Categories
சவால்முரசு சிறப்புப் பள்ளிகள்

நன்றி ஜூனியர் விகடன் 07.12.2022: பரிதவிக்கும் பார்வையற்ற அரசுப் பள்ளி மாணவர்கள்… நடவடிக்கை எடுப்பாரா முதலமைச்சர்..?

தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து பார்வையற்றோர் பள்ளிகளிலும் மொத்தம் 109 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் வெறும் 26 ஆசிரியர்கள் மட்டுமே பணியிலிருக்கிறார்கள்”

ஆசிரியர் பற்றாக்குறை… அடிப்படை வசதியில்லை!

“தமிழ்நாட்டிலிருக்கும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சரியான முறையில் கல்வி கற்கும் சூழலை உறுதிப்படுத்த அரசு தவறிவிட்டது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவருகிறது” என்று விம்முகிறார்கள் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய ‘ஜனவரி 4 மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க’த்தின் பொதுச் செயலாளர் மணிகண்ணன், “பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசுப் பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்கீழ் செயல்பட்டுவருகின்றன. தொடக்கப்பள்ளிகள் நான்கு, நடுநிலைப்பள்ளிகள் மூன்று, மேல் நிலைப்பள்ளிகள் மூன்று எனத் தமிழகம் முழுக்க மொத்தம் பத்து பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன. இவற்றில் பார்வையற்ற, பார்வைக் குறைபாடுடைய 700 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். தஞ்சாவூரிலுள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்று மட்டுமே இருபாலரும் கல்வி பயிலக்கூடியது. இங்கு, 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 135 பார்வையற்ற மாணவ, மாணவிகள் படிக்கும் நிலையில், இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 19 ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால், ஐந்து ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இதேபோல், 25 ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டிய திருச்சி மேல்நிலைப்பள்ளியில் ஏழு ஆசியர்களே உள்ளனர். தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து பார்வையற்றோர் பள்ளிகளிலும் மொத்தம் 109 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் வெறும் 26 ஆசிரியர்கள் மட்டுமே பணியிலிருக்கிறார்கள்” என்றார் வேதனையுடன்.

தொடர்ந்து, “பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு முறையான கல்வி அவசியமானது, எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடியது. ஆனால், முக்கியப் பாடமான அறிவியல் பயிற்றுவிக்கும் நான்கு அறிவியல் ஆசிரியர்களுக்கான இடங்களும் காலியாகவே இருக்கின்றன. கணித ஆசிரியர்கள் இரண்டு பேர் மட்டுமே இருக்கின்றனர். உரிய பணியிடங்களை நிரப்பாமல் பல ஆண்டுகளாக ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவிவருகிறது. இதனால் அனைத்து வகுப்பு மாணவர்களையும் ஒரே இடத்தில் அமர வைத்து பாடம் எடுக்கக்கூடிய அவலநிலை தொடர்கிறது. பார்வையற்ற மாணவர்களின் அடிப்படைக் கல்வியே பிரெய்லி, கணக்கு பாடங்களைக் கற்பதுதான். அவற்றை முறையாகக் கற்றுத் தர முடியாத சூழ்நிலையால் அவர்களின் எதிர்காலமே படுகுழியில் தள்ளப்பட்டிருக்கிறது” என்றார்.

இது குறித்து மாற்றுத்திறன் பள்ளிகள் நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்தோம். “ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாதது வேதனையென்றால், பல பள்ளிகளில் அடிப்படை வசதிகளும் இல்லை. கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதற்கு அதிகாரிகளுக்கும் மனமில்லை. சென்னை பூந்தமல்லியில் மிகவும் பழுதடைந்த பழைய கட்டடத்தில்தான் பார்வையற்றோர் பள்ளி செயல்படுகிறது. பள்ளி வளாகத்தில் புதர்மண்டிக் கிடப்பதால் வகுப்பறைக்குள் பாம்பு, பூச்சிகள் அடிக்கடி புகுந்துவிடுகின்றன. மதுரை, சிவகங்கை உள்ளிட்ட ஊர்களில் இயங்கும் பார்வையற்றோர் பள்ளிகளிலும் இதே நிலைதான். விடுதியில் தங்கி படிக்கக்கூடிய மாணவர்கள் தனியே கழிப்பறைக்குச் செல்ல முடியாது. அவர்களுக்கான ஆயாக்கள் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. சோப்பு, பேஸ்ட், பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்காக மாதம் தலா ரூபாய் 50 வழங்கப்பட்டுவருவது போதுமானதாக இல்லை. பிரெய்லி உபகரணங்கள் வழங்கப்படாததால் மாணவர்கள் சரியான கல்வியைப் பெற முடியவில்லை. சொல்லப் போனால் பார்வையற்ற மாணவர்களைப் பாதுகாக்க அரசு தவறிவிட்டது” என்றனர் ஆதங்கத்துடன்.

இது குறித்து ஆசிரியர்கள் சிலரிடம் பேசினோம். “பார்வையற்றோருக்கான கற்பித்தல் பட்டயப் பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே அந்த மாணவர்களுக்குப் பாடம் எடுக்க முடியும். ஆனால், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை இந்தப் பணிகளில் அமர்த்த அரசு முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டயப் பயிற்சி பெறவில்லை. பட்டயப் பயிற்சி பெற்றவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இந்தச் சிக்கலை சரியான முறையில் அரசு பரிசீலனை செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து தற்காலிக விலக்கு பெற்று, சிறப்புக் குழந்தைகளுக்கான பட்டயப் பயிற்சி முடித்தவர்களைப் பணியில் அமர்த்த முன்வர வேண்டும். தற்போது சென்னையில் செயல்பட்டு வந்த பட்டயப் பயிற்சி நிறுவனம் மூடப்பட்டிருக்கிறது. அதை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும்” என்றனர்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாரன்ஸிடம் பேசினோம். “காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களின் விவரங்கள் கேட்கப்பட்டிருக்கிறது. புதிய கட்டடங்கள் கட்டுவதற்கும், பழுதடைந்த கட்டங்களைச் சீரமைப்பதற்கும் அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. விரைவில் அதற்கான பணிகளைத் தொடங்கவிருக்கிறோம். பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசுப் பள்ளிகளின் குறைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை நேரடியாக கவனித்துவரும் முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையற்ற மாணவர்களின் கல்விச் சிக்கலைத் தீர்ப்பாரா?


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.