
பார்வையற்றோரின் அறிவுக்கண் திறந்த ஞானத்தந்தை லூயி பிரெயில் அவர்களின் பிறந்தநாள் ஜனவரி 4 அன்று பார்வையற்றோரின் சிறப்புப்பள்ளிகள், அமைப்புகள் மற்றும் சங்கங்களில் போட்டிகள், பரிசுகள் மற்றும் கருத்துப் பகிரல்களோடு வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு லூயி பிரெயில் விழாவை பிரெயில் சிறகை அசைத்து அறிவு வானில் பறக்கச் செய்த என் தாய்வீடாகிய பரவைப் பள்ளி என்று பரவலாக அறியப்படும் செயிண்ட் ஜோசப்ஸ் பார்வையற்றோர் மேல்நிலைப்பள்ளியில், மதிப்பிற்குரிய அருட்சகோதரிகள், ஆசிரியர்கள் மற்றும் பாசத்திற்குரிய அக்கா, அண்ணன், தம்பி தங்கைகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாட முடிந்தது. நடந்தது என்ன? இதோ, விவரிக்கிறேன்.
பார்வையற்றோரைப் பொருத்தவரை, நமக்கு அகரம் முதல் அகிலம் வரை அனைத்தையும் அறிமுகம் செய்கின்ற சிறப்புப்பள்ளிகள் தாய்வீடுகள் போன்றவை. நாம் படித்து பட்டம் பெற்று அரசுப் பணி வாய்ப்பைப் பெற்ற பிறகு, நம்மை வார்த்தெடுத்த தாய்வீட்டை நினைக்கும்போதும், முன்நாள் இன்னாள் மாணவர்களுடன் உறவுகளாக நட்பு பாராட்டும்போதும், பள்ளி நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போதும் நாம் அடையும் ஆனந்தத்தை வார்த்தைகளில் விளக்கிவிட முடியாதுதான்.
எனக்கு இயல்பாகவே பிரெயில்மீது அதிக ஆர்வம் உண்டு என்பது என்னுடன் பழகிய பலருக்கும் பரிட்சயமான விடயம்.
நான் இப்போதைக்கு ஸ்ரீ. ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா வெளியிட்ட Wren and Martin என்ற பிரெயில் வடிவ ஆங்கில இலக்கணப் புத்தகத்தை, எனக்கு இலக்கணத்தின்மீது ஈர்ப்பை ஏற்படுத்திய சிஸ்டர் அனிட்டா அவர்களையும், முதல் வகுப்பில் பிரெயில் முறையில் எழுதப் படிக்கப் பயிற்றுவித்த ஜாக்குலின் டீச்சர் அவர்களையும் பெருமிதத்தோடு நினைவுகூர்ந்தபடி படித்துக்கொண்டிருக்கிறேன்.
Sweet surprise:
எனக்கு பிரெயில் உலகை அறிமுகம் செய்த பள்ளியில், தற்போது பயிலும் மாணவர்களின் பிரெயில் அறிவை மேம்படுத்தும் என்னுடைய நீண்டகால ஆழ்மன எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் வாய்ப்பு தற்போதுதான் கிட்டியிருக்கிறது. ஆம்! பள்ளியில் பொன்விழாவிற்கென்று உருவாக்கப்பட்ட பழைய மாணவர்கள் வாட்ஸ் அப் குழுவில், லூயி பிரெயில் விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு பிரெயில் எழுதுதல் மற்றும் வாசித்தல் போட்டிகளை நடத்தலாம் என்ற கருத்தை நான் முன்மொழிய, பல வழிமொழிவுகளுக்குப் பின், பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் தாளாளரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றது. மாணவர்களுக்கான போட்டிகள் ஏற்கனவே நடத்தப்பட்டுவிட்டதாகவும், 21 அன்று பள்ளிக்கு வந்து பரிசுகள் வழங்கும் பொறுப்பை முன்னாள் மாணவர்களுக்கு கொடுக்கப் போவதாகவும், நிர்வாக தரப்பிடமிருந்து கிடைத்த தகவலை எண்ணி மகிழ்ச்சி அடைய முடியாமல் செய்து விட்டது அப்போதைய குடும்பச் சூழல்.
அதாவது, பள்ளிக்கு எப்படிச் செல்வது? பேருந்திலா அல்லது காரிலா? புதிய காரில் நம்பர் பிலேட் கூட ஒட்டப்படாத நிலையில் பாதுகாப்பாகச் சென்று திரும்ப முடியுமா? காரை முறையாக இயக்குவதற்கு சரியான ஓட்டுநர்கள் கிடைப்பார்களா? போன்ற குழப்பங்கள் தொடர்ந்த வண்ணம் இருந்ததால்,பள்ளி விழாவில் கலந்து கொள்ளும் பழைய மாணவர்கள் பட்டியலில் பெயர் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும், தலைமை ஆசிரியருடனான அலைபேசி உரையாடலில், என் பெயருக்கும் கருத்துக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டும், கலந்துகொள்ள முடியாமல் போய்விடுமோ என்ற கவலையும், “கலந்துகொள்ள முடியாதவள் எதற்கு அவசரப்பட்டு குழுவில் வாயை விட்டுகிட்டு?” என்ற சீனியர் சொன்ன வார்த்தை தந்த அழுத்தமும் இருந்தபோதிலும், உறவுகள் காயப்படக்கூடாது என்ற காரணத்துக்காக அமைதியாக வளைந்து கொடுப்பதென்று முடிவெடுத்தேன். கடைசி நிமிடத்திலாவது மாற்றம் நிகழ்ந்துவிடாதா என்ற ஏக்கத்தை சுமந்தபடி காத்திருன்தேன். என் எதிர்பார்ப்பை நமது வளனார் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை வீண் போகவில்லை.
21.01.2023, காலை 4 மணி. என்னை எழுப்பிய என் கணவர், “குடும்பத்தோடு காரில் மதுரைக்குப் போரோம்; பாப்பாவைக் கிளப்பிட்டு நீயும் ரெடி ஆகு. அம்மாவையும் நண்பரையும் அரவிந்த் கண் மருத்துவமனையில் இறக்கிவிட்டு, நீ,நான், பாப்பா பெநாசிர் (அவரது பார்வையற்ற சகோதரி) எல்லாரும் உங்க பள்ளிக்குப் போவோம். driver நேற்றே ஏற்பாடு செய்துவிட்டேன்.” என்றார். “இவ்வளவு பெரிய surprise கொடுப்பீங்கனு நினைக்கவே இல்ல” என்றபடி விரைவாகத் தயாராகிவிட்டோம். 7 மணிக்கு கார் வீட்டிலிருந்து கிளம்பியது.
மதுரை ஆனந்தபவனில் காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு, சம்மந்தப்பட்டவர்களை மருத்துவமனையில் இறக்கிவிட்டு, காலை 10 மணிக்கு பள்ளி வளாகத்தை அடைந்தோம்.
பள்ளிக்குள் நுழைந்ததும் புதிய சொர்க்கபூமிக்குள் நுழைந்தது போன்ற புத்துணர்ச்சியும்,புதிய உற்சாகமும் ஏற்பட்டது. சிறுவயதில் நண்பர்களோடு விளையாடிய பள்ளி மைதானம், கட்டிடங்களும் வகுப்பறைகளும் நூலகமும் கோவிலும் நிகழ்வுகள் நடைபெறும் ஒவ்வொரு இடமும் பழைய நினைவுகளுடன் கூடிய பல கதைகளை மௌனமாகப் பரிமாறிக்கொண்டிருந்தன. பள்ளிச்சூழல் எங்கள் குடும்பத்தாருக்கு மிகவும் பிடித்திருந்தது. அன்றைய நிகழ்விற்கு செல்வராஜ் அண்ணன், கார்மேகம் அண்ணன்,ரங்கநாதன் அண்ணன், வாசுகி அக்கா ஆகியோர் வருவதாக உறுதி அளித்திருந்தனர். அவர்கள் வரும்வரை, பாப்பாவை விளையாட்டு மைதானத்திலிருந்த சீசா, ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்களில் விளையாடவிட்டு, பழைய நினைவுகளைப் பகிர்ந்தபடி மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்தோம்.
சிறிது நேரம் கழித்து, தலைமை ஆசிரியர் சிஸ்டர் பாக்கியம் அவர்களோடு உரையாடியபடி நிகழ்வு நடைபெறும் மேடைக்குச் சென்றோம். பழைய மாணவர்கள் ஒவ்வொருவராக வந்தபடி இருக்க, அங்கு கான்வென்ட்டில் இருந்த அனிட்டா சிஸ்டரைக் காணச் சென்றோம். பழைய நினைவுகளைப் பகிர்ந்ததில் பரபரப்பாக நேரம் கழிந்தது. அனைவரும் வந்து நிகழ்வைத் தொடங்க மணி 12ஐத் தாண்டிவிட்டது.
“அன்பு மலர்களே!”:

முதலாவதாக இறைவணக்கம். கார்மேகம் அண்ணன் ஆசைப்படி, ‘50 ஆண்டுகள் எம்மைக் காத்திட்ட இறைவா உமக்கு நன்றி’ என்ற பாடல் பாடப்பட்டது. அடுத்ததாக, தலைமை ஆசிரியர் எங்களைப் பற்றியும், நிகழ்வைப் பற்றியும் சிறிய அறிமுகம் தந்தார். அடுத்து, எங்கள் ஐவருக்கும் பேசும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
முதலில் பேசிய கார்மேகம் அண்ணன், அனைவரும் ரசிக்கும் வகையில், தன்னம்பிக்கை வரிகளை அறிவுரையாகப் பகர்ந்து சென்றார். அவரது பழைய நினைவுகளும், நேர மேலாண்மை குறித்த அவரது கருத்துகளும் நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டியவை.
இரண்டாவதாகப் பேசும் வாய்ப்பைப் பெற்ற நான், எப்போதோ நான் கிறுக்கிய அதிசய ஆறு புள்ளி கவிதையோடு, பிரெயிலின் அவசியத்தை என் அனுபவங்களோடு பகிர்ந்துகொண்டேன். கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் பிரெயிலுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக தலைமை ஆசிரியர் சொல்லக் கேட்டபோது, வந்த நோக்கம் நிறைவேறியது என்ற நிறைவு ஏற்பட்டது.
மூன்றாவதாக வந்த பேராசிரியர் ரங்கநாதன் அண்ணன், கற்க கசடற திருக்குறள் போல, துணைக்கால் தேடாமல் சொந்தக் காலில் முன்னேறி நிற்கச் சொன்னார். நான்காவதாக செல்வராஜ் அண்ணன் பேசினார். அவர் அதிகம் அதுவும் பொதுவில் பேசி அன்றுதான் கேட்டேன். அவரது உரையில், வேலையில் சேர்வதற்கு முன் இலவசமாகத் திருக்குறள் பிரெயில் புத்தகம் கிடைத்ததாகவும், மொத்தமுள்ள 1330 குறள்களையும் மனப்பாடம் செய்து, வேலையில் சேர்ந்த பின் மாணவர்களுக்கு பயிற்றுவிக்க பயன்படுத்திக்கொண்டதாகவும் கூறியது மிகவும் பிரம்மிக்கும் வகையில் இருந்தது. இன்றளவும் பிரெயில் புத்தகங்களைப் பயன்படுத்தி வருவதாக கூறிய அவர், மாணவர்கள் பணிவுடனும், நல்ல பழக்கவழக்கங்களுடனும் வளர வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.


அடுத்தது வாசுகி அக்கா. விரல்கள் பத்தை மூலதனமாக்கி, எழுத்தை முறையாகக் கற்று வாழ்வில் உயர வாழ்த்தினார்.

இறுதியாக கார்மேகம் அண்ணன் ‘அன்பு மலர்களே!’ பாடலைப் பாடியதும் பாடலுக்கு இசைந்த குழந்தைகளின் கைதட்டலும் இடையில் ஏதோ சில வரிகளின்போது எட்டிப் பார்த்த தலைமை ஆசிரியரின் கண்ணீரும் நிச்சயம் எழுதப்பட வேண்டியவை. ஒவ்வொரு கருத்துப் பகிரலின்போதும் வெளிப்பட்ட குழந்தைகளின் கரகோஷங்கள் அவர்கள் இந்த நிகழ்வை எந்த அளவிற்கு உள்வாங்கி இருக்கிறார்கள் என்பதை எங்களுக்கு புரியவைப்பதாக இருந்தது.
எங்களுக்கு இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கான வாய்ப்பைப் பெற்றுத் தந்த எங்களது பிரதிநிதி சீனியர் திரு. விஜயகுமார் அவர்கள் வராதது எல்லோருக்கும் வருத்தத்தைத் தந்ததும் மறுப்பதற்கில்லை. அன்று அவருடைய காம்பயரிங் இல்லாதது அறுசுவை உணவில் ஏதோ ஒன்றை குறைத்துக் குழந்தைகளுக்குக் கொடுத்ததாகவே தோன்றியது.

அனைவருக்கும் நன்றி தெரிவித்த தலைமை ஆசிரியர், ஒவ்வோர் ஆண்டும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர வேண்டும் என்றும், பழைய மாணவர்கள் சார்பாக என்ன விரும்பினாலும் நடத்திக்கொள்ளலாம் என்றும், எப்பொழுதும் பள்ளியின் வாசல் எங்களுக்காகத் திறந்திருக்கும் என்றும் கூறினார். நாங்களும் தொடர்ந்து எங்களது பங்களிப்பைத் தருவதாக உறுதி அளித்தோம்.
பொறுப்பு நிறைவேறியது:




அடுத்து பரிசுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு வகுப்பிற்கும் 3 பரிசுகள் வீதம் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பழைய மாணவரும் இரண்டிரண்டு வகுப்புகளுக்குப் பரிசுகளை வழங்கினோம். அன்று வந்த பழைய மாணவர்களில் நான் ஜூனியர் என்பதால், சிறு வகுப்புகளுக்குப் பரிசு வழங்கும் வாய்ப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது. பாப்பாவும் என்னோடு சேர்ந்துகொண்டாள். அவள் வாழ்த்துச் சொல்லி பரிசளித்ததும், சிறுமியர் நன்றி சொல்லி பரிசுகளைப் பெற்றுக்கொண்டதும் புதிய அனுபவமாக இருந்தது. இறுதியில் மாணவர்கள் சார்பில் நவிழப்பட்ட நன்றி உரையில் எங்களுக்கு மட்டுமல்ல, எங்கள் வாட்ஸப் குழுவிற்கும் இடமிருந்தது வியப்பாக இருந்தது.
அன்றைய நாள் நிகழ்வுகளோடு நிறைவேற்றப்பட வேண்டிய முக்கியமான ஒரு பொறுப்பும் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதாவது எங்கள் பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக துணி துவைப்பவராகப் பணியாற்றி வரும் சூசை அண்ணனுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைப் பரிசாகத் தருவது என்ற கருத்து வாட்ஸ் ஆப் குழுவில் முன்வைக்கப்பட்டு, எப்பொழுது, எவ்வளவு, எப்படி என்பதெல்லாம் தீர்மானிக்கப்பட்டு ,அதற்கான அனுமதி தலைமை ஆசிரியரிடம் கேட்கப்பட்டது. எங்களது விருப்பத்தைப் பாராட்டிய பாக்கியம் சிஸ்டர், அண்ணனுக்கு நிறைய கடன்கள் இருப்பதால் கையில் கொடுத்தால் செலவாகிவிடும் என்றும், அவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு ஆண்டும் இன்சூரன்ஸாக பள்ளி நிர்வாகம் டொனேஷன் பெற்று செலுத்துகிறது என்றும், இந்த ஆண்டுக்கான இன்சூரன்ஸாக எங்களிடம் இருந்து பெரும் தொகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் கூறினார். அவரது கருத்தைக் கேட்டு வியந்த விஜயகுமார், அதே மலர்ச்சியோடு அந்தத் தகவலை எங்களோடு பகிர, ஒரு மனதாக எல்லாருடைய சம்மதமும் கிடைக்கப்பெற்று, அந்தப் பொறுப்பும் நிறைவேற்றப்பட்டது.
வழக்கம்போல அறுசுவை உணவை முடித்துவிட்டு, அருட்சகோதரிகளுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, பிரிய மனமில்லாமல், வீட்டிற்குத் திரும்பினோம்.
ஆலியாவின் பயம்:
மதிய உணவை முடித்த பிறகு ரங்கநாதன் அண்ணன் தவிர மற்றவர்களை சுமந்தபடி எங்கள் கார் வளாகத்தில் இருந்து கிளம்பியது. அவரவர் விரும்பும் இடங்களில் அவர்களை இறக்கிவிட்டு, மருத்துவமனையில் விட்டவர்களை பிக்கப் செய்தபடி புதுக்கோட்டை நோக்கி கார் பயணிக்கத் தொடங்கியது. பயணத்தின்போது அன்றைய நிகழ்வு குறித்த அனுபவங்களைப் பாப்பா மற்றும் பெனாசிரிடம் கேட்டேன். பாப்பாவுக்கு பள்ளி பிடித்ததாகவும், புதிய நண்பர்கள் கிடைத்ததாகவும், பரிசு வழங்கியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், சிலருடைய கண்களைப் பார்த்தால் பயமாக இருப்பதாகவும் சொல்லக் கேட்டு, சில அறிவுரைகளை வழங்கினேன். அடுத்தது பெனாசிருடைய கருத்துகள் அவள் மொழியிலேயே.
“அந்த பள்ளி வளாகம் நான் படித்த திருச்சி பள்ளியை நினைவுபடுத்தியது. அருட்சகோதரிகளின் கனிவு பிரம்மிக்க வைத்தது.
போட்டிகள் நிறைந்த உலகில் போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்புக்கு 6 முதல் 12 வகுப்புவரையிலான பாடப் புத்தகங்களைப் படிக்க வேண்டிய அவசியம் இருப்பதால், குழந்தைகள் ஒவ்வொரு வகுப்பிலும் கிடைக்கும் பிரெயில் புத்தகங்களைத் தேர்வில் எழுதும் அளவுக்குத் தெளிவாகப் படித்துக்கொள்ள வேண்டும். நாம் விரும்பும் அரசுப் பணியில் சேர்வதற்கான ஏற்பாடுகளை இப்போதிருந்தே செய்துகொள்ள வேண்டும். எட்டாம் வகுப்பை முடித்துவிட்டு திருச்சி அரசுப் பள்ளிக்கு பயிலவரும் பரவை சிறப்புப்பள்ளி மாணவியர், சிறந்த பிரெயில் அறிவு பெற்றவர்களாக இருப்பார்கள். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும் பிரெயில் வகுப்புகளில் பறவைப் பள்ளி சகோதரிகள் ஆசிரியர்களாக இருப்பதோடு, சிடுசிடுப்பின்றி பொறுமையாகக் கற்றுக்கொடுப்பார்கள். அவர்களிடமிருந்துதான் நான் பிரெயில் கற்றுக்கொண்டேன். ஓரளவு பார்வை உள்ள நண்பர்களிடம் கூட பிரெயிலைத் திறம்படப் பயன்படுத்தும் அறிவு இருப்பதைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். என்றாள்.
“ரேட்டிங் போடுறது என்னோட பொறு்ப்பு”:
4:30 மணியளவில் வீடு வந்து சேர்ந்தோம். வாட்ஸ் ஆப்பில் தகவல் பகிர முற்படுகையில் ஏற்கனவே கார்மேகம் அண்ணன் அன்றைய நிகழ்வுகளை மகிழ்ச்சியோடு விவரித்து இருந்தது புரிந்தது. விடுபட்ட தகவல்களை பகிர்ந்த பிறகு கலந்துகொள்ள முடியாத மற்ற சகோதர சகோதரியரின் வருத்தம் தோய்ந்த பதிவுகளைக் கேட்டபடி சில நிமிடங்கள் கரைந்தன. வாட்ஸ் ஆப்பில் ஆரம்பித்தது வாட்ஸ் ஆப்பிலேயே முற்று பெற்றது.
இரவில் ஆலியாவுக்கும் எனக்கும் நடந்த உரையாடலோடு இப்பகிர்வை முடித்துவிடுகிறேன்.
அன்று பாடப்பட்ட இறைவணக்கத்தின் முதல் வரியை கேட்டு மனப்பாடம் செய்து பாடிக்காட்டிய பின் வழக்கம் போல கேள்விக்கணைகளைத் தொடுக்க தொடங்கினாள் பாப்பா.
“*இந்தப் பாடல் எந்தக் கடவுளுக்காகப் பாடப்பட்டது?
*இந்த விழா ஏன் கொண்டாடப்படுகிறது?
*கண்டுபிடித்தவர் பெயரே ஏன் எழுத்துக்கு வைக்கப்பட்டது?
*ஆரம்பகால பிரெயில் ஸ்லேட் எப்படி இருக்கும்?
*திருக்குறள் முழுவதும் தெரியும் என்று சொன்னவர் தமிழாசிரியரா?” போன்ற கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்த பதில்களைக் கூறினேன்.
“அடுத்த ஆண்டு அவர்கள் அழைப்பதற்கு முன்பாகவே நாம் பள்ளிக்குச் சென்று போட்டிகளை கண்டக்ட் செய்ய வேண்டும். நீதான் ஜட்ஜ். ரேட்டிங் போடறது என்னுடைய பொறுப்பு”. நிச்சயமாக என்று உறுதியளித்த பிறகும் அவளுடைய கேள்விகள் நின்றபாடில்லை.
“விளையாட்டுப் போட்டிகள் எப்படி நடத்தப்படும்? வெற்றியாளர்களை எப்படிக் கண்டுபிடிப்பார்கள்? நான் எந்த வகையில் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்?” போன்ற கேள்விகளுக்கு பார்வையற்றோர் சமூகம் குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்த முயன்றேன்.
பிரெயில் மூலம் அறிவைப் பெருக்குவதற்காக விரிந்த சிறகுகள் தலைமுறைகள் கடந்து, பார்வையற்றோர் பார்வையுள்ளோர் வேறுபாடின்றி, காலங்கள்தோறும் பறந்த வண்ணம் இருக்கட்டும்!
தொடர்புக்கு: celinmaryx@gmail.com
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
