
நாளை நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி தொகுதி இரண்டு முதன்மைத் தேர்வின் தமிழ்த்தகுதித் தேர்விலிருந்து அடையாள அட்டை வைத்திருக்கும் பார்வையற்றோருக்கும் விலக்கு வழங்கப்படுவதை சென்னை உயர்நீதிமன்றம் உறுதிசெய்திருக்கிறது.
டிஎன்பிஎஸ்சி தொகுதி 2 முதன்மைத் தேர்விற்காக தமிழகமெங்கும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்துக் காத்திருந்தனர். இந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி சார்பாக தேர்வர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், தாங்கள் வழங்கியிருந்த மருத்துவப் படிவத்தைப் (prescribed form) பயன்படுத்தி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே தமிழ் தகுதித்தேர்விலிருந்து விலக்களிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து, பார்வையற்றோர் கல்லூரிமாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் (CSGAB) மற்றும் அகில இந்திய பார்வையற்றோர் சம்மேளனம் (AICFB) ஆகிய இரண்டு அமைப்புகளும் சென்னை உயர்நிதீமன்றத்தில் வழக்கு தொடுத்தன. இதனை விசாரித்த நீதிபதி, டிஎன்பிஎஸ்சி அனுப்பிய மின்னஞ்சலுக்குத் தற்காளிகத் தடைவிதித்து உத்தரவிட்டார். இதன்மூலம் அடையாள அட்டையினையே மருத்துவச் சான்றாக இணைத்து விண்ணப்பித்த பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை நடைபெறும் தமிழ்மொழித் தகுதித்தேர்விலிருந்து விலக்கு கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையினை மருத்துவச் சான்றாக இணைத்து விண்ணப்பித்தவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காளிகத் தடையாணையைத் தேர்வுக்கு எடுத்துச் செல்லுமாறு பார்வையற்றோர் அகில இந்திய சம்மேளனத்தின் துணைத்தலைவர் திருமதி. முத்துச்செல்வி கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற ஆணையைப் பதிவிறக்க:
மிகக் குறுகிய காலகட்டத்தில் மிக முக்கிய முன்னெடுப்பை மேற்கொண்ட AICFB மற்றும் CSGAB ஆகிய இரண்டு அமைப்புகளுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கிறது தொடுகை. அப்படியே, டிஎன்பிஎஸ்சி தொகுதி 2 முதன்மைத்தேர்வை எழுதவிருக்கும் அனைவருக்கும் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
