செயல்களை செய்து வருவது வருந்தத்தக்கது.

ஆண்களின் ஆசை வார்த்தைக்கு மதி மயங்கிய பெண்களும், மாயையான நவீன புகழ்ச்சிக்கு செவி சாய்த்த   பெண்களும் தாங்கள் சீரழிவதற்கான ஒரு முக்கிய பாதையாக வாட்ஸ் அப்,பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களையே தேர்ந்தெடுக்கின்றனர். இப்படித் தடம் மாறிச் செல்லும் பெண்களுக்கு உறவு பாராட்டவும் தெரிவதில்லை என்பதுதான் வேதனைக்குரிய செயலாகும்.

பெற்றோரின் வார்த்தைகளை நிராகரித்தல், நட்பின் இலக்கணம் எதுவென்று தெரியாமல் நட்பு பாராட்டுதல், கண்டதும் காதல்,காணாமலே காதல் என்கிற அபத்தமான திரை வசனத்திற்கு அடிமையாகி வாழ்க்கையை இழத்தல் போன்றவற்றிற்கு அடிப்படையாக இருப்பது சமூக வலைதளத்தின் மீதான போதை என்றுதான் சொல்ல வேண்டும். இத்தகைய கசப்பான உண்மைகளை ஏற்றுக் கொள்வது சற்று கடினமாகவும் வேதனையாகவும் தான்  இருக்கிறது.

பெண்கள் தங்கள் உரிமைக்காகவும் அடையாளத்திற்காகவும் இன்னமும் போராடிக் கொண்டிருக்கும் நிலையே நீடித்திருக்கும் வேளையில், சிலரின் இந்த அலட்சியப் போக்கினையும் சுட்டிக்காட்ட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.

பெண்களின் அறியாமையினால் உடல் சார்ந்தும் உளவியல் சார்ந்தும் பல பிரச்சனைகள் ஒரு புறம் ஏற்பட்டுக் கொண்டிருக்கையில் ,ஒட்டுமொத்த பெண்களுக்கு எதிராக சமூக வலைதளங்களின் மூலமாக இழைக்கப்படும் அநீதிகளும் மறுபுறம் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பெனும்

திண்மை உண்டாகப் பெறின். .

பெண்களின் மன உறுதியே கற்பென்று அறியப்படும் வேளையில், அதனை நவீன யுகத்தின் வியாபாரம் ஆக்கி வருகின்றனர் சில சமூக விரோதிகள். இவர்களின் சூழ்ச்சியில் அதிகம் சிக்கிக் கொள்பவர்கள் சாமானியப் பெண்களே.

அண்மையில் நான் அறிந்த செய்தி ஒன்று என்னை அதிர வைத்தது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசாமி ஒருவர் வாட்ஸ் அப் குழுக்களின் மூலமாக பாலியல் தொழில் செய்து வந்தார். வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்களிடம் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி, புகைப்படத்திற்கு, காணொளிக்கு, நேரடி வருகைக்கு என்று தனித்தனி விலையினை நிர்ணயம் செய்து பெண்களின் இயலாமையை இழிவு படுத்தி வந்த செயல் அதிர்ச்சி அளித்தது.

பதின்ம வயது குழந்தைகளுக்குக் கல்வியின் மீதான ஆர்வம் குறைந்து, whatsapp, facebook, instagram மீதான ஈர்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகின்றது.. அதாவது இணைய வழி கற்றலுக்காக கைப்பேசியை பயன்படுத்தும் அறியாப் பருவ குழந்தைகளுக்கு ஏமாற்று வலை விரிப்பது வலைதளமாகவே உள்ளது.

புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைத் திருடிப் பெண்களின் அந்தரங்கச் செய்திகளை அரங்கத்தில் ஏற்றி விடுவதாக அச்சுறுத்தி, தங்களின் இச்சைக்குப் பெண்களை பயன்படுத்தும் சில ஆண்கள் இச்சமுதாயத்தின் உயிர் கொல்லிகள். இதனால் வளரிளம் பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆவதோடு மட்டுமல்லாமல், பல பெண்களுக்கு இல்லற வாழ்க்கை என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.

திரும்பும் திசையெங்கும் ஏதோ ஒரு பெண்ணின் அவலக் குரல் ஏதோ ஒரு அநாகரிகச் செயலுக்கு இரையாகி எதிரொளித்துக் கொண்டுதான் இருக்கின்றது. இவ்வாறாக பெண்களின் இரு வேறு பிரச்சனைகள் புரையோடிக் கொண்டிருக்கும் வேளையில், மற்ற தினத்தை போல் மகளிர் தினத்தையும் கொண்டாட்டத்திற்குரிய நாளாக மட்டுமே கடந்து செல்வது என்பது அவ்வளவு எளிதன்று.

பலதரப்பட்ட துறைகளில் சாதனை படைப்பதற்கான வாய்ப்புகள் பெண்களுள் சிலருக்கு வாய்க்கப்பட்டு இருப்பதை எண்ணி உள்ளம் சற்றே பூரிப்படைகின்றது. இன்னாளில் அவர்களின் திறமைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டாலும், மகளிர் தினம் என்றால் என்னவென்றே அறியப்படாத சமூக பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். சமத்துவம் சம உரிமை என்பதெல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காயாக மட்டும் இல்லாமல், கடைக் கோடியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களுக்கும் அது சென்று சேர வேண்டும் என்பதுதான் ஆதங்கமாக உள்ளது.

குடும்ப வன்முறை மற்றும்  சமூக ஏற்றத்தாழ்வுகளால் உரிமைக் குரல்வளை நசுக்கப்படுவதை எதிர்த்து போராட வேண்டிய நிலையே பெண்களுக்கு இன்னமும் நீடிக்கின்றது. தொழில்நுட்பத்தின் அசாதாரண வெற்றியாக கருதப்படும் சமூக வலைதளத்தின் வாயிலாக நிகழ்த்தப்படும் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் அறவே ஒழிக்கப்பட வேண்டும். பெண்களை நகைப்புக்குரியவர்களாக மாற்றி வெளிவரும் மீம் டெம்ப்ளேட்டுகள் மற்றும் பெண்களை போகப் பொருளாகக் காட்டும் ஆபாசமான காணொளிகள் போன்றவை முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும். வாய்ப்புகள் வாய்க்கப் பட்டால் வாஞ்சையோடு சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு இந்த வலைதளங்கள் வழித்துணையாக வலம் வர வேண்டும்.

முகநூல் இன்ஸ்டாகிராம் வலையொலித்தளத்தின் வாயிலாக தங்களது தேவையற்ற செயல்களுக்கு அங்கீகாரம் கிடைக்குமா என்று எதிர்பார்க்கும் சில பெண்களின் நவீன மனநிலையும் மாற வேண்டும்.

எவற்றையெல்லாம் செய்வதற்கு விருப்பம் இருக்கின்றதோ அவற்றை செய்வது மட்டுமல்ல, எவற்றைச் செய்ய விருப்பம் இல்லையோ அவற்றைச் செய்யாமல் இருப்பதும் தான் சுதந்திரம் என்ற மகாத்மா காந்தியடிகளின் வரையறைக்குள் உட்படுத்தியே ஒரு பெண்ணின் சுதந்திரம் ஆனது வடிவமைக்கப்பட வேண்டும். எனவே பெண்களின் முன்னேற்றத்தை மறுப்பது என்பது பொதுநலனுக்காகப் பாய்ச்சப்படும் நீரினைத் தடுப்பதைப் போன்றது.

இந்திய மானத்தை ஒலிம்பிக்கில் தூக்கி நிறுத்திய தங்கமங்கை பி.வி சிந்துவைப் போன்ற பல சிந்துக்கள் வெளிவர வழி விடுவோம். காலந்தோறும் பெண்களை நிலவென்றும் மலரென்றும் வெறும் வர்ணனைக்குள் மட்டுமே உட்படுத்தும் கலாச்சாரம் ஒழிந்து, அவளுக்குள் இருக்கும் ஆற்றலையும் வீரத்தையும் கண்டறியும் விகிதாச்சாரம் உயர வேண்டும். அதுவே பெண்மையின் பரிபூரணம். அன்றுதான் மகளிர் தினம் நூறு சதவிகிதம் மகத்தான மகிழ்விற்குரிய நாளாக ஏற்றுக் கொள்ளப்படும். அதுவரை சமூக அநீதியை எதிர்த்துப் போராடுவோம். கட்டாயம் ஒருநாள் விடியலுக்கான வெற்றி வாகையை அனைவரும்  சூடுவோம்.

தொடர்புக்கு: Thahirab2323@gmail.com

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *