Categories
கட்டுரைகள் தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: மார்ச், 2023 மகளிர்

அலசல்: வெளிச்சம் விழ வேண்டிய விழிச்சவால் மகளிர்

காலங்கள் கடந்தாலும் அறிவியல் வளர்ந்தாலும் மன உறுதியும் நம்பிக்கையும் இல்லாமல் வீட்டில் முடங்கும் சகோதரிகளுக்கு சாதனைப் பெண்கள் வீடுவீடாகச் சென்று வகுப்பெடுத்தாவது அவர்கள் வாழும் நிலைமாற வழிகாட்ட வேண்டும்.

சவால்களே வாழ்க்கையில் சுவாரசியத்தை உருவாக்குகின்றன. அதை வெற்றிகொள்ளும்போது வாழ்க்கை அர்த்தப்படுகிறது. எதிர்ப்புகள், நிராகரிப்புகள், தோல்விகள், ஏமாற்றங்கள் தொடர்கதையாகும்போது அதை துணிச்சலோடு எதிர்கொண்டு வெற்றிபெறும் இரகசியம் எல்லோருக்கும் எளிதில் புலப்படுவதில்லை.

இயற்கைத் தாய் ஈன்ற எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான உணர்வுகள் இருப்பதில்லை. வாழ்க்கை பொதுவானது என்றாலும் வாழும் முறையில் ஒப்பிட்டுக்கூட சொல்ல முடியாத அளவுக்கு நிறைய மாற்றங்கள் இருக்கத்தான் செய்கின்றன. மென்மையான அல்லது பலவீனமான உடல் அமைப்பைக்கொண்ட பெண்களுக்கு சவால்கள் வரும்போது அது எதிர்கொள்ளும் துணிச்சல் மனவலிமை இருந்தால் மட்டுமே வெற்றியாளராகத் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும். சாதாரணப் பெண்களைவிட உடல் குறைபாடுடைய அதிலும் விழிச்சவால் உடைய பெண்களுக்கு சவால்களின் அளவு அதிகம் என்று சொன்னால் அது மிகை அல்ல. 

தாயின் கைகோர்த்து நடக்கத் தொடங்கியதுமுதல், தம் வாழ்வில் ஒவ்வொரு தேவையையும் நிறைவேற்றிக்கொள்வதற்கு நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பள்ளியில் சேர்ந்து படிப்பதில், பருவமடையும் சமயத்தில், தன்சுத்தம் பேணுவதில், குடும்பப் பராமரிப்பில், திருமண வயதில், கற்ப காலத்தில், குழந்தை வளர்ப்பில், பாதுகாப்பான பணிச்சூழலைத் தக்கவைத்துக்கொள்வதில், குடும்பத்தின் எழுதப்படாத சட்டங்களைப் பின்பற்றுவதில், தனித்திறமைகளை அடையாளப்படுத்திக்கொள்வதில் என ஒவ்வொரு சூழலிலும் அணிவகுத்தபடி இருக்கும் சவால்களைச் சந்தித்து வெல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்.

சாதனைப் பெண்மணிகளை ஊடகங்கள் வரிசைப்படுத்தத் தவறுவதில்லை. சாதாரணப் பெண்களில் வாழும் வகை அறியாமல், இருளுலகில் சஞ்சரித்து, சமூகத்தின் வெளிச்சத்தை தேடுவோரும், தன்னம்பிக்கையை மூலதனமாக்கி வாழ்வில் சிறந்து, பல கோணங்களில் உலகிற்கு வெளிச்சம் கொடுப்போரும் நிறைய பேர் இருக்கிறார்கள். இன்றைய பெண்களுக்கு விழிப்புணர்வைக் கொடுத்து, எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான விழுமியங்களையும், உளவியல் சார்ந்த புரிதல்களையும், சரியான திட்டமிடலையும் வகுத்துத் தரும் நோக்கில், வெளிச்சம் விழ வேண்டிய சில விழிச்சவால் பெண்களை வரிசைப்படுத்துகிறது இப்பகிர்வு.

இறப்புச் சான்றிதழும் இல்லை, விதவைச்சான்றிதழும் பெறவில்லை

‘கண்ணுடையார் என்போர் கற்றோர்’ என்பதற்கேற்ப, தம் கல்விக் கண்ணைத் தாமதமாகத் திறந்துகொள்வதற்காக, 12ஆம் வகுப்புத் தேர்வை பரபரப்போடு தனித்தேர்வராக எழுதிக்கொண்டிருக்கும் இவர் பெயர் ராஜலட்சுமி. பிறவிப் பார்வையற்றவர். பத்தாம் வகுப்புவரை ஒசிபிஎம் (OCPM) பள்ளியில் படித்தவர். 11 ஆம் வகுப்பிற்கு பசுமலைப் பள்ளியில் சேர்ந்த இவர், பள்ளிச் சூழல் பிடிக்காமல் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திக்கொண்டார். பிறகு ஏழு ஆண்டுகள் கழித்துப் பார்வை உள்ள உறவுக்கார இளைஞனைக் குடிகாரர் என்று தெரிந்தும், திருத்திவிடலாம் என்ற நல்லெண்ணத்தோடும், வறுமையின் காரணமாகவும் மணந்திருக்கிறார்.

குழந்தைக்காக இவர் ட்ரீட்மெண்டில் இறங்க இவர் கணவரோ, மதுப் பழக்கத்தில் எல்லாவற்றையும் முறியடித்திருக்கிறார். கடன் தொல்லை, கணவரது உடல் நலக் குறைவு உள்ளிட்ட நிறைய இன்னல்களைச் சகித்துக்கொண்டு வாழ்ந்திருக்கிறார். திருமணம் முடிந்த 5 ஆண்டுகளில் அவரது கணவர் தற்கொலை செய்துகொண்டதால் தன் தாயார் வீட்டில் தஞ்சம் ஆகிவிட்டார்.

2014இல் நடந்த இந்தச் சம்பவத்திற்குப் பின், ராபர்ட் இம்மானுவேல் அவர்களது அறிவுரைப்படி சென்ற ஆண்டு 11ஆம் வகுப்பை முடித்துவிட்டு இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்கிறார். பாடங்களைக் கற்பதெல்லாம் யூட்யூபில் மட்டும்தான். எப்படி எழுதப்போகிறோமோ என்ன ரிசல்ட் வருமோ என்ற குழப்பத்தோடு தேர்வறைக்குச் செல்கிறார்.

அவருக்கு வருமானம் என்பது அரசு வழங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை மட்டுமே. உணவுச் செலவை அவருடைய தந்தை கவனித்துக்கொள்கிறார். அரசு அதிகாரிகளின் லஞ்ச லாவண்யங்களுக்கு பயந்து அவர் கணவருடைய இறப்புச் சான்றிதழ் மற்றும் இவருக்கான விதவை சான்றிதழ் எதையும் பெற முயற்சிக்கவில்லை. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் எஸெஸ்சி எம்டிஎஸ், எழுதி இருப்பதாக சொல்கிறார். பல்வேறு இடங்களில் நடைபெறும் போட்டித் தேர்வுகளுக்கான சிறப்பு வகுப்புகளில் கலந்துகொள்ள அவருக்கு துளியும் விருப்பமில்லை. பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொள்ளவும் வாய்ப்பில்லை.

அறிவுரை சொல்ல நண்பர்கள் இருந்தும், முன்னேற்றம் காண வழிகள் ஆயிரம் இருந்தும் கல்வி கற்க வாய்ப்புகள் இருந்தும், நிறைய பெண்கள் புது இடங்களில் சென்று தங்கிப் படிப்பதை விரும்பாமல், குடும்பச் சூழலைக் காரணம் காட்டி, தங்கள் வாழ்க்கையை வீணடித்துவிடுகின்றனர். ஏதோ ஒரு சூழலில் திருமண வாய்ப்பு கிட்டினாளும், அதுவும் சரியாக அமையாத நிலை ஏற்பட்டுவிடுகிறது. இதுபோன்ற சூழல்களில் வீட்டில் அமைதிகாப்பதில் பொருள் இல்லை. வாய்ப்புகளைப் பயன்படுத்தி மெல்ல மெல்ல முன்னேற்ற பாதையில் நடைபோட வேண்டும்.

பணமிருந்தால் மணம்

ஆசிரமங்களில் வளரும் குழந்தைகளைப் பொறுத்தவரை, தரமான கல்வி கேரண்டி. மற்றபடி வாழ்க்கைத் திறன்களை அவர்கள் கற்பதற்கான சூழல்கள் கிட்டுவதில்லை. அன்பிற்காக ஏங்கியே வாழ்க்கையைக் கழிக்க வேண்டி இருக்கிறது. படித்துத் திருமண வயதை எட்டியதும், தாங்களாக விருப்பப்பட்டால் ஒழிய, அவர்கள் அதே ஆசிரமத்திலோ அல்லது அவர்கள் வயதுக்கு ஏற்ற இல்லங்களிலோதான் இறுதிவரை வாழ்கிறார்கள்.

இந்த வகையில் சென்னையில் பூந்தமல்லியில் நெசவுத்தொழில் பார்க்கின்ற சகோதரி தமிழ்ச்செல்வி அவர்களிடம் கேட்டபோது, வருமானம் இருந்தால்தான் திருமணம் செய்ய முடியும். என் வாழ்க்கையைக் கடவுள் பார்த்துப்பான் என்று சொல்வதைக் கேட்டு இதுவும் எதார்த்தம் என்று கடக்க முடியவில்லை. அடுத்தவருக்கெல்லாம் அலையன்ஸ் பார்க்கத் துடிக்கும் சில பெண்கள் தம் வாழ்க்கையை சிந்திக்க தவறிவிடுகின்றனர். அது சரி என் அண்ணன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்ததும் எனக்கு எப்பொழுது திருமணம் செய்யப் போகிறீர்கள்? நான் சொல்லும் மாப்பிள்ளையைத்தான் கட்டிவைக்க வேண்டும் என்று சொல்லும் தைரியம் என்னைப்போல எல்லாருக்கும் வந்துவிடுமா என்ன?

திருமணம் குறித்து மதுரையைச் சேர்ந்த சகோதரி ஆனந்தி கொடுத்த ஸ்டேட்மெண்ட் வியப்பாக இருந்தது. அவருடையது காதல் திருமணம். அவர் முழுப் பார்வையற்றவர்; அவருடைய கணவர் குறைப்பார்வையுடையவர். வழக்கம்போல பெண் வீட்டில் எதிர்ப்பு வலுக்க, அந்தச் சகோதரிதான் வேண்டுமென்ற தீர்க்கமான முடிவோடு இருந்த அந்த ஆடவர் அவர் வீட்டாரின் சம்மதம் பெற்று, மாலையிட்டு மனைவியாக்கி, இன்று மகிழ்ச்சியான மனநிலையுடன் கூடிய வாழ்வை அளித்திருக்கிறார். சகோதரி தனியார்ப் பள்ளியில் பணிவாய்ப்பைப் பெற்றபோதும், அவர் நடத்திவந்த டெலிபோன் பூத்தை அவர் கணவர் இன்றுவரை நடத்திவருகிறார். இவரைப்போல, பார்வையற்றோருள் பெரும்பாலோர் அரசுப்பணி இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஒரு குடும்பத்தின் எதிர்ப்பையோ அல்லது இரண்டு குடும்பங்களின் எதிர்ப்பையோ சம்பாதித்தபடிதான், தாம் விரும்பியவரை மணந்து, மனமொத்த தம்பதியர்களாக வாழ்ந்து வருகின்றனர்.  

வாழ்க்கையையே புறட்டிப் போட்ட திடீர் பார்வையிழப்பு

அடுத்த கதை சற்று வித்தியாசமானது.  

ஆதாமுக்குத் துணையாக இன்ப துன்பங்களை பகிர்ந்துகொள்வதற்காக ஏவாளைப் படைத்தான் இறைவன். என்ன நடந்தது? இறைவனின் கட்டளை மீறலுக்கு ஏவாள் காரணமானபோதும், இறைவனுடைய தண்டனையை ஏற்றுக்கொண்டு ஏவாளைத் தன் துணையாக்கியபடியே இறுதிவரை வாழ்ந்தார் ஆதாம். இந்தக் கதையில், திருமணத்திற்குப்பின் ஏற்பட்ட எதிர்பாராத பார்வையிழப்புக்குப் பெற்றோர்மீது பழிவிழ, அஞ்சி நடுங்கித் தாய் வீட்டில் முடங்கி, விழிப்புணர்வு பெற்று, தன்நம்பிக்கையோடு சமூகத்தின் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறார் சகோதரி கலைச்செல்வி.

“எல்லாரையும்போல நல்ல பார்வையோடதான் மதுரையில பிறந்து வளர்ந்தேன். பிளஸ் டூ முடிச்சிட்டு டெய்லரிங் டீச்சரா வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்போ எனக்கு கையிலயும் மிஷின்லையும் அழகா எம்ராய்டரி போட தெரியும். அடுத்து அருப்புக்கோட்டையில் ஒரு விவசாயக் குடும்பத்துல எனக்கு மேரேஜ் பண்ணிவச்சாங்க. விவசாயக் குடும்பத்தோட பொறுப்புகளை எடுத்து நல்ல முறையில்தான் வாழ்ந்துகிட்டு இருந்தேன். நரம்பு தளர்ச்சி காரணமா பார்வை குறையத் தொடங்கிறவர. மின்சாரம் இல்லாத அந்த கிராமத்துல சிமிழ்விளக்குல குறைஞ்ச பார்வையை வச்சு வேலை செய்ய முடியல. வாய்க்கால் வரப்புக்குச் சாப்பாடு கொண்டுபோக சிரமப்பட்டேன். இது மாதிரி சில பிரச்சனைகளைப் பார்த்த எங்க கிராம மக்கள், கண்ணு தெரியாத பிள்ளையப் பெத்தவங்க ஏமாத்திக் கட்டி வச்சுட்டாங்கன்னு பேச ஆரம்பிச்சாங்க. என்னுடைய இரண்டு வயசு பெண் குழந்தைய தூக்கிக்கிட்டு அம்மா வீட்டோட வந்துட்டேன். அதுக்கப்புறம் எந்த பஞ்சாயத்துக்கும் நான் போக விரும்பல. பார்வை படிப்படியா குறைஞ்சு 28 வயசுல முழுசாவே போயிடுச்சு. மூணு வருஷம் வீட்டுக்குள்ளே இருந்த இடத்தை விட்டு நகர மாட்டேன். எதையாவது தட்டிவிட்டுருவோமோனு பயமாகவே இருக்கும்.

சுந்தரராஜன்பட்டியில இந்தியப் பார்வையற்றோர் சங்கக் கட்டடப் பணிக்கு அம்மா போயிருந்தாங்க. அந்த இந்ஸ்ட்யூட்ல நிறைய பார்வையற்றோர் இருக்கிறதப் பற்றி சொன்னாங்க. எனக்கு அங்க போக விருப்பமில்ல. அம்மா வலுக்கட்டாயமாதான் இழுத்துட்டு போறாங்க. அங்க போனபிறகுதான் பார்வையற்றோரைப் பற்றி அறிமுகம் கிடைச்சுச்சு. சின்ன வயசுல இருந்து பெரியவங்க வரை நிறைய பேர் இருந்தாங்க.

அப்போ பிரெயில் தெரியாததால டெலிபோன் ஆபரேட்டர் கோர்ஸ் படிக்கல. சேர் பிண்ண கத்துக்கிட்டேன். சாந்தா அக்கா என்ன நல்லா மோட்டிவேட் பண்ணாங்க. “நல்லா இருக்கும்போது குடும்பப் பொறுப்பைப் பார்த்தயில்ல, இப்ப மட்டும் ஏன் கை கால் நடுந்குது?” என்று சொல்லிச் சொல்லியே ஒவ்வொரு வேலையா செய்ய வச்சாங்க. ஸ்டிக் போட்டு நடக்க அமுதா அக்கா சொல்லித் தந்தாங்க. அப்படித்தான் எனக்குள்ள ஒரு உற்சாகம் பிறந்துச்சு.

சேர் பிண்றதுக்கு நிறைய இடங்களுக்கு சில அண்ணன்களோட நானும் போவேன். ஓரளவு வருமானம் கிடைத்தது. பிளாஸ்டிக் வந்தபிறகு எங்க தொழில் நொடிச்சிருச்சு. செல்போன் வந்தபிறகு எப்படி போன் பூத் நொடிஞ்சிடுச்சோ அதே மாதிரி. வருமானத்துக்கு வேற வழி பார்க்கணுமேண்ணு யோசிக்கயில, பாப்பாத்தி அக்கா அறிமுகம் கிடைச்சது. இதே சுப்பிரமணியபுரம் மார்க்கெட்ல சொன்ன மாதிரி நூறு விசிறிகளையும், ரெண்டு அந்துருண்ட பாக்கெட்டுகளையும் வச்சு வியாபாரம் செய்யத் தொடங்கினேன். நல்ல வருமானம் கிடைத்தது.

அடுத்து கோடை காலம் போகவும் 100 வித்த இடத்தில 20தான் வித்துச்சு. அப்பதான் என் பொண்ணு அந்நாடம் விக்கிற மாதிரி பொருளை வாங்கி விக்கலாம்; உனக்கு வியாபாரம் நல்லா வருதுன்னு சொல்றேன்ல, என்று சொல்ல, பத்தி, சாம்பிராணி, அப்பளம், கடலை மிட்டாய் போன்றவற்றை எல்லாம் வாங்கி விக்க ஆரம்பித்து இப்போ வர அதே மாதிரிதான் ஓடிக்கிட்டு இருக்கு. என் மகளை எட்டாவது வரைக்கும் படிக்கவச்சு தம்பிக்குக் கட்டிகொடுத்திருக்கேன்.

எனக்குத் தேவையான சாமான்களை நெல்லூர்ப் பேட்டைக்குத் தனியாகச் சென்று, வாங்கிட்டு வருகிறேன். அஞ்சு கிலோ அப்பளம் வாங்கினோம். பாப்பா 50 கிராம் பாக்கெட்ல பேக் பண்ணி கொடுத்துடுவா. இப்படித்தான் என்னோட வியாபாரம் ஓடுது. ஒரு கிலோமீட்டர் எங்கள் வீட்டிலிருந்து மார்க்கெட்வரை தினமும் நடந்துவந்துதான் வியாபாரம் பார்க்கிறேன். நான் எல்லார்கிட்டயும் இலகுவாப் பழகறதால நிறைய பேர் என்கிட்ட நல்லாப் பேசுவாங்க.

இவரைப் போல, திடீர்ப் பார்வையிழப்பைச் சந்திப்போருக்கு வாழ்க்கை ஒரு மிகப் பெரிய கேள்விக்குறியாகும்போது, அதைப் புரியவைக்கும் உன்னதப் பணியைப் பார்வையற்ற நிறுவனங்கள் செய்யத் தவறுவதில்லை. கௌரவக் குறைச்சல் என்று கருதி வீட்டிலேயே பூட்டிவைக்கும் அவலநிலை இன்றளவும் ஒழிந்த பாடுமில்லை. ஒருமுறை, டெல்லி NFB founder டிபேந்திர மநோச் அவர்களுடன் விழிச்சவால் இதழ் சார்பாக, ஆந்கிலத்தில் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர், திடீர் பார்வையிழப்பைச் சந்தித்து எங்கள் நிறுவனத்திற்கு வரும் ஒரு பெண்ணுடன், ஒரு 5 நிமிடம் உரையாடியபிறகு, அவர்கள் வாழ்வின் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, சவால்களை ஏற்றுக்கொண்டு வெல்ல முடியும் என்ற நம்பிக்கைக் கீற்று அவர்களுக்குள் படர்வதை உறுதிசெய்யும் தருணங்கள் தாம் அவர் வாழ்வில் மறக்க முடியாத, மனம் நெகிழ்ந்த தருணங்கள் ஆகக் குறிப்பிட்டார்.  

“நம் எழுத்துக்கு நாம்தான் முதல் வாசகர்”

கல்வி அறிவு பெற்ற எண்ணற்ற மகளிர் அரசுப் பணிவாய்ப்பு கிடைக்கும்வரை தனியார்த்துறையிலோ, அல்லது சுயதொழில் செய்தோ தாங்கள் வாழ்வதற்குத் தேவையான வருமானத்தை பிறரை எதிர்பார்க்காமல் தாங்களாகவே ஈட்டிக் கொள்கின்றனர்.

சென்னையைப் பிறப்பிடமாகக்கொண்ட பிறவிப் பார்வையற்றவராகிய சகோதரி அபிநயா, பன்னிரண்டாம் வகுப்புவரை LFC பள்ளியில் படித்து ராணி மேரி கல்லூரியில் ஆங்கிலத்தில் எமேபிஎட் முடித்திருக்கிறார். மெடிக்கல் ப்ராடக்ட்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் டெலி காலராக பல மாதங்கள் பணியாற்றீயிருக்கிறார். மேலும் 2 கம்பனிகளில் டெலிகாலர் வேலை செய்திருக்கிறார்.

இரண்டு ஆண்டுகள் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் துணைத்தலைவராகப் பணியாற்றிய இவர், தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் தொழில்நுட்பம் சார்ந்த பணியில் இருக்கிறார்.

            எழுத்திலும் அதிகம் ஈடுபாடுகொண்ட

இவர், சிறுவயதிலிருந்தே எழுதத் தொடங்கியிருக்கிறார். கொரோனா காலகட்டத்தில், 2020ல் ப்ளாக் தொடங்கி, பழைய எழுத்துக்களைத் தொகுத்து, புது எழுத்துக்களையும் இணைத்து எழுதிக்கொண்டிருக்கிறார். இதுவரை மதிமாலை, சின்னச்சின்ன மின்மினிகள் என்ற இரண்டு புத்தகங்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். இரண்டு புத்தகங்களை வெளியிட முயற்சித்துக்கொண்டிருக்கிறார்.

அவரைப் பொறுத்தவரை எழுத்து கையில் இருக்கும்போது எந்த நிலையில் வேண்டுமானாலும் இருக்கலாம். அடுத்தவர்களுக்குப் பகிரப்படும்போது தரமானதாக, கருத்துச் செறிவுடையதாக இருக்க வேண்டும். நம் எழுத்துக்களுக்கு நாமே முதல் வாசகராக இருக்க வேண்டும். நிறைய படித்து, கொஞ்சம் எழுத வேண்டும் போன்ற புது புதுத் தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

திருமணத்தைக் காலத்தின் கையில் ஒப்படைத்துவிட்டார். வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, “அரசுப் பணிவாய்ப்பு கிடைத்தாலும் சரி இதே பணியில் தொடர முடிந்தாலும் சரி எதுவாக இருந்தாலும் சமமாக ஏற்றுக்கொள்கிறேன்” என்கிறார்.

இன்றைய கல்லூரி மாணவிகளின் பெரும்பாலோரது கனவு இதுவாகத்தான் இருக்கிறது. படித்துப் பட்டம் வாங்கி, நிரந்தர வேலைவாய்ப்பை பெற்று அதற்குப் பிறகு திருமணம் செய்துகொண்டு வாழ விரும்புகிறார்கள். படித்துக்கொண்டிருக்கும் சகோதரிகள் புதுமையான வேலை வாய்ப்புகளை தேடித் தனித் தடத்தைப் பதிக்க விரும்புவோர், அபிநயா போன்ற சகோதரிகளை உதாரணமாகக் கொள்ளுதல் நலம். 

இன்று நாம் அனுபவிக்கும் உரிமைகள் அனைத்தும் ஒரே இரவில் கிடைத்தவை அல்ல. அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மகளிர் பல்வேறு காலகட்டங்களில் போராடிப் பெற்றுத் தந்தது. விடுப்பு எடுத்து மகளிர் தினத்தைக் கொண்டாடும் உலகில், அது குறித்து சிந்திக்கக்கூட மனமில்லாத விளிம்புநிலைப் பெண்கள் சமுதாயத்தில் வெளிச்சப்படுத்தப்பட வேண்டும். அவர்களது குழப்பமான மனநிலைக்குத் தீர்வு காணப்பட்டு விழிப்புணர்வு, விடாமுயற்சி, துணிச்சல், தற்சார்பு, சுறுசுறுப்பு, தனித்துச் செயல்படுதல், சுயமாக முடிவெடுத்தல் போன்ற உளவியல் பாடங்கள் பள்ளி வயதிலிருந்தே கற்பிக்கப்பட வேண்டும்.

“எனக்குன்னு ஒரு குழந்தை வேணும்னுதான் நான் மேரேஜ் பண்ண ஒத்துக்கிட்டேன்; இப்ப அதுவே இல்லைன்னு ஆயிடுச்சு செலிந்” என்று கதறிய ராஜலட்சுமியிந் குரல் இன்னும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. அடுத்த நிமிடம் என்ன ஆகுமோ என்ற பயத்தோடும், என்ன விதியோ, வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்ற எண்ணத்தோடு வீட்டுக்குள் முடங்கும் விளிம்புநிலை மகளிர் விழிப்புணர்வு பெற்று வெளிச்சத்துக்கு வர வேண்டும்.  

காலங்கள் கடந்தாலும் அறிவியல் வளர்ந்தாலும் மன உறுதியும் நம்பிக்கையும் இல்லாமல் வீட்டில் முடங்கும் சகோதரிகளுக்கு சாதனைப் பெண்கள் வீடுவீடாகச் சென்று வகுப்பெடுத்தாவது அவர்கள் வாழும் நிலைமாற வழிகாட்ட வேண்டும்.

சகோதரி தமிழ்ச்செல்வி குறிப்பிட்டதுபோல, வருமானம் மட்டுமே வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை. வருமானமே இல்லாத பலர் தங்களுடைய குடும்ப வாழ்க்கையை நிம்மதியுடனே வாழ்ந்து வருகின்றனர். வருமானத்தை மட்டும் வைத்து வாழ்க்கை மதிப்பிடப்படும் என்றால், பெரும்பாலானோர் முதிர்கன்னியராகவே இறுதிவரை வாழ வேண்டியிருக்கும். 

ஆனந்தி அக்கா சொன்னதுபோல, முடியாது என்ற எண்ணம் இருந்தால் எதுவுமே முடியாதுதான். முடியும் என்ற எண்ணத்தோடு அடுத்தடுத்த அடிகளை எடுத்துவைத்தால்தான் நாம் விரும்பும் இலக்கை அடைய முடியும்.

கலைச்செல்வி அக்கா கருத்து என்னவென்றால், “பெண்களுக்கு துணிச்சல் ரொம்ப முக்கியம். எனக்கு இந்த துணிச்சல் அப்பவே இருந்திருந்தால் சட்டையைப் பிடிச்சு நியாயம் கேட்டிருப்பேன். எனவே எல்லாரும் துணிச்சலோடு தைரியமா வெளிய வந்தாதான் சாதிக்க முடியும். விரல்ல தெளிவு, வார்த்தையில உண்மையும் இருக்கணும். எங்க மக்கள்ளயும்  சிலர், பத்து ரூபா பொருள 25 ரூபாய்க்கு விக்கிறாங்க. நான் 15 ரூபா பொருள 20 ரூபாய்க்கு விக்கிறேன். எனக்கு இந்த வருமானம் போதும். அதனால உண்மையோடையும் நேர்மையோடையும் மத்தவங்களக் கஷ்டப்படுத்தாமல் துணிச்சலோட தைரியமா பெண்கள் போராடனும். வாழ்க்கையில் முன்னேறலாம்”.

சகோதரி அபிநயா குறிப்பிட்டதுபோல, பெண்கள் அவர்களுக்கான சுதந்திரம் மற்றும் கடமைகள் குறித்த புரிதலை பெற்றிருக்க வேண்டும். ஆண் பெண் நட்பு வரையறை மீறாமல் கண்ணியத்தோடு காக்கப்பட வேண்டும். ஆண் பெண் சமம் என்று பேசுபவர்கள் அவர்களுக்குப் போட்டியாக ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டு தம் உடல் நலத்தையும் சமுதாய அடையாளத்தையும் இழந்துவிடக் கூடாது.

இதுபோல ஒவ்வொரு சகோதரியிடமும் பேசினால் சமூகத்துக்கு சொல்ல ஆயிரம் விஷயங்கள் இருக்கும்தான். இந்தப் பகுதியில் என்னுடைய முடிவாக நான் சொல்ல விரும்புவது என்னவென்றால்,

வருமானம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்குத் தயங்கக்கூடாது. சரி வொர்க் ஃப்ரம் ஹோம் என்றால் டெக்னாலஜியிலும் கை தேர்ந்தவர்களாக இருத்தல் அவசியம். இப்பொழுது தொடர்புகளை எளிதாக்க ஆயிரம் ஆயிரம் வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. புத்தகப் புழுக்களாக வீட்டுக்குள் முடங்காமல், தமக்கான தடத்தை சுதந்திரமாக பதிக்க வேண்டும். படித்து வேலைவாய்ப்பு பெற்ற பிறகு குடும்பப் பொறுப்புகளில் மட்டும் இறங்கிவிடாமல் சமூக அக்கறையோடு செயல்படப் பழக வேண்டும்.

சமூகப் பொருளாதாரப் பார்வையில் விளிம்புநிலையினராகக் கருதப்படுவோர் சமூகத்தின் வெளிச்சம் விழ வேண்டியவராக இல்லாமல், சமூகத்துக்கு வெளிச்சமாக விளங்குபவராக இருத்தல் வேண்டும். நம் தனித்திறமைகள் நமக்கான தனித்துவ அடையாளங்கள் ஆகட்டும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை நம் தாரக மந்திரங்கள் ஆகட்டும். மனதளவில் வலிமையான பெண்களாகி, சவால்களை இதயத்தில் ஏற்று, உலகிற்கு ஒளிகொடுப்போம்!

தொடர்புக்கு: celinmaryx@gmail.com


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.