அனுபவம்: கல்வியெனும் நித்திய ஒளி

அனுபவம்: கல்வியெனும் நித்திய ஒளி

ஆக்கம் K.B. கீதா வெளியிடப்பட்டது

பிறக்கும் குழந்தை பார்வையற்றதாக, அதிலும்  பார்வையற்ற பெண்ணாகப் பிறந்துவிட்டால், அந்த வீட்டில் இருக்கும் பெற்றோர்களுக்கு அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உடனே வராது. அதுதான் அன்றைய பார்வையற்ற பெண்களின் நிலை. காலப்போக்கில் அவர்கள் அதை ஏற்றுக்கொண்டவுடன், எல்லா மருத்துவ முறைகளையும் பரிசோதித்துப் பார்ப்பார்கள்.

அத்தனை முயற்சிகளும் தோற்ற பின்பு, எல்லா தெய்வங்களையும் வழிபட்டு, அதற்கான காணிக்கைகளும் செலுத்துவார்கள்.

இதுவும் முடியாமல் போன பின்புதான் பள்ளியில் சேர்ப்பது என்பது பற்றி அவர்கள் சிந்திக்கவே தொடங்குவார்கள். இது சில இடங்களில் நடக்கும் என்றால், இன்னும் சில இடங்களில் அந்தப் பெண் குழந்தைகளைக் கொன்றுவிடுவதும் உண்டு. அப்படியும் சில சம்பவங்கள் நடந்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்னும் சில இடங்களில் கற்பப்பை போன்றவற்றை எடுத்துவிடுவதும் நடந்திருக்கிறது. இதுபோல் பார்வையற்ற பெண்கள் பலவகையில் பாதிக்கப்படுவார்கள்.

சில வீடுகளில் பார்வையற்ற பெண்களை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துவிடுவதும், சில வீடுகளில் பொக்கிஷம் போல் பாதுகாப்பதும் உண்டு.

பள்ளியில் சேர்ந்த பின்பு, தன் சொந்தத் திறமையைக்கொண்டு அந்தப் பெண் முன்னேறி வருவாள். சரியாகக் கல்வி பெறமுடியவில்லை என்றால், அந்தப் பெண் அந்தப் பள்ளியில் செயல்படும் தொழிற்பயிற்சிக் கூடத்தில் சேர்ந்துவிடுவாள். இல்லையென்றால் ஏதாவது ஒரு பார்வையற்றோர் இல்லத்தில் சேர்ந்து தன் வாழ்க்கையை ஓட்டுவாள். எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் வாய்த்துவிடாது. புறக்கணிக்கப்பட்ட பெண்களின் நிலை உயர்ந்தால் அவர்களை எல்லோரும் ஏற்றுக்கொள்வதும், பொக்கிஷம்போல் பாதுகாக்கப்பட்ட பெண் குழந்தை அதனாலேயே முன்னேற்றம் காணாமல் போவதும் நடக்கும்.

இதற்கெல்லாம் நேர்மாறான ஒரு நிலையும் உண்டு. நல்ல வசதிபடைத்த குடும்பத்தில் பிறக்கும் பார்வையற்ற பெண் குழந்தைகளுக்கு வீட்டிலேயே வைத்து எல்லாம் கற்றுத்தருவார்கள்.  அப்படிப் பயின்று ஒரு வேலையிலும் அமர்ந்துவிடுவார். ஆனால், வெளி வட்டாரத் தொடர்பே அவருக்கு இருக்காது. பெற்றோரே முயன்று அவருக்கு ஒரு திருமணமும் செய்துவைத்துவிடுவார்கள்.

அப்படித் திருமணம் ஆகாமல் போகும் பெண்கள், குடும்பத்தினருடனேயே இறுதிவரை உடனிருந்துவிடுவார்கள். அந்த உடனிருத்தலில் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டு வேலைகளைக் கற்றுக்கொள்வார்கள். இதெல்லாம் 80களின் நிலைதான். இப்போது நிலைமை சற்று மாறிவிட்டது என்றே சொல்லலாம்.

இப்போதெல்லாம் பார்வையற்ற பெ்ண் குழந்தைகளின் பெற்றோர் அவர்களை உடனே பள்ளியில் சேர்த்துவிடுகிறார்கள். அதற்கு ஏற்றாற்போல், வீட்டுக்கு அருகிலேயே சேர்ந்து படிக்கும் வாய்ப்பைத் தருகிற ஒருங்கிணைந்த கல்வியும் வந்துவிட்டது. தன் மகளைப் பார்வையற்றோருக்கான சிறப்புப்பள்ளிகளில் சேர்க்கவில்லை என்றாலும், படிக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக, பார்வையுள்ளவர்கள் படிக்கும் பள்ளியிலேயே சேர்த்துப் படிக்கவைக்கிறார்கள். இதனால், அந்தக் குழந்தைகளுக்குப் பார்வையின்மை, பார்வையற்றோர் குறித்த புரிதல்கள் ஏற்படாமலேயே போய்விடுகிறது. என்றாவது ஒருநாள் ஊன்றுகோலைத் தான் எடுத்தே ஆகவேண்டும் என்ற நினைப்பும்கூட இல்லாமல் போய்விடுகிறது.

சமீபத்தில் நான் ஒரு தேர்வெழுதச் சென்ற இடத்தில் அந்தப் பார்வையற்ற பெண்ணைச் சந்தித்தேன். தந்தையின் துணையோடு கிராமத்திலிருந்து தேர்வெழுத வந்திருந்தார். அவருக்கு பத்தாம் வகுப்பு முடித்தபிறகு பார்வை பறிபோயிருக்கிறது. எல்லாமே குடும்பம்தான் செய்கிறது. அவருக்குப் பார்வையற்றோர் தொடர்பே இல்லை. பிரெயில் பற்றிகூட எதுவும் தெரியவில்லை. பிரெயில் பற்றி பார்வையற்றவர்கள் பற்றி நான் அவரின் தந்தையிடம் கேட்டால், “அதெல்லாம் தேவையில்லை, நாங்களே பார்த்துக்கொள்வோம்” என்று பதில்வருகிறது. இது எத்தனை நாளைக்கு நடக்கும்? நாளை ஒரு ஆசிரியர்ப் பணியே அவருக்குக் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போதும் பார்வையற்றவர்களின் தொடர்பே இல்லாமல், குடும்பம் மட்டுமே அவரைத் தாங்கும் என்பதெல்லாம் எத்தனை நாளைக்குச் சாத்தியம்?

இவர்கள்தான் நான் மேற்சொன்ன பொக்கிஷம்போல் பாதுகாக்கப்படும் பெண்கள். இதனால் இவர்களுக்குப் பார்வையற்றோருக்கான உரிமைகள், அரசால் வழங்கப்படும் சலுகைகள், பிரெயிலின் அவசியம் என எதுவுமே தெரியாமல் போய்விடுகிறது.

ஒருவகையில் நானும்கூட இப்படித்தான் பாதிக்கப்பட்டேன். என் பெற்றோர் பணிநிமித்தமாக வெவ்வேறு இடங்களுக்கு மாற்றலாகிப் போய்க்கொண்டிருந்ததால் என்னால் பார்வையற்றோருக்கான சிறப்புப்பள்ளியில் சேர்ந்து படிக்க இயலவில்லை. மருத்துவம், கடவுள் என எல்லாம் கைவிட்ட பின்புதான் பள்ளி பற்றியே என் பெற்றோர் சிந்திக்கத்தொடங்கினார்கள். அதற்குள் எனக்கு வயதும் அதிகம் ஆகிவிட்டது.

15 வயதில் பார்வையற்றோர் பள்ளியில் சேர்ந்த எனக்கு  எல்லாமே புதிதாகத் தோன்றியது. அதுவரை நான் என்னைப் பற்றி எண்ணத்தால் கட்டியிருந்த கோட்டைகளெல்லாம் உடைந்து சிதறின. என்னால் மற்ற பார்வையற்றவர்கள் போல சகஜமாக இருக்க முடியவில்லை. எனக்குள்ளேயே நான் அழ ஆரம்பித்தேன். இதுவே பல நேரங்களில் என் தோல்விகளுக்கும் பல இழப்புகளுக்கும் காரணமாகிவிட்டது. இன்றுவரையிலும் அது தொடர்கிறது. ஒருவேளை சிறுவயதிலேயே நான் பார்வையற்றோருக்கான சிறப்புப்பள்ளியில் சேர்க்கப்பட்டிருந்தால், என்னுடைய நிலை மாறியிருக்கலாம் என அவ்வப்போது வேதனை எழுவதுண்டு. இந்த இடத்தில் பொதுச்சமூகத்துக்கும் ஒரு வேண்டுகோள்.

உங்களால் முடிந்தால் பார்வையற்றோருக்குத் தேவையான வகையில் உதவுங்கள், இல்லையெனில், நீங்கள் உங்கள் போக்கில் போய்விடலாம். அதைவிடுத்து, “உனக்கு ஏழெட்டு அறிவு இருக்கிறது, உன்னை மாதிரி அழகில்லை, திறமைசாளி இல்லை” என்று இல்லாததையும் பொல்லாததையும் சொல்லாதீர்கள்.

பொதுச்சமூகத்தில் பார்வையற்றோர் குறித்த சில பொதுவான புரிதல்கள் உண்டு. பார்வையற்றவர்களெல்லாம் குறிப்பாகப் பார்வையற்ற பெண்களெல்லாம் திறமைசாளிகள், அழகிகள், குரலிருக்கிறதோ இல்லையோ எல்லோரும் பாடகிகள். நானெல்லாம் இசை கற்றேன் என்றால், எனக்கிருந்த ஒரே தகுதி நான் பார்வையற்ற பெண் என்பதுதான். உண்மையில் இசை எனக்கு எவ்வளவு கடினமானது என்பது அதைக் கற்றபோதுதான் தெரிந்தது. இப்படித்தான் பலநேரங்களில் பொதுச்சமூகம் பார்வையற்றவர்களைத் தவறாக வழிநடத்திவிடுகிறது.

அதீதப் பாதுகாப்பு பெற்ற பெண் குழந்தைகளுக்கு நான் உதாரணம் என்று சொல்லும் அதேநேரத்தில், எல்லாவற்றிலும் விதிவிலக்குகள் உண்டு என்பதும் உண்மை. எனக்குத் தெரிந்த ஒரு தோழி. அதீதப் பாதுகாப்போடு தன் பெற்றோரால் வளர்க்கப்பட்டவர்தான். இப்போது அவர் அரசு வேலையில் இருக்கிறார். சமையலிலிருந்து அழகுக்கலைவரை அவருக்கு எல்லாம் தெரியும். முழுப் பார்வையற்றவர் என்றாலும்கூட அவர் அச்செழுத்தில் எழுதுவார். சொல்லித்தந்தவர் அவருடைய அம்மா. அந்தத் தாயின் தைரியத்தைப் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

மாறாகப் பார்வையின்மை என்ற காரணத்தாலேயே குடும்பத்தால் புறக்கணிக்கப்படுபவர்களின் கதை மேலும் சோகமானது. நான் அறிந்த ஒரு குடும்பத்தில், மகனும் மகளும் பார்வையற்றவர்கள். இவர்கள் பார்வையற்றவர்கள் என்பதாலேயே இவர்களின் தந்தை அந்தக் குடும்பத்தை விட்டு ஓடிவிட்டார்.

என் ஆசிரியர் மறைந்த திரு. ஜெயராமன் அவர்கள்தான் ஒரு பள்ளியில் சேர்த்து அவர்கள் இருவரையும் படிக்கவைத்தார். ஆனால், அவர்களின் தாய்க்கும் அந்தப் பள்ளியின் ஆசிரியர்களுக்கும் இடையே ஏதோ மனக்கசப்பு. பத்தாம் வகுப்போடு அவர்கள் இருவரின் படிப்பும் நின்றுபோனது.

இப்போது அந்தப் பையன் ஏதோ ஒரு பார்வையற்ற்ஓர் பள்ளியில் படிக்கிறான். ஆனால், அந்தப் பெண் படிக்காமல் வீட்டில்தான் இருக்கிறாள். அன்றாடம் செய்யும் தன் சொந்த வேலைகளைக்கூட அந்தப் பெண்ணுக்கு அந்தத் தாய் பழக்கிவிடாமல், எல்லாவற்றுக்கும் தன் தாயைச் சார்ந்துதான் இருக்கிறாள். அவள் தொடர்பான எல்லாவற்றிலும் அந்தத் தாய்தான் முடிவெடுக்கிறார். உண்ணும் உணவில் தெரிவுகூட அந்தத் தாயினுடையதே.

நான் மேற்சொன்ன அத்தனை உதாரணங்களையும் ஒன்றுகூட்டிப் பார்த்தால், பார்வையற்ற பெண் குழந்தைகளுக்கு சரியான வயதில் முறையாக சிறப்புக்கல்வி அறிமுகப்படுத்தப்பட வேண்டும். பிரெயில், ஊன்றுகோல், அன்றாட வாழ்க்கைத்திறன் பயிற்சி எல்லாமே அவளின் சிறுவயதிலேயே கற்பிக்கப்பட வேண்டும். அப்படியானால், அத்தகைய கல்வியை முறையாக வழங்கும் பார்வையற்றோருக்கான சிறப்புப்பள்ளிகளில் அந்தப் பெண் குழந்தைகள் மாற்று யோசனை இன்றி சேர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் தற்சார்புடைய ஆளுமை நிறைந்தவராகப்  பரிணமிப்பது ஒரு பார்வையற்ற பெண்ணுக்குச் சாத்தியம்.

கல்வியே சிறகு, கல்வியே விடுதலை, கல்விதான் பார்வையற்ற பெண்களை இருளிலிருந்து மீட்கும் நித்திய ஒளி.

அனைத்து சகோதரிகளுக்கும் மகளிர்தின வாழ்த்துகள். தந்தையாய், சகோதரனாய், கணவனாய், தோழனாய் பெண்களுக்கு பக்கபலமாய் இருக்கும் அனைத்து சகோதரர்களுக்கும் என் வணக்கங்கள்.

***தொடர்புக்கு: geethavalli1973@gmail.com

எழுத்தாக்கம்: ப. சரவணமணிகண்டன்

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *