தலையங்கம்: தளமே போதுமா? கூரை வேண்டாமா?

தலையங்கம்: தளமே போதுமா? கூரை வேண்டாமா?

ஆக்கம் ஆசிரியர் வெளியிடப்பட்டது
பிரெயிலில் எழுதப்பட்டுள்ள தொடுகை என்ற சொல்லை விரல்கள் தொட்டுப் படிப்பதாகவும், விரல்களுக்கு இறக்கைகள் முளைப்பதாகவும்  வடிவமைக்கப்பட்டுள்ள தொடுகை மின்னிதழின் லோகோ.
தொடுகை: பார்வையற்றோரின் படைப்பாக்கத்தளம்

எவரும் எவரோடும் விரைவாகவும் எளிமையாகவும் துல்லியமாகவும் தொடர்புகொள்ளும் வாய்ப்பை இந்த நூற்றாண்டின் இணைய வசதி சாத்தியமாக்கியிருக்கிறது. ஏற்போ, எதிர்ப்போ தனிமனிதன் தன்னுடைய தரப்பை முன்வைத்து உரையாடும் களமாக மாறிவிட்டது இணையம். ஜனநாயகத்தின் அடிப்படை விழுமியமான சமத்துவச் சிந்தனைகள் மேலும் கூர்கொள்ளத் தொடங்கியிருப்பது இணையத்தால்தான்.

வாக்கு வங்கியாகக்கூட மாற இயலாத, ஆண்டாண்டுகளாய் ஆள்வோரின் பார்வையே பட்டிராத சமூகத்தின் விளிம்புநிலை அலகுகளிலிருந்தும்கூட நீதிக்கான இறைஞ்சல்கள் மேலெழுவதும், அவைப் பொதுச்சமூகத்தின் மனசாட்சியைத் தூண்டி, தட்டிக்கழிக்கவே இயலாத நிர்பந்தத்துக்குள் அதிகாரத்தைத் தள்ளுவதுமான நிகழ்வுகள் எல்லாம் இணையத்தின் பிரமாண்ட வீச்சினால் வாய்த்தவை.

உலகைத் தொடுகையாலும், குரலாலும் தொடர்புகொள்ள இயற்கையால் பணிக்கப்பட்ட பார்வையற்றவர்களுக்கு இந்தத் தொழில்நுட்பப் பாய்ச்சல் ஒரு வரம். இன்று பார்வையற்றவர்கள் எல்லாவகையான சமூக வலைதளங்களிலும் களமாடுகிறோம். நம்முடைய தனித்த சவால்கள், அதைக் கடப்பதற்கான வழிமுறைகள், பெறும் வெற்றிகள் என எல்லாவற்றையும் மிக எளிமையாக நம்மால் பொதுச்சமூகத்திடம் முன்வைக்க இயன்றிருக்கிறது. இது கடந்த பத்து பன்னிரண்ட்உ ஆண்டுகளில் நடந்த மிகப் பெரிய மாற்றம். ஆனால், இந்த மாற்றத்தால் பார்வையற்ற சமூகத்தில் கருதிப் பார்க்கும் வகையில் ஏதேனும் நற்பயன்கள் ஏற்பட்டிருக்கின்றனவா என்பதையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

தன்னுடைய கோரிக்கையை அரசுக்குத் தெரிவிக்க ஒரு மனு எழுதவேண்டுமானால், பார்வையுள்ள ஒருவரை அணுகி, அவருடைய மனநிலையையும் கருத்தில்கொண்டு, அவரோடு உரையாடி, தன்னுடைய சிந்தனையில் உதித்தனவற்றை முன்னும் பின்னுமாக அடுக்கிச் சொல்லுகையில் ஏற்படும் அடித்தல் திருத்தல்களையெல்லாம் கடந்து,  எழுதி முடிக்கப்பட்ட மனுவில் திருத்தங்கள் செய்து, பின் நகல் எடுத்து, முகவரியிட்டு அரசுக்கு அனுப்ப அந்த நாட்களில் நம் மூத்தவர்கள் எப்படியெல்லாம் முயன்றிருப்பார்கள் என்று எண்ணிப் பார்த்தால், இன்று விரலிடுக்கிலிருந்து வெளியேறும் குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள் எல்லாம் எத்தனை மகத்தான வரங்களாக நம் கைகளில் தவழ்கின்றன என்பது புரியும்.

ஒரு மனுவுக்கே இத்தனை பாடுகள் என்றால், சில வாரங்களேனும் தொடர்ச்சியாகத் தான் சொல்லச் சொல்லப் பிறரை எழுதுவித்து, இன்னொருவர் உதவியோடு அதனை மெய்ப்பு நோக்கி, பதிப்பாளரை அணுகிப் பல பார்வையற்ற நம் முன்னவர்கள் முன்னெடுத்த புத்தக வெளியீடெல்லாம் நினைத்தாலே பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. ஆனால், இன்று சில நிமிடங்களில் நாம் எழுதிய புத்தகங்களை நாமே பதிப்பித்துக்கொள்ளும் வாய்ப்பை கிண்டில் மூலமாகப் பெற்றுவிட்டோம்.

அன்றும் இன்றும் என மாறிமாறி வாய்ப்புகளை ஆராய்ந்தால், பார்வையற்றவர்களாகிய நாம் இன்று பலபடிகள் மேலேறி நிற்கிறோம். ஆனால், வெற்றிகள்?

சருக்கிக்கொண்டிருக்கும் நம்மை அதல பாதாளத்தில் இடறிவிடாதபடி, பாதுகாத்து நிற்கின்றன நம் மூத்தவர்கள் முயன்று எழுப்பிய வலுவான அடித்தளங்கள்.

தளமே போதுமா? கூரை வேண்டாமா?

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *