வெளிச்சம் பாய்ச்சுவோம் (4)

வெளிச்சம் பாய்ச்சுவோம் (4)

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

தொடரின் முந்தைய பகுதிகள்

தமிழில் அச்சு மற்றும் பிரெயில் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பலகை

“கண் தானம் பலனளிக்குமா” என்ற என் பெற்றோரின் கேள்விக்கு மருத்துவர் சொன்ன பதில் இதுதான்.

“பிரச்சனை விழியில் இல்லை. கண் அழுத்தநோய்  காரணமாக, பார்வை நரம்புகள் பாதிக்கப்பட்டு வலிமையிழந்துவிட்டன. எனவே பார்வை மீள்வதற்கு வாய்ப்பு குறைவு.

இருக்கிற இலேசான பார்வையைத் தக்கவைத்துக் கொள்ள சொட்டு மருந்து தரப்படும். வாழ்க்கை முழுக்க அதை இட்டுக்கொண்டே வாருங்கள். மற்றபடி குழந்தையை இப்படியே வைத்துவிட வேண்டாம். அவனைப் படிக்க வையுங்கள். அவர்களுக்கென்றே சிறப்பான பள்ளிகள் இருக்கின்றன.”

இப்படிப் பரிவோடும், அக்கறையோடும் அறிவுறுத்தும் மருத்துவர்களுக்கிடையில்தான், “நரம்புப் பிரச்சனைகலுக்கும் தீர்வுண்டு; ஆறுமாதம் தொடர்ந்து நாங்கள் தரும் மருந்துகளை உட்கொண்டால் நரம்புகள் வலிமையடைந்து நிச்சயம் பார்வை பெறலாம்” என்ற அற்பமான வாக்குறுதிகளால் பெற்றோரை அலைக்கழிக்கிற போலிகள் நம் ஊரில் ஏராளம் இருக்கிறார்கள்.

பார்வையற்ற குழந்தைகளுக்குக் கற்பிக்கும் ஒரு ஆசிரியனாக, எனது பணிச்சூழலில், அத்தகைய மூடநம்பிக்கைகளையே தங்களின் உயர்ந்த நோக்கங்களாகச் சுமந்து அலையும் பெற்றோரை அடிக்கடி சந்திக்கிறேன். சிகிச்சை என்ற பெயரில் அவர்களின் சிறுவாடுகளைக் கரைப்பதோடு அல்லாமல், குழந்தையையும் நீண்ட நாட்களுக்கு விடுப்பெடுத்துக்கொள்ளச் செய்து பள்ளியிலிருந்து அழைத்துச் சென்றுவிடுகிறார்கள்.

“சும்மா ட்ரீட்மண்ட் ட்ரீட்மண்ட்னு செலவழிச்சுட்டு இருக்காதீங்க. இப்படித் தேவையில்லாம செலவழிச்சிடுறது, அப்புறம் குழந்தை பெருசானதும், சின்ன வயசுல உனக்கு எவ்வளவோ செலவழிச்சுட்டேன். இனி நான் மற்ற பிள்ளைகளையும் பார்க்க வேணாமானு உண்மையிலேயே அக்கறை தேவைப்படுற நேரத்துல ரொம்ப அலட்சியமா கேட்கிறது. பல்பு எரியலையா? பிரச்சனை பல்பிலையா, அல்லது வொயர்லையானு பாருங்க. பல்பில பிரச்சனைனா, பல்பை மாத்திடலாம். வொயர்ல பிரச்சனைனா ஒன்னும் பண்ணமுடியாது” என நரம்புப் பிரச்சனை பற்றி எள்ளலையும் எனது அனுபவங்களையும் கலந்து சொல்வேன். சிலர் ஏற்றுக்கொண்டாலும், பலர் ‘நான் மிட்டாய் வாங்கிட்டு வந்து பேசிக்கிறேன்’ ரகம். என்ன செய்வது?.

வலிமை குன்றிய அல்லது துண்டிக்கப்பட்ட பார்வை நரம்புகள் போலவே, கண்ணில் ஒளியை உணரும் திசுவான விழித்திரையின் செல்கள் பாதிக்கப்படுவதால் ஏற்படும் நோய் ரெட்டினைடிஸ் பிக்மண்டோசா (retinitis pigmentosa). விழித்திரையின் பாதிப்பிற்கேற்ப பார்வையிழப்பின் அளவு மாறுபடும்.

ஆர்.பி. (R.P.) என்று அழைக்கப்படும் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறைப்பார்வை உடையவர்களாகக் (Low-vision) காணப்படுவார்கள். தங்கள் அன்றாட நடவடிக்கைகளைப் பொருத்தவரை, வெளிச்சம் குன்றிய இடங்களில் இடர்படுபவர்களாகவோ, நேர்மாறாக, அதிக வெளிச்சத்தின் காரணமாக  இடர்படுபவர்களாகவோ இருப்பார்கள்.

என் மனைவி விசித்ராவும், அவரது தோழி ஒருவரும் ஆர்.பி.யால் பாதிக்கப்பட்டவர்கள்தான். விசித்ராவுக்கு வெளிச்சம் குன்றிய இடங்களில் பிரச்சனை என்றால், அந்த தோழிக்கோ அதிக வெளிச்சம்தான் பிரச்சனை. இருவரும் ஒன்றாகப் பயணிக்கையில், வெயிலேறிய சாலைகளில் விசித்ரா அவரைக் கூட்டிச் செல்வதும், வெளிச்சம் குன்றிய சுரங்கப்பாதைகளில் (Subways) அவர் விசித்ராவைக் கூட்டிச் செல்வதுமான எழுதப்படாத புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப்படுமாம்.

தொடர்ந்து வெளிச்சம் பாய்ச்சுவோம், இருள் ஓட்டுவோம்!

***ப. சரவணமணிகண்டன்

***

கல்வி உரிமைகளைக் காக்க கரம் கொடுங்கள்.

கருத்துகளை வழங்குவதோடு, கட்டாயம் படித்தபின் பகிருங்கள்.

பார்வையற்றோர் கல்வி உரிமை பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைக்கும்

தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கையில் பார்வையற்றோரின் பரிந்துரைகள்:

அன்புடையீர் வணக்கம்!

தமிழக அரசு உருவாக்கிவரும் மாநில கல்விக் கொள்கையில் பார்வையற்றோர்களுக்கு இருக்கும் கல்வி தொடர்பான எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் தொகுத்து, மாநில அரசுக்குப் பரிந்துரைகளாக வழங்க பார்வையற்றோர்களின் கல்வி உரிமை பாதுகாப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது. எனவே பார்வையற்றோர்களுக்கான #சிறப்பு, #ஒருங்கிணைந்த #உள்ளடங்கிய கல்வி சார்ந்த கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. பார்வையற்றோர் நலன் சார்ந்து இயங்கும் அமைப்புகளும், பார்வையற்றோரின் கல்வி வளர்ச்சியின்மீது அக்கறை கொண்டவர்களும், கல்வியாளர்களும், ஆசிரியர்களும், பார்வையற்ற குழந்தைகளின் பெற்றோர்களும், பிர பார்வையற்றவர்களும், பொதுமக்களும் மாநிலக் கல்விக்கொள்கை பரிந்துரைக்குத் தங்களுடைய கருத்துகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

உங்களின் மேலான ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை இயன்றவரை எழுத்துவடிவிலோ, அல்லது மிகச் சுருக்கமான குரல்ப்பதிவாகவோ கீழ்க்கண்ட வாட்ஸ் ஆப் எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு இன்று ஆகஸ்ட் 6ஆம் தேதி மாலை 6 மணிக்குள் அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

வாட்ஸ் ஆப் எண்கள்: 9787871008 அல்லது

     9629021773

மின்னஞ்சல்: helenkellerforpwd@gmail.com

உங்களிடம் இருந்து பெரப்படும் கருத்துகள் அனைத்தும், ஆரோக்கியமான விவாதத்துக்குப் பிறகு தொகுக்கப்பட்டு, மாநில கல்விக்கொள்கை குழுவிடம் வழங்கப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி.

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *