கைகளால் பேசிய காலத்தின் நினைவுகள்

கைகளால் பேசிய காலத்தின் நினைவுகள் 

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

கு. முருகானந்தன்

சைகை மொழியில் பேசிக்கொள்ளும் இரண்டு பெண்கள்
சைகை மொழியில் பேசிக்கொள்ளும் இரண்டு பெண்கள்

சென்னை நேத்ரோதயா விடுதியில் தங்கி இளங்கலை படித்துக்கொண்டிருந்தேன். 2007-ஆம் ஆண்டில் மஹேஷ் என்பவர் அங்கு சிலகாலம் தங்கி தட்டச்சுப் பயிற்சிக்குச் சென்றுகொண்டிருந்தார். அவர் காது கேளாதவர், சைகை மொழிப் பயன்பாட்டாளர். அவரும் நானும் மிக இயல்பாக பல்வேறு விடயங்களைப் பேசுவோம், சிரிப்போம், கடைக்குச் செல்வோம். அவர் சைகையில் சொல்வதை எனக்குப் புரிந்தவரை பேச்சு மொழியிலும், பேச்சு மொழியில் பிறர் அவருக்குச் சொல்லும் செய்திகளை என்னால் முடிந்தவரை சைகை மொழியிலும் நான் பல நாட்கள் சொல்லியிருக்கிறேன். உடனிருந்த பார்வையற்றோர் பலரும் நாங்கள் சைகை மொழியில் பேசிக் கொள்வதை மிகவும் வியப்போடு ரசித்தார்கள். பத்தாண்டுகளாக நான் பழகிக் கற்றிருந்த மொழி மறக்கவில்லை என்ற பெருமிதம் எனக்கும் ஏற்பட்டது. பொதுவாக சைகை என்பது பார்வைக்கான மொழி என்றே கருதப்படுகிறது. அது உண்மையல்ல என்று துணிந்து சொல்லத் தேவையான அனுபவம் எனக்கு வாய்த்துள்ளது. இதோ அந்த அனுபவத்தைச் சுருங்கச் சொள்கிறேன், கேளுங்கள்!

கரூர் அன்பாலயம் கண்மணி இல்லம் என்ற பெயரில் விடுதியாகச் செயல்பட்டபோது நான் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தேன். அப்போது பார்வையற்றோர் மட்டுமே இருந்தோம். பின்னர் சி‌எஸ்‌ஐ பள்ளியின் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் செவித்திறன் குறையுடைய மாணவ மாணவிகள் முதன்முதலாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். அவர்களுக்கு படிப்படியாக எங்களது விடுதியிலும் இடம் வழங்கப்பட்டது. நான் பனிரெண்டாம் வகுப்பு முடிப்பதற்குள் அன்பாலயம் விடுதியிலும் சிறப்புப் பள்ளியிலும் செவித்திறன் குறையுடையோர் பெரும்பான்மையாகவும், பார்வையற்றோர் சொற்ப அளவிலும் என்று எண்ணிக்கை விகிதம் மாறிப்போனது. செவித்திறன் குறையுடையோர் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து பார்வையற்ற மானவர்களான எங்களுக்கு ஒருவித அச்சமும் கவலையும் இருந்தது உண்மைதான். பெரும்பாலும் பார்வையற்றோரும் காதுகேளாதோரும் அதிகம் ஒட்டாமல் அவரவர் உலகங்களில் தனித்தே இருந்தோம். அதற்கான முக்கியமான காரணம் காது கேளாதோரின் சைகை மொழி பார்வையற்றோரான எங்களுக்கு புலப்படாமல் இருந்ததே. நாம் பேசும் பேச்சு மொழி அவர்களுக்கும் புலப்படவில்லை. இந்த இருவகை இடைவெளிகளுக்கும் காரணம் அவர்களின் காது கேளாமை மற்றும் வாய் பேச இயலாமை மட்டுமே என்றுதான் அப்போது நான் உற்பட அனைவரும் நினைத்தோம். அவர்களின் சைகை மொழியை நாங்கள் பார்க்கக் கூடவில்லை என்பதுபற்றி நாங்கள் சிந்திக்கவில்லை. பெரும்பான்மை மக்கள் பயன்படுத்தும் பேச்சு மொழி எங்களுக்குக் கைகூடி இருந்த காரணத்தால் அவர்களை வேற்றுக்கிரகவாசிகள் போலத்தான் கருதி வந்தோம்.

பார்வையற்றோரான எங்களுக்கும் காது கேளாதொருக்கும் ஏதாவது பிரச்சனை என்றாலோ அல்லது அவசியமாக ஏதாவது சொல்லவேண்டும் என்றாலோ பார்வையுள்ள எங்களது ஆசிரியர்கள், விடுதி மேலாளர் குணசேகர் அண்ணன் அல்லது எங்களுக்கு உணவு சமைத்துப் பராமரித்த பத்மா அக்கா இவர்களில் யாராவது அவர்கள் சைகையில் சொல்வதைப் பார்த்து எங்களிடம் சொல்வார்கள், நாங்கள் சொல்வதை அவர்களிடம் சொல்வார்கள்.

காலப்போக்கில் தேவை கருதி எங்களுக்குள் நேரடியாகவே சைகை மொழியில் உரையாடல்கள் நடக்கத் தொடங்கின. அந்த உரையாடல்கள் மெல்ல அதிகரித்து பள்ளிப் பருவத்து தோழமையாகவும் முகிழ்த்தன. எங்களுக்குள் தேவையைத் தாண்டி பல விஷயங்கள் குறித்து பேச்சு நடக்கும், சண்டை வரும், விளையாட்டுகள் இருக்கும், வாஞ்சையும் பெருகும்!

பள்ளியில் சைகைமொழியில் பேசிக்கொள்ளும் காதுகேளாத மாணவர்கள்
பள்ளியில் சைகைமொழியில் பேசிக்கொள்ளும் காதுகேளாத மாணவர்கள்

சைகை மொழி என்பது பார்வைக்கு மட்டுமே புலப்படும் என்பதே பொதுவான கருத்து. ஆனால் என்னைப் போன்ற பல பார்வையற்றோருக்கு சைகை மொழியை தொடுதல்கள் மூலம் கைக்கொள்ளும் வாய்ப்பு தானாகவே அமைந்தது. அதனைச் சாத்தியப் படுத்தியவர்கள் சைகை மொழிப் பயனாளர்களான எனது காது கேளாத நண்பர்கள்தான்!

பார்வையற்றவர்களிடம் ஏதாவது சொல்லவேண்டுமென்றால் எங்களது கையைப் பிடித்து அவர்களது கைச் சைகையைக் காட்டியோ, மார்பு, வயிறு, முகப் பாகங்கள் முதலான அவர்களின் உடல் பாகங்களைத் தொட்டுக் காட்டியோ, அல்லது எங்களது உடல் அங்கங்களைத் தொட்டுக் காட்டியோ எங்களுக்கு அவர்களின் சைகை மொழிக் குறியீடுகள் அல்லது சொற்களை புரியவைப்பார்கள். நாங்கள் அவர்கள் தொட்டுக்காட்டிய சைகைகளின் மூலம் குறியீடுகளைக் கற்றுக்கொண்டு அவற்றைப் பயன்படுத்துவோம், அவர்கள் கண்களால் பார்த்துப் புரிந்துகொள்வார்கள். அவ்வாறு முதன்முதலாக நான் பயன்படுத்திய சைகை மொழிக் குறியீடுகள் ‘என்ன/எப்படி?’ ‘சூப்பர்’, ‘மோசம்’ ஆகியவைதான்!உதாரணமாக , ஒரு சட்டையைக் காட்டி ‘இதைப் போடலாமா? இல்லை அழுக்காக இருக்கிறதா?’ என்று கேற்பதற்கு, கைவிரல்களை மடக்கிக்கொண்டு தோளுக்கு நேராக வைத்து செங்குத்தாக மேலும் கீழும் ஆட்டுவேன். அந்தக் குறியீட்டை ‘என்ன / எப்படி’ என்று மொழிபெயர்க்கலாம். அதற்கு காதுகேளாத நண்பர்கள் என் கையில் தொட்டுப்பார்க்கும் விதமாக நெற்றி உயரத்திற்கு கையை வைத்துக்கொண்டு, கட்டை விரல் முனையையும் ஆட்காட்டி விரல் முனையையும் ஒன்றாகச் சேர்த்து, மற்ற மூன்று விரல்களையும் நீட்டி மேலும் கீழும் அசைத்தால் அதற்கு ‘சூப்பர் / ஓ‌கே / நன்றாக இருக்கிறது’ என்று பொருள். எல்லா விரல்களையும் மடக்கி, மொத்தமாக விருட்டென்று விரித்துவிட்டால் அது ‘மோசம் / நன்றாக இல்லை  Not Okay’ என்று சொல்வதற்கான குறியீடு. மீசையைத் தடவிக் காட்டினால் ‘ஆண்’ என்றும், மூக்குத்தி இருக்கும் இடத்தைக் காட்டினால் ‘பெண்’ என்றும் பொருள். அவ்வாறு காட்டும்போது யாரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள் என்பதை வாய் உச்சரிப்பின் மூலம் உணர்த்திவிடுவார்கள், நாம் வாயை அசைத்தால் புரிந்துகொண்டும் விடுவார்கள். இதுபோல பல்வேறு குறியீடுகளைக் கொண்டு நீண்ட நெடிய உரையாடலைக் கூட நடத்த முடியும். “எல்லாப் பெயரும் பொருள்குறித்தனவே” என்ற தொல்காப்பியக் கூற்று இந்த மொழிக்கு முழுமையாகவே பொருந்தும்!

ஒவ்வொருவருக்கும் பேச்சு மொழியைப் பயன்படுத்துவதில் தனித்தன்மைகள் இருப்பதைப் போலவே, சைகை மொழிப் பயன்பாடும் ஒருவருக்கு ஒருவர் மாறுபட்டு தனித்துவமாக விளங்கும். ஆறுமுகம் அன்றாடத் தேவைகளுக்கு உதவுவதில் வல்லவராக இருந்தார். பெருமாள் நகைச்சுவை உணர்வு ததும்பும் ஜோவியல் விஷயங்களைச் சொல்வார். நன்கொடையாளர்கள் உணவு வழங்கும் நாட்களில் உணவு டெலிவரி வந்தவுடன் அவற்றை எடுத்துவைப்பது எங்களது காதுகேளாத நண்பர்கள்தான். அவர்களின் அடுத்த வேலை என்னிடம் அல்லது பிற பார்வையற்ற நண்பர்களிடம் வந்து என்னென்ன உணவு, எந்த ஹோட்டலில் இருந்து, எவ்வளவு வந்திருக்கிறது என்று சொல்வதுதான். நன்கொடையாளர்கள் குடும்பத்துடன் வரும்போது அழகிய இளம்பெண்கள் வந்தால் அவர்களைப் பற்றி எடுத்துக் கூறி விலாவாரியாக விளக்குவது ஜெகந்நாதனின் தனிச்சிறப்பு! ஆறுமுகத்தின் அண்ணன் அர்ஜுனன் சற்று சீரியஸான ஆள். அதிகம் வைத்துக்கொள்ள மாட்டார், செயலை முடிப்பதில் கெட்டிக்காரர். (அவர் பின்னாளில் தொடர்வண்டி வந்ததைக் கவனிக்காமல் தண்டவாளத்தில் நடந்தபொது உயிரிழந்தார் என்பது பெருந்துயரம்.) எல்லோருமே தொலைக்காட்சியில் சினிமா பார்க்கும்போது முழுப் பார்வையற்றோருக்கு காட்சிகளை சைகை மொழியில் வர்ணிப்பதில் கைதேர்ந்தவர்கள்!

இவர்கள் அனைவருமே குறைப் பார்வை உடையோரிடம் எப்படிப் பேசவேண்டும், முழுப் பார்வையற்றோரிடம் எப்படிப் பேசவேண்டும் என்பதையெல்லாம் தங்கள் அனுபவத்தில் அனாயாசமாகப் பழகிக்கொண்டனர். பார்வையற்றோரிலும் சைகை மொழிப் பயன்பாடு நபருக்கு நபர் மாறியது. எனக்கு இம்மொழியைப் பயன்படுத்திப் பேசுவதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. சில முழுப் பார்வையற்றோர் இதில் ஆர்வம் காட்டவில்லை. குறைப் பார்வையுடையோர் இன்னும் நன்றாகவே சைகை மொழியைப் பயன்படுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் பங்கேற்று சைகைமொழியில் பேசும் காதுகேளாதவர்கள்
நிகழ்ச்சியில் பங்கேற்று சைகைமொழியில் பேசும் காதுகேளாதவர்கள்

நண்பர்கள் / பள்ளிப் பருவத் தோழர்கள் என்று நான் இந்தக் காதுகேளாத சைகை மொழிப் பயன்பாட்டாளர்களை அழைப்பது பிற்காலத்தில் எனக்கு ஏற்பட்ட புரிதல் அடிப்படையிலேயே என்பதை நிச்சயம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். எவ்வளவு நட்பாகப் பழகியபோதிலும், எத்தனையோ உதவிகளை அவர்கள் எனக்கும் பிற பார்வையற்றோருக்கும் செய்த போதிலும், அவர்களை சமமாகவும் உரிய மரியாதையுடனும் கருதி நடத்தும் மனப் பக்குவத்தை அப்போது நாங்கள் அடைந்திருக்கவில்லை. உணவு பரிமாறுவது, விடுதிப் பராமரிப்பு, தோட்ட வேலைகள் என உடலுழைப்பைக் கோரும் பல்வேறு பணிகளை அவர்கள் செய்தபோதிலும் பேசுவது, நன்றி கூறுவது, பாடல்கள் பாடுவது போன்றவற்றைச் செய்த பார்வையற்றோரான எங்களுக்குக் கிடைத்த முக்கியத்துவம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் மீண்டும் நாங்கள் தனித்தனி உலகில் சஞ்சாரிக்கத் தொடங்கிவிட்டோம். நானும் தனிப்பட்ட முறையில் எனது நண்பர்களாக இருந்த காதுகேளாத சைகை மொழிப் பயன்பாட்டாளர்கள் குறித்து சில விசாரிப்புகளைத் தவிர வேறெந்த அக்கறையும் காட்டவில்லை என்பதையும் குற்ற உணர்வோடு நினைத்துப் பார்க்கிறேன். ஆனால் காதுகேளாத இந்த நண்பர்கள் வாழ்வில் முக்கியமான பல புரிதல்களை அவர்களின் சைகை மொழி வாயிலாக எனக்குத் தந்திருக்கிறார்கள். அவர்களோடு பழகிய அந்த இனிமையான நாட்கள் அழகிய நினைவுகளாக மனதில் நிழலாடுகின்றன. மீண்டும் அந்த நண்பர்களோடு பேசி உருண்டோடிய நாட்களைப் பற்றி உரையாடும் காலம் விரைவில் வாய்க்குமென்றே நம்புகிறேன்!

பின்குறிப்பு:

23 செப்டெம்பர் உலக சைகை மொழி தினமாகக் கடைபிடிக்கப் படுகிறது. சைகை மொழியின் சிறப்புகள், அதனைப் பாதுகாத்து வளர்க்க வேண்டிய அவசியம், சைகை மொழிப் பயன்பாட்டாளர்களான காதுகேளாதோர்  வாழ்க்கை மேம்பாட்டிற்குத் தேவையான முன்னெடுப்புகள் போன்றவை குறித்த விவாதங்கள் முன்பை காட்டிலும் பரவலாக நடைபெறுவது ஆறுதல் அளிக்கிறது. ஆனாலும், இந்தியாவிற்குப் பொதுவானதொரு இந்தியச் சைகை மொழி இருக்க முடியுமா என்ற முக்கியமான கேள்வியும் எழத்தான் செய்கிறது. சைகை மொழி பற்றிப் பேசும் அதே சமயத்தில், அம்மொழியைப் பயன்படுத்திப் பாதுகாத்து வளர்த்துவரும் காதுகேளாதோர் சமவாய்ப்புகளையும் சட்ட உரிமைகளையும் பெற்று முன்னேறுவதற்கு துணைநிற்பதே நமது முழுமுதற் கடமையாகும். குறிப்பாக பார்வையற்றோருக்கும் காதுகேளாதொருக்கும் தொடுதல் மூலமும் தொழில்நுட்பத்தின் துணைகொண்டும் உரையாடலைத் தொடங்க வாய்ப்புகள் ஏராளம் உள்ளன. “குருடும் செவிடும் சேந்து கூத்துப் பாக்கப் போனாப்புல!” என்று எங்கள் ஊர் பக்கத்தில் ஒரு சொலவடை சொல்வார்கள். அதையும்தான் முயற்சித்துப் பார்ப்போமே!

***

கட்டுரையாளர் கள்ளக்குறிச்சியில் அமைந்துள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார், இவர் பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் நிறுவன உறுப்பினர்.

தொடர்புக்கு: send2kmn@gmail.com

தொடர்புடைய பதிவு

செப்டம்பர் 23: உலக சைகைமொழி நாள்

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *