தொழில்நுட்பம்: Car E Paedia என்னும் புலனச் சாளரம்

தொழில்நுட்பம்: Car E Paedia என்னும் புலனச் சாளரம்

ஆக்கம் X செலின்மேரி வெளியிடப்பட்டது

21ம் நூற்றாண்டு, அறிவியல் தொழில்னுட்ப முன்னேற்றங்களைவிட, தகவல் பரிமாற்றத்திற்கென்று அறிமுகமாகி விஸ்வரூப வளர்ச்சியைக் கண்டிருக்கும் வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டர், instagram உள்ளிட்ட  சமூக வலைதளங்களின் பயன்பாட்டுக்காகவே அதிகம் கொண்டாடப்பட வேண்டியது. சென்னை வெள்ளப்பெருக்கு, ஜல்லிக்கட்டுப் போராட்டம், கொரோனா பேரிடர் போன்ற நெருக்கடியான காலகட்டங்களிலும், மனிதாபிமானத்தை ஆதாரப் புள்ளியாக்கி, அந்த சூழலுக்குத் தேவையான பொருட்கள், சேவைகள், மீட்புப் பணியாளர்கள், போராளிகள், நிவாரண நிதி உள்ளிட்ட பலவற்றையும் திரட்டியதில் மற்ற வலைத்தளங்களைவிட வாட்ஸ் ஆப்புக்கு அதிகப் பங்கு இருக்கிறது. விளம்பரமற்ற சேவை, வாடிக்கையாளர் மனநிறைவு,  தனித்துவமான பயன்பாடு ஆகிய மூன்று முக்கியமான கருத்துகளை னோக்கங்களாகக்கொண்டு, இரண்டு நண்பர்களால் உருவாக்கப்பட்ட வாட்ஸ் ஆப், ஒரு நொடியில் மில்லியன் கணக்கிலான தகவல்கள் பகிரப்பட வழிவகுத்திருக்கிறது.

 காட்சிகள் மற்றும் புகைப்படங்களையோ, இசையை மட்டுமே உள்ளடக்கிய காணொளிகளையோ கண்கொண்டு காண இயலாத பார்வையற்றோர் வாட்ஸ் அப் வலைதளத்தை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்று தெரிந்துகொள்வது நிச்சயம் வியப்பாக இருக்கும். அதிகாலையில் திருக்குறள், பக்திப் பாடல்கள், சிந்தனை, பொன்மொழிகள், அன்றைய னாளின் சிறப்பு, அன்றைய னாளில் பிறந்த பிரபலங்கள், செய்தித் தொகுப்பு, அரசியல் அப்டேட்கள், குட்டிக் குட்டித் துணுக்குகள், கதைகள் என காலை முதல் பரபரப்பாக வாட்ஸ் ஆப் தகவல்கள் பறக்கத் தொடங்கிவிடும்.   அவற்றைப் படித்து முடிப்பதற்குள், பொது அறிவுத் தகவல்கள், தனித்திறமைகள், சுய படைப்புகள், கலந்துரையாடல்கள், விவாதங்கள் அவ்வப்போதைய  அரசாணைகள், சந்தேகங்களும் அவற்றுக்கான விளக்கங்களும், உறங்கும் முன் ஒரு சிந்தனை எனப் பயனுள்ள பல தகவல்கள் பல இதயங்களை நிறைக்கும். அதிலும் தனிச்சிறப்பு என்னவென்றால், ஒவ்வொரு குழுவும் தனக்கென்று னோக்கத்தையும் விதிமுறைகளையும் வகுத்து அதிலிருந்து நழுவாமல் இயங்கியபடியே இருக்கும்.

குறிப்பாக, இசை, கல்வி, புத்தக வாசிப்பு, ஆடியோ புத்தகங்கள், தொழில்னுட்பத் தகவல்கள் உள்ளிட்டவற்றுக்கென்று தனித்தனி குழுக்கள் விறுவிறுப்போடு 24மணி நேரமும் இயங்குவதைக் காணலாம். அந்தவகையில் ஒரு காலத்தில் ஆடம்பரமாகவும் இப்போதைக்கு அத்தியாவசியமானதாகக் கருதப்படும் கார் குறித்த 24 மணிநேரத் தகவல் பரிமாற்றத்திற்கு ‘Car E Paedia’ என்ற வாட்ஸ் ஆப் தளம் வெற்றிகரமாகச் செயல்பட்டுவருகிறது.

BMW car

கடந்த ஆகஸ்ட் 2022இல் என் பெயரில் பதியப்பட்ட எர்டிகா கார்  டிசம்பரில்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டது உறுதியானது. பழையபடி பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் லோன் பெற்றபோதும், அந்தக் காரை திவ்யாஞ்சன் (புனித உடல் கொண்டோர்,மாற்றுத்திறனாளிகளை விளிப்பதற்கான நடுவண் அரசின் சொல்)வகையின் கீழ் பதிவுசெய்வதுமுதல் ஆர்சி புக், ஃபாஸ்ட் டாக் உள்ளிட்ட பலவற்றையும் பெறுவதற்கான தகவல்களைத் தந்து வழிகாட்டியது அந்த வாட்ஸ் அப் குழு.   இதோ, 0 FASTag பெறூவதற்காக, மதுரை னோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் எர்டிகா காரில், மடிக்கணினியை மடியில் அமர்த்தி, எட்டிப் பார்த்த தலைவலிக்கு மாத்திரை மூலம் என்ட்கார்ட் போட்டுவிட்டு, எழுத்துலகில் சஞ்ஜரித்தபடி, 2018இல் திறக்கப்பட்டு, பலருடைய அறிவுக்கண்களுக்கு ஒளியூட்டி, சமூக நீரோட்டத்தில் சமத்துவத்தோடு பயணிக்க வழிகாட்டுகிற, car E  Paedia என்ற இந்த புலனச் சாளரத்தின் செயல்பாடுகளை உங்களுக்குக் காட்சிப்படுத்துகிறேன்.

வாட்ஸ் அப் குழு பற்றிய தொகுப்பு என்பதால் மொத்தத் தகவல்களையும் வாட்ஸ் ஆப்பிலையே கேட்டுப் பெறுவது என்று முடிவெடுத்து, அந்தப் பயணத்தின் முதல் அடியை அந்த வாட்ஸ் ஆப் குழுவின் தலைமை நிர்வாகியாகிய திரு. ஜெகநாதன் என்பவர் பக்கம் எடுத்து வைத்தேன். எந்த ஒரு  அலட்டலும் இல்லாமல், தான் கடந்துவந்த பாதையைக் கசப்பான அனுபவங்களுடன் கலந்து  நிதானமாகப் பகிர்ந்துகொண்டார்.

தனிப்பட்ட ஆடம்பரத் தேவைக்கெல்லாம் போராட முடியாது

ஜெகன்

“2016இல் கார் வாங்குவது என்று முடிவெடுத்து, அதுகுறித்த தகவல்களைத் திரட்டி, படிப்படியாக முயற்சித்து கார் வாந்குவதற்கு, 2018 ஆகிவிட்டது. அப்போது கிடைத்த ஊனமுற்றோர் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி  சுங்கச் சாவடிகளை இலவசமாகக் கடப்பதற்கான தவறான அரசாணையைக் கையில் எடுத்துக்கொண்டு, புதுக்காரில் மகிழ்ச்சியோடு பயணிக்கத் தொடங்கினோம். அரசாங்க விதிகளைத் தவறாமல் கடைபிடிக்கிற LND டோலை முதலில் கடக்க நேர்ந்தது. எங்கள்  கையில் இருப்பது 2012க்கான அரசாணை என்றும், 2016 அரசாணை ஊனமுற்றோருக்கென்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் Modified vehicle மட்டுமே டோல்களை இலவசமாகக் கடக்கலாம் என்று தெரிவித்த சுங்கச்சாவடிப் பணியாளர்கள்  பணம் செலுத்த  வற்புறுத்தினர்.

2018இல் FASTag கட்டாயமாக்கப்பட்டது. நான் விண்ணப்பிக்கவில்லை. செப்டம்பரில் ஒருமுறை, என்னிடம் இருந்த  அரசாணையை அதிகாரிகளிடம் காண்பித்தபோது, ஏற்றுக்கொள்ள மறுத்து, எங்கள் மேல் case file செய்வதாகச் சொல்ல, நானும் ஒத்துக்கொள்ள, இறுதியில் பேச்சுவார்த்தைக்குப் பின் செல்ல அனுமதி கிடைத்தது. உடனடியாக, வேலூர் மாவட்ட ஆட்சியரிடம், உங்கள் எல்லைக்குட்பட்ட நெடுஞ்சாலை சுங்க வரிவசூல்  மையங்களில் பயணிக்க மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று ஒரு கடிதம் கொடுத்தோம். அதை அவர் சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு forward செய்தார். பிறகு, அவருக்கும் எங்களுக்கும் ஒருசேர அந்த நிறுவனத்திடமிருந்து அனுப்பப்பட்ட பதில் கடிதத்தில், “மாற்றுத்திறனாளிகளை சுங்கவரி வசூல் மையங்களில் கட்டண விலக்கோடு பயணிக்க அனுமதிப்பதற்கான, மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் எதுவும் எங்கள் கையில் இல்லை. மத்திய அரசு அறிவுறுத்தும் பட்சத்தில், கட்டாயமாக அமல்ப்படுத்துகிறோம். இப்போதைக்கு எந்த விதிவிலக்கும்  இல்லை” என்று குறீப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிலை எடுத்துக்கொண்டு, பார்வையற்ற அனுபவம் வாய்ந்த மூத்த போராளிகளிடம்  பேச்சுவார்த்தை நடத்தினோம். “பார்வையற்றோர் சார்ந்த உரிமைகள் முன்னெடுப்புகள், பணி வாய்ப்புகள் உள்ளிட்ட ஏதாவது கோரிக்கைக்காக என்றால் நிச்சயம் போராடலாம். உன்னுடைய தனிப்பட்ட ஆடம்பரத் தேவைக்கெல்லாம்  போராட முடியாது என்று  கூறி discourage செய்துவிட்டார்கள். எனவே, மத்திய அரசாங்கத்திற்கு இரண்டு கடிதங்களை அனுப்பினேன். RTI கடிதமும் அனுப்பினேன். எந்த பதிலும் இல்லை. கிணற்றில் போட்ட கல்லாக அப்படியே கிடந்தது.

VI Car Users

lumbogini car

ஒவ்வொரு கார் பயனாளியையும் தேடித் தேடி அழைப்பை ஏற்படுத்துவதைவிட, ஒரு வாட்ஸ் ஆப் குழு அமைப்பதே சிறந்தது என்ற எண்ணம் தோன்ற, ‘VI Car Users’ என்ற பெயரில் குழு தொடங்கி, அந்த எண்ணத்திற்குச் செயல்வடிவம் கொடுத்தோம். உறுப்பினர் எண்ணிக்கை அதிகமானபோது அது ‘Car E Paedia’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

2018 ஜூலை மாதம் உதயமான இந்தக் குழுவில் ஓரளவு கார் பயனாளிகளை இணைக்க முடிந்தது. திரு. முருகானந்தம் அவர்கள் அன்றுமுதல் இன்றுவரை நம் நண்பர்களுடைய சந்தேகங்களை அவ்வப்போது தீர்த்துவைப்பதோடு, புதிய அரசாணைகள், அப்டேட்கள், உள்ளிட்டவற்றைப் பகிர்ந்தபடி இருக்கிறார். வழக்கறிஞர் திரு. வேங்கடகிருஷ்ணன் அவர்கள் சட்டம் சார்ந்த ஆலோசனைகளை வழங்குகிறார்.  திரு.வினோத் பெஞ்சமின் அவர்கள் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குகிறார். பேராசிரியர் திரு. முனியப்பன் அவர்கள் தேவைப்படும்போது, அவருக்குத் தெரிந்த ஆலோசனைகளை வழங்குகிறார். பெண்கள் பக்கத்தில் திருமதி. செந்தமிழ்ச்செல்வி அவர்கள் சிறந்த பங்களிப்பைச் செலுத்தியவண்ணம் இருக்கிறார்.

சரி 2018கே செல்வோம். நம் வாட்ஸ் ஆப் குழு ஆரம்பமான சமயத்தில், உறுப்பினர்கள்  எல்லோரிடமுமே பழைய செல்லாத அரசாணைதான் இருந்தது. காலப்போக்கில், தமிழகத்தின் முன்னணி சங்கங்களான CSGAB, TAB மற்றும் பெயர் சொல்ல முடியாத சில சங்கங்களுடன் பேசி மத்திய அரசிற்கு ஒரு கடிதம் அனுப்பினோம். எந்த பதிலும் இல்லாமல் போக, 2019இல் திரு.  வினோத் பெஞ்சமின் உதவியோடு, மாற்றுத்திறனாளிகளுக்கு Exempted FASTag வழங்குவதற்கான Online Petition ஒன்றை உருவாக்கி, வைரலாக்கியபோது, கிட்டத்தட்ட 150 பேர் கையெழுத்திட்டிருந்தார்கள். டெல்லியில் பேராசிரியராகப் பணியாற்றும் என்னுடைய நண்பர் மூலம் இதை ஒரு copy எடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு  அனுப்பினோம். தமிழ், ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மொழிகளில் எழுத்து வடிவில் கடிதம் கொடுத்தோம். ஹிந்தி கடிதத்திற்கு மட்டும் உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று பதில் வந்தது.

அதற்குப் பிறகு, நமது நண்பர்கள் மூவர் நீதிமன்றத்திற்குச் சென்று வழக்குத் தொடுத்தனர். கார் என் மனைவி பெயரில் இருந்ததால், நான் எந்த வழக்கிலும் நேரடியாகக் கலந்துகொள்ள முடியவில்லை. இரண்டு  நண்பர்களைக் கலந்துகொள்ள ஊக்கப்படுத்தினேன். அந்த வழக்கு, “கோரிக்கை கருத்தில்கொள்ளப்படும்” என்றபடி முடிவுக்கு வந்தது.  பிறகு, 2022இல் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்குமான விலக்களிக்கப்பட்ட FASTag வழங்குவதற்கான  அரசாணை வெளிவந்தது. அதை implement செய்வதற்குப் பெருமுயற்சி எடுக்க வேண்டியிருந்தது.

நிறைய RTO அலுவலர்களுக்கு இன்றுவரை இதுகுறித்த புரிதல் இல்லை. RC புத்தகத்தை திவ்யாஞ்சன் பிரிவுக்கு மாற்றி விண்ணப்பித்தபோதும், modified vehicles தவிர மற்ற வாகனங்களுக்கு வழங்கப்படுவதில்லை உள்ளிட்ட புதிய பிரச்சனைகள் உருவாகத் தொடங்கின. அதையடுத்து, திவ்யாஞ்சன் பிரிவுக்கு மாற்றி 0 FASTag  பெற விண்ணப்பித்தவர்களாக மொத்தம்13 விண்ணப்பங்களைத் தொகுத்து Public Portal அனுப்பினோம். அப்படி முயற்சித்துக்கொண்டிருந்தபோது, தமிழகத்தைச் சேர்ந்த சொப்னா என்ற தோழிக்கு 0 FASTag கிடைத்துவிட்டது. அப்போது அடைந்த மகிழ்ச்சியை  வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. அவர்களைப் பின்பற்றி மறுவிண்ணப்பித்தல் செய்து, பலரும் வாங்கிப் பயன்பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இவை அனைத்தும் exempted FASTag வாங்க நான்  எடுத்துக்கொண்ட முயற்சிகள்.

வேண்டும் ஒரு சங்கம்

0 FASTag மாதிரிப்படம்

இந்தக் குழுவில் கிட்டத்தட்ட 100கும் மேற்பட்ட பார்வையற்றோர் இணைந்து 0 FASTag வாங்கியபடி இருக்கிறோம். தமிழகத்தில் மொத்தம் 500 0 FASTag பயன்பாட்டில் இருப்பதாகத் தெரியவருகிறது. அதில் 100கும் மேற்பட்டோர் பார்வையற்றோர். 70க்கு மேற்பட்டோர் நமக்குத் தெரிந்த நம் நண்பர்கள். GST concession, road tax concession உள்ளிட்ட பலவற்றைப் பெறும் முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறோம். எல்லாவற்றிலும் பல சருக்கல்கள். தனிப்பட்ட வாழ்க்கை, பொருளாதார சூழல், பணி, குடும்பம் உள்ளீட்ட பல காரணங்களால் தொடர்ந்து  இயங்க முடிவதில்லை. அதையெல்லாம் தாண்டி, நம் சமூகத்திற்கு என்ன தேவை, நம்மால் என்ன  செய்ய முடியும் என்பன போன்ற சிந்தனைகளோடு தொடர்ந்து செயல்பட நினைக்கிறோம். tax relaxation பெறுவதற்காக மத்திய அரசிற்கு கடிதங்களை எழுதிய வண்ணம் இருக்கிறோம்.

இதற்கிடையில் ,Car Users Association ஒன்றை உருவாக்கி, நம்முடைய கார் பயன்பாடு குறித்த முயற்சிகள் மற்றும் முன்னெடுப்புகளில் இறங்க நினைத்தபோது, சட்டச் சிக்கல்கள், ஒத்துழைப்பின்மை போன்ற எதிர்மறைக் காரணங்களால் அதுபோன்ற எண்ணங்கள் வாட்ஸ் ஆப்பிலேயெ முடங்கிவிட்டன.

எதிர்காலத்தில் அப்படி ஒரு சங்கம் உருவாகும் பட்சத்தில், ஒவ்வொரு டோலிலும் நம்முடைய அலைபேசி எண்கள் இருப்பதும், சரியான வழிகாட்டலுடன் கூடிய முறையான  விழிப்புணர்வு ஏற்பட வழிவகுக்கும். என்னுடைய குறிப்பிடத் தக்க ஆசை மற்றும் எதிர்பார்ப்பு என்னவென்றால், நமக்குள் ஒற்றுமை ஏற்பட்டு ஒரு சங்கம் உருவாக்கி, நமக்கான கோரிக்கைகளை எளிதில் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.” என்று விறுவிறுப்பாய் பேசி முடித்தார் ஜெகநாதன்.  

அவரை அடுத்து, யார் எந்த சந்தேகம் கேட்டாலும் கூகுளைவிடத் தெளிவாக விளக்கம் தரும் அளவுக்கு தம்மை அவ்வப்போது அப்டேட் செய்துகொண்டிருக்கின்ற திரு. முருகானந்தம் அவரிடம்  கருத்து கேட்கத் தொடங்கினேன்.  மடைதிறந்த வெள்ளமெனக் கொட்டிய அவரின் கருத்துகள் இங்கே..

‘Auto Car’ என்ற பத்திரிக்கை

முருகானந்தம்

 “மேடம் நான் இந்த குழுவை உருவாக்கவில்லை; உங்களைப்போல ஒரு சாமானியனாக பயணித்துக்கொண்டிருக்கிறேன் அவ்வளவுதான். இந்தக் குழுவைத் தொடங்கிய நாற்றாம்பள்ளி திரு. ஜெகன் அவர்கள் என்னிடம் கார் இல்லாதது தெரிந்தும், “எப்படியும் நீங்கள் கார் வாங்கத்தான் போகிறீர்கள், இப்பொழுது இருந்தே உங்களுடைய கருத்துகளை நம் சமூகத்தாரோடு பகிர்ந்துகொள்ளத் தொடங்கலாம்” என்று கூற, எனக்கும் மறுப்புத் தெரிவிக்கக் காரணம் ஏதும் இல்லாததால் உடன்பட்டு இந்தக் குழுவில் இணைந்துகொண்டேன்.

நான் கார் வாங்க முடிவெடுத்தபோது அதுகுறித்து ஓராண்டு படிக்கத் தொடங்கினேன். கார் குறித்த craze எனக்கு இருந்தபோதிலும், அதை rationalise செய்ய அதிக knowledge தேவைப்பட்டது. அப்படிப் படித்தபடியே,  சமகால கார் வாங்கும் நண்பர்களுக்கு என்னுடைய கருத்துக்களை  பகிர்ந்தபடியும், எனக்குத் தேவையான தகவல்களை என்னுடைய நண்பர்களிடம் கேட்டுப் பெற்றபடியும் பயணம் தொடர்ந்தது. இந்தக் குழுவில் பயணிப்பதற்குப் பெரிதாக நோக்கம் என்று சொல்வதற்கு இல்லை. எனக்குத் தெரிந்ததை யாரும் பதில் சொல்லாத சமயத்தில் மற்றவரோடு, குறிப்பாக சந்தேகம் கேட்பவரோடு பகிர்ந்துகொள்வேன். உதாரணமாக, CNG cars, suspension போன்றவை சார்ந்த சந்தேகங்கள் எழுப்பபடும்போது, எனக்கு அந்தப் பகுதிகள் குறித்து ஆழமாகவும், விளக்கமாகவும் தெரியும். ஆகையால், உடனடியாகப் பதிலளிப்பேன்.

0 FASTag  குறித்த தகவல் கிடைத்தபோது, அதற்கான இனிஷியேட்டிவ்  எடுத்தோருடன் நானும் சேர்ந்து போராடினேன். என்னுடைய காரை திவ்யாஞ்சன் கேட்டகரிக்கு மாற்றி, அந்த RC extract, புத்தகத்தைப் புகைப்படம் எடுத்து வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்துகொண்டேன். ஆன்லைனில் விண்ணப்பித்து கிடைக்காமல் போக, நேரடியாக NHAI சென்று, வட்டார அலுவலர்களைச் சந்தித்துப் பேசி உடன்பாடு ஏற்படாதது சலிப்பைத் தர,   சில காலம் கிடப்பில் போட்டுவிட்டேன். நண்பர்கள் FASTag வாங்கிய  தகவல்கள் கிடைக்கப்பெற்றபோது நானும் வாங்கி, மற்றவர்களுக்கும் வாங்கும் முறைகளைத் தொடர்ந்து பகிர்ந்தபடி இருக்கிறேன். இதுதான் இந்தக் குழுவில் என்னுடைய பயணம்.

அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள, அவ்வப்போது அப்டேட் செய்ய யூடியூப், இன்டர்நெட், டெலிகிராம், spotify உள்ளிட்ட சமூக வலைதளங்களைப் பயன்படுத்திக்கொள்வேன்.  Auto car என்ற பத்திரிக்கை ஆன்லைனில் அவைலபிலாக இருக்கிறது. அதை ஃபாலோ செய்து என்னை  அப்டேட் செய்துகொள்கிறேன். டெலிக்ராமில், automobiles  மற்றும் E vehicles ஆகியவற்றிற்கென்றே தனித்தனி சேனல்கள் இருக்கின்றன. அதை ஃபாலோ செய்கிறேன்.

யூட்யூபில் cars & 2 wheelers காகவென்று பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் சேனல்களை ஃபாலோ செய்கிறேன். அதில் top range to low end பல விஷயங்களை அவர்கள் கவர் செய்வார்கள். சில விஷயங்கள் நமக்குத் தேவைப்படுகிறதோ இல்லையோ தெரிந்துகொள்வது நல்லது. எனக்கும் அதன்மீது ஒரு ஆசை இருப்பதால், புதிதாகத் தெரிந்துகொள்ளும்போது புதுவித மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. இப்போதைய technology, trend, advancement இவற்றோடு, புதிய கார்கள் பழையவற்றிலிருந்து எப்படி வேறுபடுகிறது, என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன உள்ளிட்ட தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

நாம் காருடைய comfort மற்றும் cost பற்றி மட்டும் மேலோட்டமாகத் தெரிந்துகொள்கிறோம். அதைத் தாண்டி engineering என்று ஒன்று இருக்கிறது. பலருடன் பேசி பல விஷயங்களைத் தெரிந்துகொள்கிறேன். வண்டியை ஓட்ட முடியவில்லை என்றாலும்,ஒரு ஓட்டுநருடைய நிலையிலிருந்து காரின் இயக்கம் குறித்த நுட்ப நுணுக்கங்களைத் தெரிந்துகொள்கிறேன். Sportify தளத்தில் automotive industry  குறித்த பாட்காச்ட்களை நேரம் கிடைக்கும்போது  கேட்கிறேன். இப்படித்தான் என் அறிவை வளர்த்துக்கொள்கிறேன்.

தகவல் சேகரிப்பை ஒரு முழுநேரப் பணியாக நான் செய்வதில்லை. போகிற போக்கில் கிடைக்கிற தகவல்களைத் தேவைக்குப் பயன்படுத்திக்கொள்கிறேன். பொதுவாக நான் தெரிந்துகொள்ள விரும்புகிற ஏரியாக்களில் இதுவும் ஒன்று. கார் வாங்கும்போது எனக்கு இருந்த ஆர்வம் அவசியம் இப்போது இல்லை. இப்போதைக்குப் பராமரிப்பு சம்பந்தமான விஷயங்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. எனினும், நண்பர்கள் யாராவது புதுக்கார் வாங்குவதற்காக என்னைத் தொடர்புகொள்ளும்போது, அப்போதைய மார்கெட் நிலவரம், அவைலபிலிடி போன்றவற்றின் விவரங்களை தேடி, அவரவர் தேவைக்கேற்ப பகிர்ந்துகொள்கிறேன்.” என்று காருக்கும் இந்தக் குழுவுக்கும் தனக்குமான உறவைச் சொல்லி முடித்தார் ஆசிரியர் முருகானந்தம். அவர் சொல்வதுபோல, எப்பொழுது, எவர், எது குறித்து சந்தேகம் கேட்டாலும், எளிமையாக, பொறுமையாக, தெளிவாகப் புரியும்படி பதில் தருகின்ற இவர் நம் சமூகத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம் என்றால் அது மிகையல்ல.

“பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் உணர்கிறோம்”

செந்தமிழ்ச்செல்வி

கார் ஆண்களுக்கானது என்ற பொது சிந்தனைக்கு மாற்றுக்கருத்து தெரிவிக்கின்ற, அந்தக் குழுவில் உள்ள எல்லோருக்கும் பரிச்சயமான ஒரு பெண் குரல் இருக்கிறது. ஆம்! எவர் எந்த சந்தேகம் எழுப்பும்போதும், தனக்குத் தெரிந்த தகவலைப் பகிர்வதோடு, மற்றவர் மகிழ்ச்சியில் பங்கெடுக்கத் தவறாத சகோதரி திருமதி. செந்தமிழ்ச்செல்வி அவர்களின் குரல்தான் அது. அந்தச் சகோதரியிடமும் உரையாடினேன்.

“இந்த வாட்ஸ் அப் குழு பார்வையற்ற பலருக்குப் பலவகைகளில் உதவுகிறது. நாங்கள் எங்கள் குடும்பத்தின் எல்லாத் தேவைகளுக்கும் காரையே பயன்படுத்துகிறோம். எங்களுடைய இரு குழந்தைகளையும் அவரவர் பள்ளியில் இறக்கிவிட்டு, நானும் என் கணவரும் எங்கள் பள்ளி மற்றும் அலுவலகங்களுக்குச் சென்று விடுவோம். மாலையில் எங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு, எங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கியபடி மகிழ்ச்சியாக வீட்டுக்கு வந்துவிடுகிறோம். நாங்கள் ஆட்டோவிலும், எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு வேனிலும் அனுப்புவதாக இருந்தால் அவர்கள் எப்பொழுது செல்கிறார்கள், எப்படி வருகிறார்கள் போன்ற கவலைகளிலேயே நேரத்தை செலவிட வேண்டியிருக்கும். இப்பொழுது எங்கள் கைக்குள்ளேயே இருப்பதால் முழுப் பார்வையற்ற நாங்கள் இருவரும் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் இருப்பதாக உணர்கிறோம்.

பார்வையற்றோரில் 98% பேர் கஷ்டப்பட்டு படித்து,  பேருந்துகளில் இடிபட்டு, அடிபட்டு, பலவிதங்களில் பாடுபட்டு அரசுப்பணி வாய்ப்பைப் பெறுகிறோம். நம்முடைய வருமானத்தை நம் வாழ்க்கைத்தர  மேம்பாட்டுக்குப் பயன்படுத்த வேண்டும். பார்வை உள்ளவர்களைப் போல நம் வீடுகளில் இரண்டு சக்கர வாகனங்களை வாங்குவதைவிட, குடும்பத்திற்குப் பயன்படும்படியான வாகனத்தை வாங்கி,  அதற்கேற்ற திறமையான ஓட்டுநரை அமைத்து, நம் செலவுகளை நாமே வகுத்துக்கொள்வது நல்லது.

இந்த வாட்ஸ் ஆப் குழுவைப் பொருத்தவரை, அடுத்தகட்ட முன்னேற்றம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. இப்பொழுதே நிறைய sharings  இருக்கின்றன.  கார் வாங்க முடிவெடுக்கும் ஒருவருக்கு என்ன கார், எந்த விலையில், எப்படிப்பட்ட வங்கிகளில், யாரை அணுகி, எப்படி வாங்கிப் பயன்படுத்தலாம் உள்ளிட்ட பல தகவல்களும்,  சந்தேகங்களுக்கு ஏற்ற விளக்கங்களும்  வழங்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. மாற்றுத்திறனாளிகளை சமூகம் அண்டர் எஸ்டிமேட் செய்திருந்தாலும், நம் சமூகத்தில்  திறமைசாலிகள்  நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை utilise செய்து இக்குழுவின் வளர்ச்சியை மேம்படுத்தலாம். மேலும் கார் குறித்த தகவல்பெற விரும்பும் மற்ற பார்வையற்ற உறவுகளுக்கும் இந்தக் குழு குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ளலாம்.” என்று முடித்தார் சகோதரி.

mobile home என்று பரவலாக அறியப்படுகிற காரின் தேவை உணர்ந்து, வாங்கிப் பயன்படுத்தும் பார்வையற்றோரின் எண்ணிக்கை பெருகி வருகிறது. ஜெகன் சார் சொன்னதுபோல, பார்வையற்ற கார் பயனாளிகளிடையே ஒற்றுமை இருந்தால் மட்டுமே கார் பயன்பாடு குறித்த முன்னெடுப்புகள், முயற்சிகள், சிறப்புத் திட்டங்களுக்கான கோரிக்கைகள் மற்றும் போராட்டங்களில் வெற்றிவாகை சூட முடியும். முருகாநந்தம் சார் கருத்துப்படி, நாம் பயன்படுத்தும் கார் குறித்த அவ்வப்போதைய அப்டேட்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சகோதரி குறிப்பிட்டது போல, பாதுகாப்பையும், குடும்பப் பொறுப்பையும் கருத்தில்கொண்டு, சரியான திட்டமிடுதலை மேற்கொண்டு முறையான பராமரித்தலில் ஈடுபட வேண்டும்.

bense car

2015ல் எங்கள் குடும்பப் பயன்பாட்டிற்கென்று, என் பெயரில் லோன் போட்டு WagonR  கார் வாங்கினோம். லோனுக்காக மட்டுமே பல வங்கிப் படிகளை மிதிக்க வேண்டியிருந்தது. மதுரை பேங் ஆஃப் இந்தியா அண்ணாநகர் கிளையில் பணியாற்றிவரும் திரு. தாமஸ்  அவர்களின் பரிந்துரைப்படி,   புதுக்கோட்டை பேங் ஆஃப் இந்தியாவில் வங்கிக்கடன் பெற்று வண்டியை வாங்கிப் பயன்படுத்த முடிந்தது. அப்பொழுது சுங்கச்சாவடிகளில் இலவசப்பயணம் குறித்த விளக்கமும் அரசாணையும் கிடைக்கப்பெற்றபோதும், பல சமயங்களில் பணம் செலுத்தியே பயணித்திருக்கிறோம்.

FASTag அறிமுகமானபோது, எல்லோரையும் போல அப்ளை செய்து பெற்றுக்கொண்டோம். அதில் இணையச் சிக்கல்களால் இரண்டுமுறை recharge  செய்வது, கணக்கில் பணம் இல்லாமல் மைநஸுக்கு  செல்வது, வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட பணம் FASTag கணக்கிற்குச் செல்லாத நிலை, recharge செய்யாமல் இரண்டு மடங்கு பணம் செலுத்தும் நிலை உள்ளிட்ட பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.

ஜீரோ FASTag பெறுவதற்கென்று எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளும் 0விலேயே முடிந்துவிட்டன. இப்பொழுது வேறொரு கார் வாங்குவது என்று முடிவெடுத்தபோது, அதற்கான வழிகாட்டியாக இந்த வாட்ஸ் ஆப் குழு செயல்பட்டது. காருக்காக ஒரு வாட்ஸ் அப் குழுவா என்ற பிரம்மிப்போடு அந்தக் குழுவில் இணைந்தால், அதில் பகிரப்படும் தகவல்கள் அதைவிட பிரம்மிப்பைத் தருவதாக இருக்கின்றன. சந்தேகங்கள் எழுப்பப்படுவதும், தெரிந்தவர்கள் மூலம் பல வகைகளில் தகவல்கள் பகிரப்படுவதும், சந்தேகம் தீர்ந்த மகிழ்ச்சியை தெரிவிப்பதும், அடுத்தவர் மகிழ்ச்சியில் திருப்தி கொள்வதும் இந்த வாட்ஸ் அப் குழுவின் அன்றாட நிகழ்வுகள். இன்னும் ஒரு முக்கியமான கருத்தை குறிப்பிடுவதென்றால், பிற வாட்ஸ் அப் குழுக்களை அமைதியாகக் கடந்து செல்லும் என் கணவரும் ஆக்டிவாக  இருப்பது இந்த குழுவில் மட்டும்தான்.  இந்தப் பகிர்வை எழுதும்படி அறிவுறுத்தியதும் அவர்தான்.

பார்வையற்ற உறவுகள் பாடுபட்டுப் படிப்பை முடித்து, அரசுப்பணியில் அமரும்வரை இருக்கும் போர்க்குணம் அதற்குப் பிறகு  சில தனிப்பட்ட  காரணங்களால் குறைந்துவிடுவதாகவே நான் கருதுகிறேன். ஆடம்பரங்கள் அத்தியாவசியமாகும்போது, தனிப்பட்ட ஆர்வங்களும் அவசியமாகிவிடுகின்றன. சாத்தியக்கூறுகளைத் தெரிந்துகொள்ள, சாத்தியப்படுத்தி மகிழ்ச்சிகொள்ள, சகோதரத்துவத்தோடு சகலரும் கைகோர்த்துப் பயணிக்க வேண்டும். தகவல் பரப்பு மையமாக விளங்கும் மற்ற சமூக வலைதளங்களைவிட, அனுபவங்களைக் கோர்வையாக்கி, பார்வையற்றோரின் மனநிலையிலிருந்து அணுகி, பல அனுகிரகங்களைத் தருகின்ற இதுபோன்ற வாட்ஸ் ஆப் குழுக்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவையே.

பார்வையின்மையைக் கருதி, பரிதாபப்பட்டு, சாலையைக் கடக்க உதவுபவர்களை எதிர்பார்த்திருந்த நிலை மாறி, பரிவுடனும், துணிவுடனும் பார்வையுள்லோரைக்கூட அவர் விரும்பும் இடத்திற்கு அழைத்துச் சென்று திரும்பும் நிலை உருவாகி இருக்கிறது. இது நிச்சயமாக ஒரு வரவேற்கத் தக்க முன்னேற்றம்தான். நம் வாழ்க்கைத்தரமும், பொருளாதாரமும் உயரும்போது, அதை மேலும் பெருக்கிக்கொள்ள வேண்டுமென்ற அறிவுத்தேடல் ஏற்படுவது எதார்த்தம்தான். பாதசாரிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் செல்ல வேண்டிய தூரத்தை அறிவிக்கும் விளம்பரப் பலகையாக இல்லாமல், நம்மோடு கைகோர்த்து நடந்து செல்லும் வழித்துனையாக இந்த வாட்ஸ் ஆப் தளம் விளங்குகிறது. உலகக் காட்சிகளை நம் தேவைக்கேற்ப, நம் அகக்கண் முன் விரியச் செய்யும் இந்த புலனச் சாளரம், பல 100 உறவுகளோடு, புதுப்புது இலக்குகளை வகுத்து, போராட்டமற்ற சூழலில் அதில் வென்று, நெடுந்தூரம் பயணிக்க தொடுகை இதழ் தன் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறது.

***Car E Paedia என்னும் வாட்ஸ் ஆப் குழுவில் இணைய கீழ்க்கண்ட அலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

திரு. ஜெகநாதன்: 9498038809

தொடர்புக்கு: celinmaryx@gmail.com

பகிர

2 thoughts on “தொழில்நுட்பம்: Car E Paedia என்னும் புலனச் சாளரம்

  1. உண்மையிலேயே இந்த கட்டுரை மிக சிறப்பாக இருந்தது உங்களுடைய கூட்டு முயற்சி அதைப் போன்று ஒவ்வொருவருடைய தனிப்பட்ட அனுபவங்களை அதைக் கேட்டு அதை தொகுத்து கொடுத்த விதம் அருமை எப்படி எடுக்கின்ற ஒவ்வொரு சிறப்பான முயற்சிகளும் கைகூட வேண்டும் நம் சமூகம் இன்னும் பல வெற்றிகளை அடைய வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன் இந்த கட்டுரையை எழுதி வழங்கியமைக்கு மனமார்ந்த நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி உறவுகளே

  2. மிகச்சிறந்த எழுத்தாற்றல் மிகச்சிறந்த கருத்தாலும் மிகச்சிறந்த ஆளுமையால் எங்களை கட்டி போட்ட உங்கள் தகவலுக்கு மிக்க நன்றிகளையும் வாழ்த்துதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *