தொழில்நுட்பம்: ஹெக்சிஸ்: சக்சஸா, சர்க்கஸா?

தொழில்நுட்பம்: ஹெக்சிஸ்: சக்சஸா, சர்க்கஸா?

ஆக்கம் டெக்கிகுமார் வெளியிடப்பட்டது

கைக்கு அடக்கமா செவ்வக வடிவத்தில இருந்த ஒரு மரப்பெட்டியை, கிஃப்ட் பாக்ஸ் மாதிரி இருக்கேனு தொட்டுப் பார்த்தா, உள்ளே இருக்கிறது கிஃப்ட் இல்லை புக்ஸ்னு சொன்னாங்க.  குட்டி டைரி கணக்கா ஒரு திருக்குறள் புக். சின்ன வயசுல பார்த்தது. அதுபோல புக்ஸையெல்லாம் இந்த பாக்ஸ்ல போட்டு பூட்டி, யாருக்கோ பரிசா கொடுக்கப்போறாங்களோனு நினைச்சது சிறுமூளை.

என்னோட சந்தேகத்துக்கு பூஸ்ட் கொடுக்குற மாதிரியே பெட்டியோட மேல்பரப்புல லெஃப்டில ரெண்டு பட்டன்ஸ் ரைட்டுல ரெண்டு பட்டன்ஸ் ஒன்னின்கீழ் ஒன்னுனு இருந்துச்சு. பெட்டியைத் திறக்கவும் மூடவும் இருக்கிற வசதினு நினைச்சு, பட்டன்ஸை அழுத்தினா திறக்கப்போற பெட்டியின் வாய்ப்பகுதி எங்கே இருக்குமுனு ரெண்டு கையையும் நாளாபக்கமும் சுழற்றித் தேடுனதுல, பெட்டியோட பக்கவாட்டில லெஃப்ட் பக்கமா பழைய பிலிப்ஸ் ரேடியோ மாடல்களில் ஆன் ஆஃப் செய்யுறதுக்கு கொடுக்கப்பட்டதுபோல ஒரு பட்டன். ஒருவேளை அதுதான் பெட்டியைத் திறக்குமோனு அந்தப் பட்டனை கீழே தள்ளினேன்.

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ராத்திரில பறக்கிற விட்டில் பூச்சி றெக்கை அடிக்கிற சத்தம். அல்லது ஸ்டாண்ட் போட்ட சைக்கிலின் பெடலை வேகமாச் சுத்துனா, வாற ரிம் சத்தம். ஒரு வினாடி பயந்துட்டேன். கொஞ்சம் சுதாரிச்சுக்கிட்டு இந்த சத்தம் எங்கிருந்து வருதுன்னு பெட்டியோட பரப்புப் பக்கமா துலாவினதுல பெட்டியோட மேல் மூலையிலிருந்து கொஞ்சம் இறங்கி, இரண்டு பக்க ஓரங்களிலிருந்தும் சம தொலைவில செதுக்கப்பட்டிருந்த ஒரு சின்ன செவ்வகப் பாத்தி. அங்கே பதியம் போடப்பட்டிருந்தது முத்துமுத்தா பிரெயில்மணிகள். என் பசி தீர்த்து, என்னைப் பலரின் முன்பும் பலம் கொண்ட ஒருவனாய் நிற்கவைத்த அறிவன்னங்கள். “பரவசம்! பரவசம்! நான் இல்லை என் வசம்”னு உள்ளுக்குள்ள பாட்டு கேக்குது. உள் காற்று உதடு திறந்திட்டா வம்பாய் போயிடுமுன்னு சிலிர்ப்பு செகண்ட்ஸுக்கு சீக்கிரமா பைபை சொல்லிட்டு, வந்திருந்த சிலருக்கு ஹாய் ஹாய் சொல்லி, இந்த டிவைஸைப் பத்தின டீட்டேல்ஸ் கேட்டேன்.

ஹெக்சிஸ்

டிவைசோட பெயர் ஹெக்சிஸ் (hexis).

ஆர்பிட் ரீடர், பிரெயில் மீ போல இன்னோரு எலெக்ட்ரானிக் பிரெயில் ரீடர். ஆனா பள்ளி வயது பார்வைத்திறன் குறையுடைய குழந்தைகளை மனதில் வைத்து டிசைன் செய்யப்பட்டுள்ளது.

மொத்தமே 14 செல்களைக்கொண்ட பிரெயில் டிஸ்ப்லே. ஓப்பன், க்லோஸ், பிரிவியஸ், நெக்ஸ்ட் என நான்கே பட்டன்கள்.

பக்கவாட்டில் இருக்கிற யூஎஸ்பி போர்ட்டு மூலம் நான்கு மணிநேரம் சார்ஜ் செய்ய வேண்டும்.

தனியே பிரித்தெடுக்க முடியாத 8GB நான்ரிமூவல் இண்டர்னல் மெமரி கார்ட்தான் இதன் நினைவகம்.

ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், பஞ்சாபி, ஒடியா ஆகிய ஒன்பது மொழிகளின் உள்ளீடுகளை ஆதரிக்கும் வகையில் இந்த டிவைஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிரேடு 2 ஆங்கில சுருக்கெழுத்துகளையும் (contractions) இது ஆதரிக்கிறது.

வைஃபை அல்லது மொபைல் ஹாட்ஸ்பாட் வழியே கனெக்ட் செய்யலாம். ஆனால், நிர்ணயிக்கப்பட்ட எஸ்எஸ்ஐடி, பாஸ்வேர்ட் கொண்டே இயக்க முடியும்.

18.5 செ.மீ.நீளம், 13 செ.மீ. அகளம். 4.3 செ.மீ. உயரம் கொண்ட இந்த கன செவ்வகப் பெட்டியின் எடை 586 கிராம்.

எப்படி இயங்குகிறது இந்த டிவைஸ்?

குழந்தைகளுக்கான பாடப்புத்தகங்கள், கதைகள், வீட்டுப்பாடங்கள் என எதுவானாலும், அந்தரா (antara) என்கிற இணையவழி செயலி (web application) மூலமாக டெக்ஸ்ட் வடிவில் உள்ளீடு செய்யப்படும். இப்படி உள்ளீடு செய்யப்பட்டவை பிரெயில் வடிவில் மாற்றப்பட்டு, அவை வைஃபை அல்லது மொபைல் ஹாட்ஸ்பாட் மூலம் இணைக்கப்பட்ட ஹெக்சிஸ் டிவைசில்  தோன்றும்.

ஒரு குழந்தைக்கு ஒரு டிவைஸ் என்கிற ரீதியில், ஒவ்வொரு டிவைசுக்கும் தனித்தனியே எண்கள் கொடுக்கப்படும். அந்தராவில் பாடங்களை உள்ளீடு செய்யும்போது, முதலில் டிவைஸ் எண்களைக் கொடுக்க வேண்டும். எந்த டிவைசில் என்ன பாடங்களை உள்ளீடு செய்யலாம் என்பதை இந்த எண்களைக்கொண்டே நாம் பிரித்துக்கொள்ளலாம்.

உதாரணமாக, டிவைஸ் எண் 1 எனில், அந்த எண்கொண்ட டிவைஸை வைத்திருக்கும் குழந்தையின் கற்றல் தேவைக்கேற்ப பாடங்களை உள்ளீடு செய்யலாம்.  இதன்மூலம், ஒவ்வொரு குழந்தையின் கற்றல் திறனுக்கேற்ப, தனித்தனியே அவர்களைக் கையாள்வது எளிது.

எப்படி இயக்குவது?

நன்கு சார்ஜ் செய்யப்பட்ட ஹெக்சிஸ் டிவைஸின் சுற்றுப் பரப்பின் அதாவது இடப் பக்கவாட்டில் ஒரு பொத்தான் இருக்கும். அதை கீழே தள்ளினால், கிற் என ஒரு சத்தம் கேட்கும். இதைக்கொண்டு டிவைஸ் ஆன் ஆகிவிட்டது என்பதை அறிந்துகொள்ளலாம்.

பிறகு, டிவைஸின் மேல் பரப்பில் N1, N2, N3, n4 இடது மற்றும் வலது ஓரமாக ஒன்றின் கீழ் ஒன்றென தலா இரண்டு சிறிய செவ்வக வடிவப் பட்டன்கள் இருக்கும். இடது பக்கத்தில் மேலே உள்ள N1 பட்டனை அழுத்தினால், உள்ளே இருக்கிற பிரெயில் கோப்பின் தலைப்பு டிஸ்ப்லேயில் தோன்றும். மீண்டும் அதே பட்டனை அழுத்தினால், அடுத்த தலைப்புக்குப் போகலாம். ஒவ்வொரு தலைப்பிலிருந்தும் வெளியேற வலது பக்கத்தில் மேலே இருக்கிற N2 பட்டனை அழுத்தவேண்டும்.

இடது பக்கத்தில் கீழே இருக்கிற N3 அடுத்த (next) சொல்லுக்கும், வலது பக்கத்தில் கீழே இருக்கிற N4 பட்டன் முந்தைய (previous) சொல்லுக்கும் நகர்த்தும் வகையில் மிக எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதை வடிவமைத்திருப்பவர்கள் பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான வெம்பை டெக்னாலஜிஸ். இதன் நிறுவனர்களில் ஒருவரான திவ்யா Y. என்பவர் பிறவிப் பார்வையற்றவர். பள்ளி வயது பார்வையற்ற குழந்தைகளின் கற்றலை மேம்படுத்தும் நோக்கத்தோடு பணியாற்றி வருகிற விஷன் எம்பவர்மண்ட் என்கிற தொண்டு நிறுவனத்தின் மூலமாக தமிழகத்தின் சில பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப்பள்ளிகளுக்கு இந்தக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கருவிகளை இயக்குவது தொடர்பான பயிற்சிகளையும் அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பள்ளிக்கே நேரில் சென்று வழங்கி வருகிறார்கள்.

பாஸ் வந்தவுங்க சொன்ன டீட்டெய்ல்லெல்லாம் அப்படி இப்படினு கூட்டிக்கழிச்சு அலசுனா, இந்த டிவைஸ் முழுக்க முழுக்க குழந்தைங்களுக்கானதுன்னு புரியுது. ஆனா, ஒரு டிவைஸோட ரேட் 15000னு சொல்றதைக் கேட்டா, இது பேரன்ட்ஸுக்குக் கொஞ்சம்கூட டேலியாகாத மேட்டரோனும் தோனுது.

பிரெயிலைத் தொழில்நுட்பத்துக்குள்ள கொண்டு வருவதாச் சொல்லி, பார்வையற்றோருக்கான தொழில்நுட்பச் சந்தையில யார் யாரோ சர்க்கஸ் காட்டிக்கிட்டிருக்க, சரியான திட்டமிடலோட மாணவர்களுக்கு ஹெக்சிஸை அறிமுகப்படுத்தினா, நிச்சயமா சக்சஸ்தான்.

தொடர்புக்கு: tech@thodugai.in

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *