தொடர்: விழியறம் விதைத்தோர் - (1), உஷா ராமகிருஷ்ணன்

தொடர்: விழியறம் விதைத்தோர் – (1), உஷா ராமகிருஷ்ணன்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
லண்டன் புள்வெளியில் அமர்ந்து காதில் ஹெட்போன் செருகியபடி ஒலிப்பதிவு செய்யும் திருமதி. உஷா ராமகிருஷ்ணன் அவர்கள்

வணக்கம்! என்னுடைய பெயர் உஷா ராமகிருஷ்ணன். என் கணவர் பெயர் ராமகிருஷ்ணன். மூன்று மாதங்களுக்கு முன்புதான் அவர் இயற்கை எய்தினார்.

எனக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தமகன் நவீன், அமெரிக்காவில் மென்பொருள் துறையில் பொறியாளராகப் பணியாற்றுகிறார். மருமகள் பிரீத்தி கட்டடக்கலை நிபுணர். மகள் நிவேதிதாவும் கட்டடக்கலை நிபுணர்தான். நிவேதிதாவின் கணவரும் ஐடி துறையைச் சார்ந்தவர். மகள், மருமகன் மற்றும் பேரன் விஹான் மூவரும் லண்டனில் வசிக்கிறார்கள். பெரும்பாக்கத்தில் இருக்கிற என்னுடைய மகனின் ஃப்லாட்டில் நான் தனியாகத்தான் வசிக்கிறேன்.

‘Scribes are needed’

1982ல் எனக்குத் திருமணமானது. கணவர் வங்கிப்பணியாளர். இருவரும் ஏற்காட்டில் வாழ்ந்தோம். கணவருக்குப் பதவி உயர்வு கிடைத்ததால் நாங்கள் மும்பை செல்ல நேர்ந்தது. அங்கே எங்கள் வீட்டில் தி இந்து ஆங்கில நாளிதழ் வாங்குவது வழக்கம். அவ்வப்போது அந்த செய்தித்தாளின் இரண்டாவது பக்கத்தின் ஓர் மூலையில் “scribes are needed” என செய்தி போட்டிருப்பார்கள். எனக்கு அந்த வார்த்தைக்கு அர்த்தம்கூடத் தெரியாது. டிக்‌ஷனரியை எடுத்துப் பார்த்தால், “scribes who writes something for others” என்று இருக்கும். இதெல்லாம் எப்படி… என்று கொஞ்சம் யோசிப்பேன் கடந்துவிடுவேன்.

நான் பிஎஸ்சி வரைதான் படித்திருக்கிறேன். சிவகாசியில் ஒரு தனியார் கல்லூரியில் நான் படித்தபோது, அந்தக் கல்லூரியின் என்எஸ்எஸ் மூலமாக அருகிலிருந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்குப் பாடங்கள் சொல்லித்தர ஒரு குழுவாக நாங்கள் அனுப்பப்பட்டோம். அப்போதிலிருந்தா தெரியவில்லை. பாடங்களைக் குழந்தைகளுக்கு எளிமையாகச் சொல்லித் தருவது எனக்கு மிகவும் பிடித்த வேலை. ஒரு பாடத்தை எடுத்துக்கொண்டு அதை எப்படி எளிமைப்படுத்திப் படிப்பது என நான் சொல்லித்தருவேன். அதைக் கடைபிடித்து அவர்கள் கற்றுக்கொண்டு “புரிந்துவிட்டது” என்று சொல்லிவிட்டால், எனக்குச் சொல்ல ஒண்ணா மகிழ்ச்சி ஏற்படும். அதுதான் அதுமட்டும்தான் எனக்கு மனநிறைவை உண்டாக்கும் செயலாக இருந்தது. ஆகவே, இந்த வேலையை நான் என் பிள்ளைகளிடமிருந்தே தொடங்கினேன்.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் கேள்விகளுக்கான பதில்களைப் படித்துவிடுவது எப்படி என என் பிள்ளைகளுக்குச் சொல்லித் தருவேன். ஐந்தாம் வகுப்புவரை எல்லாப் பாடங்களையும் எளிமைப்படுத்திச் சொல்லித் தந்த நான், உயர் வகுப்புகளில் கணிதத்தை மட்டுமே சிறப்பு கவனம் செலுத்தி சொல்லிக்கொடுத்தேன். கணிதத்தில் சில கணக்குகளை எடுத்துக்கொண்டு, நானும் என் பிள்ளைகளும் மேசையில் அமர்வோம். எளிமையான வழியில் யார் இவற்றை முதலில் முடிப்பது என்பதுதான் போட்டி. கடிகாரம் ஓடத் தொடங்கியவுடன் பரபரப்பும் தொடங்கிவிடும்.

தொடக்க காலங்களில் முந்திக்கொண்டிருந்த என்னை, பிள்ளைகள் முந்தத் தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் அவர்களே எனக்குக் கற்பிக்கத் தொடங்கியதால், நான் ஒரு முடிவுக்கு வந்தேன். இனி பிள்ளைகளுக்குக் கற்பிக்கத் தேவையில்லை. அவர்களே அவர்களைப் பார்த்துக்கொள்வார்கள். அதனால் அவர்களுக்குப் பாடங்களைச் சொல்லித்தரும் வேலையும் இல்லை என்றானது.

பத்ம ஷேஷாத்திரி வாசிப்பாளர் மையம்

1985 முதல் என் கணவரின் பணிநிமித்தமாக நானும் என் பிள்ளைகளும் டெல்லி, மதுரை, ஹைதராபாத், கோவை, சிவகாசி என ஊர் ஊராக வசித்துவிட்டு சரியாக 2001ல் சென்னைக்குக் குடிபெயர்ந்தோம். தி.நகர் உஸ்மான் சாலையில்  ஒரு அடுக்ககம் கொடுத்திருந்தார்கள். எங்கள் வீட்டு சன்னலிலிருந்து பார்த்தால், ஜாய் ஆலுகாஸ் நன்றாகவே தெரியும்.

அப்போது எனக்கு வயது 39. என் சிறு வயதுத் தோழிகளெல்லாம் ஏதோ ஒரு வேலையில் இருந்தார்கள். திருமணம் ஆன புதிதிலேயே என் கணவர் என்னை வேலைக்குப் போகவேண்டாம், குடும்பத்தைக் கவனித்துக்கொண்டு பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்துவிட்டாலே போதும் என்று சொல்லிவிட்டார். மகன் கல்லூரிக்குப் போய்விட்டான். மகள் எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தாள். எனக்கும் வீட்டில் பெரிதாக வேலை எதுவும் இல்லை. சரி எம்எஸ்சி படிக்கலாம் என யோசித்தேன். இனிமேல் படித்து என்ன ஆகப்போகிறது? என நானே அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டேன். “டியூஷன் எடுக்கலாமே?” என்றார் கணவர். அதற்கெல்லாம் நிறைய கமிட் ஆகணும் என்பதால், அதையும் மறுத்துவிட்டேன்.

என் கணவரின் சகோதரி இறந்து சில நாட்கள் ஆகியிருந்த தருணம் அது. அவர்களின் நினைவுதினத்தை அனுசரிக்க நாங்கள் ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம் என்று தேடித்தேடி உணவளித்தோம். ஆனால், இதிலெல்லாம் எனக்குக் கொஞ்சம்கூட மனநிறைவு ஏற்படவே இல்லை. எனக்கு யாருக்காவது பாடங்களை எளிமைப்படுத்திக் கற்பிக்க வேண்டும், அவர்களும் “புரிஞ்சிடுச்சு” என்று சொல்வதைக் கேட்க வேண்டும். என் உடலைப் பயன்படுத்திப் பிறருக்கு எதாவது செய்ய வேண்டும் என்பதில்தான் மனம் ஓடிக்கொண்டே இருந்தது.

அப்போது தி.நகரில் இருக்கும் பத்மா ஷேஷாத்திரி பள்ளியில் ரத்த தான முகாம் நடப்பதை அறிந்து நாங்கள் குடும்பத்தோடு அங்கே போனோம். என் கணவர் பிள்ளைகளெல்லாம் கொடுத்து முடித்தபின் என் ரத்தவகை கேட்டார்கள். ‘ஓ நெகட்டிவ்’ என்று நான் சொன்னதுதான் தாமதம், உடனே ஆறேழு பேர் என்னைச் சூழ்ந்துகொண்டுவிட்டார்கள். அன்றைக்கு நான் ரத்தம் கொடுக்கவில்லை. இரண்டு நாள் கழித்து, பிரபள மருத்துவர் செரியன் எட்டுமாதக் குழந்தை ஒன்றுக்கு இருதய மாற்று அறுவைசிகிச்சை செய்தார். அந்தக் குழந்தைக்கு நான் ரத்தம் கொடுத்தேன். அது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நெகிழ்ச்சி நினைவாக மனதில் தங்கியிருக்கிறது. அதிலும் அந்தத் தாயை நான் குழந்தையோடு சந்தித்த தருணம், என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எட்டுமாதக் குழந்தை, தலையெல்லாம் பலூன் போல வீங்கி, நினைத்தால்  இப்போதும் சிலிர்க்கிறது.

பத்மா ஷேஷாத்திரி பள்ளிக்குச் சென்றபோதுதான் சில பார்வையற்றவர்கள் அங்கு வந்துசெல்வதைப் பார்த்தேன். விசாரித்தபோது, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர்களுக்காக வாசிப்பாளர் மையம் இயங்குவதை அறிந்தேன். ஆர்வத்தில் ஒரு ஞாயிறு சென்று பார்த்தேன். சிறுசிறு குழுக்களாக அவர்கள் அமர்ந்து அங்கே படித்துக்கொண்டிருந்தார்கள். அந்த மையத்திலிருந்துதான் என் வாசிப்புப் பணியைத் தொடங்கினேன் என்று சொல்ல வேண்டும். அங்கே எனக்கு அறிமுகமான பார்வையற்றவர்தான் கோபி. மாநிலக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். அன்றுமுதல் கோபிக்கு நான்தான் ரீடர். அவர்தான் எனக்கு ஒற்றை மாணவர் என்றானது.

கெட்டிக்காரர் கோபி

தன் வீட்டில் கோபியுடன் உஷா ராமகிருஷ்ணன்

ஒவ்வொரு ஞாயிறு காலை 10 மணிமுதல் 1 மணிவரை வாசிப்பாளர் மையம் செயல்படும். என் கணவருக்கோ அந்த ஒருநாள்தான் விடுமுறை என்பதால், மையம் சென்றுவருவது கொஞ்சம் சிரமமாகப்பட்டது. அதனால், கோபியை என் வீட்டிற்கே அழைத்து அவருக்கு வாசித்துக் காண்பித்தேன். கோடம்பாக்கம் அரசு விடுதியிலிருந்து ஒவ்வொரு சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு கோபி என் வீட்டுக்கு வந்துவிடுவார். அந்த இரண்டு மணி நேரத்தில் அந்த வாரம் முழுக்க அவருக்கு வாசித்துக் காட்ட வேண்டிய பாடங்கள் அனைத்தையும் முடித்துவிடுவேன். கோபிக்கு வாசிப்பது, அவர் படிப்பு தொடர்பான சில ரெக்கார்ட்ஸ் எழுதுவது, என்று படிப்படியாக முன்னேறி, அவருக்கு ஸ்கிரைப் எழுதவும் தொடங்கிவிட்டேன்.

முதல்முறையாக ஸ்கிரைப் எழுதச் சென்ற தருணத்தை நினைத்துப் பார்க்கிறேன். பிரசிடென்சி கல்லூரியில் மொத்தம் ஆறு வாசல்கள். எனக்கோ சென்னையில் எங்கேயும் தனியாய்ப் போயெல்லாம் பழக்கம் இல்லை. எப்படிப் போய்வருவோமோ என்ற பதட்டத்தோடுதான் போனேன். ஆனால், கோபி கெட்டிக்காரர். “மேடம் நீங்க நான்காவது கேட் உள்ளே வந்து வலது பக்கமாப் பார்த்தா, அங்கே  இருக்கிற நான்காவது வேப்பமர அடியில நான் நிற்பேன்” எனத் துல்லியமாக வழி சொல்வார். தேர்வு முடிந்து சாலை கடந்து இருவரும் ஒன்றாகவே பேருந்தில் ஏறுவோம். பேருந்து எண்ணைச் சொல்லிவிட்டாலே, எந்தப் பேருந்து போகும் போகாது எனச் சரியாகச் சொல்லிவிடுவார் கோபி. பேருந்தில் எனக்கும் சேர்த்து அவர்தான் டிக்கெட் வாங்குவார்.

கோபியும் உஷா ராமகிருஷ்ணனும் மாநிலக் கல்லூரிக்கு முன்பாக நிற்கிறார்கள்

சரியான இடத்தில் ஏறி, மிகச் சரியாக என் நிறுத்தத்தில் இறங்கி, என்னை என் வீட்டில் கொண்டுவந்து பத்திரமாக விட்டுப்போவது கோபிதான். இதெல்லாம் எனக்குமிகமிக ஆச்சரியமாக இருக்கும். அப்போது நினைத்துக்கொள்வேன், ‘உண்மையில் யாருக்குப் பார்வையில்லை’ என்று.

அந்தப் பானாசோனிக் டேப் ரெக்கார்டர்

எனக்கு புத்தகம் படிப்பது மிகவும் பிடிக்கும். என் வீட்டில் சிறிய நூலகமே வைத்திருக்கிறேன். அப்படி யாரோ ஒரு அறிஞரோ, சாமியாரோ தெரியாது. அவருடைய புத்தகம் ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தேன். அந்தப் புத்தகத்தில் அவர் இப்படி எழுதியிருந்தார். “உங்கள் வீட்டில் இருக்கிற ஒவ்வொரு சாதனத்துக்கும் அர்த்தமுள்ள ஒரு பயன்பாடு கண்டிப்பாக இருக்கும். நீங்கள் ஒவ்வொன்றாய் யோசித்துப் பாருங்கள்” நானும் பீரோ, மிக்சி, டீவி என என் வீட்டில் இருந்த ஒவ்வொரு சாதனத்தின் முன்னே போய் நின்றுகொண்டு அதன் பயன்பாடுகளை யோசித்துப் பார்ப்பேன். அப்படி பேனாசோனிக் டேப் ரெக்கார்டர் முன்பாக நின்றுகொண்டு யோசித்துப் பார்த்தேன். “இது எதற்குப் பயன்படுகிறது? அவ்வப்போது எஃப்எம் கேட்கிறோம். பாட்டெல்லாம் போட்டுக் கேட்பதே இல்லை. இதனால் என்ன யூஸ் இருக்கிறது?” வழக்கமான சிந்தனை வழக்கமான கடந்துசெல்லல்.

சில நாட்களில் கோபிதான் ஒரு புத்தகத்தையும் கேசட்டையும் கொண்டுவந்து கொடுத்துப் பதிந்து தரும்படிக் கேட்டார். அப்போதுதான் அதற்கான விடையும் எனக்குக் கிடைத்தது. பூரிப்பிலும் ஆர்வத்திலும் பாடங்களைப் பதிவுசெய்யத் தொடங்கினேன். நான் பதிந்து கொடுப்பதையெல்லாம், கோபி, தான் கேட்பது மட்டுமல்லாமல், தன் சக பார்வையற்ற நண்பர்களுக்கும் படிக்கக் கொடுப்பார். நாளாக நாளாக, பிற பார்வையற்றவர்களும் என்னிடம் பதிந்து தரும்படி புத்தகங்கள் கொடுக்கத் தொடங்கினார்கள். அதாவது, டக்கர் பாபாவிற்கு அருகில்தான் என் கணவரின் அலுவலகம் என்பதால், அங்கேயே சென்று தங்களுடைய பெயரை ஒரு ஸ்லிப்பில் ‘சிவக்குமார், ராணி’ என எழுதிக்கொடுத்து, புத்தகத்தையும் கொடுத்துவிடுவார்கள். நானும் பதிந்து முடித்து என் கணவரிடம் கொடுத்துவிடுவேன். அவர் அலுவலகத்தில் வந்து அதனை உரியவர்கள் பெற்றுக்கொள்வார்கள். நானோ, அவர்களோ ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்வதெல்லாம் கிடையாது. எனக்கு அவர்களின் பெயர் தெரியும், அவர்களுக்கு என் குரல் அறிமுகம் அவ்வளவுதான். அப்படி 2001 தொடங்கி, 2005 வரை நான் பதிந்து கொடுத்த கேசட்டுகளின் எண்ணிக்கை 650. அதில் கோபிக்கு மட்டும் 450.

இதற்கிடையில், சிறுமலர்ப் பள்ளி (Little Flower) எங்கள் வீட்டுக்கு மிக அருகாமையில் இருந்ததால், அங்கே வாரம் இரண்டு நாட்கள் சென்றுவந்தேன். நான் முதன்முதலில் சென்றபோது, அங்கே இருந்த சிஸ்டர் என்னிடம், “காதுகேட்காத மற்றும் வாய்பேச இயலாத குழந்தைகளின் பள்ளிக்குச் செல்கிறீர்களா?” என்று கேட்டார். இரண்டு பள்ளிகளும் ஒரே வளாகத்தில்தான் இருக்கின்றன. ஆனால், அங்கு செல்ல ஒரு குறிப்பிட்ட காலம் நாம் சைகைமொழி (sign language) கற்க வேண்டும் என்று சொன்னார்கள். என் கணவருக்கோ எப்போது எங்கே பணிமாறுதல் கொடுப்பார்கள் என்று தெரியாது. எனவே அதற்கெல்லாம் எனக்கு அவகாசம் இல்லை என்பதால், நான் பார்வையற்றோருக்கான பள்ளிக்கே சென்றுவருவது என முடிவெடுத்தேன்.

அங்கே அச்சு வடிவிலான பாடப்புத்தகங்களைக் கொடுத்து, வாசிக்கச் சொல்லி, சிலர் பிரெயில் டைப் ரைட்டர்ஸ் மூலம் அதை அப்படியே அடிப்பார்கள். ஒருபுறம் கோபிக்கு, இன்னொருபுறம் இந்தப் பள்ளியில் என வாசிப்பிலும் எழுதுவதிலும் தனிப்பட்ட முறையில் எனக்கான பயிற்சி கூடிக்கூடி வந்தது. உச்சரிப்பு தொடங்கி, ஏற்ற இறக்கங்கள், குரல் அழுத்தம் என எல்லாவகையான பயிற்சிகளையும் எனக்கு நானே செய்துகொள்ள இந்த இரண்டும் மிகப் பெரிய வாய்ப்பாக அமைந்தன.

டக்கர்பாபா வளாகத்திலிருந்த சிஎஸ்ஜிஏபிக்கு (CSGAB) நிறையப் பாடங்கள் பதிந்துகொடுத்திருக்கிறேன் என்றாலும், நான் அதுவரை அங்கே சென்றதில்லை. 2005ஆம் ஆண்டின் சிஎஸ்ஜிஏபி ஆண்டுவிழாவில் வாலன்ட்டரி சர்வீஸ் செய்யச் சென்றேன். அப்படி ஒரு சர்வீஸ் இருக்கிறது என்பதே அன்றுதான் எனக்குத் தெரியும்.

அந்த விழாவில் திடீரென என்னை மேடை ஏற்றிவிட்டார்கள். “இப்போது உங்களுக்கெல்லாம் அதிகம் பரிட்சயமான குரலுக்குச் சொந்தக்காரர் திருமதி. உஷா ராமகிருஷ்ணன் பேசுவார்கள்” என்று என்னைக் கேட்காமலேயே அறிவித்துவிட்டார்கள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மிகப்பெரிய கூட்டத்திற்கு நடுவே மேடையேறி, பதட்டத்தோடே என்னை சிறு அறிமுகம் செய்துகொண்டு இறங்கியபோது, நிறைய பார்வையற்ற பிள்ளைகள் சூழ்ந்துகொண்டுவிட்டார்கள். நெகிழ்ச்சியும் உறுக்கமுமான அந்தத் தருணத்தை மறக்கவே முடியாது.

அந்தக் கேள்வியால் ஆடிப்போனேன்

இதற்கிடையில், என் கணவருக்கு தூத்துக்குடிக்கு பணிமாறுதல் கிடைத்ததால், நாங்கள் குடும்பத்தோடு தூத்துக்குடியில் குடியேறினோம். ஒருநாள் நானும் நவீனும் எங்கோ வெளியே சென்றுவிட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். வரும் வழியெல்லாம் சரியான மழை. எங்கள் வீட்டுக்கு முன்னால் இருந்த பாதையில் குழிவெட்டிப் போட்டிருந்தார்கள். எனவே வேறு வழியில் நவீன் என்னை அழைத்துவந்தான்.

இரவு நேரத்தில், அந்தப் பாதையில் வெளிச்சமே இல்லை. ஒரே ஒரு சிறிய விளக்கு மட்டும் ஓரிடத்தில் எரிந்துகொண்டிருந்தது. அந்த விளக்கின் அருகில் ஒரு பெயர்ப்பலகை இருந்தது. பார்வையற்ற என்ற ஒரு வார்த்தை மட்டும்தான் கண்ணுக்குத் தெரிந்தது. மற்றவற்றை அடர்ந்திருந்த மரங்கள் மறைத்துவிட்டன. “இது நம் வீட்டிற்கு அருகில்தான் இருக்கிறது, பகல் நேரத்தில் நிச்சயமாக என்னவென்று கண்டுபிடித்துவிடலாம் கவலைப்படாதே” என்றான் நவீன்.

அப்படித்தான் தூத்துக்குடியிலிருந்த பார்வையற்றோருக்கான மகளிர் விடுதியைக் கண்டுபிடித்துச் சென்றேன். அங்கே இருந்த காப்பாளரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, “நான் இங்கே வந்து போகலாமா?” என அனுமதி கேட்டேன். அவரும் “நிச்சயமாக. நல்லநாள், பிறந்தநாள் என எல்லோரும் சாப்பாடு கொடுத்துவிட்டுப் போகிறார்களே தவிர,வெளியிலிருந்து வந்து இவர்களிடம் யாரும் பேசுவதுகூடக் கிடையாது. எனவே தாராளமாக நீங்கள் வாருங்கள். அது அவர்களுக்கு உற்சாகமாக இருக்கும்” என்றார்.  அங்கும் வாரம் இருமுறை என இரண்டு ஆண்டுகள் சென்றுவந்தேன்.

இல்லத்தில் தங்கியிருக்கும் பெண்களின் குழுப்படம்

அங்கே புத்தகம் படித்துக் காட்டுவது, நாளிதழ் வாசிப்பது என வழக்கமான என் பணிகளைச் செய்துகொண்டிருந்தேன். ஆனால், முதல்மாதத்தின் அந்த எட்டு நாட்களும் என்னோடு யாருமே பேசவில்லை. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் “ஏன் என்னிடம் யாருமே பேச மாட்டேங்கிறீங்க? என்னைப் பிடிக்கலையா? என்ன காரணம்? நான் வராம இருந்திடவா?” என்று அழாத குறையாகக் கேட்டேன். அப்போது அவர்கள் சொன்ன பதில் எனக்குப் புதிய பாடம் ஒன்றைக் கற்றுக்கொடுத்தது.

“நீங்க ரொம்ப வேகமாப் பேசுறீங்க, வாசிக்கிறீங்க. அதுமட்டும் இல்லாம நடுநடுவே அதிகமா இங்லீஷ்ல பேசுறதெல்லாம் எங்களுக்குப் புரியல” என்று சொன்னபோது என் தவறான அணுகுமுறை குறித்து தெரிந்துகொண்டேன். இங்கே சென்னையில் வேகமாக வாசித்துவாசித்து அதுவே பழகிவிட்டதன் விளைவு புரிந்தது. என் குறைகளைச் சரிசெய்துகொண்டு நான் பழக ஆரம்பித்ததில், “உஷாக்கா! உஷாக்கா!” என எல்லோரும் மிகப் பிரியத்தோடு என்னிடம் பேச ஆரம்பித்தார்கள்.

வொயர் கூடை பின்னும் பெண்களுடன் உஷா ராமகிருஷ்ணன்

சிலருக்குப் பிறவியிலேயே, சிலருக்கு பனை ஓலை தலையில் விழுந்து என தங்களின் பார்வை இழப்பு குறித்துச் சொல்ல ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருந்தது. அங்கே இருந்தவர்களில் பெரும்பாலோருக்கு 35 வயதுக்கு மேலேதான் இருக்கும். நானும் அதே ஸ்டேஜ் என்பதால், நாங்கள் மேலும் நெருக்கமானோம்.

நிறையப் பேசிக்கொள்வோம். ஒருமுறை “நான் நாளைக்கு வரமாட்டேன், லாக்கர்ல நகை வைக்கிற வேலை இருக்கு” என்று சொன்னேன். அவர்கள் “லாக்கர்னா என்ன” எனக் கேட்டார்கள். எனக்கு அதை எப்படி விளக்குவது தெரியவில்லை. உடனே என் கணவரிடம் கேட்டேன். “ஒரு பிரட் வைக்கிற பாக்ஸ் எடுத்துட்டுப்போய் அதைத் தொட்டுக்காட்டி, சொல்லிக்கொடு” என்றார்.

நானும் அதையே செய்தேன். “லாக்கர் இப்படித்தான் இருக்கும், இதைவிட பெரிய சைசிலையும் இருக்கும், உங்க தேவைக்கு ஏத்த மாதிரி லாக்கர் வேணுமுணா, அதற்குரிய பணம் கட்டினா, பேங்க்ல உங்களுக்கு அதற்கேத்த லாக்கர் கொடுப்பாங்க. இதைத் திறந்து நம்ம நகைகளை வைத்துக் கொடுத்துட்டா, அவுங்க பெரிய பீரோவில அதைப் பூட்டி பத்திரமா வைச்சிருப்பாங்க” எனக் கொண்டு சென்ற பிரட் பாக்ஸைத் தடவிக் காட்டி விளக்கினேன்.

திருமதி. உஷா ராமகிருஷ்ணன் அவர்களின் குரலைக் கேட்க

இன்னோருமுறை தன் சுத்தம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். எனக்கு அப்போது மெனோபாஸ் நெருங்கிக்கொண்டிருந்த தருணம். அதுகுறித்து அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். “இந்த ஸ்டேஜ்ல ரொம்ப கவனமா இருக்கணும். சில நேரங்களில நம்ம யூரின்லரத்தம்கூட கலந்துவரலாம், அதையெல்லாம் நாம் ரொம்ப ஜாக்கிரதையா கவனிக்கணும்” என்று நான் சொன்னபோது, “ப்லட்ல யூரின் வர்றது உங்களால பார்க்க முடியும். நாங்க எப்படி அதைக் கண்காணிக்கிறது”னு ஒரு கேள்வி. ஆடிப்போய்விட்டேன். பார்வையற்ற இளைஞர்களுக்கும் பெண்களுக்கும்  சில சிக்கல்கள் என்றால், நடுவயதுப் பார்வையற்ற பெண்களின் சிக்கல்களும் தேவைகளும் வேறு மாதிரியாக இருப்பதை என்னால் உணர முடிந்தது.

பானாசோனிக் டேப் ரெக்கார்டரில் தொடங்கிய என் குரல்ப்பதிவு இன்று டெலகிராம்வரை வந்து நிற்பதில் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைகிறேன். பெட்டகத்தில் இருக்கின்றன இன்னும் ஏராளமாய் நினைவுகள். நிச்சயம் பகிர்கிறேன் அடுத்த இதழில்.

***திருமதி. உஷா ராமகிருஷ்ணன் அவர்களின் அலைபேசி எண்: 9710581208

மின்னஞ்சல்: usharamki5@gmail.com

***தொகுப்பு: U. சித்ரா,

எழுத்தாக்கம்: சகா.

***அன்பு வாசகர்களே! வாசிப்பாளர்களாய், பதிலி எழுத்தர்களாய்த் தங்கள் விரலாலும் குரலாலும் விழியாலும் பார்வையற்றோரின் வாழ்வில் ஒளியேற்றிய தன்னார்வலர்கள் குறித்து உலகுக்கு அறிவிக்கும் சிறு முயற்சியே ‘விழியறம் விதைத்தோர்’ என்ற தொடர். தங்களுக்குத் தெரிந்த தன்னார்வ வாசிப்பாளர் குறித்துப் பதிவிட விரும்புவோர்,

thodugai@gmail.com என்ற எங்களின் மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்.

அல்லது 9080079481 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு மூன்று நிமிடங்களுக்கு மிகாத குரல்ப்பதிவுகளாக அனுப்பிவையுங்கள்.

பிரெயில் மடல் எழுத விரும்புவோர், ஐந்து பக்கங்களுக்கு மிகாதவாறு எழுதி, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.

தொடுகை மின்னிதழ்,

G1 சுனில் மெசியா,

30 டெலிபோன் காலனி,

2ஆவது தெரு,

ஆதம்பாக்கம்,

சென்னை 600088

பகிர

1 thought on “தொடர்: விழியறம் விதைத்தோர் – (1), உஷா ராமகிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *