அஞ்சலி: மாசில்லா ஓவியக் காற்று

அஞ்சலி: மாசில்லா ஓவியக் காற்று

ஆக்கம் X செலின்மேரி வெளியிடப்பட்டது

‘’All our knowledge has its origins in our perceptions’

உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தை வரைந்த லியோர்னாடோ டா வின்சியின் கருத்துப்படி நம் அறிவை வளர்ப்பவை நம் மனதில் பதியும் காட்சிப் படிமங்களே. ஆதிகால மனிதன் தன் விருப்பங்களையும், ஆழ்மன எண்ணங்களையும், உணர்வுகளையும், ஏக்கங்களையும் குகைகளில் காட்சிகளாக வரைந்து அதற்கு ஓவியம் என்று பெயரிட்டு அழைத்திருக்கிறான். நூறு கவிதைகள் சொல்லாத கருத்தை, ஆயிரம் இசைகள் தராத உணர்வை, ஆயக்கலைகளுள் ஒன்றான ஓவியக்கலை நமக்கு அளிக்கக்கூடியது என்றால் அது மிகையல்ல.

அன்றுமுதல் இன்றுவரை, நுட்பமான ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் வரலாற்றை நிறைத்திருப்பதாகப் பல வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களும், புத்தகங்களும் சான்று பகர்கின்றன. அவற்றை வடித்தெடுத்த சிற்பிகளும், கலைஞர்களும், எழுத்தாளர்களும் சரித்திரத்தின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட வேண்டியவர்கள். அந்த வகையில், புல்லின் நுனியில் உறங்கும் பனித்துளியில் மலையை விளக்க முடிந்த திருவள்ளுவரின் தமிழ்மரபில் பிறந்த திரு. மனோகர் தேவதாஸ் அவர்கள் 1950 – 60களில் மதுரையின் இயற்கை அமைப்பு எப்படி இருந்தது என்பதைத் தம் பார்வையை முற்றிலுமாக இழக்கவிருந்த  காலத்திலும்,  ஓவிய வகைகளுள் ஒன்றான கோட்டுச் சித்திர வரைபடங்கள் மூலம் வரைந்து,  ஓவியக்கலையை மெருகேற்றி இருக்கிறார்.

அவர் கிறிஸ்தவர், பார்வையற்றவர்,  கொடையுள்ளம் கொண்டவர் போன்ற காரணங்களுக்காக  அல்ல; புதுக்கோட்டையில் உலகப் புகழ்பெற்ற சித்தன்னவாசல் குகைச் சிற்பங்களையும் ஓவியங்களையும் தொட்டுத் திரும்பும் காற்றை சுவாசிக்கும் பாக்கியம் பெற்ற நான், மதுரை மாசிவீதிகளில் ஓவியங்களாகப் படிந்த மாசிலாக் காற்றின் சில சுவடுகளைக் காலம் கடந்து நிற்கும் வரலாற்று ஆவணங்களில் பதிப்பிக்கலாம் என்று எண்ணியதன் விளைவே இப்பகிர்வு.

பிறப்பும் வாழ்வும்:

மனோகர் தேவதாஸ்

மனோ என்று பரவலாக அறியப்படும் மனோகர் தேவதாஸ் அவர்கள் மதுரையில்உள்ள கோரிப்பாளயத்தில்  10.07.1936 அன்று ஹரி ஜேசுதாசன் மாசிலாமநி, சிந்தியா மாசிலாமணி இணையருக்கு, இரண்டாவது மகனாகப் பிறந்தார். அவரது தந்தை மருத்துவர் தாய்  இல்லத்தரசி. அவர்கள் வீட்டில் சிறிய நூலகம் ஒன்று இருந்தது. சிறுவயதில் குறும்போடு வளர்ந்த மனோ, புத்தகங்களைப் படித்ததைவிட அதிலிருந்த படங்களை வரைவதிலேயே அதிகம் கவனம் செலுத்தினார். காட்டு மிருகங்கள், ஸ்டீம் என்ஜின், மாசிவீதிகள், சித்திரைத் திருவிழா, செல்லூர் கண்மாய், மேற்குத் தொடர்ச்சிமலை, ஆடு மாடுகள், வயல்வெளிகள், அவர் பயின்ற சேதுபதி பள்ளி, கோரிப்பாளையம் பள்ளிவாசல், புதுமண்டபம், மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட பல இயற்கை அமைப்புகளை சிறுவயதிலிருந்தே வரையத் தொடங்கினார்.

உலகின் மிக அழகான கட்டிடங்களைக் கொண்ட அமெரிக்கன் கல்லூரியில் உள்ள சேப்பலை அவர் தத்ரூபமாக வரைய, அந்த ஓவியம் அதிக வரவேற்பையும், பாராட்டையும் பெற்றதோடு, அந்த ஆண்டு கல்லூரிப் பத்திரிகையின் கவர் பக்கத்தில் இடம்பெற்றதாக ஒரு பேட்டியில் பெருமிதம் பொங்கப் பகிர்ந்திருந்தார். 1957இல் அமெரிக்கன் கல்லூரியில், வேதியியலில் பிஎஸ்சி முடித்திருந்தபொழுது அவருடைய தந்தை இறந்துவிட, குடும்பப் பொறுப்பு அவர்மீது விழ, சென்னையில் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த வோல்ட்ஹாம் கம்பெனியில் கெமிஸ்ட்டாக (வேதியியல் வல்லுநர்)  பணி வாய்ப்பைப் பெற்றார்.  மேற்படிப்புக்கு அனுமதி மறுத்த ஆங்கிலேய நிர்வாகம், அவருக்கு சம்பள உயர்வை அளித்ததோடு, பயிற்சிக்காக 3 மாதங்கள் இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்தது. இந்தியா திரும்பியதும் வெளிநாடு சென்றவர் என்ற பெருமை திருமணச் சந்தையில் அவர் மதிப்பை அதிகப்படுத்த, பெண்பார்க்கும் படலம் தொடங்கியது.

இல்வாழ்க்கை:

மனைவி மஹிமாவுடன் மனோகர் தேவதாஸ்

மனோகர் தேவதாசுடன் உரையாடும்போதெல்லாம், வரிக்கு வரி அவரது உதடுகள்  மறவாமல் உச்சரிக்கும் பெயர் அவருடைய மனைவியின் பெயராகிய மஹிமா என்பதுதான். மஹிமா மைக்கேள் மநோவுக்கு தூரத்து சொந்தக்காரர். சென்னையில் வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அன்பானவர்; அழகானவர்; பழகுவதற்கு எளிமையானவர்; நகைச்சுவை உணர்வு மிகுந்தவர்; ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நுண்கலைப் பிரிவில் (BFA)தங்கப்பதக்கம் வென்றவர். சிறுவயதிலேயே திறமையாக கார் ஓட்டத் தெரிந்தவர். கவிதைகள் எழுதக்கூடியவர்; அமைதியானவர்; பேசுவதைவிட கேட்பதை அதிகம் விரும்புபவர்; பல கலைகளின் பரிட்சயம் இருந்தும் சிறிதும் பெருமை இல்லாதவர்; மற்றவருக்குக் கொடுத்து உதவும் தங்கமான குணம் கொண்டவர். அவர்களது உறவுக்கார பெண் சத்யா மூலம் மனோ மஹிமா இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் கேட்டு தெரிந்து பழகி, கடிதங்கள் மூலம் அன்பை வளர்த்து, இரண்டு குடும்பங்களின் சம்மதத்துடன் 1963ல் திருமண பந்தத்தில் இணைந்தனர்.

1966இல் அவர்கள் அன்பான இல்வாழ்வின் வெளிப்பாடாக சுஜா என்ற பெண் குழந்தை பிறந்தது. 1969இல் அமெரிக்காவின் ஓஹியோவில் உள்ள ஓபர்லின் பகுதியில் எம்.எஸ்.சி மனோ  படிக்க, மஹிமா அங்குள்ள ஏசியா ஹவுஸ் என்ற பகுதியில் நிகழ்ச்சிப் பொறுப்பாளராக பணிவாய்ப்பைப் பெற்று, மூன்று ஆண்டுகள் அமெரிக்காவிலேயே சிறப்பாக நல்லறத்தோடு இல்லறம் நடத்தினர்.  45 நாட்கள் ஐரோப்பாவின் கிரீக், ரோம், இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளின் கலை சார்ந்த நிகழ்வுகளில் கலந்துகொண்ட அவர்கள், அவர்களது கனவுகள் அனைத்தும் நிறைவேறியதாக நம்பினர். இந்தியாவுக்குத் திரும்பிய அவர்களது குடும்ப வாழ்க்கை இனிதாகவே சென்றது அந்த கொடூரமான கார் விபத்தைச் சந்திக்கும்வரை.

அந்தக் கோர விபத்து:

மனோ, மஹிமா, அவர்களது குழந்தை, மனோவின் தாயார் நால்வரும் புதிதாக வாங்கிய நியூ ஹெரால்ட்  காரில் சென்னையில் இருந்து மதுரை நோக்கி பயணித்தனர். மஹிமா கார் ஓட்டிக்கொண்டிருந்தார்.  தவறுதலாக லாரி இடித்துவிட்டது. காரிலிருந்து தூக்கி எறியப்பட்ட மஹீமா, கழுத்துக்குக் கீழ் எந்த  உறுப்பும் செயல்படாத அளவுக்கு பாதிக்கப்பட்டார்.  வேலூர், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் சிகிச்சைப் பெற்று, 10 மாதங்கள் கழித்து வீடு திரும்பினார். அப்பொழுதும் அவர் முகத்தில் புன்னகையும் மனதில் தைரியமும் நம்பிக்கையும் மாறாமல் அப்படியே இருந்தன. மனோவிடம் இயல்பாகவே புதைந்திருந்த ஓவியங்கள் வரையும் திறனைக் கண்டறிந்து, முறைப்படுத்தி, முழு  வடிவம் கொடுத்து, இந்த உலகுக்கு அடையாளப்படுத்தும் பொறுப்பைத் தம் இறுதி மூச்சு இருக்கும்வரை  செய்யத் தவறவில்லை.

‘I’ll promise to stand by you and together We shall overcome’ இந்த வரிகள் மனோ மஹிமாவின் பத்தாவது திருமணநாளின்போது மஹீமாவுக்கு மனோ பரிசளித்த எட்டடி உயர புத்தக அலமாரியில் கட்டவுட்டில் எழுதப்பட்டிருந்தவை இவை. மஹிமா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவதற்கு முன்பாகவே, அவரை கவனித்துக்கொள்ளும் முறை குறித்து தெரிந்துகொள்ள சில புத்தகங்களைத் தேடிப் படித்தார் மனோ. குறிப்பாக, அவருக்கு பெட்ஸோர் வரக்கூடாது என்பதற்காக உறங்குவது   தவிர பிற நேரங்களில் சக்கர நாற்காலியில் அமர்த்திப் பழக்கினார். மேலும் மஹீமாவை கவனிப்பதற்கு அதிகமான பணியாளர்களின் தேவை இருந்ததால் அதுபோன்ற சுமைகளைச் சமாளிப்பதற்கு,  வருமானத்தைப் பெருக்கும் முயற்சியில் இறங்கினார். இதற்கிடையில் ரெட்டிநிடிஸ் பிக்மெண்டோஸா எனப்படும் மரபு சார்ந்த கண் நோயால் பாதிக்கப்பட்ட மனோ, 1975ல் தன் ஒரு  கண் பார்வையை முற்றிலுமாக இழந்துவிட்டார். விதியின் விளையாட்டுகள் தொடர்ந்தபோதிலும், நம்பிக்கையையும், தைரியத்தையும், மந உறுதியையும்  விட்டுவிடவில்லை இருவரும்.

‘If life denies you something,do something else. thats all.என்றபடி, தங்கள் வாழ்க்கைப் படகில் சவால்களைக் கருதாமல், பயணத்தைத் தொடர்ந்தனர். அவரது அடுத்த கண்ணிலும் காட்ராக்ட் காரணமாகப் பார்வை குறையத் தொடங்கியது. ஷங்கர நேத்ராலயாவின் டாக்டர். பத்ரிநாத் அவர்களின் அறுவைசிகிச்சை மற்றும் பரிந்துரைப்படி, பொருட்களை 27 மடங்கு பெரிதாக்கிக் காட்டக்கூடிய லென்ஸ் வாங்கி வரைதலைத் தொடர்ந்தார்.

மஹீமா சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி புத்தகங்களைப் படித்துக்காட்டினார். இந்தச் சவாலான காலகட்டத்தில், மஹீமா 5000 பக்கங்களுக்கு மேல் படித்துக்காட்டி இருப்பார். மனோ, முன்பைவிட அழகாகவும், தரமாகவும் நிறைய படங்களை வரைந்திருந்தார். இந்த அருகாமை, அவர்களது அன்பையும், அந்யோந்யத்தையும் அதிகப்படுத்தியதாக மனோ பல இடங்களில் சொல்லி மகிழ்ந்திருக்கிறார்.

இதேநேரத்தில் மஹீமா Spoken English வகுப்பெடுத்திருக்கிறார். மேலும் மனோ தமிழ் வழியில் படித்தவர் என்பதால், அவர் ஆங்கிலத்தில் புத்தகங்களை எழுதும்போது ஏற்படும் எழுத்து மற்றும் கருத்துப்பிழைகளைத் திருத்தி இருக்கிறார். மஹீமாவைக் கண் கலங்காமல் பார்த்துக்கொள்வது கடினமான, ஆனால் மனோ விருப்பத்துடன் செய்த பணியாகும்.

மாடியிலிருந்து வீல் சேரில் படிகளில் இறக்குவது, வெளியில் அழைத்துச் செல்வது, இரவில் உறங்குவதற்காக வீல் சேரில் இருந்து இறக்கி, கவனமாகவும் பாதுகாப்பாகவும் படுக்கையில் கிடத்துவது, யூரின் ட்யூப் மாட்டுவது, படுக்கையை சரி செய்வது உள்ளிட்ட பார்வையற்றோருக்குச் சவாலான செயல்களையும் முகம் சுளிக்காமல் செய்திருக்கிறார் மநோ. தம் வெளிநாட்டு நண்பர்களிடமிருந்து ஆடியோ புத்தகங்களை வாங்கிக் கேட்ட இவர், மனைவியின் அமைதியான உறக்கம், படங்களை வரைதல், ஆடியோ புத்தகங்களைக் கேட்டல் இவற்றை ஒருசேரச் செய்யும்போது, அவரே உலகின் மகிழ்ச்சியான நபர் என்றும், அந்தத் தருணமே அழகானது என்றும், அந்த நிமிடத்தோடு வாழ்க்கை முடிந்துவிடக் கூடாதா என்றும் நினைத்துக்கொள்வாராம் மனோ. 

பார்வை படிப்படியாகக் குறைந்து வருவதை உணர்ந்த மனோ, முழுமையாக இழப்பதற்குள் மனக்கிடங்கில் புதைந்து கிடக்கும்  நினைவுகளை  எழுத்துக்களிலும் ஓவியங்களிலும் கொட்டித் தீர்ப்பது என்று முடிவெடுத்தார். பணி நேரம் தவிர்த்த பிற நேரங்களில் அவருடைய எழுத்தருக்கு  டிக்டேட் செய்ய, அவர் டைப் செய்ததை மஹீமா பிழை திருத்தம் செய்ய என 1983ல் எழுதத் தொடங்கிய Green well years  என்ற நாவல் 1997ல்தான் முழு வடிவம் பெற்று வெளிவந்தது. இது பால்யகால குறும்புகள் எழுத்துகளிலும் ஓவியங்களிலும் சொல்லப்பட்ட நாவல். எங்கள் குறும்பில் விஷமம் இருக்காது விஷயம் இருக்கும் என்று எதார்த்தமாகச் சொல்லுவார் மனோ.

தம் திருமணத்திற்கு முந்தைய மஹீமாவுடந் செலவிட்ட மகிழ்ச்சியான நினைவுகளை Dreams, seasons and promises என்ற நூலில் எழுதினார். அன்பு மனைவி மஹிமாவுக்காக Mahima and the butterfly, Poem to courage போன்ற நூல்களை எழுதினார். கோவில் நகரமாம் மதுரையின் வரலாற்றுச் சிறப்புகளையும், பண்பாட்டுப் பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகளையும் சித்தரிக்கும் விதமாக, multiple facets of my Madurai  என்ற நூலை 2007 ஏப்ரலில் வெளியிட்டார். இந்த நூலில் உள்ள யானைமலைப் பகுதி, 2012 2017 சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் ஏழாம் வகுப்பு ஆங்கிலத்தில் மூன்றாம் பருவத்தில் இடம் பெற்றிருந்தது.

ஏற்றம் எனப்படும் சதுர வடிவ கிணறுகளில் ஏற்றம் இறைப்பதும், பனை மரங்கள் சூழ்ந்த பச்சை வயல்வெளிகளும்,  சவுக்கு மரங்களும் இந்த நூலில் மட்டுமே காண கிடைக்கும் அற்புத காட்சிகள். இந்தப் புத்தகத்தை நமது தற்போதைய தமிழக முதல்வர் அவர்கள் நமது குடியரசுத் தலைவருக்குப் பரிசாக வழந்கியதும், தமக்குப் பெருமையாக இருப்பதாக மநோ பேட்டி கொடுத்ததும் குறிப்பிடத் தக்கது. 

கோட்டுச் சித்திரங்கள் குறித்த தன்னுடைய புரிதலை from an artist’s perspective  என்ற நூலில் எழுதினார். கருப்பு வெள்ளை மட்டுமே தன் கண்களுக்கு தெரிந்த காலத்திலும் கூட ரப்பர், பொட்டு போன்றவற்றை அடையாளத்துக்குப் பயன்படுத்தி, அவருடைய மனக்கண்கள் மூலம் கிரகித்து ரசித்த இடங்களைப் படங்களாகத் தீட்டினார். அப்படி வரையப்பட்ட 33 படங்களைத் தொகுத்து நிறங்களின் மொழி என்று தலைப்பிட்டு 2010 விகடன் பிரசுரம் வெளியிட்டது. எழுத்தாளர் சுஜாதா ஷங்கருடன் இணைந்து,எழுதிய  impressions of an artist and an architect என்ற புத்தகத்தில், சென்னையிலும் மதுரையிலும் தாம் கண்டு களித்த காட்சிகளைப் படமாக்கி இருக்கிறார் மனோ. அன்பு மகளின் வேண்டுகோளின்படி 71ஆவது வயதில் படங்கள் வரைவதை நிறுத்திக்கொண்டார்.

சிறுவயதிலிருந்து ஓவியங்களை வரைந்துகொண்டிருந்த மனோ, அதற்கென்று சிறப்பு வகுப்புகளுக்குச் சென்று முறையாகப் பயிற்சி பெறவில்லை.  அவர் வரைந்த கோட்டுச் சித்திரப் படவகைகள் மற்ற செயற்கைப் படங்களைப்போல அல்லாமல், அதிக சிரத்தை எடுத்து வரையப்பட வேண்டியவை. பார்வை குறையப்போவது உறுதிசெய்யப்பட்ட காலத்திலும் தம் மன அடுக்குகளைப் புரட்டிப் பார்த்து, சிறுவயது சம்பவங்களைக் கோர்த்துச் சித்திரங்களாகத் தீட்டிய அவரது திறமையைப் பாராட்டி, ஆர்க்கிடெக்ட் திரிபுர சுந்தரி மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு ஓவியக் கலைஞர்கள் இந்தியாவின் நான்காவது உயரிய விருதாகிய பத்மஸ்ரீக்கு அவரைப் பரிந்துரைக்க, கோவிட் காலத்தில் ஆகஸ்ட் 2020இல் அந்த விருது அவர் வீடு தேடி வந்தது.

பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்படும் மனோகர் தேவதாஸ் அவர்கள்

பார்வை குறைந்தபிறகும்கூட, தாம் கண்டு, ரசித்து, வரைந்து, தீர்த்த இயற்கைக் காட்சிகளை, புதுக்கவிதைகள் போல வார்த்தைகளில் விவரிக்கும்போதே, காட்சிகளாக நம் மனக்கண் முன் விரியச்செய்த அந்த இயற்கையின் இணையற்ற காதலனுக்கு, அந்த விருது சமர்ப்பிக்கப்பட்டது பொருத்தமானது என்றே சொல்லத் தோன்றுகிறது.

மனோ மஹீமா  தம்பதியர் கொடை உள்ளம் மிகுந்தவர்களாக விளங்கினர். 1967இல் பக்கிங்ஹாம் கால்வாயில் 120 அடி நீளமுள்ள படகைப் புகைப்படம் எடுத்து பின்பு அதை ஓவியம் ஆக்கியிருக்கிறார் மனோ. அவரது 31 வயதில் Oil paintings பற்றியும், அவற்றைப் பயன்படுத்தி ஓவியங்கள் வரையும் முறை குறித்தும் மஹீமா சொற்களில் விவரிக்க, சரியாகக் கற்றுக்கொண்டு மஹீமாவைவிட அழகாக வரையத் தொடங்கினார் மநோ.   அந்த ஓவியம் நல்ல விலைக்குப் போக அடுத்தடுத்து நிறைய வரையலாம் என்றும், கிறிஸ்மஸ் புத்தாண்டு காலங்களில் கிரீட்டிங் கார்டு போல வடிவமைக்கலாம் என்றும்  கம்பெனிகளிடமிருந்து பெறும்  வருமானத்தைத் தொண்டுகளுக்காகப் பயன்படுத்தலாம் என்றும் முடிவெடுத்து செயல்படுத்தினர்.

அப்போதைக்கு இருவரும் நல்ல வருமானம் தரக்கூடிய பணிகளில் இருந்ததால் ஹெரிடேஜ் கிரீட்டிங் கார்டு ப்ராஜெக்ட் ஃபார் சேரிட்டி என்ற திட்டத்தைத் தாமாகவே வகுத்து 42 ஆண்டுகள் தொடர்ந்து செயல்படுத்தி 33,000 கார்டுகளை விற்று அதிலிருந்து கிடைத்த வருமானத்தைத் தொண்டு நிறுவனங்களுக்கு  செக் போட்டு கொடுத்ததாகவும் தெரியவருகிறது. சக்கர நாற்காலி பயனாளியாக மாறிய பிறகும்கூட மஹிமா கம்பெனி சேர்மன்களுக்கு பேசுவது, செயற்கைக் கைகளைப் பயன்படுத்தி  கிரீட்டிங் கார்டுகளுக்கு டெக்ஸ்ட் போடுவது மற்றும் சாரிட்டிக்காக செக் போட்டுக் கொடுப்பது போன்ற வேலைகளைத் தாமாகவே முன்வந்து பொறுப்புடன் செய்தார்.

2007  இறுதியில் உடல் நலம் அதிகம் பாதிக்கப்பட்ட மஹிமா 2008 மார்ச்சில் உறக்கத்தில் அமைதியாக இறைவனடி சேர்ந்தார். அவரது மனைவி மறைவிற்குப் பின் அவர் நினைவாக மஹிமா தேவதாஸ் என்டோமென்ட் என்ற பெயரில் 2 தொண்டுநிதிகளை அரவிந்த் மற்றும் ஷங்கர நேத்ராலயா ஆகிய கண் மருத்துவமனைகளில்   உருவாக்கிய மனோ, தம் புத்தகங்கள், கிரீட்டிங் கார்டுகள் மூலம் கிடைக்கும் வருமானங்களைத் தொடர்ந்து கொடுத்த வண்ணம் இருந்தார். இந்த ஆகச் சிறந்த தொண்டின்மூலம் ஆயிரக்கணக்கான பார்வையற்றோர் பயன்பெற்று வருவதும், இப்போதைக்கு அதன் மதிப்பு ஒருகோடியைத் தாண்டி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தங்களது குழந்தை சுஜாவுக்கு அமைதியான, அன்பான, பாதுகாப்பான குடும்பச் சூழலை அமைத்துத் தரவேண்டும் என்பதில் இருவருமே உறுதியாக இருந்தனர். அதற்காகவென்றே அதிக நேரம் செலவிட்டனர். சுஜாவை வெளியே அழைத்துச் செல்லுதல், நீண்ட தூரம் நடந்து செல்லுதல், இறை பக்தியுடன் வளர்த்தல், நற்பண்புகளைப் புகுத்துதல், அவரது விருப்பங்களை நிறைவேற்றுதல், உதவும் மனப்பான்மையை வளர்த்தல் உள்ளிட்ட பல விஷயங்களில் ஆர்வம் காட்டிப் பார்த்துப் பார்த்து வளர்த்தனர்.

மஹிமா அறிவுறுத்தல்படி மனோ சுஜாவை இரண்டு மாதங்கள் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று , பல உலகியல் அனுபவங்களைப் புகுத்திப் பின்  தங்கள் தாய் நாட்டிற்குத் திரும்ப அழைத்துவந்தார்.  சுஜா ஆசைப்படி மைக்கேல் என்ற அமெரிக்கரைத் திருமணம் செய்துவைத்தனர். சுஜா பல தேசங்களுக்குப் பயணித்தாலும், மகள் தந்தைக்கு ஆற்றும் நன்றியாக அவரது இறுதிக்கால பொறுப்புகளை விரும்பி கவனித்துக்கொண்டார்.

மனோகர் வரைந்த ஓவியம்

தன் 83ஆவது வயதில் முழுப் பார்வையையும் இழந்த மனோ, தம் சாந்தோம் இல்லத்தில் மௌத்தார்கனுடனும், கர்நாடக இசையுடனும், மஹிமாவின் நினைவுகளுடனும் அமைதியாகக் கழித்தார். அவருக்கு மிகப்பெரிய நட்பு வட்டாரம் இருந்ததாகவும், அடிக்கடி அவரை வீட்டிற்கு சந்திக்க வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே  இருந்ததாகவும் சில தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன. இளம் விஞ்ஞானியர் மற்றும் கட்டிடக்கலை வல்லுனர்கள் பலர் அவரிடம் சென்று பயிற்சி பெற்றனர். அவர் கேட்காமலேயே நிறைய உதவிகள் அவரைத் தேடி வந்தன. கடைசித்துளி பார்வை இருக்கும்வரை ஓவியங்களை வரைந்த அந்த ஒப்பற்ற கலைஞர், 07.12.2022 அன்று தன் இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டார்.

பட்டாம்பூச்சியாய் பறந்து வந்தாய் என்

 பாதை எங்கும் பூக்கள் தூவிச் சென்றாய்.

உன்னோடு நான் வாழ்ந்த எண்ணங்கள் என்னோடு இருந்தால் போதும் அன்பே!

உன்  நினைவில் வாழ்கிறேன்

 உன் கனவில் மூழ்கினேன்.

 மஹிமா மஹிமா மஹிமா நீ என் தேவதை

 இந்த வரிகள் பத்மஸ்ரீ விருது பெற்ற பார்வையற்ற ஓவியர், அறிவியல் அறிஞர் மற்றும் எழுத்தாளரான காலம் சென்ற மனோகர் தேவதாஸ் அவர்களால் உடல் முழுவதும் பாதிக்கப்பட்டு பார்வை மட்டுமே மீதமிருந்து தம் உயர்வுக்கு வழிகாட்டிய அவரது மனைவி மஹிமா அவர்களுக்காக எழுதப்பட்டது என்பதை  எண்ணும்போதே வியப்பு மேலிடுகிறது அல்லவா?

 புற உலகின் சவால்களுக்குள்ளும் சங்கடங்களுக்குள்ளும் சஞ்சலம் இன்றி சஞ்சரித்து, காலத்தின் காட்சிப் படிமங்களில் துளியும் காயப்படாமல், அளவில்லாத அன்போடும் அசைக்க முடியாத நம்பிக்கையோடும் அசாத்திய துணிச்சலோடும் பயணித்து சென்றிருக்கிறார்கள் மஹிமா மனோ தம்பதியர்.

 இரண்டரை வயதில் வண்டலூர் மிருகக்காட்சி சாலையில் உள்ள ஒட்டகச்சிவிங்கியை அண்ணனின் பென்சிலைப் பிடுங்கி வரைந்ததிலிருந்து இயல்பாக ஆரம்பித்த கலைப்பயணம் படிப்படியாக வளர்ந்து, அவரது விருப்பம் வேதியலுக்கு மாறியும், கலைகளின் சுரங்கமாக விளங்கிய அன்பு  மனைவியால் புத்துயிர் பெற்று, பல அரிய பரிமாணங்களைக் கடந்து, மதுரை சென்னை ஓவியங்களில் தொடர்ந்து, பல இதயங்களை வருடும் இதமான தென்றல் காற்றாக உலகெங்கும் பரவியபடித் தவழ்ந்திருக்கிறது.

வாழ்நாளின் பெரும்பகுதியை சக்கர நாற்காலியில் கழித்தபோதும், வாழ்வின் கோர முகங்களைப் புரிந்துகொண்டதோடு, வாழ்க்கைத் துணையின் வாழ்க்கை முழுவதும் கலைத்திறமை மற்றும் கொடையுள்ளத்தை வளர்க்கும் நல்ல துணையாக வாழ்ந்து இருக்கிறார் மஹிமா. இருவரும் நுண்கலையாகிய ஓவியத்திற்கு மட்டுமல்ல, இல்லறத்திற்கு ஆதாரப்புள்ளியாகிய  அன்பிலும் சிறந்து விளங்கி, பல  தலைமுறைகளுக்கு உயர்ந்த  உதாரணமாக வாழ்ந்திருக்கிறார்கள். அவர் வரைந்த கரடி பொம்மையின் மீதமர்ந்த பட்டாம்பூச்சி ஓவியம் போல அவர்களுடைய ஓவியமும் காதலும் காலத்துக்கும் நிலைத்திருக்கும்.

மதுரை, சென்னையில் மனோகரின் ஓவியங்களில் படிந்துள்ள மாசில்லா ஓவியக் காற்றை கலா ரசனையுள்ள இதயங்கள் காலம் கடந்தும் சுவாசித்தபடி இருக்கட்டும்.

தொடர்புக்கு: celinmaryx@gmail.com

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *